Friday, February 6, 2015

சட்டக் கல்லூரி போராட்டம்:

நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம் சொல்வதென்ன?

ரவிக்குமார் 
===================

( சென்னை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டம் குறித்து முகநூலில் எழுதியுள்ள என்னைப்பற்றிக் குறிப்பிட்டு நான் இதில் கூடுதலான தகவல்களைத் தரலாம் என்று கூறியுள்ளார். எனவே ஜூனியர் விகடனில் நான் 26.07.2009 அன்று எழுதிய கட்டுரையை இங்கே தருகிறேன் ) 
=============

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் சட்டக்கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விசாரித்து பரிந்துரைகளை அளிப்பதற்கு நியமிக்கப்பட்ட நீதியரசர் திரு. ப.சண்முகம் விசாரணை ஆணையம் தன்னுடைய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உடனடியாக மூன்று காவல் துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற அந்த வன்முறைச் சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். அந்த சம்பவம் குறித்த காட்சிகள், டெலிவிஷன் சானல்களில் காட்டப்பட்டபோது நாமெல்லோரும் அதிர்ச்சியில் உறைந்துபோனோம். மாணவர்கள் குறித்து அதுவரை நமக்குள் இருந்த மதிப்பீடுகள் யாவும் அந்தக் காட்சியால் தகர்ந்து போனது மட்டுமின்றி மனிதர்கள் மீதே நம்பிக்கையற்று போகக்கூடிய மனநிலையும் நமக்குள் உருவானது. அந்த அளவுக்கு மிகவும் கொடூரமாக மாணவர்கள் ஒருவரையருவர் தாக்கிக் கொண்டனர். அந்த நிகழ்வு குறித்து கருத்து சொன்ன பலரும், நம்முடைய சட்டக்கல்வி மிகவும் மோசமான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள். சட்டக்கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது, சட்டக்கல்லூரி விடுதியில் வெளியாட்கள் தங்குவது, சட்டக்கல்லூரிக்குள் சாதி அமைப்புகள் கொடி கட்டிப்பறப்பது முதலான காரணங்களையும் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்கள்.

சென்னை சட்டக்கல்லூரி சம்பவம் நடந்தவுடன் அதுபற்றி தமிழக சட்டப்பேரவையில் அப்போது நான் சில கருத்துகளைக் கூறியிருந்தேன். ‘‘ஏதோ இதிலே ஈடுபட்ட மாணவர்களைத் தண்டிப்பது, இதற்குப் பொறுப்பாக இருந்த காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது என்பதோடு இந்தப் பிரச்சனையை முடித்துவிடாமல், சட்டக்கல்லூரி மட்டுமின்றி பல்வேறு கல்லூரி வளாகங்களை முறைப்படுத்துவதற்குப் பொதுவான நடைமுறைகளை உருவாக்கிட அரசு முன்வர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன். ‘‘இதற்காக கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின்மூலம் பரிந்துரைகளைப் பெற்று நம்முடைய கல்லூரி வளாகங்களை முறைப்படுத்துவதற்கு ஒரு நிரந்தரமான நடவடிக்கை எடுக்க அரசு முன்வரவேண்டும். எவ்வாறு தென்மாவட்டக் கலவரங்களின்போது ஒரு நீதி விசாரணை நடத்தப்பட்டு, அந்த நீதிபதியினுடைய பரிந்துரைகள் ஏற்கப்பட்டு இன்றைக்குப் பெருமளவில் சாதிய வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றதோ, அதுபோலவே இந்தச் சம்பவத்தை முன்வைத்து, இதற்கான ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, இத்தகைய கல்லூரி வளாகங்களை முறைப்படுத்துவதற்கு அரசு முன்வரவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன். இதுபோல பலரும் வற்புறுத்திய காரணத்தினால்தான் நீதியரசர் சண்முகம் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையமும் ஒரு ஆண்டு நிறைவடைவதற்கு முன்பே தன்னுடைய அறிக்கையை அளித்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

பதினெட்டு பேரிடம் வாய்மொழி சாட்சியம் பெற்றும், ஆறு சாட்சிகளை விசாரித்தும், பதினெட்டு ஆவண சாட்சியங்களை பரிசீலித்தும், மேலும் பதின்மூன்று ஆவணங்களை ஆராய்ந்து பார்த்தும் இந்த விசாரணை ஆணையம் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நல்லமுறையில் நிறைவேற்றியிருக்கிறது. மாணவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என முப்பத்தோரு பேரிடம் உறுதிமொழி பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. சட்டக்கல்வியில் அக்கறையும், அனுபவமும் கொண்ட வழக்குரைஞர்கள் மற்றும் பேராசிரியர்களிடமும் கருத்துரை கோரப்பட்டு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.

