Friday, November 19, 2010

தமிழக அரசின் இலச்சினை: கோபுரம் சின்னம் ஒரு குறிப்பிட்ட சமயத்தினுடைய சின்னத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.8-4-2010  பிற்பகல் 1-15
வரவு-செலவுத் திட்டம், 2010-2011, பொது விவாதம்


திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சிறப்பு வாய்ந்த இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தனிச் சிறப்புமிக்க ஒரு புதிய சட்டப் பேரவை வளாகத்தை அமைத்து, அதிலே பேசுவதற்கு எங்களைப் போன்றவர்களுக்கு எல்லாம் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த மாண்புமிகு தமிழக முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பிலே மனமார முதலிலே பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இந்த நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறந்த அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தாலும், முக்கியமான மூன்று அறிவிப்புகளைச் சுட்டிக்காட்டி பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கின்றேன். தமிழகத்தின் ஊரகப் பகுதிகளிலே இருக்கின்ற குடிசைகளையெல்லாம் மாற்றிவிட்டு, 21 இலட்சம் கான்கிரீட் வீடுகள் அமைக்கப்படும் என்கிற திட்டமும், தாட்கோ நிறுவனத்திலே கடன் பெற்றிருந்த ஆதி திராவிட மக்கள் பயன்பெறுகின்ற வகையிலே 83 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்கின்ற அறிவிப்பும், பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வி பயில வருகின்ற மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்கின்ற அறிவிப்பும், ஏழையெளிய மக்களுக்கு பொதுவாகப் பயன்படும் என்றபோதிலும் இந்த அறிவிப்புகளால் அதிகம் பயன்படுகிறவர்கள் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.  ஆதி திராவிட மக்களை அரவணைத்து அவர்களுக்கெல்லாம் பாதுகாவலராக விளங்குகின்ற  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைப் பாராட்டுகின்ற விதமாகவும், அவருக்கு நன்றி தெரிவிக்கின்ற விதமாகவும்தான் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பிலே அவருக்கு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பெயரிலான “அம்பேத்கர் சுடர்” என்கின்ற விருதினை அளித்து, இந்தச் சமூகத்தின் சார்பிலே நன்றி தெரிவிக்கின்ற ஒரு ஏற்பாட்டை எங்களுடைய எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்திருக்கின்றார்கள்.  அந்த விருதினைப் பெற ஒப்புக்கொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு வரவிருக்கின்ற மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

“கலைஞர் வீட்டு வசதித் திட்டம்” என்ற பெயரிலே அறிவிக்கப்பட்டுள்ள அந்தத் திட்டம் திருச்சி மாநகரிலே தொடங்கப்பட்ட நாளில் பேசுகின்ற நேரத்திலும் நான் ஒரு கருத்தை அங்கே பதிவு செய்தேன்.  இந்தத் திட்டம் ஏழையெளிய மக்களுக்கு சிறப்பாக உதவுகிற திட்டம் என்ற போதிலும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்ற நேரத்திலே  குடிசைகளாக இருக்கின்றபோது ஊரகப் பகுதிகளிலே இருக்கின்ற சாதியப் பாகுபாடுகள் தற்காலிகமாக இருக்கின்றன.  அந்தத் தற்காலிக வீடுகளை மாற்றிவிட்டு நிரந்தர வீடுகளைக் கட்டும்போது, ஊரகப் பகுதிகள் இன்றைக்கு சாதிவாரியாகப் பிரிந்து கிடக்கின்ற  அந்த நிலையை உறுதிப்படுத்துகின்ற விதமாக நாம் நம்முடைய நடவடிக்கைகளை அமைத்துவிடக்கூடாது.

