Friday, February 27, 2015

உலகச் சிந்தனையாளர் என்னும் ஊடக மாயை! - ரவிக்குமார்



ப்ராஸ்பெக்ட் மெகஸின் வருடம்தோறும் உலக சிந்தனையாளர்கள் என 50 பேரின் பட்டியலை வெளியிட்டு வாக்கெடுப்பு நடத்தி தரவரிசைப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் நான்கு இந்தியர்கள் இடம்பெற்றனர். அமர்த்யா சென், ரகுராம் ராஜன், அருந்ததி ராய், ஆகியோர் முதல் மூன்று இடங்களைப்
பிடித்தனர். கௌஷிக் பாசு ஆறாவது இடத்தில் இருந்தார். 

2015க்கான  50 பேர் அடங்கிய பட்டியல் இப்போது வெளியாகியிருக்கிறது. அதில் இந்தியாவிலிருந்து இம்முறை அருந்ததி ராய், பங்கஜ் மிஷ்ரா ஆகியோரின் பெயர்கள் உள்ளன. அந்தப் பட்டியலில் உள்ள வேறு சில பெயர்கள் ஹேபர்மாஸ், தாமஸ் பிக்கெட்டி, மரியோ வர்கஸ் லோஸா. 

ஹேபர்மாஸும் பங்கஜ் மிஷ்ராவும் ஒரு பட்டியலில் இடம்பெறுவதைப்போல ஒரு கொடுமை வேறென்ன இருக்க முடியும்? இன்னும் கொடுமை என்னவென்றால் கடந்த ஆண்டு பட்டியலில் ஸிஸேக் 14 ஆவது இடத்திலும் பெர்ரி ஆண்டர்ஸன் 28 ஆவது இடத்திலும் இருந்தனர். 

இப்படியான பட்டியல்களின் பொருள் என்ன? இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாலேயே ஒருவர் உலகச் சிந்தனையாளராகிவிடமுடியுமா? இதுவும் ஒரு ஊடக மாயை அல்லாமல் வேறென்ன? 

பாஜக அரசின் பெருவெடிப்பு சீர்திருத்தங்கள்: மானியங்களுக்கு சமாதி? -ரவிக்குமார்



அரிசி கோதுமை மண்ணெண்ணெய் தண்ணீர், உரங்கள் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முழுமையாக சென்று சேர்வதில்லை என பொருளாதார ஆய்வறிக்கை 2014--15 ல் சொல்லப்பட்டுள்ளது. மானியத்தில் வழங்கப்படும் அரிசியில் 15% வீணாகிவிடுகிறது, கோதுமையில் 54% வீணாகிறது. மீதமுள்ள அரிசி, கோதுமையில் பாதி மட்டுமே ஏழைகளுக்குச் சென்று சேர்கிறது என அந்த அறிக்கை கூறுகிறது. எனவே மானியம் அளித்து விலையைக் குறைத்து பொருளை விற்பதற்குப் பதிலாக மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கிவிட்டு பொருட்களை சந்தை விலையில் விற்கலாம் எனப் பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது. நேரடியாகப் பணத்தை அளிப்பதற்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்தவேண்டும், வங்கிகளோடு தபால் அலுவலகங்களையும் இதற்கு உபயோகிக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாளில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட்டின் முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. நாளைய பட்ஜெட்டில் அத்தியாவசியப் பொருட்களின் மானியங்களை மோடி அரசு காலிசெய்யப்போகிறது. அதற்கான முன்னறிவிப்பே இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை! 

Thursday, February 26, 2015

14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள்: தமிழ்நாட்டின் பின்தங்கிய ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் ! - ரவிக்குமார்

14 ஆவது நிதிக்குழு அளித்த பரிந்துரைகளை திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அந்தப் பரிந்துரைகள் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை அதிகரித்திருப்பதாக அவர்களால் தம்பட்டம் அடிக்கப்படுகிறது. அந்தப் பரிந்துரைகளில் உள்ள ஆபத்தான அம்சங்களைப் பற்றி இன்னும் விரிவான அளவில் செய்திகள் வெளியாகவில்லை. இதை எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டிய காங்கிரஸ் கட்சியோ தலைவர் யார் என்பதைப் பற்றிய சர்ச்சையில் மூழ்கிக் கிடக்கிறது. தற்போது நிதிக் குழு பரிந்துரைத்திருக்கும் ஆபத்தான பரிந்துரைகளில் ஒன்றுதான் ‘பின்தங்கிய பகுதிகள் வளர்ச்சி நிதி’ என்ற திட்டத்தை ரத்து செய்வதாகும்.

2006 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட திட்டம் ’ பின்தங்கிய பகுதிகள் வளர்ச்சி நிதி (Backward Region Grant Fund - BRGF ) அதன் அடிப்படையில் நாட்டின் 27 மாநிலங்களில் 250 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்கள் என அடையாளம் காணப்பட்டு அந்தப் பகுதிகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கல்வி,சுகாதாரம்,சாலை வசதி,அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக இந்த நிதி பயன்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 4670கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த உலக வங்கியின் நிபுணர் குழு இந்தத் திட்டத்தை மேலும் வலுவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும் என்பது அந்தப் பரிந்துரைகளில் முக்கியமானதாகும்.

14 ஆவது நிதிக்குழு இந்தத் திட்டத்தை முற்றாக ரத்துசெய்யுமாறு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த நிதிக்குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த திரு அபிஜித் சென் இந்தப் பரிந்துரையை ஏற்காமல் தனது மாற்றுக் கருத்துகளை தனி அறிக்கையாக சமர்ப்பித்திருக்கிறார். ” இந்தத் திட்டத்தை ரத்துசெய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிதிக் குழு ஆய்வு எதையும் செய்யவில்லை. இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்துவரும் மாநிலங்களில் பீகார்தான் முதன்மையானது. பீகார் மறுசீரமைப்பு சட்டத்திலேயே அதற்கான வாக்குறுதி மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. பீகாரின் 30% மாவட்டங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்து வருகின்றன. அந்த மாநிலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்” என அபிஜித் சென் தனது மாற்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது மறுப்புகளை நிராகரித்துவிட்டு நிதிக்குழு தனது பரிந்துரைகளை இறுதிசெய்து அளித்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டிவிடும் நோக்கொடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்த முடிவுசெய்திருப்பதில் வியப்பெதுவும் இல்லை. 

பீகார் அளவுக்கு இல்லையென்றாலும் தமிழ்நாட்டின் 20% மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்துவருகின்றன.கடலூர், திண்டுக்கல்,நாக்கப்பட்டினம்,சிவகங்கை, திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டு அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. 

மக்கள் தொகையை வைத்துப் பார்த்தால் சுமார் ஒன்றரை கோடி மக்கள் இந்த மாவட்டங்களில் வாழ்கிறார்கள். இந்த மாவட்டங்கள் எஸ்சி/எஸ்.டி மக்கள் அடர்த்தியாக வாழும் மாவட்டங்கள் என்பதும் கவனத்துக்குரியது. இந்தத் திட்டத்தை ரத்து செய்திருப்பதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் 25% மக்களுக்கு நலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. .

வளர்ச்சி என்ற பெயரில் பாஜக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும் எதிர்த்துக் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தவேண்டும்.

Wednesday, February 25, 2015

விவசாயிகளுக்கு வேட்டுவைக்கும் 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள் - ரவிக்குமார்



14 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்தப் பரிந்துரைகளில் முக்கியமானவை பொதுமக்கள் பயன்படுத்தும் வசதிகள் தொடர்பான பரிந்துரைகளாகும். பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளக்கவேண்டும்; மின் மோட்டார்கள் அனைத்துக்கும் மீட்டர் பொருத்தவேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. 

பரிந்துரை எண் 84 முதல் 92 வரை அதுகுறித்துப் பேசப்பட்டிருக்கிறது. மின்சார நுகர்வு அனைத்துக்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு உலை வைப்பதுதவிர வேறல்ல. 

குடிதண்ணீர் மட்டுமின்றி பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளப்பதற்கு 2017 ஆம் ஆண்டுக்குள் மீட்டர் பொருத்தவேண்டும். குடிப்பதற்கும், பாசனத்துக்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் தண்ணீர் அனைத்துக்கும் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு சுயேச்சையான அமைப்பு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும் என அது பரிந்துரை செய்திருக்கிறது. 

இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான திருத்த மசோதாவின் அச்சுறுத்தலிலிருந்து விவசாயிகள் விடுபடாத நிலையில் மேலும் அவர்கள்மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்தப் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்று நடைமுறைப்படுத்தப் போகிறதா? அல்லது தனது எதிர்ப்பை மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்போகிறதா? 

Tuesday, February 24, 2015

தோழர் சி.மகேந்திரனை வாழ்த்துகிறேன்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக தோழர் சி. மகேந்திரன் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அவருக்கு எனது வாழ்த்துகள். 

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்துக்கொண்டிருந்தபோது 1981 ல் அவரோடு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது அவர் அகில இந்திய மாணவர் பெருமன்றத்துக்குப் பொறுப்பாக இருந்தார். திராவிடர் கழக மாணவர் அமைப்பில் செயல்பட்டுக்கொண்டிருந்த நான் மார்க்சியம் நோக்கி ஈர்க்கப்பட்ட காலம் அது. அன்றைய எனது தேடலுக்கு AISF போதுமானதாக இல்லை. எனினும் தோழர் மகேந்திரனுடனான நட்புறவு தொடர்ந்தது. 

தோழர் சி. மகேந்திரன் தோழர் ஆர்.என்.கேவைப்போல எல்லோரிடமும் அன்போடு பழகக் கூடியவர். படிப்பதில் எழுதுவதில் ஈடுபாடு கொண்டவர். மதவாத எதிர்ப்பு சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அவர் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டால் அது அக் கட்சிக்கு பயனுள்ளதாகவே இருக்கும். 

பெருமாள் முருகன் வழக்கில் இணைந்தார் -ரவிக்குமார்


பெருமாள் முருகன் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பெருமாள் முருகன் சார்பில் வழக்கறிஞர் சதிஷ் பராசரன் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட முதல் அமர்வு தமுஎச தொடுத்த வழக்கில் பெருமாள் முருகனை இன்னொரு மனுதாரராக இணைத்துக் கொண்டிருக்கிறது. 

இதே பிரச்சனையில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்த லஜபதிராயின் மனுவும் பியுசிஎல் அமைப்பின் மனுவும்  இறுதிவாதத்தின்போது வேண்டுமானால் தமது கருத்துகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்ற அனுமதியோடு முடித்துவைக்கப்பட்டன. 

லஜபதிராய் சார்பில் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி ஆஜரானார். பெருமாள் முருகனுக்காக ஆஜராகியிருக்கும் சதிஷ் பராசரன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஆஜராகும் 'காஸ்ட்லியான' வழக்கறிஞர் எனச் சொல்கிறார்கள். (high profile வழக்கு high profile advocate!) 

பெருமாள் முருகன் affidavit போட்டு வழக்கில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்த் தரப்பு சார்பாகவும் ஒருவர் affidavit போட்டிருப்பதாக அறிந்தேன். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுமட்டும் நிச்சயம். மதச்சார்பின்மைமீது அக்கறைகொண்ட அனைவரும் தொடர்ந்து விழிப்போடு இந்த வழக்கை கவனிக்கவேண்டியது அவசியம். 

Saturday, February 21, 2015

கர்னாடகா: தலித்துகளுக்குச் செய்த துரோகத்தால் சரியும் காங்கிரஸ் கோட்டை -ரவிக்குமார்


ஒரு காலத்தில் தென் மாநிலங்கள் காங்கிரஸின் கோட்டையாக இருந்தன. ஆனால் இன்று கார்னாடகாவில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதற்குக் காரணம் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரின் உழைப்பு. பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்து நிலவிய காலத்தில் மாநிலத்தின் அத்தனை பகுதிகளுக்கும் நடைப்பயணம் மேற்கொண்டு வேர்க்கால் மட்டத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தியவர் பரமேஸ்வர். வேளாண் அறிவியலில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். கர்னாடகாவின் உயர்கல்வி அமைச்சராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர். 2013 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று எல்லோராலும் ஏற்கப்பட்டிருந்த நிலையில் அவர் தோற்கடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பரமேஸ்வர் தோற்கடிக்கப்பட்டதால்தான் சீத்தாரமையா முதல்வராக முடிந்தது. 

