Saturday, November 13, 2010

நர்கீஸ் புயலில் மாண்ட நாற்பதாயிரம் தமிழர்கள் :ரவிக்குமார்

இந்த  கட்டுரை  நர்கீஸ்   புயல்  தாக்கி  மியான்மர்  தமிழர்கள்  ஆயிரக்கணக்கில்  உயிரிழந்தபோது  நான்  எழுதியது . தகவலுக்காக  இங்கே  தருகிறேன்  


தமிழ்நாட்டை தாக்கப்போவதாக பயமுறுத்திய நர்க்கீஸ் புயல் நகர்ந்துசென்று மியான்மரில் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. மே மாதம் இரண்டாம் தேதி மியான்மர் நாட்டைத் தாக்கிய நர்கீஸ் புயல் அந்த நாட்டின் ஐராவதி டெல்டா பகுதியில் மிகப்பெரிய அழிவை உண்டாக்கியுள்ளது. மணிக்கு நூற்று தொண்ணூறு கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்று யாங்கூன் நகரைப் பத்து மணி நேரம் தொடர்ந்து தாக்கியதில் அங்கு பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாகி விட்டன. மரங்கள் ஒன்றுகூட மிச்சமில்லை. இதுவரை ஒன்றரை லட்சம் பேர் அந்தப் புயலில் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புயல் வீசி ஏறத்தாழ ஒரு மாதம் ஆகியும்கூட மீட்புப் பணிகள் சரிவர நடக்காததால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்கிறார்கள்.
நர்கீஸ் புயலின் தாக்குதலுக்கு இலக்கான ஐராவதி டெல்டா, யாங்கூன் மற்றும் பகோ டிவிஷன் முதலான பகுதிகள் தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதிகளாகும். ‘‘பகோ டிவிஷனில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாகத் தமிழர்கள் வசிக்கின்றனர். யாங்கூனிலும் சுமார் இருபது சதவீதம் வரை தமிழர்கள் உள்ளனர்’’ என்று யாங்கூனில் வர்த்தக நிறுவனங்களை நடத்திவரும் சேகர் கூறுகிறார். மணிப்பூர் மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருக்கும் சேகர், சில நாட்களுக்கு முன்புதான் யாங்கூனிலிருந்து திரும்பினார். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மியான்மர் தமிழர்களின் நிலையைக் கேட்டறிந்தேன். தமிழர்கள் நிறைந்து வாழ்ந்திருந்த கையான், சௌதான், தல்லா, இராவடி, தோங்குவா, தங்கி, திங்காஜூன், டவுன்டகோன் முதலிய ஊர்கள் இப்போது முற்றிலுமாக அழிந்து போய்விட்டதாக அவர் தெரிவித்தார். இவைதவிர யாங்கூனுக்கு அருகில் இருக்கும் பிலிக்கான், டகோன், டாகிடா, எரியா, டகோமியா முதலான ஊர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மியான்மரில் உள்ள ராணுவ அரசாங்கம் மீட்புப் பணிகளை சரிவர செய்யவில்லை. அயல்நாட்டு உதவிகளும் கூடத் தேவையில்லையென்று அது கூறிவந்தது. வெளிநாட்டுப் மீட்புப் பணியாளர்களையும் அனுமதிக்க முடியாது என மறுத்து வந்தது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதைவிட அங்கே நடந்துள்ள சேத விவரங்கள் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதில்தான் ராணுவ அரசு கவனமாக இருந்தது. கடந்த வாரம் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒன்றுகூடி மியான்மர் ராணுவ அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என மிரட்டியதற்குப் பிறகே அயல்நாடுகளைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் மியான்மருக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மியான்மருக்கு உதவுவதற்கென யாங்கூனில் கூடிய நாற்பது நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதல் கட்டமாக ஐந்து கோடி டாலர் அளவுக்கு உதவி அளிப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட அனுமதித்தால் மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மீட்புப் பணிகள் இன்னும் ஆறுமாத காலத்துக்கு நீடிக்கும் என்று ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறியிருப்பதைப் பார்த்தால் அங்கு எந்த அளவுக்கு நிலைமை உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இறந்தவர்களின் உடல்கள் இன்னும்கூட அகற்றப்படாமல் கிடப்பதாக மியான்மர் மக்கள் கூறுகின்றனர். பௌத்த பிக்குகள்தாம் மீட்புப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். பௌத்த மடாலயங்களில் தான் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மியான்மர் நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக இருந்ததும் இந்த அளவு உயிர்சேதம் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. பெரும்பாலான கட்டிடங்களில் தகரத்தால் ஆன மேற்கூரைகள்தான் போடப்பட்டிருந்தன. அந்தத் தகடுகள் காற்றில் பிய்த்துக் கொண்டு போய்விட்டன. பௌத்த மடாலயங்கள் கொஞ்சம் ‘ஸ்ட்ராங்காக’ கட்டப்பட்டிருந்ததால் அவை தப்பித்தன.
