Saturday, November 13, 2010

மியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு

ஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில் இருந்து ஆங் சாங் சூச்சி வெளியே வந்த போது ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் ஆரவாரித்தனர்.
கடந்த ஏழாண்டு காலமாக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவரது இல்லத்தை சுற்றியிருந்த பாதுகாப்பு அரண்களை பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கினர். ஆதரவாளர் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து ஏராளமான அதிரடி பொலிஸார் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரான 65 வயதான ஆங் சாங் சூச்சி கடந்த 21 ஆண்டு காலத்தில், 15 ஆண்டு  
வீட்டுக் காவலில்  
தடுத்தே வைக்கப்பட்டிருந்தார்.மியான்மரில் ஜனநாயகம் மீட்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் நான் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜூனியர் விகடனில் எழுதிய இந்தக் கட்டுரையை இங்கே தருகிறேன். மியான்மரில் ஜனநாயகம் மீட்கப்படுவதென்பது அங்குள்ள சிறுபான்மை மக்களான தமிழர்களின் உரிமைகள் காக்கப்படுவதோடு தொடர்பு கொண்டுள்ளது . அதை இந்தத் தருணத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.


தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு

ரவிக்குமார் 

“தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அதற்கொரு குணம் உண்டு” என்ற வீரவசனத்தை நாம் கேட்டிருப்போம். அந்தச் சிறப்பான குணம் எதுவென்று நாம் சிந்தித்திருக்கமாட்டோம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பரந்த மனத்தோடு உலக நாடுகள் எல்லாவற்றையும் தனதாக எண்ணிய தமிழர்கள் இன்று உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்கிறார்கள். ‘வாழ்கிறார்கள்’ என்று சொல்வதைவிட ‘பிழைக்கிறார்கள்’ என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். குடியேறிய நாடுகளை வளமாக்குவதற்காகக் கள்ளம் கபடமில்லாமல் உழைப்பதுதான் தமிழர்களின் குணம். ஆனால் அந்த நாடுகளில் அடிமைகளிலும் கேவலமாய் நடத்தப்படுவது அவர்களின் ‘தலைவிதி’.
மியான்மர் என்று இப்போது அழைக்கப்படும் பர்மாவில் வாழுகிற தமிழர்கள் படும்பாடு சொல்லி விளக்க முடியாததாக இருக்கிறது. அங்கே இருப்பவர்கள் இன்று, நேற்று போனவர்கள் அல்லர். பல தலைமுறைகளாக அங்கே வாழ்பவர்கள். கமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகை கொண்ட மியான்மரில் தமிழர்கள் சுமார் பதினைந்து லட்சம்பேர் இருக்கிறார்கள். அவர்கள் எவருக்கும் குடியுரிமை கிடையாது என்பதுதான் மிகப்பெரும் கொடுமை. பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது பர்மா, இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்தது. அந்த நேரத்தில் ஏராளமான இந்தியர்கள் அங்கே குடியேறினார்கள். அப்போது அங்கே போனவர்கள்தான் தமிழர்கள்.