பரமேஸ்வரின் தோல்விக்குப் பின்னால் சில காங்கிரஸ்காரர்களின் துரோகக் கரங்கள் இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் காங்கிரஸில் சேர்ந்திருந்த சீத்தாராமையாவுக்கு பரமேஸ்வரைப் போன்ற தகுதிகள் இல்லை. ஆனாலும் அவர் முதலமைச்சராக்கப்பட்டார். 

பரமேஸ்வரின் உழைப்பாலும் அவரை முன்னிறுத்தியதாலும்தான் காங்கிரஸ் அத்தனை இடங்களை வெல்ல முடிந்தது. அவருக்கு துணை முதல்வர் பொறுப்பாவது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்குத் துரோகம்
இழைத்தது. கர்னாடகாவைச் சேர்ந்த இன்னொரு தலித்தான மல்லிகார்ஜுன கார்கே மாநில அரசியலிலிருந்து அகற்றப்பட்டதோடு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாத மக்களவையில் தலைவராக்கப்பட்டார். பிரதமர் என்றால் ராகுல் காந்தி, படுதோல்வி என்றால் பலியாடாக ஒரு தலித்- இதுதான் காங்கிரஸ் அரசியல். 

மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர் ஆகியோரை  ஏமாற்றிய காங்கிரஸின் துரோகத்தை சகிக்க முடியாமல்தான் இப்போது  தலித் ஒருவரை முதல்வராக்கவேண்டும் என கர்னாடக தலித்துகள் குரலெழுப்புகின்றனர். 

மராட்டியத்தைப் போலவே தலித் அரசியல் எழுச்சியோடு பரவிய மாநிலம் கர்னாடகம். 2011 சென்சஸ் படி அதன் மொத்த மக்கள் தொகை ஆறுகோடியே பதினோரு லட்சம் அதில் தலித்துகள் ஒரு கோடியே ஐந்து லட்சம். மாநிலத்தின் மக்கள் தொகையில் தனிப்பெரும்பான்மையாக இருக்கும் சமூகம் தலித் சமூகம் தான். அந்த சமூகத்தை வஞ்சித்தால் காங்கிரஸின் ஆதரவுக் கோட்டை அங்கும் சரிந்து மண்மேடாகிவிடும். 

Friday, February 20, 2015

தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறேன் - ரவிக்குமார்



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக் குழு செயலாளராக தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்த்த செய்திதான் எனினும் இடதுசாரிகள் தமிழ்நாட்டில் புதிய அரசியல் பாதையைத் தேர்வுசெய்திருக்கும் இன்றைய சூழலில் தோழர் ஜி.ஆர் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று தகவல் அறிந்ததும்
தொலைபேசியில் தொடர்புகொண்டேன். கூட்டத்தில் இருந்தாலும் ஃபோனை எடுத்தார். வாழ்த்துகள் என்று சொன்னதோடு துண்டித்துவிட்டேன்.

சற்றுமுன் தோழர் ஜி. ஆர் அவர்களை ஃபோனில் அழைத்து எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். இடதுசாரிக் கட்சிகளில் பதவி என்பது பிழைப்பதற்கான வழி அல்ல, உழைப்பதற்கான வாய்ப்பு . 

சிபிஐ தோழர்களோடு பேசுவதுபோல சிபிஐ எம் தோழர்களிடம் சகஜமாகப் 
பேச முடிந்ததில்லை. தோழர் டிகேஆர் தவிர மற்ற தோழர்களிடம் ஒரு இறுக்கம் இருப்பதாக உணர்ந்திருக்கிறேன். ஆனால்  தோழர் கே.பாலகிருஷ்ணனும், தோழர் ஜி. ஆரும் அப்படியான இறுக்கம் இல்லாமல்
பழகக்கூடியவர்கள். தயக்கம் எதுவும் இல்லாமல் மாற்றுக் கருத்துகளை அவர்களிடம் சொல்ல முடியும். இயக்கங்களின் முன்னணிப் பொறுப்பாளர்களுக்கு இத்தகைய தனிப்பட்ட பண்புகள் அவசியம். 

தோழர் ஜி.ஆருக்கு என் வாழ்த்துகள். 


பீஹார்: மதவாதத்தின் தோல்வி அல்ல சாதிவாதத்தின் வெற்றி! - ரவிக்குமார்



சாதி அரசியலின் உச்சகட்டமான கூத்துகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் பீஹார் மாநிலத்தில் இப்போது தலித்துகளே இல்லை எனக் கூறினால் கேட்பவருக்கு வியப்பு உண்டாகும். ஆனால் அதுதான் உண்மை. அங்கே தலித்துகள் எல்லோருமே மஹா தலித்துகள் என வகைப்படுத்தப்பட்டுவிட்டனர். 

தலித்துகளைப் பலவீனப்படுத்துவதற்கு நிதிஷ்குமார் செய்த தந்திரம்தான் மஹா தலித் என்ற வகைப்பாடு. ராம்விலாஸ் பாஸ்வானின் செல்வாக்கை பீஹார் அரசியலில் ஒழித்துக்கட்டவேண்டும் என்பதே நிதிஷ்குமாரின் உள்நோக்கம். அதற்காக அங்கிருக்கும் 22 தலித் உட்சாதிகளில் 18 சாதிகளைத் தனியே பிரித்து அவற்றை மஹாதலித்துகள் என நிதிஷ் அட்டவணைப்படுத்தினார். சில ஆண்டுகளில் மேலும் இரண்டு சாதிகள்
அதில் சேர்க்கப்பட்டன. அதன்பின்னர் இன்னொரு சாதியும் உள்ளடக்கப்பட்டது. 

பாஸ்வான் சாதியைத் தவிர மற்ற தலித் உட்சாதிகள் அனைத்தும் மஹா தலித்துகள் என வகைப்படுத்தப்பட்டு தலித்துகளிடையே முரண்பாட்டையும் மோதலையும் உருவாக்கினார் நிதிஷ். தலித்துகளைப் பிரித்து அரசியல் லாபம் அடைய முயன்றார். அதன் உச்சகட்டம் தான் ஒரு மஹா தலித்தான மாஞ்சியை முதலமைச்சராக்கியது. ஆனால் நிதிஷ் நினைத்தது நடக்கவில்லை. பொம்மை முதல்வராக இருக்க மறுத்து மாஞ்சி சுயச்சார்புடன் செயல்பட ஆரம்பித்தார். பாஜகவின் செல்வாக்கைத் தடுப்பதற்காக மட்டுமே நிதிஷ்குமாரால் மாஞ்சி முதல்வராக்கப்பட்டார். அதன்பின்னர் பீஹாரின் OBC தலைவர்களை ஒன்றிணைப்பதில் நிதிஷ் ஈடுபட்டார். அது நடந்துவிட்டால் தான் கறிவேப்பிலையாகத் தூக்கி எறியப்படுவோம் என்பது மாஞ்சிக்கு நன்றாகவே தெரியும். இந்தப் பதவியின் தான் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்பதும் புரியும். அதனால்தான் புத்திசாலித்தனமாக சில நடவடிக்கைகளை எடுத்தார். 

மாஞ்சியை ஒரு விதூஷகரைப் போல சித்திரிப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றிவருகின்றன. அதற்கு அடிப்படையான காரணம் சாதி ரீதியான காழ்ப்புதான். 

மாஞ்சி எடுத்த நடவடிக்கைகளில் முக்கியமான இரண்டைக் குறிப்பிடவேண்டும்: 

1. நிதிஷ்குமாரின் சுயநலத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பாஸ்வான் உட்சாதியும் மாஞ்சியால்
மஹா தலித் அட்டவணையில் சேர்க்கப்பட்டுவிட்டது. நிதிஷால் பிளவுபடுத்தப்பட்ட தலித் உட்சாதிகள் அனைத்தையும் மீண்டும் ஒன்றிணைத்தது மட்டுமின்றி தலித்துகள் எல்லோருமே  மிகவும் பின்தங்கித்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்விதமாக அனைத்து தலித் உட்சாதிகளையும் மஹா தலித்துகள் என மாஞ்சி அறிவித்துவிட்டார். 

2. அரசாங்க கான்ட்ராக்ட் பணிகளில் 70 லட்ச ரூபாய்க்கும் குறைவான பணிகள் அனைத்திலும் மஹா தலித்துகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும் மாஞ்சி ஆணை பிறப்பித்தார். 

இப்போது நிதிஷ் மீண்டும் முதல்வராவது உறுதியாகிவிட்டது. நிச்சயம் இதை பாஜக வின் சதிக்கு எதிரான மதச்சார்பற்ற சக்திகளின் வெற்றி என எல்லோரும் தம்பட்டம் அடிப்பார்கள். ஆனால் இது மதவாதத்தின் தோல்வி அல்ல; சாதிவாதத்தின் வெற்றி! 

பதானி தோலாவில், லக்ஷ்மண்பூர் பாதேவில், ஷங்கர்பிகாவில் தலித்துகளைக் கும்பல் கும்பலாகப் படுகொலைசெய்த ரண்வீர் சேனா கொலையாளிகளுக்கு ஆதரவாக இருந்தவர் நிதிஷ். ரண்வீர் சேனாவின் அரசியல் தொடர்புகுறித்து விசாரிப்பதற்காக ராப்ரி தேவி அரசு அமைத்த அமீர்தாஸ் கமிஷனை கலைத்தவர் நிதிஷ்குமார். ரண்வீர் சேனா கொளையாளிகள் போதுமான ஆதாரம் இல்லை எனக் காரணம்
காட்டி நீதிமன்றத்தால் விடுவிக்கபடுவதற்குக் காரணமாக இருந்தது நிதிஷ் அரசாங்கம். 

பீஹாரில் மீண்டும் ஒரு மஹா தலித் முதல்வராக வர முடியுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால் ஒரு மஹா தலித் முதல்வராக வந்தால் அவர் என்ன செய்யவேண்டுமோ அதை மாஞ்சி செய்திருக்கிறார். பாராட்டுகள் திரு. மாஞ்சி அவர்களே! 

 

Thursday, February 19, 2015

உரு மாறுகிறதா பன்றிக்காய்ச்சல் வைரஸ்? - ரவிக்குமார்

( 13.08.2009 அன்று ஜூனியர் விகடனில் எழுதியது ) 

===========

பயப்பட வேண்டாம், பயப்பட வேண்டாம் என்று நாம் எவ்வளவுதான் சொல்லிக் கொண்டிருந்தாலும் பன்றிக் காய்ச்சல் பீதி மக்களிடையே பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பன்றிக்காய்ச்சலால் ஏற்படும் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போக அதனால் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல. உலகின் 168 நாடுகள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு லட்சம் பேருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்திலும், அர்ஜென்டினாவிலும் பன்றிக் காய்ச்சலின் இரண்டாவது அலை இப்போது மக்களை தாக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்வரும் குளிர்காலத்தில் இங்கிலாந்தில் இந்நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அங்கு கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒன்பது பேர் இறந்துள்ளனர். இதுவரை முப்பத்தாறு பேர் இதுவரை இந்நோய்க்கு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பன்றிக் காய்ச்சலால் மக்களிடையே பீதி பரவுவதற்குக் காரணம் அது குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான். சரியான தகவல்கள் மட்டுமே அந்த விழிப்புணர்வை அளிக்கமுடியும். இந்த நோயைப் பற்றி மிகைப்படுத்திச் சொல்லி மக்களை பீதியடைய வைப்பது எப்படி தவறோ, அதேபோலத்தான் மக்களுக்கு தைரியமூட்டுகிறேன் என்ற பெயரில் இந்த நோயால் எந்த பாதிப்புமே வராது என்று ஒரேடியாக எல்லாவற்றையும் மூடி மறைப்பதும் தவறாகும். எனவே இதுகுறித்த சரியான தகவல்கள் அவை எவ்வளவு கசப்பானவையாக இருந்தாலும், அவற்றைத் தெரிந்து கொள்வது மிகவும அவசியம்.

