Tuesday, November 2, 2010

ஒபாமா ஜெயித்தது எப்படி ?







ஒபாமாவுக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சரிதான். ஒபாமாவை எதிர்ப்பதற்கு எல்லாவித நியாயங்களும் அவர்களுக்கு இருக்கின்றன. ஒபாமாவை எதிர்ப்பதற்கு மட்டுமா , இந்தியாவுக்கு வரும் எல்லோரையுமே எதிர்க்கலாம்தான். இன்னும் சுருக்கமாக சொன்னால் இங்கே எதிர்ப்பதற்கு மட்டும்தான் காரணங்கள் இருக்கின்றன. எதையும் ஆதரிக்க நியாயமில்லை. ஆனால் நம் இடதுசாரித் தோழர்கள் ரஷ்ய அதிபர் வந்தால் எதிர்க்க மாட்டார்கள் , சீனாவிலிருந்து வருகிற தலைவர்களை எதிர்க்க மாட்டார்கள் . இலங்கை அதிபர் பற்றிப் பேசவே வேண்டாம். இந்த செலக்டிவ் அம்னீஷியா நம்மை வியப்படைய வைக்கிறது. சரி விடுங்கள் இப்போதைக்கு நாமும் அவர்களோடு சேர்ந்து ஒபாமாவை எதிர்ப்போம். மற்றதை அப்புறம்  பேசுவோம். 

இடதுசாரிகளுக்கு திரு வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார். எனக்கு வியப்பாக இருந்தது. ஈழத் தமிழர்கள் கோணத்திலிருந்து பார்த்தால் வைகோ இடதுசாரிகளோடு சேர்ந்து ஒபாமாவை எதிர்ப்பதுதானே சரியாக இருக்கும் என்று ஒரே குழப்பம் . ஒரு பத்திரிகையாளர் சொன்னார் " என்ன அப்படி சொல்லிட்டீங்க வைகோ மட்டும் ஆதரிக்கலைன்னா ஒபாமா ஜெயிச்சிருப்பாரா ? " ( இந்த புகைப் படத்தில்,  பின்னால் நின்றுகொண்டிருக்கும் ஒருவர் ஏன் அப்படி சிரிக்கிறார் ?) அவர் கிண்டல் செய்கிறார் என்று புரிந்தது. ஆனால் நாம் அப்படி மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. யோசித்துப்பார்த்தால் ஒபாமாவை ஆதரிப்பதற்கும் நிறைய காரணங்கள் இருக்கவே செய்கின்றன. ( நான் அவர் வெற்றி பெற்றபோது எழுதிய கட்டுரையை ஒருமுறை படித்துப் பாருங்கள் . ) எதிர்க்கவேண்டிய அமெரிக்க அதிபர் ஒபாமாவை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள் . ஆதரிக்க வேண்டிய கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவை வைகோ ஆதரிக்கிறார். இவர்கள் இருவரும் முரண்படாமல் இருந்தால் சரிதான்.

1 comment:

  1. என்னு​டைய ஆதங்கமும் அது​வே.

    ​நண்ப​ரே நேரமிருந்தால் என் பதி​வையும் பார்க்கவும்.
    http://mathumayakkam.blogspot.com/2010/11/blog-post.html

    ReplyDelete