கிராம மக்கள் தாங்களே முன்வந்து சமத்துவபுரங்களாக தங்களுடைய வீடுகளை அமைத்துக்கொள்ள முன்வருகின்ற இடங்களிலே, அதை ஊக்குவிக்கின்ற விதமாக, அத்தகைய ஊராட்சிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருதுகளை வழங்கி, இயன்ற இடங்களிலெல்லாம் இந்த கான்கிரீட் வீடுகளை சமத்துவபுரங்களாக அமைத்துத் தர வேண்டுமென்ற கோரிக்கையை அங்கே பதிவு செய்தேன்.  மாண்புமிகு முதல்வர் அவர்கள் தாயன்போடு அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டிட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஏற்கெனவே இந்தப் பேரவையிலே அறிவிக்கப்பட்ட சில அறிவிப்புகள் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருக்கின்றன.  குறிப்பாக, வீட்டுப் பணியாளர்கள்.  வீட்டுப் பணியாளர்களுடைய இன்னலை உணர்ந்து, நமது அரசு அவர்களுக்கென்று நல வாரியம் ஒன்றை உருவாக்கி இருக்கின்றது.  அந்த வீட்டு வேலை செய்கின்ற பெண்கள், மற்ற மாநிலங்கள் சிலவற்றிலே இருப்பதுபோல, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டுமென்று நான் கோரிக்கை விடுத்தேன்.  நம்முடைய மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு அதற்காக கமிட்டி ஒன்றை அமைப்பதாக அறிவிப்புச் செய்தார்கள்.  அந்தக் கமிட்டி தன்னுடைய பரிந்துரையைக் கொடுத்துவிட்டதா?  வீட்டுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுமா என்கின்ற கேள்வி அப்படியே பதில் தெரியாமல் கிடக்கின்றது.  மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அவர்கள் இன்றைக்கு மிகச் சிறப்பாக பல்வேறு நல வாரியங்களை நிர்வகித்து வருகின்றார்கள்.  இந்த வீட்டுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிட அவர்கள் முன்வருவர்களா என்பதை அறிய விரும்புகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விரைவிலே வீட்டுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. து. ரவிக்குமார்: அமைச்சர் அவர்களுடைய அறிவிப்பிற்கு நன்றி.  அடுத்ததாக, நம்முடைய மாநிலத்திலே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக வர்த்தக சேவை மையங்கள் என சொல்லப்படுகின்ற Rural B.P.Os ஏற்கெனவே கிருஷ்ணகிரி மாவட்டத்திலே மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன.  அத்தகைய ஊரக வர்த்தக மையங்கள் அமைக்கப்படும் என்று ஏற்கெனவே தகவல் தொழில்நுட்பத் துறை சார்பிலே அறிவிப்புச் செய்யப்பட்டிருக்கிறது.   இந்த நிதிநிலை அறிக்கையிலே அது தொடர்பாக விரிவான அறிவிப்பு வரும் என்று எங்களைப் போன்றவர்கள் எல்லாம் எதிர்பார்த்தோம்.  ஏனென்று சொன்னால், இன்றைக்கு இந்தியாவிலேயே மிக அதிகமாக பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக நம்முடைய மாநிலம் இருக்கிறது. ஏராளமான இளைஞர்கள், தகுதி படைத்த இளைஞர்கள் இன்றைக்கு வேலை இல்லாமல் இருக்கின்றார்கள்.  அவர்களுக்கெல்லாம் பலன் அளிக்கும் விதமாக இந்த Rural B.P.Os -ஐ அமைத்தால் நிச்சயமாக அது பொருளாதார ரீதியிலும் நமது மாநிலத்திற்குப் பயன் அளிக்கும்.  அந்தத் திட்டம் என்ன ஆனது என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.
 வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற மாவட்டங்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக ஏறத்தாழ பல நூறு கோடி ரூபாய் திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கையிலே அறிவித்திருக்கின்றார்கள்.  கொள்ளிடம் வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்காக 376 கோடி ரூபாயும், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்காக 164 கோடி ரூபாயும், பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்காக 69 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.  தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்ற கடலூர் மாவட்டம், அதிலும் குறிப்பாக என்னுடைய தொகுதி மக்கள் இந்தத் திட்டங்களால் பயனடைவார்கள் என்ற போதிலும், அந்தப் பகுதியிலே முழுமையாக வெள்ள பாதிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால், கடலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே இரண்டு திட்டங்களை அரசுக்கு வழங்கி இருக்கிறது.  வீராணம் ஏரிக்கு அதிக அளவிலே வந்து சேருகின்ற, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து உபரி நீராக வந்து சேருகின்ற அந்த நீரை புதிய கொள்ளிடம் ஆற்றுக்கு நேரடியாகத் திருப்பி விடுகின்ற கருவாட்டு ஓடைத் திட்டம், அதுபோல பரவனாற்றிலே வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் அந்த ஆற்றின் போக்கை சற்றே மாற்றி அமைக்கின்ற அறுவாமூக்குத் திட்டம் என்ற இரண்டு திட்டங்களை கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலே அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.  அந்தத் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டால்தான் அந்த மாவட்டத்திலே வெள்ள பாதிப்பு என்பது தடுக்கப்படும்.  முழுமையாக அந்த மக்கள் வெள்ள அபாயத்திலிருந்து நீங்குவார்கள்.  எனவே, அந்தத் திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களிலுள்ள வாய்க்கால்களில் தூர் அகற்றும் பணிக்காக பல கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருக்கின்றது. ஏற்கெனவே இப்படியான தூர் வாரும் பணிகளை மேற்கொண்டபோது அந்தந்தத் தொகுதிகளைச் சார்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்களுடைய பரிந்துரைகள் கேட்கப்படும் என்று  சட்டத் துறை அமைச்சர் அவர்கள் ஏற்கெனவே பொதுப் பணித் துறை பொறுப்பு வகித்த காலத்திலே அறிவிப்புச் செய்தார்கள்.  அப்படியான நடைமுறை இப்போதும் பின்பற்றப்பட வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஈழத் தமிழ் அகதிகளுக்காக நம்முடைய அரசு மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய உத்தரவின் அடிப்படையில் 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அவர்களுக்கெல்லாம் இன்றைக்கு வாழ்விலே ஒளியேற்றி வைத்திருக்கின்றார்கள்.  அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென்று நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.  அந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்தி அவற்றை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்குமாறு நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளிக் கல்வித் துறையினுடைய கட்டுப்பாட்டிலே இருக்கிற நூலகத் துறை  சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.  172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத அளவுக்கு மாபெரும் நூலகம் உருவாக்கப்பட்டு வருகிறது.  பதிப்பாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை நம்முடைய அரசு செய்திருக்கிறது.  ஆனால், அவர்களுக்கு உதவுகின்ற விதத்திலே இன்றைக்கு மாவட்டக் கிளை நூலகங்களில் விற்பனை மையங்களை ஏற்படுத்தி நல்ல நூல்கள் மக்களுக்கு எளிதில் கிடைத்திட வழி ஏற்படுத்தித் தர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