இப்போது உலகைப் பயமுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் ஏற்கனவே 1918&19 காலக்கட்டத்தில் உலகை தாக்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ நோயைப் போல கொடூரமானதாக இருக்குமோ என்ற அச்சம் பரவலாக விஞ்ஞானிகள் மத்தியில் உருவாகியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகள் உலகத்தையே பிடித்து உலுக்கிய அந்த நோய்க்கு சுமார் பத்து கோடி பேர் பலியானார்கள். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில்  பத்து முதல் இருபது சதவீதம் பேர்வரை இறந்து போனார்கள். இதுவரை மனிதகுல சரித்திரத்தில் மிகப்பெரிய கொள்ளை நோயாக அதுதான் வர்ணிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி பேர் இறந்து போனதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்பானிஷ் ஃப்ளூவுக்கான வைரஸ் ஆரம்பத்தில் சாதுவாகத்தான் இருந்தது. அடுத்தடுத்து அது உருமாற்றம் அடைந்து மிகவும் கொடூரமானதாக மாறியது. அதைப்போலவே இப்போதைய பன்றிக் காய்ச்சல் வைரஸ§ம் உருமாற்றம் அடைந்து மேலும் அதிகமான நாசத்தை விளைவிக்குமா? என்று விஞ்ஞானிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. சிலர் அப்படி நடக்காது என்கின்றனர். சிலரோ அப்படி நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று குண்டைத் தூக்கிப் போடுகின்றனர். இதனிடையே ‘நியூ சைன்டிஸ்ட்’ என்ற பத்திரிகை  தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் அறுபது பேரிடம் சர்வே ஒன்றை நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் மூன்று கேள்விகளை அந்தப் பத்திரிகை கேட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் ஸ்பானிஷ் ஃப்ளூவைப்போல கொடூரமானதாக உருமாறறம் பெருமா? உங்கள் நாடுகளில் உள்ள சுகாதார கட்டமைப்பு வசதிகள் அப்படியரு நிலைமை வந்தால் அதை சமாளிப்பதற்குப் போதுமானதாக இருக்குமா? நீங்கள் இதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறீர்களா? என்பவையே அந்த மூன்று கேள்விகள். முதல் கேள்விக்கு பதிலளித்த நிபுணர்களில் முப்பது சதவீதத்தினர் பன்றிக் காய்ச்சல் வைரஸ் கொடூரமானதாக மாறுவதற்கு பாதிக்கு பாதி வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். ஆனால் பெல்ஜியத்தைச் சேர்ந்த மாலிக்யூலர் பயாலஜிஸ்ட்டான வால்டர் ஃபயர் என்பவரோ, பன்றிக் காய்ச்சல் வைரஸ் கொடூரமானதாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், அப்படி அது மாறினால் இப்போது தயாரிப்பில் இருக்கும் தடுப்பூசி மருந்துகள் பயனற்றவை ஆகிவிடக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்படி அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்தால் தற்போதுள்ள சுகாதார கட்டமைப்பு வசதிகள் அதை சமாளிப்பதற்கு போதுமானவையாக இருக்காது என்பதை பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய குடும்பத்தைப் பொறுத்தவரை ஒருசிலர் மட்டுமே இதற்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். பெரும்பாலான மருத்துவ நிபுணர்களும் தங்களுடைய தற்காப்பைப்பற்றிக்கூட கவலைபடாமல்தான் இருக்கின்றனர்.

பன்றிக் காய்ச்சல் வைரஸ் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அண்மையில் விளக்கமளித்துள்ளது. ஆகஸ்ட் ஆறாம் தேதி இதற்காக பிரத்யேகமான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை அது நடத்தியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் தொலைபேசி மூலமாகக் கேட்ட கேள்விகளுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து உருவாக்குவது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும், அந்த மருந்தை பாவிப்பதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது பற்றியும் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வளர்முக நாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி மருந்துகளை அனுப்புவதற்கு உலக சுகாதார நிறுவனம் தனிப்பட்ட கவனம் எடுத்துக்கொண்டுள்ளதா என்று அப்போது ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக ஒரு குறிப்பிட்ட அளவு மருந்தை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று மிகவும் முக்கியமானது. 1976ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இதுபோன்ற ஒரு தடுப்பூசி போடப்பட்டபோது, அதனால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டன. ‘கில்லான் பார்ரே சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்பட்ட அந்த பக்க விளைவுப் பிரச்சனைக்கு ஆயிரக்கணக்கானோர் ஆளானார்கள். அப்படியான சிக்கல் இப்போதைய தடுப்பூசி மருந்தால் ஏற்படுமா? என்று ஒரு நிருபர் கேட்டார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை வேறு, இப்போதைய நிலை வேறு. மருத்துவத் துறையில் நாம் இப்போது பெருமளவு முன்னேறி விட்டோம். எனவே அத்தகைய ஆபத்து இப்போது ஏற்படாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் பேச்சாளர் அதற்கு பதிலளித்தார்.

பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்காக உருவாக்கப்படும் தடுப்பூசி பற்றி உலக சுகாதார நிறுவனம் இப்படி விளக்கமளித்துள்ள நிலையில் பன்றிக் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தவதற்காக தற்போது வழங்கப்படும் டாமிஃப்ளு என்ற மாத்திரை குறித்து இப்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. அந்த மாத்திரைகள் குழந்தைகளுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று புகார்கள் கூறப்படுகின்றன. இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கையன்றை வெளியிட்டுள்ள ‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மாத்திரைகள் குழந்தைகளின் காய்ச்சலை குறைக்கின்றன என்பது உண்மைதான் என்றபோதிலும், இதனால் அந்த நோய் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடிவதில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த மாத்திரைகளை சாப்பிடும் பெரும்பாலான குழந்தைகளுக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு முதலான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை சாப்பிடுவதால் பக்க விளைவு உண்டாகும் என்று அதன் உறையிலேயே அச்சிடப்பட்டிருக்கிறது என்றபோதிலும், இந்த பாதிப்பு எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருக்கிறது என்பதுதான் இப்போது எழுந்துள்ள கவலை. குறிப்பாக பன்னிரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த மாத்திரைகளை கொடுக்கும்போது பக்கவிளைவுகள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளன என்று அந்த மருத்துவ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பவர்களோ இந்த முடிவுகள் பன்றிக் காய்ச்சல் வந்த நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து பெறப்படவில்லை. வேறுவித தொற்றுநோய்களுக்கு இந்த மாத்திரைகளை வழங்கியபோது மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்துதான் இது சொல்லப்படுகிறது என்று விளக்கமளிக்கின்றனர். இப்படியான புகார்களை உலக சுகாதார நிறுவனமும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. டாமிஃப்ளு மாத்திரைதான் பன்றிக்காய்ச்சலுக்கு சரியான மருந்து. அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகமிக சொற்பமானவைதான் என்று அது மறுபடியும் உறுதிபடுத்தியுள்ளது.

மருத்துவ நிபுணர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ள இன்னொரு கவலை, பன்றிக் காய்ச்சல் வைரஸ§ம், பறவைக் காய்ச்சல் வைரஸ§ம் ஒன்று சேர்ந்து இன்னும் பயங்கரமான புதிய வைரஸ் ஒன்றை உருவாக்கிவிடுமோ என்பதுதான். ஒப்பீட்டளவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் மிகவும் கொடூரமானது. அதனால் பாதிக்கப்படுகிறவர்களில் சுமார் அறுபது சதவீதத்தினர் உயிரிழந்து விடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த வைரஸ் எளிதில் பரவுவதில்லை. பன்றிக் காய்ச்சல் வைரஸோ அந்த அளவு உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் இது மிகமிக எளிதாக பரவக்கூடியதாக இருக்கிறது. இந்த இரண்டு வைரஸ்களும் ஒன்றிணைந்து புதிய வைரஸ் ஒன்று உருவானால் அது எப்படி இருக்கும் என்பதைப் பற்றியே இப்போது விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர். இந்த இரண்டு வைரஸ்களும் ஆசிய நாடுகளில்தான் தற்போது அதிகமாக பரவிக்கொண்டுள்ளன. எனவே, இங்குதான் அவை ஒன்றிணைந்து புது வகை வைரஸாக உருவெடுக்கக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளது என்று விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கு முன்பு உலக அளவில் பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திய கொள்ளை நோய்கள் யாவும் பறவைகள் மூலம் பரவக் கூடியனவாக இருந்தன என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதுள்ள பறவைக் காய்ச்சல் அப்படியான புது அவதாரம் ஒன்றை எடுக்கும் பட்சத்தில் அது 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட கொள்ளை நோயான ஸ்பானிஷ் ஃப்ளூவைவிட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனமும்கூட இதை மறுக்கவில்லை. பறவைக் காய்ச்சல் வைரஸ் பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டுமென்று அது அறிவுறுத்தியுள்ளது. ஹெச்ஒன் என்ஒன் எனப்படும் பன்றிக் காய்ச்சல் வைரஸ§ம், ஹெச் ஃபைவ் என்ஒன் எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ§ம் கூட்டுசேரப் போகின்றனவா அல்லது அவை ஒன்றோடு ஒன்று இணைந்து புது வைரஸ் ஒன்றை உருவாக்கப் போகின்றனவா என்பது இனிமேல்தான் தெரியவரும். இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வைரஸின் குவி மையமாக இருக்கும் மகாராஷ்டிராதான் பறவைக் காய்ச்சல் நோய்க்கும் மையமாக இருந்தது. எனவே அங்கிருந்தேகூட அடுத்த ஆபத்து புறப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை நாம் மறுக்கமுடியாது.

பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று உலகமே பரபரத்துப்போயிருக்கும் இந்தச் சூழ்நிலையில் பன்றிக் காய்ச்சல் வைரஸால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிவரும் நமது நாட்டிலோ அதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் மிக மந்தமாகத்தான் நடந்து வருகின்றன. தமிழ்நாடு இதில் பாராட்டத்தக்க முன்முயற்சிகளை எடுத்துள்ளது என்றபோதிலும், மத்திய சுகாதாரத்துறை இதில் எதிர்பார்த்த அளவு சுறுசுறுப்பாக இல்லை என்பதே உண்மை. பன்றிக் காய்ச்சல் நோய் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. அரசாங்க சோதனைக்கூடங்களில் இந்த சோதனை இலவசமாக செய்யப்பட்டபோதிலும் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சோதனைகளை மேற்கொள்ளலாம் என்று அரசு தற்போது கூறியிருப்பதால் அங்கு முடிந்தவரை பணத்தைக் கறந்துவிடுவார்கள் என்பது தெரிந்த கதைதான். இந்த வைரஸைக் கண்டறிவதற்கான ‘டெஸ்டிங் கிட்’ வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது என்கிறார்கள். அதனால்தான் அது போதுமான அளவில் கிடைப்பதில்லை. எனவே விலை மலிவான ‘டெஸ்டிங் கிட்’ ஒன்றை இந்தியாவிலேயே உருவாக்கப்போவதாக இப்போதுதான் மத்திய அரசு அறிவித்துள்ளது. காலம் கடந்தாலும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதுதான்.

       இப்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்: பன்றிக்காய்ச்சல் என்பது இன்று வந்து நாளை முடிந்துவிடப்போகிற ஒரு பிரச்சனை அல்ல. நீண்டகாலத்துக்கு நம்மை பாதிக்கவிருக்கிற ஒரு சிக்கல் அது. எனவே அரசாங்கம் எதைத் திட்டமிட்டாலும் அதை நீண்டகால நோக்கிலிருந்து திட்டமிடவேண்டும். நாமும்கூட நமது வாழ்க்கை முறையை இந்த ஆபத்தை மனதில் வைத்து அதற்கேற்ப அமைத்துக்கொள்ள வேண்டும்.

