Friday, November 5, 2010

கிரந்த யூனிகோடு : தொடரும் விவாதம்

அன்புள்ள ரவிக்குமார்,
 
பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்களுக்கு என் வணக்கத்தைக்
கூறுங்கள். அவர் முன்வைக்கும் கூற்றைப் பாருங்கள். ஐயா அவர்கள்
31 எழுத்துகளை (ஆய்தம்+12 உயிர்_18 மெய்) மட்டும் கூறினார்கள்.
தமிழில் உள்ளதை எழுத கிரந்தத்தில் 247 எழுத்துகளையும் சேர்ப்பது
முறையாகும் (மணிப்பிரவாளம் எழுத).  நீங்கள் (ரவிக்குமார்) சூப்பர்செட்
பற்றிக் கூறியதால் இதனைக் கூறுகிறேன்.
 
//     கிரந்த எழுத்து தென்னிந்தியாவில் வடமொழியை எழுத உருவாக்கப்பட்ட வடிவம்.  தமிழ் மொழிக்கான வடிவம் இல்லை. தமிழ்க் கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளோடு கிரந்த எழுத்தையும் கையாண்டுள்ளது உண்மையே.  கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும் கலந்த நூல்களும் சில உள்ளதும் உண்மையே .   அவை மணிப் பிரவாள நடை உடையவை என்று அழைக்கப்படுகின்றன.   அவை போன்ற ஆவணங்களைப் படிக்க உதவவேண்டும் என்று எண்ணினால் தமிழ் மொழியின் எல்லா எழுத்துக்களையும் (அதாவது 31 எழுத்துகளையும் உயிர் எழுத்தின் மாற்று வடிவங்களையும்) கிரந்த எழுத்துகளையும் சேர்த்து மணிப்பிரவாள எழுத்து முறை என்ற ஒன்றை வேண்டுமானால் அமைக்கலாம். அதில் யாருக்கும் தடை இருக்காது. ஏனென்றால் அது தமிழ் அல்லாத பிற மொழியாளர் மணிப்பிரவாள இலக்கியங்களைப் படிக்கத் தூண்டும்,   உதவியாக இருக்கும். // 
ரவிக்குமார், பல எழுத்துகளைச் சேர்க்கும்
சூபர்செட் என்னும் கருத்து அறிவியல் நோக்கில் சிறப்பன்று.
அறிவியலில் குறுகிய அடிப்படைகளைக் கொண்டு சமைப்பதே சிறப்பு.
ஒரு வட்டம் வரைய, பகுதி பகுதியாகப் பிரித்து பல முன்கோள்களைக்
கொண்டு சமன்பாடு அமைப்பது சிறப்பல்ல. x^2+y^2 = r^2 என்றோ
இன்னும் பொதுவான சமன்பாட்டையோ, வட்டத்தின் அடிப்படையான
உட்கூறாக அமைந்தப் ஒரு பண்பைக் கொண்டு அமைத்தல் சிறப்பு.
மொழியியலாளர் கூறுவதெல்லாம் ஏற்புடையதன்று. அவர்கள்
செய்யும் சில திரிப்புத்தனங்களை/அறியாமைகளை எழுதத்
தனிநூல் எழுத வேண்டும். அவர்கள் ஏதும் எல்லாம் அறிந்தவர்கள்
அல்லர்.  பலவகையாக அரசியல் செய்கிறார்கள். எது அரசியல்,
linguistic social engineering/politics எது மொழியியல் சார்ந்த அறிவியல் பண்பு என்று அறிய வேண்டும். எல்லா அறிவியல்/பொறியியலிலும் குமுகப் பொறுப்பு, அறநீர்மை என்பன உண்டு.  ஒரு டி.என்.ஏ-வை மாற்றுகிறேன். உங்கள் தாயாருக்கும் ஒன்றும் ஆகாது. முகம் குரங்கு மாதிரி
இருக்கும் ஆனால் உங்கள் தாயார்தான். ஒரு காதில் முட்செடி
முளைக்கும், ஆனால் மறுகாதில் ஒன்றும் ஆகாது. முட்செடியில் அழகான பழம் பழுக்கும் நீங்களும் சாப்பிடலாம். ஆகவே அறிவியல் அடிபப்டையில், டி.என்.ஏ -வை மாற்றும் தொழில்நுட்பம் 
பற்றி மட்டும் பேசலாம். நீங்கள் உணர்ச்சி வயப்படக்கூடாது. என்பது போன்று உள்ளது இப்பொழுது நடக்கும் ஏய்ப்புவேலை.  
ஆங்கிலத்திலே linguist என்றால் மொழியிலாளர் என்று
பொருள். ஆனால் linguistics என்றால் மொழியியலாளர்களின்
பழக்கவழக்கங்களை ஆயும் துறை என்று பொருள் தர வேண்டும்
ஆனால் அதன் பொருள் மொழியியல்!!  உண்மை நிலை அது சுட்டும் மொழியியலாளர்களின் போக்குகளைப் பற்றியதாகவே உள்ளது :)
 