தியாகி வாஞ்சிநாதனுக்கும், கோபால் நாயக்கருக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், தியாகி ஒண்டிவீரனுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையிலே கூறப்பட்டிருக்கிறது.  மற்றவர்களுக்கு மணிமண்டபம், இவருக்கு நினைவுச் சின்னம் என்று சொல்லும்போது, அதிலே ஒரு பேதம் பாராட்டுகின்ற தொனி தெரிகிறது என்பதனால் ஒண்டிவீரனுக்கும் மணிமண்டபம் அமைத்து அதிலே ஒரு சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்...

மாண்புமிகு பேரவைத் தலைவர்:  இன்னும் மூன்று உறுப்பினர்கள் பேச வேண்டும், உட்காருங்கள்.

திரு. து. ரவிக்குமார்: ஒரு நிமிடம் கொடுங்கள், ஒரே நிமிடம்.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம்முடைய மாநிலத்திலே மிகப் பெரிய மாறுதல்களையெல்லாம் செய்திருக்கின்றார்கள்.   தமிழக அரசின் இலச்சினையாக இருக்கிற அந்த கோபுரம் சின்னம் என்பது, நம்முடைய அரசு ஒரு சமய சார்பற்ற அரசு என்றபோதிலும் அந்தச் சின்னத்திலே ஒரு கோபுரம் இடம் பெற்றிருப்பது என்பது ஒரு குறிப்பிட்ட சமயத்தினுடைய சின்னத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.  எனவே, அந்தக் கோபுரம் சின்னத்தை மாற்றிவிட்டு இன்றைக்கு சமத்துவத்திற்கு, சமயச் சார்பின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக நம்முடைய முதலமைச்சர் அவர்களால் பாராட்டப்படுகிற திருவள்ளுவரின் உருவத்தை அதிலே பொறித்து, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வாசகத்தை இடம் பெறச் செய்கின்ற புதிய இலச்சினையை தமிழக அரசிற்காக உருவாக்குவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டு, வாய்ப்புக்கு நன்றி சொல்லி, அமைகின்றேன், வணக்கம்.

No comments:

Post a Comment