Wednesday, February 18, 2015

விக்டர் டெரான் கவிதைகள் தமிழில் : ரவிக்குமார்



1. 
எவ்விதப் பிரயாசையுமின்றி
நோயைய் போலப் பெருகுகிறது 
காதல்
அது கவனிப்பதில்லை அறிவை
மரணத்தைப்போலவே

2. 
காற்றில் மிதக்கும் இறகு
காதல்
அது சூரியனைப் போன்றதும்கூட
எழுகிறது விழுகிறது
வருகிறது போகிறது

3. 

இரவைப்போல 
வருகிறது போகிறது 
காதல்
அது திரும்பவில்லையென்றால் 
ஒருவரின் ஆன்மாவில் ஒரு பகுதியைக் 
களவாடிப் போயிருக்கும்
அது திரும்பி வருமென்றால் 
ரத்தம் வடியும் இதயங்களைச் 
சூறையாடுவதற்காயிருக்கும் 

Tuesday, February 17, 2015

ஊடகங்களும் சிறுபான்மையினரும் : ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் பரிந்துரை


 

ஐநா மனித உரிமைக் கவுன்சில் குறித்து பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில்ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை ஈழப் பிரச்சனையின் நல்ல பக்கவிளைவுகளில் ஒன்றாகக் கூறலாம். ( இன்னொரு பக்க விளைவு மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம்) அதனால், ஒவ்வொரு முறையும் ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடக்கும்போது அதைப்பற்றிய பேச்சு ஊடகங்களிலும் இடம்பெற்று மறைவதைப் பார்க்கிறோம். 

 

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைப் பிரச்சனை தொடர்பான விவாதங்களில் மட்டுமே நமது ஆர்வம் இருக்கிறது. அங்கே நம்முடன் தொடர்புடைய மேலும் பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றைப்பற்றி நாம் அலட்டிக்கொள்வதில்லை. 

 

பாஜக ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு மீண்டும் மதச்சார்பின்மை குறித்து நாம் ஆவேசமாகப் பேசிவருகிறோம். சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றியும் விவாதிக்கிறோம். அதற்கு மிகவும் உதவக்கூடிய விவாதங்கள் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நடந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் அறிக்கை ஒன்றை (A/HRC/28/77 ) அங்கே விவாதிக்கவுள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான நடைமுறைகளை ஆராய்வதற்காக 2014 நவம்பர் மாதத்தில் கூடிய ‘ சிறுபான்மையினருக்கான அமைப்பின் ஏழாவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பரிந்துரைகளும் ந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

 

அந்த அறிக்கை முன்வைத்திருக்கும் பரிந்துரைகளில் 37 ஆவதாக இடம்பெற்றிருப்பதை மட்டும் கீழே தருகிறேன்: 

 

" Public and private media bodies and sources should ensure minority representation and be accessible in different minority languages. Media bodies and sources must guarantee that they do not contribute to or allow hate speech and incitement to hatred or crimes of violence. Independent media monitoring bodies, including representatives of minorities, should be established to monitor media, social media and online output and, where necessary, raise concerns relating to incitement to violence with appropriate national authorities. "

 

( ”அரசு மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் சிறுபான்மையினருக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதோடு சிறுபான்மையினர் தமது மொழிகளில் அவற்றை எளிதில் அணுகுவதற்கும் வழிவகுக்கவேண்டும். ஊடக நிறுவனங்களோ அவற்றுக்கு செய்தி வழங்குபவர்களோ வெறுப்புப் பிரச்சாரத்தை, வெறுப்பைத்தூண்டுவதை, வன்முறையைமேற்கொள்வதோ அல்லது அதற்கு இடமளிப்பதோகூடாது. சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் கொண்ட சுதந்திரமான ஊடக மேற்பார்வை அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றின்மூலம் இணையம், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களைக் கண்காணிக்கவேண்டும். வன்முறை தூண்டப்படுவதாக தெரிந்தால் அவை உரிய அதிகாரம் கொண்டவர்களின் கவனத்துக்கு அதைக் கொண்டுசெல்லவேண்டும்.” )

 

ஒப்பீட்டளவில் மதவாதத்துக்கு எதிரான ஊடக விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இருக்கிறது. சில ஊடக நிறுவனங்களும் இதில் பொறுப்போடு செயல்படுகின்றன. சிறுபான்மையினரைக் கொள்கை அளவில் ஆதரிக்கும் திராவிட இயக்க சார்பு கொண்டவர்களால்தான் பெரும்பாலான காட்சி ஊடகங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன. அவர்கள் ஐநா மனித உரிமைக் கவுன்சில் ஆவணத்தில் கண்டுள்ள மேற்கண்ட பரிந்துரையை நிறைவேற்ற முன்வருவார்களா? ஊடக நண்பர்கள் இதுகுறித்து ஏதேனும் செய்ய முடியுமா?  

 

ரவிக்குமார் 

ஆசிரியர், மணற்கேணி

( மணற்கேணி 27 தலையங்கம்) 

 

 

 

 

பெருமாள் முருகன்: இந்துத்துவ எதிர்ப்பில் பலவீனமான குறியீடு ? - ரவிக்குமார்



பெருமாள் முருகன் சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்டார் என்பதில் மகிழ்ச்சி. இன்று The Hindu ல் வெளியாகியிருக்கும் அதுகுறித்த செய்திக்கட்டுரையைப் படித்தபோது 'கொஞ்சம் ஓவர்' என்ற எண்ணம் எழுந்தது. 

பெருமாள் முருகன் பிரச்சனைக்காக இந்து நாளேடு கொடுத்துவரும் முக்கியத்துவம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அது Hero Worship என்ற நிலைக்குப் போவது பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்துகொள்ளாததன் அல்லது புரிந்துகொள்ள மறுப்பதன் விளைவு எனக் கருதுகிறேன். 

இந்துத்துவத்தை எதிர்ப்பதற்கான The Hindu இன் உறுதியைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்துத்துவ எதிர்ப்புக் குறியீடாக பெருமாள் முருகனின் எழுத்துகளை முன்னிறுத்துவதில் சிக்கல் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆற்றல்கொண்ட பலமான குறியீடாக அவரது எழுத்துகளைக் கருத முடியுமா?

புத்தகங்களை எரிப்பது எதிர்ப்பின் வடிவமா? - ரவிக்குமார்


பகவத் கீதையை எரிப்பேன் என கர்னாடகாவைச் சேர்ந்த கே.எஸ்.பகவன் என்பவர் பேசியது இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் புகழ்பெற்ற தலித் எழுத்தாளர் அரவிந்த மாளகத்தியும் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். தேசிய நூலாக அறிவிக்கப்படுவதற்கு தகுதியில்லாத நூல் அது என மாளகத்தி விமர்சித்திருக்கிறார். மாளகத்தியின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அந்த நூலை மட்டுமல்ல எந்தவொரு நூலையுமே புனித நூல் என அறிவிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை என பல மாதங்களுக்கு முன்பே நான் இங்கு பதிவிட்டிருக்கிறேன். ஆனால் பகவத் கீதையை எரிப்பேன் என்னும் பகவனின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. 

மனுநீதியே என்றாலும் அதை எரித்துத்தான் நம் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அம்பேத்கர் மனுநீதியை எரித்த காலமும் சூழலும் வேறு. இன்று அதே வடிவத்தில்தான் நாம் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்று அவசியமில்லை. 

இந்தியாவில் அவர் காலத்தில் எவரும் படித்திராத அளவுக்கு பலதரப்பட்ட நூல்களையும் படித்தவர் அம்பேத்கர். அவர் எழுதியவற்றைக்கூட ஒழுங்காகப் படிக்காத நாம் புத்தகங்களை எரிப்போம் எனக் கிளம்பினால் அதை எதிர்ப்பு என்று சொல்வதைவிட அறிவின்மீதான வெறுப்பு என்றே சொல்லவேண்டும். மிகவும் மோசமான நூலைக்கூட எரிப்பதற்கு நமக்கு உரிமை இல்லை. 

இப்போதும்கூட தலித்துகளின் கல்வியறிவு விகிதம் மற்றவர்களைக்காட்டிலும் குறைவாகவே இருக்கிறது. தலித்துகளுக்கு நன்மை செய்த நினைப்பவர்கள் புத்தகங்களைப் படியுங்கள் என்று அவர்களிடம் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை புத்தகங்களைக் கொளுத்துங்கள் என்று கூறாதீர்கள்! 

Monday, February 16, 2015

நிலையான வாக்கு வங்கி எனும் மாயை! - ரவிக்குமார்



கட்சிகளுக்கு நிலையான வாக்கு வங்கி என ஒன்று இருப்பதாக நாம் எல்லோருமே நம்பிக்கொண்டிருக்கிறோம். அது எந்த அளவுக்கு உண்மை? 

எதை நிலையான வாக்கு வங்கி என்பது? 

1.கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை வைத்து சொல்லலாமென்றால் சாதி அமைப்புகள் தமது சாதி மக்கள் தொகையை அதிகரித்துக் கூறுவதுபோலத் தான் கட்சிகளும் தமது உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூறி வருகின்றன. அதை சோதிப்பதற்கு சரியான வழிமுறை இல்லை. அங்கீகரிக்கப்ட்ட கட்சிகளின் உறுப்பினர்களின் உண்மைத் தன்மையை சரி பார்க்க தேர்தல் ஆணையம் எந்த விதியையும் உருவாக்கவில்லை. கட்சிகள் சொல்லும் உறுப்பினர் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் அது தமிழ்நாட்டின் மக்கள் தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். எனவே அந்த எண்ணிக்கையை நாம் நிலையான வாக்கு வங்கி என ஏற்க முடியாது. 

2. கட்சிகள் வாங்கும் வாக்குகளை வைத்து முடிவுசெய்யலாமா என்றால் அதுவும் சரி வராது. ஏனெனில் எந்தக் கட்சியும் தனித்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில்தான் அதிமுக தனித்து நின்றது. ஆட்சி அதிகாரம், பணபலம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டால் அது வாங்கிய வாக்குகளும் அதன் நிலையான வாக்கு வங்கி எனக் கருத முடியாது. 

3. ஒரு கட்சியின் உறுப்பினர் அதற்கு நேரெதிரான கட்சிக்கு வாக்களிக்க மாட்டார் என்பதும்கூட மூட நம்பிக்கைதான். சாதி, பணம் ஆகியவை கட்சி விசுவாசத்தைக் காலிசெய்துவிடுகின்றன. 

எனவே இந்தக் கட்சிக்கு இத்தனை சதவீத வாக்கு அந்தக் கட்சிக்கு அத்தனை சதவீத வாக்கு என்பதெல்லாம் கற்பனைக் கதைகளே அன்றி வேறல்ல. மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிப்பார்கள். இதன் பொருள் அவர்கள் சுதந்திரமான வாக்காளர்களாக இருக்கிறார்கள் என்பதல்ல. முதலாளித்துவ சமூகத்தில் ஒரு உழைப்பாளிக்கு இருக்கும் சுதந்திரம் போன்றதுதான் இது. அதாவது அவர் தனது உழைப்பை எவருக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளும் சுதந்திரம். அதுபோல வாக்காளர்களும் தமது வாக்குகளை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ள சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதை தேர்தல் ஜனநாயகத்தின் உச்சகட்டம் எனக் கூறலாமா? 