மியான்மர் மக்களும்கூட சுதந்திரமாக மீட்புப் பணியில் ஈடுபட முடியாதவாறு ராணுவ அரசாங்கம் பல்வேறு தடைகளைப் போட்டுள்ளது. ஐராவதி டெல்டா பகுதியில் நிவாரணப் பொருட்களை விநியோகித்து விட்டுத் திரும்பிய பர்மியர்களின் எழுபது கார்களை ராணுவ அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டனர். சட்டத்தை மீறியதால் கார்களைப் பறிமுதல் செய்திருப்பதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். ‘‘நெடுஞ்சாலை ஓரங்களில் காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு யாரும் நிவாரணப் பொருட்களை வழங்கக்கூடாது. அப்படிச் செய்வதால் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்தக் காலில் நிற்பதையும் இப்படியான உதவிகள் கெடுத்து விடுகின்றன’’ என்று மியான்மர் அரசு அறிவித்திருக்கிறது.
மிஸ்ஸிமா.காம் (னீவீக்ஷ்க்ஷ்வீனீணீ.நீஷீனீ) என்ற இணையதளத்தில் மியான்மரின் உண்மை நிலவரம் பற்றிய செய்திகளை அங்குள்ள சிலர் வெளியிட்டு வருகின்றனர். இதுவரை ராணுவ அரசாங்கத்தை ஆதரித்து வந்தவர்கள்கூட இப்போது அதை வெறுக்கத் தொடங்கியிருப்பதாக அந்த இணையதளம் கூறுகிறது. அது தவிர அங்குள்ள பௌத்த பிக்குகளும், நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர் கட்சித் தலைவி ஆங் சான் சுகியின் ஆதரவாளர்களும் இப்போது ரகசியமாக இணையதளங்கள் மூலம் உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
மியான்மரின் தலைநகரில் கூட இன்னும் மின்சார வசதிகள் சரி செய்யப்படவில்லை. ஆனால் மீட்புப் பணிகளின் முதல்கட்டம் முடிந்துவிட்டதாக ராணுவ தளபதி கூறியிருக்கிறார். அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு உணவு முதலிய நிவாரணப் பொருட்கள் போதுமான அளவு வழங்கப்படவில்லை. இதனிடையே முகாம்களில் இருப்பவர்களைத் தமது கிராமங்களுக்குத் திரும்பிச் செல்லுமாறு ராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர். வீடுகள் யாவும் சிதைந்து சின்னாபின்னமாகி விட்ட நிலையில் கிராமங்களுக்குப் போய் எங்கே தங்குவது என்று மக்கள் தவிக்கின்றனர். வீடுகளை சரி செய்யலாமென்றால் அதற்கான உபகரணங்களின் விலை பல மடங்கு கூடிவிட்டது. கூரைகளில் வேயப்படும் இரும்புத் தகடுகள் முன்பு நான்காயிரம் கியாட்டுகள் (பர்மிய பணம்) விற்றது. இப்போதோ அது முப்பதாயிரம் கியாட்டுகள். உணவுப் பொருட்களின் விலையும் அப்படித்தான். ஒரு லிட்டர் பாட்டில் குடிதண்ணீரின் விலை 1200 கியாட்டுகள். ஒரு கிலோ உப்பு 1500 கியாட்டுகள். பால் பவுடரோ கிலோ பத்தாயிரம் கியாட்டுகளைத் தாண்டிவிட்டது. உலகிலேயே அரிசி உற்பத்திக்கு பேர்போன மியான்மரில் இப்போது அரிசித் தட்டுப்பாடு. முப்பத்து இரண்டு கிலோ கொண்ட அரிசி கூடையின் (அங்கே மூட்டைக்கு பதிலாக கூடை என்றுதான் சொல்கிறார்கள்) விலை இந்திய பணத்துக்கு தொள்ளாயிரம் ரூபாய் விற்கிறது. அதாவது மியான்மர் பணத்தில் சுமார் இருபத்து இரண்டாயிரம் கியாட்டுகள்.
நர்கீஸ் புயலால் ஐராவதி டெல்டா பகுதியில் பல ஊர்களில் கடல்நீர் உள்ளே புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை. விளை நிலங்களில் எல்லாம் கடல்நீர் புகுந்துவிட்டதால் இனி அவை விவசாயத்துக்குப் பயன்படுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்கள் இப்போது இந்தியாவோடு சுமூகமான உறவைப் பேணி வருகின்றனர். முன்பு அந்த நாட்டில் நடந்து வந்த ஜனநாயகப் போராட்டங்களை இந்தியா ஆதரித்து வந்தது. அதற்குப் பதிலடி தரும் விதமாக இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் செயல்பட்டு வரும் ஆயுதக் குழுக்களை மியான்மர் அரசு ஊக்குவிக்கத் தொடங்கியது. அதை உணர்ந்த இந்தியா வேறு வழியின்றி மியான்மர் ராணுவ அரசுடன் கைகுலுக்கி விட்டது. அதற்கு ராணுவத் தளவாடங்களையும்கூட இந்தியா சப்ளை செய்து வருகிறது. இந்நிலையில் நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியாவும் சில உதவிகளைச் செய்துள்ளது. ஆனால் அந்த உதவிகள் தமிழர்களை சென்றடையவில்லை.