பர்மாவை பிரிட்டிஷ்காரர்கள் 1886இல் கைப்பற்றினார்கள். 1948இல் அந்த நாடு சுதந்திரம் அடையும்வரை அங்கு பிரிட்டிஷ்காரர்களின் காலனி ஆட்சிதான் நடந்தது. 1937இல் பிரிட்டிஷ்காரர்கள் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்துத் தனி நாடாக மாற்றினார்கள். பர்மாவுக்கென்று ஒரு அரசியலமைப்பு சட்டமும் உருவாக்கப்பட்டது. இந்த நேரத்தில் பர்மிய பெருமையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு பர்மாவிலிருந்த மாணவர்கள் சிலர் சேர்ந்து தகின் இயக்கத்தைத் துவக்கினார்கள். 1941ஆம் ஆண்டு அந்த இயக்கத்தைச் சேர்ந்த முப்பதுபேர் ஆங் சான் என்பவரின் தலைமையில் ரகசியமாகச் சென்று ஜப்பானியர்களிடம் ஆயுதப் பயிற்சி பெற்றனர். ஒரு ஆண்டு கழித்து ஜப்பான் ராணுவத்தினரோடு சேர்ந்து அவர்கள் பர்மாவுக்குள் நுழைந்தார்கள். பர்மா விடுதலை ராணுவம் என்ற அமைப்பு அவர்களால் உருவாக்கப்பட்டது.  ஆயுதப் போராட்டத்தை நடத்திய ஆங் சாங்  பிரிட்டிஷ் அரசோடு சமரச உடன்பாடு செய்துகொண்டு இடைக்கால ஆட்சிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ஆனால் சிறிது காலத்திலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார்.  அவருக்குப் பிறகு யு நூ என்பவர் ஆட்சிப் பொறுப்பேற்றார். கடைசியாக 1948 ஜனவரி நான்காம் நாள் பர்மாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது.
பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே யு நூ ஆட்சி நடத்தினார். ஒருபுறம் கம்யூனிஸ்டுகளும் மறுபுறம் சிறுபான்மை இனத்தினரும் ஆட்சிக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபட்டார்கள். பர்மாவைக் கைப்பற்ற முயன்ற சீனர்களை அமெரிக்காவின் துணையோடு பர்மிய அரசு விரட்டியடித்தது. ஆனால் சிலர் மட்டும் அப்போது பர்மாவில் தங்கிவிட்டனர். அவர்களே பின்னர் பர்மாவில் போதை மருந்து தயாரிப்பில் ஈடுபட்டார்கள். இதனிடையே 1962 பர்மாவில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஜனநாயக உரிமைகள் முற்றாக பறிக்கப்பட்டன. ராணுவத் தளபதியாக இருந்த நே வின் என்பவரின் கட்டுப்பாட்டுக்குள் பர்மா கொண்டுவரப்பட்டது.
பர்மாவுக்குச் சென்ற தமிழர்கள் இரண்டு வகைப்படுவார்கள். கூலிகளாகச் சென்றவர்கள்; வர்த்தகம் மற்றும் வட்டித் தொழிலில் ஈடுபட்டவர்கள். வட்டித் தொழிலில் ஈடுபட்டவர்கள் அதிக வட்டி வசூலித்து பர்மியர்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்தனர். பர்மா சுதந்திரம் அடைந்த நேரத்தில் வட்டித் தொழில் செய்துவந்த  தமிழர்கள் பலர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் மீதிருந்த ஆத்திரம் பர்மாவில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருந்த சாதாரணத் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பியது. இன்று அங்குள்ள தமிழர்கள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
எண்பதுகளின் பிற்பகுதி முழுவதும் பர்மாவில் அடுத்தடுத்து கலகங்கள் வெடித்தன. 1988 கலவரத்தில் நூறுபேர்களை ராணுவம் சுட்டுக்கொன்றது. அதுவரை ஆட்சியில் இருந்த நே வின் பதவி விலகினார். அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்ற தளபதி செய்ன் லிவின் என்பவர் மேலும் மூர்க்கத்தனத்தோடு மக்கள் போராட்டங்களை ஒடுக்கினார். ஒரு பேரணி மீது ராணுவம் சுட்டதில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதனால் மாங் மாங் என்ற இன்னொருவர் பதவியேற்றார். அவரையும் மக்கள் ஏற்கவில்லை. அவரைத் தூக்கியெறிந்துவிட்டு ஆட்சியைப் பிடித்த சா மாங் என்பவரின் ஆட்சியின்போது மூவாயிரம்பேரை  ராணுவம் சுட்டுக்கொன்றது. பர்மாவில் ஜனநாயக நடைமுறைகளை அனுமதிக்க ராணுவம் தொடர்ந்து மறுத்துவந்தது.
