Tuesday, November 2, 2010

நிலத்தை சார்ந்து இருக்கின்றவரை வறுமை நிலை மாறாது8-5-2007   முற்பகல் 11-20 - 11.25

தொழில் துறை மற்றும் தகவல் தொழிட்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை                 மீதான விவாதம்

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொழில் துறை மானியத்தின் மீது பேச வாய்ப்பளித்த உங்களுக்கு என்னுடைய நன்றியை முதலிலே தெரிவித்துக்கொள்கின்றேன்.

மத்தியிலே பொறுப்பேற்றிருக்கின்ற அரசானது, பொறுப்பேற்கின்றபோதே அது வகுத்தளித்த குறைந்தபட்சப் பொது வேலைத் திட்டத்திலே, தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை அளித்தது.  கடந்த 3 ஆண்டுகளாக அந்த ஆட்சி சிறப்பாக நடந்தபோதிலும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் என்கின்ற அந்த வாக்குறுதி என்பது, இதுவரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றது.  இன்றைக்கு அரசுத் துறையிலே வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன.  மேலும், மேலும் தனியார்மயம் அதிகரித்துக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்றைக்கு வேலைவாய்ப்பைப் பெறவேண்டுமென்று சொன்னால், தனியார் துறையிலே இட ஒதுக்கீடு வந்தாலொழிய, அதற்கு வாய்ப்பே இருக்காது.  தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லாமல், இத்தகைய புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புக்களைத் தாமே உருவாக்கித் தரவேண்டுமென்று நம்முடைய அரசாங்கம் சொன்னபோதிலும்கூட, கடந்த 3 ஆண்டுகளாக, இந்தியாவிலே இருக்கின்ற எந்தவொரு பெரிய தனியார் நிறுவனமும் affirmative action  என்று அமெரிக்கா போன்ற நாடுகளிலே குறிப்பிடப்படுகின்ற அத்தகைய ஒத்தாசை நடவடிக்கைகளைத் தங்கள் நிறுவனங்களிலே அமல்படுத்துவதற்குத் தாமாக இதுவரை முன்வரவே இல்லை.  நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும், மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடாது என்று.  மயிலே மனம் இரங்காதபோது, கழுகுகளிடம் கையேந்திக் கொண்டிருப்பதிலே அர்த்தம் இல்லை.  எனவே, தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினைக் கொண்டுவருவதற்கு நாம் உறுதியான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.  இப்போது இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது மிகவும் இக்கட்டான ஒரு நிலையிலே இருக்கின்ற சூழலிலே, நாம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தால்தான் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்து, சமூக நீதிப் போராட்டத்திலே முன் நிற்கின்ற தமிழகம், இந்தக் கொள்கையிலும் உறுதியாக முன்னின்று தனியார்த் துறையிலே இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தித்தர இங்கே உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
அடுத்ததாக, இப்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு புரட்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறையிலே இருக்கின்ற அந்த இணைய தளங்களை நிர்வகிக்கின்ற சர்வர்கள் என்று சொல்லப்படுகின்ற அந்த அமைப்புகள், உலகம் முழுவதும் இருக்கின்ற இணைய தளங்களைக் கட்டுப்படுத்துகின்ற அந்த server அமைப்புகள் யாவும் அமெரிக்காவினுடைய கட்டுப்பாட்டிலே இருக்கின்றன.  இன்றைக்கு நம்முடைய அமைச்சர்கள், முக்கியமான அதிகாரிகள் பரிமாறிக்கொள்ளும் மின்னஞ்சல்களைக்கூட அமெரிக்காவிலேயிருந்து அவர்கள் கண்காணிக்க முடியும்; அவர்கள் அவற்றைப் படிக்க முடியும்.  நம்முடைய சுதந்திரம் என்பது, இறையாண்மை என்பது இன்றைக்குக் கேள்விக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது.  இன்றைக்கு உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டிருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொள்கிற அதேநேரத்திலே, நம்முடைய இறையாண்மை என்பது இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அந்த சர்வர்களை இந்தியாவிலேயே கட்டுப்படுத்துகிற ஒரு அதிகாரத்தைப் பெறுவதற்கு இந்திய அரசை நாம் வலியுறுத்த வேண்டுமாய் நான் இங்கே என்னுடைய கருத்தைப் பதிவு செய்கின்றேன்.
