Friday, November 5, 2010

தமிழின் எதிர்காலம் - இந்திரா பார்த்தசாரதி






   தேன்மொழியின் ‘ நெற்குஞ்சம் ‘ சிறுகதைத் தொகுப்பு பற்றி


புதுமைப்பித்தன் கதைகளில் மூட்டைப் பூச்சிகள் ‘அபிவாதயே’ சொல்லும். அதைப் போல், தேன்மொழியின் கதைகளில் மரப்பாச்சி கலகக்காரியாக வருகின்றது.
உச்சியை இழந்த நெட்டைப் பனைமரம், ஆடைப் பூச்சு ஏதுமற்ற ஆதித் தாய் ஏவாளாகக் கட்டற்று விடுதலையின் உருவகமாகத் தோற்றம் கொள்கின்றது.
‘சத்து உரிந்த வார்த்தைகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டன’ என்கிறது இவருடைய மரப்பாச்சி. ஆனால், தேன்மொழியின் வார்த்தைகள் அனைத்தும்
சுடுசரம் ஒக்கும், சாணைத் தீட்டப்பட்ட கூர்மையான சொற்களாக ஒளிர்கின்றன.

பத்துக் கதைகளும், இவரைத் தனித்து அடையாளம் காட்டும் ஒரு குரலாக
ஒலிக்கின்றன. சாட்சி நிலையில் நின்று, உணர்ச்சி வயப்படாமல், எந்த விதமான மதிப்பீட்டு அறிவுரைகளும் வழங்காமல், வாழ்க்கையின் ‘நகைமுரணை’, (Irony)
அழகியல் விரவிய நாகரிகக் குரலில்(sophisticated), உரைநடைக் கவிதையாக, மனிதாபிமானக் கதைகள் சொல்லும் தேன்மொழி, தமிழின் எதிர்காலம்.

                                       - இந்திரா பார்த்தசாரதி

No comments:

Post a Comment