ரவிக்குமார் கவிதை



குழந்தையின் படம் ஒன்றை 
கைபேசியில் வைத்துக்கொள்ளுங்கள்
அது உங்கள் குழந்தையின் படமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை
அது சிரித்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதும்கூடத் தேவையில்லை 

கைபேசியின் திரை உயிர்பெறும்போதெல்லாம்
அந்தக்
குழந்தை உங்களைப் பார்க்கட்டும் 

பேசி முடித்து ஃபோனை மூடும்போது
உங்கள் உரையாடல் எவ்வளவு அர்த்தமற்றது
என்பதை அது சொல்லும்
முகநூலில் அலைந்து சோரும்போது 
உங்கள் தேடல் எவ்வளவு வியர்த்தம்
என்பதை அது உணர்த்தும்
 
உங்கள் மனிதத்தன்மையை அது நினைவூட்டும் 
உங்களுக்குள் இருக்கும் 
தந்தையை தாயை அது தட்டி எழுப்பும் 

கைபேசியில் குழந்தையின் படத்தை வைத்திருப்பது
தூங்கும் குழந்தையைத் 
தோளில் சுமந்திருப்பது போன்றது

இப்போதாவது வைத்துக்கொள்ளுங்கள் 
கைபேசியில் 
ஒரு குழந்தையின் படத்தை

ஶ்ரீரங்கம் 'நோட்டா' வாக்குகள் தேமுதிகவுக்கு உணர்த்தும் உண்மை - ரவிக்குமார்


ஶ்ரீரங்கம் தேர்தலில் 'நோட்டா'வுக்கு 1919 பேர் வாக்களித்துள்ளனர். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் திருச்சி தொகுதியில் தேமுதிக போட்டியிட்டது. அப்போது நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 3554. ஆனால் இப்போது அது 1919. 

2014 இல் நோட்டாவைத் தேர்ந்தெடுத்தவர்களில் கணிசமானோர் இப்போது எத்தொ ஒரு கட்சிக்கு வாக்களிக்க முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள்? பாஜகவுக்குத்தான்!  2011 இல் 2017 வாக்குகளைப் பெற்ற பாஜக மக்களவைத் தேர்தலின்போது செல்வாக்கின் உச்சத்தில் இருந்தது. ஆனால் அக்கட்சி அப்போது பொருத்தமற்ற கூட்டணியை அமைத்ததை அந்தக் கட்சியின் ஆதரவாளர்களே விரும்பவில்லை. குறிப்பாக அவர்கள் தேமுதிகவை விரும்பவே இல்லை. 

அதனால்தான் தேதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. அப்படித்தான் தேமுதிக போட்டியிட்ட திருச்சி மக்களவைத் தொகுதியிலும் பாஜக வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் இப்போது பாஜக வேட்பாளர் நின்றதால் அவர்கள் நோட்டாவை விட்டுவிட்டு பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். நோட்டா வாக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் இப்போது பாஜக வாங்கியிருக்கும் வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது விளங்கும். 

தேதிமுக இப்போதும் பாஜகவுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது. பாஜக அணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்தால் பாஜக அணியில் தொடரலாம் என விஜயகாந்த் நினைப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இது அபத்தமான ஆசை. அப்படி அந்த அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அந்த அணியில் தேமுதிக ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியாது. 

விஜயகாந்த் முதலில் முதலமைச்சர் கனவைக் கைவிடவேண்டும். தனது உண்மையான வாக்கு பலத்தை உணர்ந்து  மதச்சார்பற்ற கட்சிகளின் பரந்த அணி ஒன்றை உருவாக்க முன்வரவேண்டும். 

ஶ்ரீரங்கம் தேர்தல் முடிவு : மார்க்சிஸ்ட் கம்யூ சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டும்


==========
கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலின்போது தனித்துப் போட்டியிட்ட சிபிஐ எம் வேட்பாளர் 2326 வாக்குகளைப் பெற்றார். இப்போது அக்கட்சியின் வேட்பாளரால் 1552  வாக்குகளை மட்டும்தான் பெற முடிந்திருக்கிறது. இதனாலெல்லாம்
அவர்கள் மனம் தளர்ந்துவிட மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் இது சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம் என்பதை அவர்கள் மறுக்கமாட்டார்கள். 

இடதுசாரிகள் இப்படி பலமிழந்து வருவது அவர்களுக்கு மட்டும் நட்டமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்குமே நட்டம் என்பதை நாம் உணரவேண்டும். சட்டமன்றத்தில் லாப நட்டம்
பார்க்காமல் மக்கள் பிரச்சனைகளைப் பேசுகிறவர்களாக அவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாத சட்டமன்றத்தைக் கற்பனைசெய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. 

தேர்தல் அரசியல் என்பது தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த வீழ்ச்சியை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது தெரியாமல் ஜனநாயக சக்திகள் கைபிசைந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கம்யூ கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இடதுசாரி சார்புகொண்ட அனைவருமே கவலையோடு ஆராயவேண்டிய விஷயம் இது. 

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் முடிவு : 2016 இல் முதல்வர் கனவுகாண தகுதி உள்ள கட்சிகள் எவை? -ரவிக்குமார்



ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே எல்லோருக்கும் தெரிந்ததுதான். தி.மு.க 2011 சட்டமன்றத் தேர்தலில் தான் பெற்ற வாக்குகளையும், பாஜக பத்தாயிரம் வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஐந்தாயிரம் வாக்குகளையும் பெறவேண்டும் என்பதையே இலக்காக வைத்திருந்தார்கள்.அந்தக் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களிடம் பேசியபோது இதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 105328 வாக்குகளையும் திமுக 63480 வாக்குகளையும் பெற்றிருந்தன. பாஜக தனித்துப் போட்டியிட்டு 2017 வாக்குகளை வாங்கியிருந்தது. அந்தத் தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. தேமுதிக, இடதுசாரிகள்,முஸ்லிம் கட்சிகள்  அதிமுக கூட்டணியில் இருந்தனர். திமுக கூட்டணியில் காங்கிரசும்,பாமகவும் விசிகவும் இருந்தன. 

2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2014 பொதுத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலை அதிமுக தனித்து சந்தித்தது. திமுக கூட்டணியில் விசிக,புதிய தமிழகம், முஸ்லிம் கட்சிகள் இடம்பெற்றன. பாமக,மதிமுக,தேமுதிக, இஜக ஆகியவை பாஜக கூட்டணியில் இருந்தன. அப்போது திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 103422 வாக்குகளும் திமுக 54410 வாக்குகளும்பெற்றிருந்தன. அதாவது அதிமுகவின் வாக்குகளில் சுமார் இரண்டாயிரம் வாக்குகளும் திமுக வாக்குகளில் சுமார் ஒன்பதாயிரம் வாக்குகளும் சரிந்தன. பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 19347 வாக்குகளைப் பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டு 2326 வாக்குகளை வாங்கியது. 

இப்போதைய தேர்தலில் பாஜக 2011 இல் பெற்ற 2017 வாக்குகளைக் காட்டிலும் கூடுதலாக வாங்கும்.அந்தத் தேர்தலில் தனித்து நின்று பாரிவேந்தரின் இஜக பெற்ற 1221 வாக்குகளையும் பாஜகவின் வாக்குகளோடு சேர்த்துக்கொண்டால்கூட இந்தத் தேர்தலில் ஆயிரம் வாக்குகளாவது பாஜக கூடுதலாகப் பெறும் எனக் கூறலாம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2014 இல் பெற்ற 2326 வாக்குகளையும்கூட வாங்கும் எனக் கூறமுடியவில்லை. 

இந்தத் தேர்தலில் தனது வேட்பாளரை ஆதரிக்கும்படி திமுக கோரிக்கை விடுத்தபோதிலும் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் தவிர வேறு எந்தக் கட்சியும் அதன் கோரிக்கையை ஏற்கவில்லை. தேமுதிக தனது ஆதரவை பாஜகவுக்கு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் சொல்லவில்லை. மதிமுக,பாமக,காங்கிரஸ்,தமிழ் மாநில காங்கிரஸ்,விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. ஆளும் கட்சியை ஆதரிக்க முடியாது என்றபோதிலும் திமுக வேட்பாளரையும் ஆதரிக்க விரும்பவில்லை என்பதே அந்தக் கட்சிகளின் நிலை.

16 ஆவது சுற்றிலேயே அதிமுக 2011 இல் தான்வாங்கிய 105328 வாக்குகளைக் கடந்துவிட்டது. ஆனால் அந்த சுற்றில் திமுக 39411 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தப் போக்கு தொடர்ந்தால் முடிவு அறிவிக்கப்படும்போது திமுக 2014 பொதுத் தேர்தலின்போது தான் வாங்கிய 54410 வாக்குகளுக்கு அருகே சென்றுவிடும் என்றுதான் தோன்றுகிறது.அப்படி சென்றால் இடைத்தேர்தலின் அனைத்து அழுத்தங்களையும் தாண்டி திமுக தனது வாக்குகளைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதாகவே கருதவேண்டும்.

இந்தத் தேர்தலைப் புறக்கணித்த கட்சிகள் ஆளும் கட்சியை விமர்சித்தன. ஆனால் அவற்றின் வாக்குகள் யாவும் ஆளும் கட்சியான அதிமுகவுக்கே சென்றுள்ளன. பணபலத்தையும் அதிகார பலத்தையும் இந்தக் கட்சிகளின் வாக்காளர்கள் தாக்குப் பிடிக்கமுடியவில்லை எனக் கூறுவதா அல்லது இந்தக் கட்சிகளின் வாக்கு வங்கி அதிமுக வுக்கு ஆதரவாக இருக்கிறது எனப் புரிந்துகொள்வதா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.கூட்டணி அமைக்காவிட்டால் இந்தக் கட்சிகளின் வாக்குகள் அவற்றோடே இருக்காது என்பதையே இது காட்டுகிறது. 

இந்த நிலையில் 2016 இல் முதலமைச்சர் ஆவேன் எனக் கனவுகாண அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டும் தான் பலம் இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவின் அடிப்படையில் அதிமுக தனித்துப் போட்டியிட முடிவுசெய்யலாம். ஆனால் திமுக பலமான கூட்டணி ஒன்றை அமைத்தால் மட்டுமே 2016 தேர்தலை நம்பிக்கையோடு சந்திக்க முடியும். இந்யத இரண்டு கட்சிகள் தவிர மற்ற கட்சிகளுக்கு முதலமைச்சர் கனவு காணத் தகுதி இருக்கிறதா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.   


Sunday, February 15, 2015

காங்கிரஸ் ஒரு centrist Party எனக் கூறமுடியுமா? - ரவிக்குமார்


' ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸை ஒழிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டது 'என்ற புதியதொரு 'சதி கோட்பாட்டை' காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய்சிங் முன்வைத்திருக்கிறார். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணம் காங்கிரஸ்காரர்கள்தான். தங்களுக்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத ஆதரவு சக்திகளாக இருந்த தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை காங்கிரஸ் இழந்ததற்கு வேறு யாரும் காரணமல்ல தலித்துகளையும் சிறுபான்மையினரையும் கிள்ளுக்கீரையாய் நினைத்து வாயுபசாரத்திலேயே அவர்களை ஏமாற்றிவிடலாம் என காங்கிரஸ் நினைத்ததே காரணம். 

ஐ மு கூ வின் முதல் 5 ஆண்டுகளில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவருவோம் என்றார்கள் 2009 இல் இருநூறு இடங்களை எட்டியதுமே அதைக் காற்றில் பறக்கவிட்டார்கள். சச்சார் குழு அறிக்கையை முழுமையாக நடைமுறைப் படுத்தாமல் கிடப்பில் போட்டார்கள்; தலித் கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தர மறுத்தார்கள்; வன்கொடுமைத் தடுப்பு திருத்த மசோதாவை சட்டமாக்காமல் அவசர சட்டமாகக் கொண்டுவந்து காலாவதியாக வழிவகுத்தார்கள். இதே திக்விஜய்சிங் முதல்வராக இருந்தபோது தலித் அறிவுஜீவிகள் கூடி நிறைவேற்றிய போபால் தீர்மானத்தை ஆதரித்தார். அதன்பின் 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்தார்களே ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை? 

சமூக பொருளாதார தளங்களில் பாஜக வெளிப்படையாக செய்வதைத்தான் காங்கிரஸ் மறைமுகமாக செய்துவந்தது. ஆம் ஆத்மியை இமிடேட் செய்ய ராகுல் காந்தி முயற்சித்தார். அதிகாரத்தில் இருந்துகொண்டு எதிர் அதிகாரத்தையும் கைப்பற்ற நினைத்த அவரது பேராசை தோல்வியில் முடிந்தது. அதைப்பற்றி வாய்திறக்காத திக்விஜய் சிங் இப்போது ஆம் ஆத்மி மீது சேறுவாரி வீசுகிறார் . 