மொழியியல் மேதாவிகள் சொல்லும் சில கருத்துகளை
எண்ணிப்பாருங்கள்:
 
1) மொழி என்பது கருத்துகளைச் சொல்லும் ஒரு கருவிதான். சரி அப்படியென்றால் தமிழர்கள் எழுதுவது போல் எழுதுவதில் என்ன
தவறு? ஏற்றுக்கொண்டு போக வேண்டியதுதானே!
ஏன் ஆங்கிலத்தில் உள்ளதையும், பிறமொழிகளில் உள்ளதையும்
அப்படியே எழுத வேண்டும்? எக்ஃசோனிம் (exonym) என்னும் கருத்து மொழியியலாளர்கள் அறியாததா? உரோமன்/இலத்தீன் எழுத்துகளிலேயே
எழுதும் பிரான்சியம் எசுப்பானியம் (Español), போர்த்துகீசு மொழிகளில் கூடப்
பின் ஏன் ஆங்கிலேயர்களின் நகரமான London என்பதை Londres  என்றும்,
இத்தாலிய மொழியில் Londra என்றும் வெவ்வேறு விதமாக
பிற ஐரோப்பிய மொழிகளிலேயே எழுதுகின்றனர்?  ஒவ்வொரு மொழியும்
தன் மொழிவழக்கத்தின் படியேதான் எழுதும். (இதற்குப் பல
உட்காரணங்கள் உள்ளன).
 
2) prescriptive grammar --ஆ அதெல்லாம் செல்லாது. எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம். நடைமுறையே ஏற்புடையது. சரி அப்பொழுது ஆங்கிலேயர்கள்
பள்ளிகளில் இலக்கணப் பாடம் நடத்துவதை நிறுத்துவார்களா?  பேச்சுத்தமிழை "அலசும்"  ஓர் அமெரிக்க
மொழியியல் பேராசிரியர் சொல்லுகிறார்:  காங்க்ரீட் Pencu என்று ஒருவன் சொன்னான். நான் bench என்று தவறுதாகப் புரிந்து கொண்டேன். ஆகவே தமிழில் வேறுபடுத்திக்காட்ட ஒலியன்கள் வேண்டும். எழுத்து வேண்டும்.
நான் அவரிடம் கேட்டேன் (இன்னமும் மறுமொழி இல்லை). ஆங்கிலத்தில்
bite, byte ஆகிய இரண்டையும் ஒலிப்பொழுக்கம் உள்ள மொழி எழுதினால்
எப்படி வேறுபாடு காட்டும்? Homonym, homograph ஆகிய கருதுகோள்களை
அறியாதவர் அல்லர் அவர். எனினும், அவ்வப்பொழுது, தேவையான பொழுது
மிக வசதியாக மறந்துவிடுவார். பல்பொருள் ஒருமொழி, ஒருபொருட்பன்மொழி என்பதெல்லாம், இந்த திருகுவாத மொழியியலாளர்களைப் பார்த்துத் தமிழர்கள் செய்யவில்லை. மொழியியலில்
நிறைய கண்டுபிடித்துள்ளார்கள், பன்முகம் செறிந்த பெருந்துறையாக
வளர்ந்துள்ளது (கடந்த 60-70 ஆண்டுகளில்), ஆனால் அதில் ஆங்கிலம் தவிர்ந்த, அல்லது ஐரோப்பிய மொழிகள் தவிர்ந்த மொழிகளை, மிகவும்
சீரழிக்கும் முகமாக பல செயல்களைச் சில திருகுவாத மொழியியலாளர்கள்
செய்கிறார்கள். 
 
 இவற்றை எல்லாம் நடுநிலை நின்று விரித்து எழுத வேண்டும்.
ஆங்கில மொழி, ஐரோப்பிய மேன்மைத் திணிப்பாண்மைக் கருத்துகளில்
மயங்காமல் இருப்பதும், நம் மொழியை நாம் காப்பதும் நம் கடமை.
பலவகையான மயக்கங்களுக்குப் ப்லர் பலியாகின்றனர்.
 
கீழ்க்காணும் நூல்களையும், (முடிந்தால் அவற்றின்
பின்புலமான நூற்றுக்கணக்கான
ஆய்வுக்கட்டுரைகளையும்) படிக்க வேண்டுகிறேன்.
 
1) Robert Phillipson, "Linguistic Imperialism" Oxford University Press, 1992
2) Pennycook, Alastair (1998), English and the Discourses of Colonialism, Routledge
3)Pennycook, Alastair (1995), The Cultural Politics of English as an International Language
 
அன்புடன்
செல்வா

No comments:

Post a Comment