அடுத்ததாக, B.P.O. . மையங்கள்,out-sourcing முறையில் இப்போது பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருகின்றன.  நம்முடைய இளைஞர்களும் நல்ல சம்பளங்களைப் பெறுகிறார்கள்.  ஆனால், அந்த மையங்களிலே எந்தவித வேலை ஒழுங்கமைப்பும் கிடையாது.  எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்கின்ற வரையறை கிடையாது.  நம்முடைய இளைஞர்களெல்லாம் கசக்கிப் பிழியப்படுகிறார்கள்.  அவற்றை ஏதேனும் ஒரு விதத்திலே வரன்முறைப்படுத்துவதற்கு நம்முடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த ஆட்சியின்போது, உலக வங்கியினுடைய ஒரு மையம் சென்னையிலே துவக்கப்பட்டது.  சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அவர்களுக்கு இனாமாக நாம் தந்தோம்.  ஆனால், அதனுடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்திலே இடம் பெறாத ஒரு விஷயமாக, அங்கே கட்டப்படுகிற அந்தக் கட்டடத்திற்கான Building   charge-ஐக்கூட அவர்கள் ரத்து செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். சுமார் 1½  கோடி ரூபாய்கூடப் பெறாது, அதைக்கூட நாங்கள் கட்டமாட்டோம், அதைக் கூட நீங்கள் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று அவர்கள் கேட்கிறார்கள்.  இன்றைக்கு உலக வங்கியின் அந்தக் கிளையிலே, நம்முடைய உள்ளூர்வாசிகள் அதிகமாக வேலை செய்வதில்லை.  அதனால், இங்கே நமக்கு எந்தப் பலனும் கிடையாது.  உலக வங்கிக்கு பல நாடுகள் தங்களுடைய அரசியல் இறையாண்மையையே எழுதிக்கொடுத்த வரலாறு எல்லாம் நமக்குத் தெரியும். அப்படியான அந்த வங்கிக்கு இங்கே நாம் நிலம் கொடுத்தது போதாது என்று இங்கே மேலும் மேலும் சலுகைகளைக் கொடுத்துதான் ஆகவேண்டுமா என்பதை இந்த அரசு சிந்தித்து, அத்தகைய கோரிக்கைகளை நீங்கள் நிராகரிக்க வேண்டுமாய் நான் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்ததாக, மிகவும் அதிகம் விவாதிக்கப்படுவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். அந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டபோதே அவை நாட்டுக்குள்ளே அமைகிற ஒரு அந்நிய நாட்டின் பகுதிபோல அந்த மண்டலங்கள் அமையும் என்று அன்றைக்குச் சொன்னார்கள்.  அந்த மண்டலங்களுக்குள்ளே நம்முடைய நாட்டினுடைய எந்தவிதச் சட்டமும் செல்லாது என்று அன்றைக்குத் தீர்மானிக்கப்பட்டது.  இன்றைக்கு அதை வரையறுக்கிற உரிமையோ, அதிகாரமோ மாநில அரசுக்கு இல்லை. அந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலே உருவாக்கப்படுகிற நிறுவனங்களிலே, இங்கே நம்முடைய முதல்வர் அவர்கள் பேசும்போதெல்லாம் சொன்னார்கள், இங்கே உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பிலே முன்னுரிமை கொடுக்கிறீர்களா என்று கேட்டுவிட்டுத்தான் நான் கையெழுத்திடுகிறேன் என்று அவர்கள் பலமுறை இந்த அவையிலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.  அதுபோலவே, அந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலே இந்த சமூக நீதிக் கொள்கையை, reservation என்ற அந்தப் பெயரிலே அவர்கள் அவற்றை அமல்படுத்தாவிட்டாலும்கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இடங்களை அளிக்கவேண்டும், அங்கே இடங்களை, கட்டடங்களை ஒதுக்கீடு செய்யும்போது அவ்வாறு ஒதுக்கீடு செய்யவேண்டும். இத்தகைய  நடவடிக்கைகள், அந்த நிறுவனங்களை நடத்துகிற பன்னாட்டு அமைப்புகள் தங்கள்  நாடுகளிலே கடைப்பிடிக்கிற நடவடிக்கைகள்தான் என்கிற விதத்திலே,  அவற்றை இங்கேயும் அமல்படுத்துவதற்கு அவர்களுக்கு எந்தவிதத் தடையும் அவர்களுக்கு கிடையாது.  எனவே, நீங்கள் அதை வலியுறுத்தி, அந்த சமூக நீதிக் கொள்கையை கடைப்பிடிப்போம் என்ற வாக்குறுதியை அவர்களிடமிருந்து பெற்று அந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமாய் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அதுபோலவே, பின்னடைந்த பல பகுதிகளிலே இப்போது புதிய தொழில்கள் துவங்கப்படுகின்றன.  விவசாயத் துறையை நாம் காப்பாற்ற வேண்டுமென்று சொன்னால், இப்போது தொழில் துறையை வளர்த்தாலொழிய முடியாது.  1901 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிலே விவசாயத் துறையிலே இருந்த நிலமற்ற கூலி விவசாயிகளுடைய பங்கிலே 67 விழுக்காட்டினர் ஆதி திராவிட மக்கள் என்று அன்றைக்கு கணக்கெடுப்பிலே தெரிவித்தார்கள்.  2001 2001 census-லும்கூட அந்த அளவு, அந்த விழுக்காடு மாறாமல் அதே 67 விழுக்காட்டினர் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நிலமற்ற கூலி விவசாயிகளாக இருக்கிறார்கள்.  நிலத்தை சார்ந்து, கூலி விவசாயிகளாக அவர்கள் இருக்கின்றவரை அவர்களுடைய வறுமை நிலையிலே எந்த மாற்றத்தையும் நாம் கொண்டுவர முடியாது.  அவர்கள் நிலத்தை நம்பி இருப்பதிலிருந்து அவர்களை விடுத்து பிற தொழில் துறைகளை நோக்கி நகர்த்துகிற திட்டத்தை நாம் முன்வைத்தாக வேண்டும்.  (மணியடிக்கப்பெற்றது) அத்தகைய திட்டங்களை உருவாக்க வேண்டுமாய் இந்த அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
மிகவும் பின்னடைந்திருக்கின்ற என்னுடைய காட்டுமன்னார்கோயில் தொகுதியிலே ஒரு தொழிற்பேட்டை மட்டும் அல்ல ஒரு தொழில் பயிற்சிக் கல்லூரிகூடக் கிடையாது.  அங்கே ஒரு தொழிற்பேட்டையை உருவாக்கித்தர மாண்புமிகு முதல்வர் அவர்கள் கருணைகூர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமாய்க் கேட்டுக்கொண்டு வாய்ப்புக்கு நன்றி சொல்லி அமைகிறேன்.  வணக்கம்.

No comments:

Post a Comment