ஆம் ஆத்மி ஒரு இடதுசாரி கட்சி அல்ல. அதை ஒரு centrist party என இப்போதைக்குக் கூறலாம். ஆனால் காங்கிரஸை ஒரு centrist party எனக் கூற முடியுமா? ஒரு காலத்தில் இடது சாய்வுகொண்ட centrist party ஆக அது இருந்தது. இன்று அக்கட்சியில் வலதுசாரித் தன்மையே மேலோங்கியிருக்கிறது. காங்கிரஸ் இப்படி உருமாறியதில் ஆர்.எஸ்.எஸ் கை இருக்கிறதா என திக்விஜய் சிங் ஆராய்ந்தால் அந்தக் கட்சிக்கும் நல்லது நாட்டுக்கும்
நல்லது. 

Saturday, February 14, 2015

சானா மேனன் கவிதை

தமிழில்: ரவிக்குமார் 
==============
துகள்களாய் உடைகிறது பெயர்
பெயரில்
மௌனம் தான் வாழ்க்கை
கதவருகில் நதி

நாளைப் பற்றி என்னிடம் கேள், கவனி நதியின் உள்ளே சூரிய ஒளியின் காற்றை சுவாசிக்கிறது நிலக்கரி

மல்லிகையை விழுங்குகிறது நாள்
நான் அதைக் கேட்கிறேன் , பொறுமையாகப் பார் 
நதியில் வீழ்கிறது சூரியன் 

Friday, February 13, 2015

ஆம் ஆத்மி: நவீனத்துவமா பழமைவாதமா? - ரவிக்குமார்



இன்று (14.02.2015) பொறுப்பேற்கும் ஆம் ஆத்மி அரசு சிறப்பாக செயல்பட்டு பிற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வாழ்த்துகிறேன்.

பண்டைக் காலத்தில் தலைநகருக்குக் கூடுதலான முக்கியத்துவம் இருந்தது. போரில் ஒரு தலைநகரைக் கைப்பற்றினால் அந்த நாட்டையே கைப்பற்றியதாக அர்த்தம். இன்று அப்படியில்லை. ஆனால் ஆம் ஆத்மியின் வெற்றியைக் கொண்டாடுபவர்களின் பெருமிதத்தில் அந்தப் பழைய மதிப்பீடு வெளிப்படுவதைக் காண்கிறோம். 

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாத நிலையில் அதன் அதிகாரங்கள் வரம்புக்குட்பட்டவைதான். எனினும் பிற மாநிலங்களுக்கு இல்லாத ஒரு சிறப்புநிலை அதற்கு இருக்கிறது. நாட்டின் உயர் அதிகாரப் பதவிகளை வகிப்பவர்களின் அண்மை. அதை அனுகூலமான வகையில் பயன்படுத்துவது ஆம் ஆத்மியின் கையில் இருக்கிறது. 

ஆம் ஆத்மி கட்சி தனது செல்வாக்கை விரிவுபடுத்த  வாய்ப்பு இருக்கும் மாநிலம் பஞ்சாப். ஏற்கனவே அங்கே கணிசமான வெற்றியை அது ஈட்டியிருக்கிறது. 

ஆம் ஆத்மியின் பலத்தில் ஒன்று அக்கட்சியிலிருக்கும் பல்வேறுபட்ட அறிவாளிகள். அது பலவீனமாக மாறிவிடாமல் இருக்கவேண்டுமெனில் அகங்காரம் இல்லாத அணுகுமுறையை அவர்கள் மேற்கொள்ளவேண்டும். அக்கட்சியிலிருக்கும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் தமது திறமையை எதிராளிகளின் தவறுகளை அம்பலப்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். ஆனால் அதீதமான சட்டவாதத்துக்குள் கட்சியை மூழ்கடித்துவிடக்கூடாது. 

ஆம் ஆத்மியின் கடந்த காலம் அது இந்தியாவின் சமூக அமைப்பையும் சமூக நிறுவனங்களையும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்தியது. அக்கட்சி பயன்படுத்தும் குறியீடுகள் நவீனத் தன்மை கொண்டவை அல்ல. அற மதிப்பீடுகளை அவற்றின் உள்ளீடு குறித்த புரிதல் இல்லாமல் வலியுறுத்திக்கொண்டிருப்பது வலதுசாரி மனோபாவத்தின் வெளிப்பாடுதான். 

தன்னை சிந்தனையிலும் செயல்பாட்டிலும் நவீனப்படுத்திக்கொள்ள ஆம் ஆத்மி முன்வரவேண்டும். இதன் பொருள் அது ஐரோப்பிய கலாச்சார விழுமியங்களைப் பின்பற்ற வேண்டும் என்பது அல்ல. மாறாக ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்பதே. இல்லாவிடில் அது  ஒரு பழமைவாதக் கட்சிதான் என்பது வெகுவிரைவிலேயே அம்பலமாகிவிடும். 

Thursday, February 12, 2015

பெருமாள் முருகன் :

மண்ணின் மைந்தர் என்பதன் பொருள் என்ன? 
- ரவிக்குமார்
===========

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கையொட்டி பெருமாள் முருகன் தம்பதியினரை சென்னைக்கு இடமாற்றல் செய்து இன்று ஆணை வழங்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. ஒருவிதத்தில் ஆறுதல் என்றாலும் கொங்கு மண்ணிலிருந்து வெளியேறுவது அவருக்கு உவப்பாக இருக்காது. ' மண்ணின் மைந்தர்' களின் பிரச்சனை அது. 

மண்ணின் மைந்தர் என்பதே அடிப்படையில் பிற்போக்கான கருத்து என்பது என் நிலைபாடு. அந்த அடையாளத்தை யார் கோர முடியும்? ஒரு தலித்தோ ஒரு பிராமணரோ மண்ணின் மைந்தர் என சொல்லிக்கொள்ள முடியுமா? கிராமப்புறங்களை விமர்சனமின்றி சிலாகிப்பவர்களைக் கண்டாலே எனக்கு டென்ஷன் கூடிவிடுகிறது.  கிராம பஞ்சாயத்துகளை மேலும் அதிகாரப்படுத்தவேண்டும் என இடதுசாரிகள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இந்திய கிராமங்களைப்பற்றி கார்ல் மார்க்ஸ் சொன்னதை இடதுசாரிகள் மறுக்கிறார்களா? கள்ளச் சாராயத் தொழிலைப் போல கிராமப்புற சாதி அமைப்பை நீரூற்றி தளிர்க்கவைத்துவிட்டது இந்த பஞ்சாயத்து முறை. இதைப் பற்றிய ஆய்வு அவசியம். 

தோழர் எஸ்.என்.நாகராஜன் கொங்கு மண்ணில்தான் வாழ்கிறார். பெருமாள் முருகன் பிரச்சனையில் அவர் ஏதாவது கருத்து கூறினாரா? என அறிய ஆவலாக இருக்கிறது.

ஈழம்:

ஐநா மனித உரிமைக் கவுன்சில் அறிக்கையை ஒத்திவைக்க இலங்கை சதி
- ரவிக்குமார் 
=============
எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கை விவாதிக்கப்படவேண்டும். அதை தள்ளிப்போடுவதற்கு இலங்கை முயற்சித்துவருகிறது. தற்போது அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அதற்கான ஆதரவைத் திரட்டிவருகிறார். 

இலங்கை அரசாங்கமே விசாரணையை நடத்துமென்றும் ஐநா அறிக்கையை அந்த விசாரணை அமைப்பிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம் எனவும் இலங்கை கூறிவருகிறது. அதை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காகவே இலங்கை அதிபர் மைத்ரிபாலா இங்கு வருகிறார். 

இலங்கை பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என செய்திகள் கசிகின்றன. அப்போது சிங்கள வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்த முயற்சி எனக் கூறப்பட்டாலும் இனப்படுகொலை நடந்த நேரத்தில் ராணுவ அமைச்சராக இருந்த மைத்ரிபாலா ஒருபோதும் போர்க்குற்ற விசாரணையை அனுமதிக்கமாட்டார் என்பதே உண்மை. ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க விழிப்போடு இருந்து தமிழகம் போராடவேண்டிய காலம் இது. ஒன்றுபட்டு நிற்கவில்லையென்றாலும் ஒரே குரலிலாவது நாம் பேசவேண்டும் என்பதை தமிழக அரசியல் கட்சிகள் உணர்வார்களா? 

Wednesday, February 11, 2015

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!


இலங்கை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 
இனப்படுகொலை தீர்மானத்தை இந்திய அரசு வழிமொழியவேண்டும்



ஈழத் தமிழர்மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்தி இலங்கை வடக்கு மாகாண சபையில் நேற்று (10.02.2015) ஒருமனதாகத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பதினொரு பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்மானத்தில் இனப்படுகொலைக்கான ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஐநா பாதுகாப்புக் கவுன்சில் இனப்படுகொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிடவேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது.  

வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் இனப்படுகொலை எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விவரித்துள்ள அந்தத் தீர்மானம் 1990ஆம் ஆண்டிலிருந்து மலையகத் தமிழ்ப் பெண்கள் கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதையும், 2009க்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் தமிழ்ப் பெண்கள் கட்டாய கருத்தடைக்கும், கருச்சிதைவுக்கும் உட்படுத்தப்பட்டதையும் பட்டியலிட்டிருக்கிறது. 

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவத் தாக்குதலின்போது வன்னிப் பகுதியில் மட்டும் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதையும் அந்தத் தீர்மானம் ஆதாரத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறது. 
இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட 6,500 ஏக்கர் நிலத்தைத் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கவோ, இராணுவத்தைத் திரும்பப்பெறவோ மைத்ரிபாலா அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளைத் தொடங்காததை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

2009இல் இனப்படுகொலை நடந்தபோது இராஜபக்ச அரசில் இராணுவ அமைச்சராக இருந்தவர்தான் மைத்ரிபாலா. அவர் இப்போது அதிபராகியிருக்கிறார். இனப்படுகொலையை நிறைவேற்றிய இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா இப்போது அதிபருக்கு இராணுவ ஆலோசகராக இருக்கிறார். இந்த நிலையில் இலங்கை அரசாங்கமே விசாரணை நடத்தினால் தமிழ் மக்களுக்கு நீதி எப்படி கிடைக்கும் என வடக்கு மாகாணசபைத் தீர்மானம் கேள்வி எழுப்பியிருக்கிறது. 

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும். இலங்கையில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒத்திப்போடுவதற்கு அமெரிக்காவின் உதவியை இலங்கை அரசு நாடியிருக்கிறது. அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காகவே இலங்கை அதிபர் மைத்ரிபாலா இம்மாதம் இந்தியாவுக்கு வருகிறார்.
இலங்கை அரசின் தமிழர் விரோத போக்குக்கு இந்திய அரசு துணைபோகக்கூடாது என வலியுறுத்துகிறோம். வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை இந்திய அரசு வழிமொழிந்து ஆதரிக்கவேண்டும். அதற்காக இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. 

அசட்டுத்தனமே தர அளவுகோலாகிவிடும்போது .......


இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு மூடப்படுகிறது என்ற அறிவிப்பைப் படித்ததும் மனம் அதிர்ந்தது. இன்றைய வணிக உலகில் இது சாதாரணமானதுதான் என்றபோதிலும் அதை இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. வாஸந்தி ஆசிரியராக இருந்த காலத்திலிருந்து அந்தப் பத்திரிகையோடு ஏற்பட்ட உறவு. ஆனந்தநடராஜன் காலத்திலும் தொடர்ந்தது. பத்திகள் பலவற்றை அதில் எழுதியிருக்கிறேன். உண்மை அறிதல் என்ற எனது சிறுகதை ஒன்றும் அதில் வெளியானது. கட்டுரைகள் மதிப்புரைகள் என பலவற்றை எழுத வாய்ப்பளித்த இதழ். மனத் தடை இல்லாமல் சென்றுவரக்கூடிய பத்திரிகை அலுவலகமாக அது இருந்தது. 

