Saturday, November 6, 2010

மன வளர்ச்சிக் குன்றியோருக்கான ஒரு பள்ளி





15-7-2009  முற்பகல் 10-30


வினாக்கள்-விடைகள்


159-
சிறப்புப் பள்ளி


*33246-திரு. து. ரவிக்குமார்:


மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா-
காட்டுமன்னார்கோவில் தொகுதி, அண்ணாமலை நகரில் ஊனமுற்றோருக்குச் சிறப்புப் பள்ளி அமைக்க அரசு முன்வருமா?
மாண்புமிகு திருமதி பி. கீதா ஜீவன், சமூக நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அண்ணாமலை நகரில் ஊனமுற்றோருக்கான சிறப்புப் பள்ளி அமைக்கும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் இல்லை.  இருப்பினும், தொண்டு நிறுவனம் ஏதேனும் அண்ணாமலை நகரில் சிறப்புப் பள்ளி தொடங்கிச் செயல்படுத்த முன்வந்தால் அரசு அங்கீகாரம் வழங்கி, உரிய உதவிகளும் வழங்கப்படும்.
மாண்புமிகு பேரவைத் தலைவர்:  மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.
திரு. து. ரவிக்குமார்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உடல் ஊனமுற்றவர்கள் வரிசையில் கண் பார்வையற்றவர்கள், மூளை வளர்ச்சிக் குன்றியவர்கள், வாய் பேச முடியாதவர்கள்,  காது கேளாதவர்கள் என்று பல பேர் இருக்கின்றார்கள்.  இன்றைக்கு அவர்களுக்கெல்லாம் நம்முடைய அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களின் கருணையினாலே, அவர்களெல்லாம் நல்வாழ்வு பெற்று வருகிறார்கள்.  இந்த நிலையிலே, கடலூர் மாவட்டத்திலே, உடல் ஊனமுற்றவர்களுடைய எண்ணிக்கை, ஒப்பீட்டு அளவிலே அதிக அளவில் இருக்கின்ற காரணத்தினாலே-அதிலும் குறிப்பாக, என்னுடைய காட்டுமன்னார்கோவில் தொகுதியிலே, மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளினுடைய எண்ணிக்கை கணிசமாக இருக்கின்ற காரணத்தினாலே-மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்காக அண்ணாமலை நகரிலே அரசு சார்பிலே ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்த அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  ஏனென்று சொன்னால், தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்துகிற பள்ளிகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், அரசே ஒரு பள்ளியை அங்கே தொடங்கி நடத்த முன்வருமா என்று தங்கள்வாயிலாக அறிய விரும்புகிறேன்.


மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினாக்கள்-விடைகள் நேரம் நீட்டிக்கப்படுகிறது.  மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திருமதி பி. கீதா ஜீவன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய தமிழக முதலமைச்சர், தலைவர் கலைஞர் அவர்களின் அரசு, 200 தொண்டு நிறுவனங்களின்மூலம் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகளுக்கு மானியம் வழங்கி வருகிறது.  அதுமட்டுமல்ல; அவர்கள் கட்டடம் கட்டுவதற்கும் 60 சிறப்புப் பள்ளிகளுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அனுமதி வழங்கி, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.5 இலட்சம் வழங்கி, கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதுபோக, மன வளர்ச்சிக் குன்றியோர் தங்களுடைய சுய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக, அவர்களுக்கு ஆரம்பகாலப் பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன.  அப்படிப்பட்ட ஒவ்வொரு மையத்திற்கும் அரசின் சார்பில் 5 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  ஆகவே, நீங்கள் தொண்டு நிறுவனங்களின்மூலம் நடத்த முன்வரும்போது அரசு உரிய உதவிகளை இந்தத் திட்டத்தின்மூலம் வழங்க இயலும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த வாரத்திற்கு முன்புகூட இதேபோன்ற பதிலை அமைச்சர் அவர்கள் இங்கே தெரிவித்தார்கள்.  நானும் பல்வேறு தொண்டு நிறுவனங்களை அணுகிக் கேட்டபோது, அங்கே மன வளர்ச்சிக் குன்றியோருக்காகப் பள்ளிகளை நடத்த எந்தத் தொண்டு நிறுவனமும் முன்வராத நிலை இருக்கிறது.  எனவே, இதை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி, தமிழக முதல்வர் அவர்களிடத்திலே இதை நான் ஒரு பணிவான கோரிக்கையாகவும் வைக்கின்றேன்.  அங்கே மன வளர்ச்சிக் குன்றியோருக்கான ஒரு பள்ளியை அரசு சார்பிலே நடத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்று நான் கேட்க விரும்புகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு முதல்வர் அவர்கள்.


மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் இங்கே கூறுகிற அந்தக் கருத்து ஏற்கெனவே ஆராயப்பட்டு, என்னிடத்திலே அதுபற்றி யோசனை கேட்கப்பட்டது. மன வளம் குன்றியவர்களுக்காக இந்த அரசு பல இடங்களில் இல்லங்களை அமைத்து தொடங்கியிருப்பதைப்போல, மாண்புமிகு உறுப்பினர் ரவிக்குமார் கூறுகின்ற அந்தப் பகுதியிலும் மனநலம் குன்றி இருப்பவர்களுக்குக் கருணையோடு பரிசீலித்து அவர்களுடைய உடல்நிலை கருதி, அதற்கான வசதி வாய்ப்புகளை இந்த அரசு நிச்சயமாகச் செய்யும் என்ற உறுதியை அளிக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)

No comments:

Post a Comment