மியான்மர் நாட்டில் தமிழர்கள் மட்டுமின்றி இந்தி பேசக்கூடிய இந்திய வம்சாவளியினரும் கூட வாழ்கின்றனர். ஜியாவடி என்ற பகுதியில் இந்திய பேசக்கூடிய மக்கள் பெரும்பாலோராக உள்ளனர். அவர்களிலும் ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய வம்சாவளியினர் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும்கூட இந்திய அரசு அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறது. பெட்ரோல் விலையை ஏற்றி முதலாளிகளின் நட்டத்தை எப்படி ஈடு செய்வது என்பது பற்றித்தான் இந்திய அரசுக்குக் கவலை. மியான்மர் தமிழர்கள் செத்தது பற்றி அதற்கு எந்த அக்கறையும் கிடையாது.
மியான்மரில் வாழும் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வசித்து வருகிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டபோது மியான்மரும் இந்தியாவின் ஒரு மாகாணமாகத்தான் இருந்தது. எனவே அங்கு ஏராளமான தமிழர்கள் குடியேறினார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த செட்டியார்கள் பலர் அங்கு வட்டித் தொழில் நடத்தி லாபம் அடைந்தவர்கள் தான். பர்மா சுதந்திரம் அடைந்ததும் அவர்களில் பலர் அங்கிருந்து தமிழகம் திரும்பி விட்டனர். பர்மாவில் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கு முன்னர் 1950களில் அங்குள்ள மோல்மின் நகரின் பாராளுமன்ற உறுப்பினராக செயா வூ ராமா என்ற தமிழர் இருந்துள்ளார். மியான்மரின் மூன்றாவது பெரிய நகரமான மோல்மினில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. மியான்மரைக் கட்டியெழுப்புவதில் தமிழர்களும் கணிசமாக பங்களிப்பு செய்துள்ளனர். ஆனாலும்கூட அவர்கள் அங்கு இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். அவர்கள் மீது கடுமையான ராணுவ கண்காணிப்பும் உள்ளது.
நர்கீஸ் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும்போதும் கூட தமிழர் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது. மணிப்பூர் மாநில தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர்களுள் ஒருவரா£ன மாஸ்டர் யூசுப், தற்போதைய தலைவர் சேகர், செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோரின் முன் முயற்சியில் மூன்று ட்ரக்குகள் நிறைய நிவாரணப் பொருட்கள் அண்மையில் மியான்மர் தமிழர்களிடம் வழங்கப்பட்டது. மியான்மரில் உள்ள தமிழ் மாமன்றம், இந்து சென்ட்ரல் போர்டு ஆகிய அமைப்புகளின் உதவியோடு இந்தப் பொருட்கள் நேரடியாக தமிழ் மக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள விலைவாசியில் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மேலும் பல தமிழர்கள் மியான்மரில் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது என மணிப்பூர் தமிழ்ச் சங்கத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் மியான்மர் தமிழர்கள் தாய்த் தமிழகத்தின் உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
மியான்மர் நிலவரம் குறித்த விவரங்களைத் திரட்டி அவற்றை ஒரு கோரிக்கை மனுவாகத் தயாரித்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று (27.05.2008) நான் தமிழக முதல்வர் அலுவலகத்தில் கொடுத்தேன். தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் கேட்டிருக்கிறேன்.
இலங்கை, மலேசியா எனத் தொடரும் தமிழரின் துயரம் இப்போது மியான்மரில் மையம் கொண்டிருக்கிறது. இனவாத வன்முறை மட்டுமின்றி இயற்கைப் பேரிடர்களும் தமிழ் இனத்தைப் பலிவாங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழ்நாட்டுத் தமிழர்கள்தான் முனைப்போடு முக்கிய பங்காற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வழியாக உதவிகளைச் செய்ய வைப்பது மட்டுமின்றி அல்லலுறும் மியான்மர் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க நமது கரங்களும் நீளவேண்டும். அப்போதுதான் நாமும் தமிழர்கள் என்பது உண்மை என்றாகும்.

நன்றி : ஜூனியர் விகடன் 28.05.2008

No comments:

Post a Comment