அண்மையில் அதில் கவிதா இணைந்த பின்னர் பெருமாள் முருகன் பிரச்சனை குறித்த சிறப்பிதழைக் கொண்டுவந்தார். அந்த இதழ் தனக்கு மிகவும் நிறைவளித்தது என அவர் கூறியிருந்தார். நானும் அந்த இதழில் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதுவே இந்தியா டுடேவில் நான் எழுதும் கடைசிக் கட்டுரையாக இருக்கும் என அப்போது நினைக்கவில்லை. 

அச்சு ஊடகம் கடுமையான நெருக்கடியை சந்தித்துவருகிறது. இன்னும் பல பத்திரிகைகள், நாளிதழ்கள் மூடப்படலாம். ஊடகத் துறையில் பணிபுரியும் நண்பர்கள் எந்த நேரத்திலும் வேலையை இழக்கலாம் என்ற அச்சத்தோடே வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும்போது துயரம் அதிகரிக்கிறது. 

காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் அச்சு ஊடகத்துக்கு மட்டுமல்ல தரமான ஊடகவியலாளர்களுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாகிவிட்டன. "அசட்டுத்தனமே தர அளவுகோலாகிவிடும்போது நுண்ணுணர்வுள்ளவர்கள் அங்கே தாக்குப் பிடிக்க முடியாது " என காலையில் ஒரு பத்திரிகையாள நண்பர் சொன்னார். எல்லா துறைகளுக்கும் பொருந்தக்கூடிய மகத்தான உண்மை! 

Monday, February 9, 2015

டெல்லி தேர்தல்:

 உதிரத் தொடங்கும் ஊடக மாயை
=============

இன்னும் சில மணி நேரத்தில் டெல்லி தேர்தல் முடிவு தெளிவாகிவிடும். வாக்கெடுப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஆம் ஆத்மியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அது 40 இடங்களுக்கும் மேல் கைப்பற்றும் என்பது எனது கணிப்பு. 

இந்தத் தேர்தல் முடிவை மத்தியில் ஆளும் பாஜக அரசு மீதான வாக்கெடுப்பாகக் கருத முடியுமா? என்று சிலர் கேட்கின்றனர். அப்படித்தான் கருதவேண்டும். இந்தத் தேர்தலில் பாஜக தனது சக்தி அனைத்தையும் பயன்படுத்தியிருக்கிறது. போதாக்குறைக்கு ஒபாமா வருகை வேறு! அப்படியிருந்தும் அக்கட்சி தோற்றால் அதற்கு என்ன விளக்கம் சொல்வார்கள்? 

சில கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டிருப்பதுபோல 20 இடங்களுக்கும் குறைவாக பாஜக பெற்றால் அது தனது அணுகுமுறையை முற்றாக மாற்றிக்கொள்ளவேண்டும் என மக்கள் தெரிவித்திருப்பதாகவே பொருள்படும். 

டெல்லி தேர்தல் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீதான வாக்கெடுப்பு மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரைப்பற்றி கட்டி எழுப்பப்பட்டுள்ள ஊடக மாயைகள் உதிரத் தொடங்குவதன் அடையாளம்! 

Saturday, February 7, 2015

டெல்லி தேர்தல்:

அனுபவத்திலிருந்து கற்குமா ஆம் ஆத்மி? 
- ரவிக்குமார்

========
டெல்லி தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளைப் பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. டெல்லியிலுள்ள அரசியல் ஆய்வு ந்றுவனமான 'டுடேஸ் சாணக்யா' என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் வாக்குப் பதிவுக்குப் பிறகான கருத்துக் கணிப்பு மற்றவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. வாக்களித்தவர்களில் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பதை அது கணித்திருக்கிறது. 

எஸ்.சி பிரிவினரில் 55% ஆம் ஆத்மிக்கும் 29% பாஜகவுக்கும் 9% காங்கிரசுக்கும் வாக்களித்துள்ளதாக  'டுடேஸ் சாணக்யா' தெரிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 44%ஆம் ஆத்மிக்கும், 34% பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர் எனவும்; பிராமணர்களில் 44% ஆம் ஆத்மி 42% பாஜகவுக்கும் வாக்களித்திருப்பதாகவும் அது கூறுகிறது. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது இளம் வயது வாக்காளர்கள் பெருமளவில் பாஜகவை ஆதரித்தனர். ஆனால் டெல்லி தேர்தலில் அந்த நிலை மாறிவிட்டது. 18 முதல் 25 வரை வயதுகொண்ட வாக்காளர்களில் 44% ஆம் ஆத்மிக்கும் 34% பாஜகவுக்கும் வாகளித்ததாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 26 முதல் 35 வயது வரையிலான வாக்காளர்களிலும் பாஜகவைவிட 10% கூடுதலான ஆதரவை ஆம் ஆத்மி பெற்றிருக்கிறது. 66 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களில் 40% பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அது ஆம் ஆத்மியைவிட 2% அதிகம். 

எஸ்சி மக்களின் ஆதரவை எந்தக் கட்சி அதிகம் பெறுகிறதோ அந்தக் கட்சிதான் ஆட்சி அமைக்கிறது. டெல்லிக்கும் இது பொருந்தும். 

வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட டெல்லி மக்கள் இம்முறை தெளிவான தீர்ப்பை  வழங்கவிருக்கிறார்கள். ஆம் ஆத்மியும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு நல்ல காரியங்களைச் செய்யவேண்டும்.  

Friday, February 6, 2015

சட்டக் கல்லூரி போராட்டம்:

நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம் சொல்வதென்ன?

ரவிக்குமார் 
===================

( சென்னை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டம் குறித்து முகநூலில் எழுதியுள்ள என்னைப்பற்றிக் குறிப்பிட்டு நான் இதில் கூடுதலான தகவல்களைத் தரலாம் என்று கூறியுள்ளார். எனவே ஜூனியர் விகடனில் நான் 26.07.2009 அன்று எழுதிய கட்டுரையை இங்கே தருகிறேன் ) 
=============

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் சட்டக்கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விசாரித்து பரிந்துரைகளை அளிப்பதற்கு நியமிக்கப்பட்ட நீதியரசர் திரு. ப.சண்முகம் விசாரணை ஆணையம் தன்னுடைய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உடனடியாக மூன்று காவல் துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற அந்த வன்முறைச் சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். அந்த சம்பவம் குறித்த காட்சிகள், டெலிவிஷன் சானல்களில் காட்டப்பட்டபோது நாமெல்லோரும் அதிர்ச்சியில் உறைந்துபோனோம். மாணவர்கள் குறித்து அதுவரை நமக்குள் இருந்த மதிப்பீடுகள் யாவும் அந்தக் காட்சியால் தகர்ந்து போனது மட்டுமின்றி மனிதர்கள் மீதே நம்பிக்கையற்று போகக்கூடிய மனநிலையும் நமக்குள் உருவானது. அந்த அளவுக்கு மிகவும் கொடூரமாக மாணவர்கள் ஒருவரையருவர் தாக்கிக் கொண்டனர். அந்த நிகழ்வு குறித்து கருத்து சொன்ன பலரும், நம்முடைய சட்டக்கல்வி மிகவும் மோசமான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள். சட்டக்கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது, சட்டக்கல்லூரி விடுதியில் வெளியாட்கள் தங்குவது, சட்டக்கல்லூரிக்குள் சாதி அமைப்புகள் கொடி கட்டிப்பறப்பது முதலான காரணங்களையும் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்கள்.

சென்னை சட்டக்கல்லூரி சம்பவம் நடந்தவுடன் அதுபற்றி தமிழக சட்டப்பேரவையில் அப்போது நான் சில கருத்துகளைக் கூறியிருந்தேன். ‘‘ஏதோ இதிலே ஈடுபட்ட மாணவர்களைத் தண்டிப்பது, இதற்குப் பொறுப்பாக இருந்த காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது என்பதோடு இந்தப் பிரச்சனையை முடித்துவிடாமல், சட்டக்கல்லூரி மட்டுமின்றி பல்வேறு கல்லூரி வளாகங்களை முறைப்படுத்துவதற்குப் பொதுவான நடைமுறைகளை உருவாக்கிட அரசு முன்வர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன். ‘‘இதற்காக கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின்மூலம் பரிந்துரைகளைப் பெற்று நம்முடைய கல்லூரி வளாகங்களை முறைப்படுத்துவதற்கு ஒரு நிரந்தரமான நடவடிக்கை எடுக்க அரசு முன்வரவேண்டும். எவ்வாறு தென்மாவட்டக் கலவரங்களின்போது ஒரு நீதி விசாரணை நடத்தப்பட்டு, அந்த நீதிபதியினுடைய பரிந்துரைகள் ஏற்கப்பட்டு இன்றைக்குப் பெருமளவில் சாதிய வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றதோ, அதுபோலவே இந்தச் சம்பவத்தை முன்வைத்து, இதற்கான ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, இத்தகைய கல்லூரி வளாகங்களை முறைப்படுத்துவதற்கு அரசு முன்வரவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன். இதுபோல பலரும் வற்புறுத்திய காரணத்தினால்தான் நீதியரசர் சண்முகம் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையமும் ஒரு ஆண்டு நிறைவடைவதற்கு முன்பே தன்னுடைய அறிக்கையை அளித்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

பதினெட்டு பேரிடம் வாய்மொழி சாட்சியம் பெற்றும், ஆறு சாட்சிகளை விசாரித்தும், பதினெட்டு ஆவண சாட்சியங்களை பரிசீலித்தும், மேலும் பதின்மூன்று ஆவணங்களை ஆராய்ந்து பார்த்தும் இந்த விசாரணை ஆணையம் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நல்லமுறையில் நிறைவேற்றியிருக்கிறது. மாணவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என முப்பத்தோரு பேரிடம் உறுதிமொழி பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. சட்டக்கல்வியில் அக்கறையும், அனுபவமும் கொண்ட வழக்குரைஞர்கள் மற்றும் பேராசிரியர்களிடமும் கருத்துரை கோரப்பட்டு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.

நீதியரசர் சண்முகம் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்ட விஷயம்தான் இப்போது அதிகம் பேசப்படுகிறது. ஆனால், சட்டக்கல்வியை மேம்படுத்துவதற்காக விசாரணை ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகள்தான் முக்கியமானவையாகும். இந்தியாவில் பெங்களூர் மற்றும் ஏனைய ஆறு இடங்களில் உள்ள தேசிய சட்டக்கல்லூரிகளைப் போன்று தமிழ்நாட்டிலும் மாதிரி சட்டப்பள்ளி ஒன்றைத் தொடங்கலாம் என விசாரணை ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. மிகவும் நெரிசல்மிக்க பரபரப்பான இடத்தில் அளவுக்கதிகமான மாணவர்களுடன் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசின் சட்டக்கல்லூரி மாற்றப்பட்டு, தாம்பரம், திருவள்ளூர், எண்ணூர் அல்லது பூவிருந்தவல்லி போன்ற சென்னை மாநகரைச் சுற்றிலுமுள்ள இடங்களில் குறைந்தது மூன்று சட்டக்கல்லூரிகள் ஏற்படுத்தப்படலாம் எனக்கூறியுள்ள விசாரணை ஆணையம், தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் சட்டக்கல்லூரியை சட்ட மேற்படிப்பு மையமாக மாற்றலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் வராமல் தவிர்ப்பதற்குரிய வழிவகைகள் காணப்பட வேண்டும். மாணவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிய கல்லூரி முதல்வர், முதுநிலைப் பேராசிரியர்கள் அடங்கிய நிலையான குழு ஒன்று இருக்க வேண்டும். கல்லூரி வளாகத்திற்குள்ளும், மாணவர் இல்லங்களிலும் சாதி அடிப்படையிலான சங்கங்கள் இருப்பதும், அவற்றின் நடவடிக்கைகளும் தடை செய்யப்பட வேண்டும் என்று நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டக்கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது இத்தகைய வன்முறை சம்பவங்களுக்கு இட்டுச்செல்கிறது என்பதை புரிந்துகொண்டுள்ள விசாரணை ஆணையம், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சென்னை சட்டக்கல்லூரியை எடுத்துக்கொண்டால், அங்கு கல்லூரி முதல்வர் உட்பட ஆசிரியர்கள் பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கை முப்பத்துமூன்று. ஆனால், அங்கு பதினெட்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். அதுபோல பகுதிநேர ஆசிரியர்களின் பதவியிடங்கள் இருபத்தைந்து இருந்தும் பதினான்கு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதன் காரணமாக 2146 மாணவர்கள் பயிலும் சென்னை சட்டக் கல்லூரியில் நாளன்றுக்கு ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும் அதிகபட்ச கால அளவு இரண்டு மணி நேரத்திற்கு மேல் இல்லை என்பதை மிகவும் வேதனையோடு விசாரணை ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது. தற்போதுள்ள இந்தப் பற்றாக்குறையை மாற்றி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் 40:1 என்ற அளவில் பராமரித்து வரப்பட வேண்டும் என விசாரணை ஆணையம் கூறியிருக்கிறது.