இப்போது பிரபலமாக அறியப்படும் ஆங் சாங் சூச்சி முதன்முதலாகப் பர்மாவை ஆட்சிசெய்த ஆங் சாங்கின்  மகளாவார். ராணுவ ஆட்சியினர் அவரை வீட்டுக்காவலில் வைத்ததையும் அதனால் உலகெங்கும் எழுந்த எதிர்ப்புகளையும் நாம் அறிவோம். ஆனால் அந்த எதிர்ப்புகளை பர்மிய ஆட்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை. சிறையில் இருந்தபடி நோபல் பரிசு பெற்றவர் அவர் மட்டும்தான். 
பர்மாவிலிருந்த பல்வேறு சிறு குழுக்கள் இணைந்து உருவாக்கிய ஜனநாயக தேசிய லீக் (NLD)  கட்சி பர்மிய மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. அதன் பின்னணியில் சூச்சி இருந்தார் . 1990இல் பர்மாவில் நடத்தப்பட்டத் தேர்தலில் அது மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதுவரை பர்மா என அழைக்கப்பட்டு வந்த நாட்டை மியான்மர் என்றும் அதன் தலைநகரான ரங்கூனை யாங்கூன் என்றும் புதிய ஆட்சியாளர்கள் மாற்றியமைத்தனர். அவர்களிடம் அதிகாரத்தை ஓப்படைக்க ராணுவம் மறுத்துவிட்டது. இப்போது மியான்மரின் அதிபராய் இருப்பவர் தளபதி தான் ஷ்வே என்பவராவர்.
பர்மாவின் பெரும்பான்மை மக்களாக உள்ள பர்மன்கள் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இந்தியர்கள், கிறித்தவர்கள், முஸ்ஸீம்கள் அனைவருமாகச் சேர்ந்து பர்மாவின் மக்கள்தொகையில் பத்து சதவீதம் இருப்பார்களென்று சொல்கிறார்கள்.
பர்மாவில் இருக்கும் சிறுபான்மையினருள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியர்களும் சீனர்களும்தாம். சீனர்கள் பர்மியர்களோடு திருமண உறவு உட்பட நெருக்கமான தொடர்புகளை வைத்துக்கொண்டதால் பர்மிய சமூகத்தில் கலந்துவிட்டனர். ஆனால் அங்குள்ள இந்தியர்களால் அப்படிக் கலந்துறவாட முடியவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராணுவம், போலீஸ் மற்றும் அரசாங்க நிர்வாகம் முதலியவற்றில் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். அதனால் இந்தியர்களை பர்மிய மக்கள் தம்மில் ஒருவராக ஏற்கவில்லை.
தற்போது பர்மாவில் வாழ்கிற தமிழர்கள் அங்கே எந்தவித உரிமைகளும் இல்லாத அடிமைகளாகவே உள்ளனர். அவர்கள் பத்திரிகை நடத்த முடியாது, ஒரு புத்தகத்தை அச்சிட்டு வெளியிட முடியாது, தமிழர்களின் பிள்ளைகள் அங்கே தமிழைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியாது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது பர்மாவில் ஏராளமான முருகன் கோயில்களைத் தமிழர்கள் கட்டினார்கள். ஆனால் இப்போது அப்படி ஒரு கோயிலைக் கட்ட அங்கு அனுமதி கிடையாது.
மியான்மரில் உள்ள ராணுவ ஆட்சியாளர்கள் சமூகத்தையே போலீஸ் மயமாக்கி வைத்துள்ளனர். அங்கே ஒவ்வொரு தெருவுக்கும் வார்டுகமிட்டி என ஒன்று உள்ளது. அதன் பொறுப்பாளராக பர்மியர் ஒருவர் இருப்பார். அந்தத் தெருவில் எந்த வீட்டுக்கு விருந்தினர் வந்தாலும் உடனடியாக அந்த விருந்தாளியைப் பற்றிய விவரங்களை வார்டு கமிட்டிக்கு, வீட்டின் உரிமையாளர் தெரிவித்தாக வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இருந்த குற்றப் பரம்பரை சட்டத்தின் விதிகளை இது நினைவுபடுத்துகிறது. பர்மாவில் சுதந்திரமான நீதியமைப்புக் கிடையாது. ராணுவ ஆட்சியாளர்கள் வைத்ததுதான் சட்டம், சொல்வதுதான் நீதி.
