Tuesday, November 2, 2010

ஒரு நண்பர் அனுப்பிய ஜோக் : மழைப் பாட்டு மாநிலம்





ஒரு எழுத்தாளர் .   எழுத்தாளர் என்பதைவிட எழுத்தாளர் ஆக முயன்றுகொண்டிருப்பவர் என்று சொல்வதே பொருந்தும் . உயர் பதவியில் இருப்பவரும் கூட . தனது எழுத்துகள் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டால் அங்கு அவை பரபரப்பை ஏற்படுத்தும் என்று அவருக்கு ஒரு நம்பிக்கை. என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே ஒரு ஹீரோவுக்கு மூன்று ஹீரோயின்கள் வைத்து அவர்களை மழையில் நனைத்து ஆடவிடும் அவர்களின் ரசனையோடு ஒத்துப்போகும். சாப்ட் போர்னோ படங்கள் எனச் சொல்லத்தக்க சினிமாக்களின் உற்பத்தி கேந்திரமாக இருக்கும் அந்த மாநிலத்தில் நிச்சயம் தனது எழுத்து வரவேற்பு பெறும் என்று அவர் நம்பினார். அது மட்டுமில்லாமல் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தால் அறம், மதிப்பீடு என்று வாழ்கிற இலக்கியவாதிகளை பீதிகொள்ள வைப்பதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. வேலூரில் உள்ள ஒரு நண்பர் மூலமாக அங்கு இருக்கும் தெலுங்கு எழுத்தாளர் ஒருவரைப்பற்றி அறிந்து அவரை சந்திக்கச் சென்றார்.அவர் தமிழிலிருந்து பல படைப்புகளைத் தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்த நண்பர் இந்த எழுத்தாளர், தெலுங்கு எழுத்தாளர் மூவருமாக ஒரு ஓட்டலுக்குச் சென்று படைப்பு மனநிலையை எட்டுவதற்கான ஆதார பணியில் ஈடுபட்டார்கள். நம் எழுத்தாளரின் சுயப்பிரஸ்தாபங்களில் பதற்றமடைந்த தெலுங்கு எழுத்தாளர் வழக்கத்துக்கு மாறாக வேகவேகமாக தனது கிளாஸைக் காலிசெய்துகொண்டிருந்தார். இரண்டு புல் பாட்டில்கள் தீரும் நிலை. நம் எழுத்தாளர் அப்போதுதான் தனது கடைசி பாணத்தை எடுத்து விட்டார். ' உண்மையா சொன்னா என் தாய்மொழி தெலுங்கு தாங்க . என் அம்மா ஆந்திராவைச் சேர்ந்தவங்க தான். என் தாய் மொழியில் என் எழுத்து வெளியாகனும் அதாங்க என் ஆசை   " . அவரை அழைத்துச் சென்ற நண்பருக்கு இவரின் பூர்வாஸ்ரமம் எல்லாம் தெரியும். நம்  அதிகார எழுத்தாளரின் அம்மா ஒரு தமிழச்சி என்ற உண்மையும் தெரியும். தெலுங்கு எழுத்தாளரின் மொழிப் பற்றை சுரண்டுவதற்காகவே இந்த நாடகம் என்பது புரிந்தது .அவர் நினைத்துக்கொண்டார் " அடப் பாவி நீ போதையில் கூட பொய்தான் சொல்வியா ? "
இந்த ஜோக் ஒரு பக்கம் இருக்கட்டும் .(எனக்கென்னவோ இதைப் படித்தால் சிரிப்பே வரவில்லை . ஏன் இதை அந்த நண்பர் ஜோக் என்று அனுப்பினாரோ தெரியவில்லை )
இதில் எனக்கு முக்கியமாகப் பட்டது தெலுங்கு மொழி பேசுகிறவர்களின் மொழிப் பற்றுதான். முதுபெரும் எழுத்தாளர் கி. ரா அவர்களிடம் கூட இதை நான் பார்த்திருக்கிறேன்.இன்னொரு விஷயம் மனதில் அலைந்தது . மழைப் பாட்டுக்கும் ஆந்திர மக்களின் மனநிலைக்கும் அப்படி என்னதான் உறவு ? தெலுங்குப் படங்கள் தமிழ் சினிமா மீது ஏற்படுத்தியிருக்கும் மோசமான செல்வாக்குகளில் இது மிகவும் முக்கியமானது என்று தோன்றுகிறது . (இன்னொரு செல்வாக்கு தயிர் கடையும் மத்து போன்ற கட்டைகளை துப்பாக்கிகள் என்று அறிமுகம் செய்தது)  வெங்கடேஷ் சக்ரவர்த்தி , ராஜன் குறை போன்ற சினிமா ஆய்வாளர்கள் யாராவது இதை ஆராய்ந்து சொன்னால் உதவியாக இருக்கும். 

No comments:

Post a Comment