சட்டக்கல்வி படிப்பு முறை ஒரே சீராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள விசாரணை ஆணையம் தற்போது உள்ள மூன்றாண்டு சட்டக்கல்வி முறை முழுமையாக கைவிடப்படவேண்டும். அதற்குப்பதிலாக ஐந்தாண்டு படிக்கும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும்; மாணவர்களுக்கு சீருடை அணியும் முறை இருக்க வேண்டும்; ஒரு நேரத்தில் இரண்டு பாடங்களுக்கு மேல் தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர் ஒருவர் அடுத்த கல்வியாண்டில் அப்பாடங்களில் தேர்ச்சி பெறுகின்றவரையில் கல்வியைத் தொடர அனுமதிக்கக்கூடாது என்பது போன்ற ஆலோசனைகளையும் விசாரணை ஆணையம் வழங்கியிருக்கிறது. இந்தப் பரிந்துரைகள் மாணவர்களிடம் எதிர்ப்பைத்தான் கிளப்புமே தவிர, சட்டக்கல்வியை மேம்படுத்த உதவாது என்றே தோன்றுகிறது. மூன்றாண்டு சட்டக்கல்வி முறையில்தான் எத்தனையோ திறமையான வழக்கறிஞர்களெல்லாம் உருவாகியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஒரு பட்டப்படிப்பை முடித்துவிட்டு அதன்பிறகு சட்டம் பயில வரும்போது அந்த மாணவன் ஒப்பீட்டளவில் மனரீதியாக முதிர்ச்சி கொண்டவனாக இருப்பான். பி.எல். பட்டம் பெற்றபிறகு அவர் நடத்தப்போகும் வழக்கு பலரின் தலைவிதியை தீர்மானிக்கும் வல்லமை கொண்டதாக இருப்பதால் அந்த மாணவன் நிச்சயமாக இப்படியான மனமுதிர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். சட்டக்கல்வியை பொறியியல் கல்விபோல பொருளீட்டும் தொழிற்கல்வியாக மட்டுமே பார்ப்பது சரியல்ல. இதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, ஆணையத்தின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதென முடிவு செய்திருப்பதாக தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கின்றார். அவையாவும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டத்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது ஆணையம் முன்மொழிந்துள்ள பல பரிந்துரைகள் சிறப்பானவைதான் என்றாலும், இந்த ஆணையம் சிலவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாததையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ‘தற்போது நடவடிக்கைக்குள்ளாகியிருக்கும் காவல்துறை அதிகாரிகள் பலிகடாக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் தொடர்பு கொண்ட பல உயரதிகாரிகள் தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டார்கள்’ என்பதுபோன்ற ஒரு மனக்குறை காவல்துறையினரிடமும், பிற பிரிவினரிடமும் காணப்படுகிறது. இந்த உணர்வை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சட்டக்கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தற்போது பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்துள்ள தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சட்டக்கல்லூரியில் நிரந்தரமாக பணிபுரியும் ஆசிரியர்கள் நீதிமன்றங்களில் ப்ராக்டிஸ் செய்யமுடியாது என தடையிருக்கின்ற காரணத்தினால் திறமையான வழக்கறிஞர்கள் ஆசிரியப் பணிக்கு வரத்தயங்குகின்றனர். இதுமட்டுமல்லாமல், இதுவரை செய்யப்பட்டுள்ள ஆசிரிய நியமனங்களிலும்கூட இடஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்படவில்லை. குறிப்பாக, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு பணி நியமனங்களில் சரியாகப் பின்பற்றப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் சட்டக்கல்லூரிகளில் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது. அதுமட்டுமின்றி சட்டக்கல்லூரிகளிலேயே சமூக நீதியை மறுப்பது எந்தவிதத்தில் நியாயம்?

சட்டக்கல்வியை சீர்திருத்தித் தரமுயர்த்துவதற்காக தேசிய அறிவுசார் ஆணையம் பத்து விதமான பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. அவற்றை இந்த விசாரணை ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாதது மிகப்பெரிய குறைபாடாகும். சட்டக்கல்விக்கென்று இருபத்தைந்து உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது அறிவுசார் ஆணையத்தின் பரிந்துரை. அந்தக்குழுவில் முன்னணி வழக்கறிஞர்கள், பார்கவுன்சில் உறுப்பினர்கள், நீதிபதிகள், கல்வியாளர்கள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என்று அது கூறியுள்ளது. தற்போதைய தேவைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை சமாளிக்கும் விதமாக அந்தக்குழு தனது ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்று அறிவுசார் ஆணையம் கூறியிருக்கிறது. சட்டக்கல்லூரிகளின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு சுயேச்சையான மதிப்பீட்டு முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். தற்போது சட்டக்கல்லூரிகளில் பயிற்றுவிக்கும் பாடங்கள் இன்றைய காலத்தின் தேவைகளை ஈடுசெய்வதாக இல்லை. எனவே அந்தப் பாடங்களும், பயிற்றுவிக்கிற முறைகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதுபோலவே தேர்வு முறையும் மாற்றப்படவேண்டும். மாணவர்களிடையே ஆய்வு மனப்பான்மையையும், சீர்தூக்கிப் பார்க்கிற திறனையும் வளர்க்கும் விதமாக தேர்வுமுறை இருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் இருப்பதுபோல சட்டக்கல்லூரிகளில் ஆராய்ச்சி மனோபாவத்தை ஊக்குவிக்கும் விதமாக வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும். இத்தகைய ஆராய்ச்சிகளை நடத்துவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய அளவில் குறைந்தபட்சம் நான்கு ஆராய்ச்சி மையங்களாவது உருவாக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கும் அறிவுசார் ஆணையம் சட்டக்கல்விக்கு நிதி ஒதுக்குவதற்கு மத்திய , மாநில அரசுகள் தயங்கக்கூடாது என்றும் தற்போதைய உலக மயமாக்கல் சூழலுக்கேற்றபடி நமது சட்டக்கல்வியை மாற்றியமைக்காவிட்டால் நமது நீதித்துறை மிகவும் பின்தங்கிவிடும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

  நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு தேசிய அறிவுசார் ஆணையத்தின் கருத்துகளையும் உள்ளடக்கி செயல்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் கல்வியாளர்களை அழைத்து மீண்டும் ஒரு ஆலோசனை நடத்துவதில் தப்பில்லை.

Thursday, February 5, 2015

சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்யக்கூடாது!


தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட வன்முறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.
சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு அரசு கூறும் காரணங்கள் ஏற்கக் கூடியவையாக இல்லை.  தற்போது உயர்நீதிமன்ற வளாகத்திலேயே கல்லூரி இருப்பதால் மாணவர்கள் நீதிமன்ற நடைமுறைகளை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. புதிய கட்டிடம் தேவையென்றால் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே கட்டுவதற்கு இடம் இருக்கிறது. எனவே சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய மாட்டோம் எனத் தமிழக அரசு அறிவித்து மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

தேவை தனியார் துறையில் இட ஒதுக்கீடு

வளர்ச்சிக்கு உதவும் இட ஒதுக்கீடு: ஆய்வு வெளிப்படுத்தியிருக்கும் உண்மை
===============
எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டால் வளர்ச்சி அதிகரித்துள்ளது என இந்திய ரயில்வே துறையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதுகுறித்த செய்தியை இன்றைய இந்து ஆங்கில நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வை மேற்கொண்ட அஷ்வினி தேஷ்பாண்டே தாமஸ் வெய்ஸ்காஃப் ஆகியோருக்கு நன்றி. இந்தச் செய்தியை எழுதிய ருக்மினிக்கும் முதல் பக்கத்தில் வெளியிட்ட இந்து ஆசிரியர் மாலினி பார்த்தசாரதிக்கும் நன்றி.

தனியார் துறைகளில் தலித்துகள் சாதியின் காரணமாக உரிய வாய்ப்பளிக்கப்படாமல் நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்.கே.தோரட் வெளியிட்ட ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியது. மிக விரிவான ஆதாரங்களோடு செய்யப்பட்ட அந்த ஆய்வு நூலாகவும் வெளிவந்திருக்கிறது. 

இந்த ஆய்வுகள் இட ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்துகின்றன என்பதோடு இதைப்பற்றி தலித் இயக்கங்கள் கவனம் செலுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. 

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களைத் திரட்டுவதில் தலித் இயக்கங்களும் சமூகநீதி இயக்கங்களும் இப்போதாவது அக்கறை காட்டவேண்டும். 

Wednesday, February 4, 2015

வீழ்ச்சி


-எதல்பர்ட் மில்லர்
தமிழில்: ரவிக்குமார்
============

ஒரு சறுக்கல் எலும்பைப்போல் 
உடையும் வானம்
மரணத்துக்குப்பின் ஆறுவதில்லை
எதுவும். பொழியும் பனி உனக்கு நினைவுறுத்தும் வெண்மையை. முதுமையின் நிழலாகிவிட்டது தனிமை. எங்கே இருக்கிறது கறுப்பர்கள் ஓய்வெடுக்கும் இடம்?

Monday, February 2, 2015

மாதொருபாகன் பிரச்சனை: தேவை பொதுநல வழக்கு குறித்த விவாதம் - ரவிக்குமார்



பெருமாள் முருகன் பிரச்சனையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று தாக்கல்செய்யப்பட்ட பொதுநலவழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சொன்னதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தொடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. ஒரே வாதத்தை முன்வைத்து இப்படி ஆளாளுக்கு நீதிமன்றத்தை நாடுவதைவிடவும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் இணைந்துகொண்டிருக்கலாம். நாங்களும் போராடினோம் எனக் காட்டுவதற்காக எழுத்தாளர்கள் போட்டிக் கூட்டம் நடத்துவதைப்போல நீதிமன்ற வழக்குகளைக் கருதக்கூடாது. 

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள்  இரண்டு முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளனர்:
1. இதைப் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது.
2. முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளற முடியாது.
நீதிபதிகள் கூறியிருக்கும் இந்தக் கருத்துகள் சென்னையில் நிலுவையில் இருக்கும் வழக்கை பாதிக்கக்கூடும். 

இந்த வழக்கில் வாதியாக பெருமாள் முருகனை சேர்க்கும்படி சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு ஏற்கனவே கூறியிருக்கிறது. இதைப் பொதுநல வழக்காக  எடுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் அதன் பொருளா என்பது 9 ஆம் தேதி தெரியவரலாம். இது ஒருபுறமிருக்க பொதுநல வழக்குகள் குறித்த வரையறைகள் பற்றிய விவாதத்தின் தேவையை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து உருவாக்கியிருக்கிறது. ஊடகங்கள் அந்த அம்சத்தில் கவனம் செலுத்தினால் நல்லது. 

ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர் உறுதியாக நின்று போராடினால் மட்டுமே நியாயம் பெற முடியும். மனித உரிமைக் களத்தில் பல ஆண்டுகள் செயல்பட்ட அனுபவத்திலிருந்து இதை நான் சொல்கிறேன்.