மியான்மரில் எல்லாவிதமான அரசியல் நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. ‘இண்டர் நெட்’ கூட அரசாங்கத்திற்குத் தெரியாமல் வைத்துக்கொள்ள முடியாது. கூகிள், ஜிமெயில், யாகூ போன்ற அனைத்து சேவைகளும் மியான்மரில் தடைசெய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவிலுள்ள ஃபோர்டிநெட் என்ற நிறுவனத்தின் உதவியோடு மியான்மரிலுள்ள ராணுவ ஆட்சியாளர்கள் பர்மிய மக்கள் இணையத்தில் எதையதைப் பார்க்கலாம் எனக் கட்டுப்படுத்தியுள்ளனர். நாம் இங்கே பயன்படுத்துகிற இலவச மின்னஞ்சல் வசதிகள் மியான்மரில் கிடையாது. ஐ.நா. சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அன்னன் வேண்டுகோள் விடுத்தும்கூட ஆங் சான் சுகியை விடுதலை செய்ய மியான்மர் அரசு மறுத்துவிட்டது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் 2005ஆம் ஆண்டு மியான்மரின் மோசமான அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபை மியான்மர் அரசைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் சீனாவும் ரஷ்யாவும் மியான்மர் அரசுக்கு ஆதரவாக தமது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தை ரத்து செய்துவிட்டன.
மியான்மரில் உள்ள தமிழர்கள் ராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் வலிமைபெற்றவர்களாக இல்லை. அவர்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியிருக்கும் ஏழை மக்களாவார்கள். தமது பண்பாட்டுத் தொடர்ச்சியை விட்டுவிடக் கூடாது என அவர்கள் விரும்புகிறார்கள். அங்குள்ள தேவாலயங்களில் இருக்கும் பாதிரிமார்கள் சிலர் தமிழ்ப் பிள்ளைகளுக்கு மாலை நேரங்களில் தமிழைப் போதித்துவருகின்றனர். ஆனால் அதற்கும்கூட ஏகப்பட்டக் கெடுபிடிகளை ராணுவ அரசு செய்துவருகிறது. 
மியான்மரில் உள்ள தமிழர்கள் தமது உறவினரைப் பார்க்கத் தமிழ்நாட்டுக்கு வர வேண்டுமென்றால் கொல்கத்தாவுக்குச் சென்று அப்புறம்தான் இங்கு வர வேண்டும். அல்லது பாங்காக் போய் அங்கிருந்து வர வேண்டும். இது மிகவும் செலவு பிடிப்பதாக உள்ளதால் மியான்மரின் தலைநகரான யாங்கோனிலிருந்து சென்னைக்கு நேரடியாக விமான சேவையை இந்திய அரசு துவக்க வேண்டுமென்பது மியான்மர் தமிழர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
மியான்மரிலுள்ள தமிழர்களின் பிள்ளைகளுக்குத் தமிழைப் பயிற்றுவிக்க மென்பொருள்கள், புத்தகங்கள் முதலியவற்றை அனுப்ப வேண்டுமென்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க ஏற்பாடுசெய்ய வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மியான்மரில் திரையரங்குகள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுவிட்டன. ராணுவ ஆட்சிக்குப் பிறகு தமிழ்ப் படங்கள் திரையிடப்படுவது குறைந்துவிட்டது. எனவே அங்குள்ள தமிழர்களுக்குத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே தமது பண்பாட்டு அடையாளத்தைக் காப்பாற்றிக்கொள்ள உதவியாக இருக்கின்றன. தற்போது ஜெயா டி.வி. மற்றும் சன் டி.வி. நிகழ்ச்சிகள் அங்கே மிகவும் பிரபலம். சன் டி.வி. இப்போது ‘பே சேனல்’ ஆக்கப்பட்டதால் அங்குள்ள ஏழைத் தமிழர்கள் சிரமப்படுகின்றனர். 
நேரடி விமான சேவை ஏற்படுத்தித் தருவதற்கும் தமிழ் பயிற்றுவிக்கவும் மத்திய அரசின்மூலம் தமிழக அரசு உதவ முடியும். அதை மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் தடுக்க மாட்டார்கள். அயல்நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் நம் இனத்தவர்தான். அதை நாம் மறந்துவிடக் கூடாது.
பர்மாவை வைத்துத் தமிழ்த் திரைப்படங்கள் பல வந்திருக்கின்றன. நமது முதல்வரே அதை வைத்துத் திரைக்கதை எழுதியவர்தான். அந்த நாட்டில் அல்லலுறும் நமது சொந்தங்களின் கண்ணீரைத் துடைக்க அரசின் கரம் நீளுமா?

No comments:

Post a Comment