நீதியரசர் சண்முகம் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்ட விஷயம்தான் இப்போது அதிகம் பேசப்படுகிறது. ஆனால், சட்டக்கல்வியை மேம்படுத்துவதற்காக விசாரணை ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகள்தான் முக்கியமானவையாகும். இந்தியாவில் பெங்களூர் மற்றும் ஏனைய ஆறு இடங்களில் உள்ள தேசிய சட்டக்கல்லூரிகளைப் போன்று தமிழ்நாட்டிலும் மாதிரி சட்டப்பள்ளி ஒன்றைத் தொடங்கலாம் என விசாரணை ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. மிகவும் நெரிசல்மிக்க பரபரப்பான இடத்தில் அளவுக்கதிகமான மாணவர்களுடன் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசின் சட்டக்கல்லூரி மாற்றப்பட்டு, தாம்பரம், திருவள்ளூர், எண்ணூர் அல்லது பூவிருந்தவல்லி போன்ற சென்னை மாநகரைச் சுற்றிலுமுள்ள இடங்களில் குறைந்தது மூன்று சட்டக்கல்லூரிகள் ஏற்படுத்தப்படலாம் எனக்கூறியுள்ள விசாரணை ஆணையம், தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் சட்டக்கல்லூரியை சட்ட மேற்படிப்பு மையமாக மாற்றலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் வராமல் தவிர்ப்பதற்குரிய வழிவகைகள் காணப்பட வேண்டும். மாணவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிய கல்லூரி முதல்வர், முதுநிலைப் பேராசிரியர்கள் அடங்கிய நிலையான குழு ஒன்று இருக்க வேண்டும். கல்லூரி வளாகத்திற்குள்ளும், மாணவர் இல்லங்களிலும் சாதி அடிப்படையிலான சங்கங்கள் இருப்பதும், அவற்றின் நடவடிக்கைகளும் தடை செய்யப்பட வேண்டும் என்று நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டக்கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது இத்தகைய வன்முறை சம்பவங்களுக்கு இட்டுச்செல்கிறது என்பதை புரிந்துகொண்டுள்ள விசாரணை ஆணையம், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சென்னை சட்டக்கல்லூரியை எடுத்துக்கொண்டால், அங்கு கல்லூரி முதல்வர் உட்பட ஆசிரியர்கள் பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கை முப்பத்துமூன்று. ஆனால், அங்கு பதினெட்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். அதுபோல பகுதிநேர ஆசிரியர்களின் பதவியிடங்கள் இருபத்தைந்து இருந்தும் பதினான்கு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதன் காரணமாக 2146 மாணவர்கள் பயிலும் சென்னை சட்டக் கல்லூரியில் நாளன்றுக்கு ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும் அதிகபட்ச கால அளவு இரண்டு மணி நேரத்திற்கு மேல் இல்லை என்பதை மிகவும் வேதனையோடு விசாரணை ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது. தற்போதுள்ள இந்தப் பற்றாக்குறையை மாற்றி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் 40:1 என்ற அளவில் பராமரித்து வரப்பட வேண்டும் என விசாரணை ஆணையம் கூறியிருக்கிறது.

சட்டக்கல்வி படிப்பு முறை ஒரே சீராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள விசாரணை ஆணையம் தற்போது உள்ள மூன்றாண்டு சட்டக்கல்வி முறை முழுமையாக கைவிடப்படவேண்டும். அதற்குப்பதிலாக ஐந்தாண்டு படிக்கும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும்; மாணவர்களுக்கு சீருடை அணியும் முறை இருக்க வேண்டும்; ஒரு நேரத்தில் இரண்டு பாடங்களுக்கு மேல் தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர் ஒருவர் அடுத்த கல்வியாண்டில் அப்பாடங்களில் தேர்ச்சி பெறுகின்றவரையில் கல்வியைத் தொடர அனுமதிக்கக்கூடாது என்பது போன்ற ஆலோசனைகளையும் விசாரணை ஆணையம் வழங்கியிருக்கிறது. இந்தப் பரிந்துரைகள் மாணவர்களிடம் எதிர்ப்பைத்தான் கிளப்புமே தவிர, சட்டக்கல்வியை மேம்படுத்த உதவாது என்றே தோன்றுகிறது. மூன்றாண்டு சட்டக்கல்வி முறையில்தான் எத்தனையோ திறமையான வழக்கறிஞர்களெல்லாம் உருவாகியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஒரு பட்டப்படிப்பை முடித்துவிட்டு அதன்பிறகு சட்டம் பயில வரும்போது அந்த மாணவன் ஒப்பீட்டளவில் மனரீதியாக முதிர்ச்சி கொண்டவனாக இருப்பான். பி.எல். பட்டம் பெற்றபிறகு அவர் நடத்தப்போகும் வழக்கு பலரின் தலைவிதியை தீர்மானிக்கும் வல்லமை கொண்டதாக இருப்பதால் அந்த மாணவன் நிச்சயமாக இப்படியான மனமுதிர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். சட்டக்கல்வியை பொறியியல் கல்விபோல பொருளீட்டும் தொழிற்கல்வியாக மட்டுமே பார்ப்பது சரியல்ல. இதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, ஆணையத்தின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதென முடிவு செய்திருப்பதாக தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கின்றார். அவையாவும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டத்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது ஆணையம் முன்மொழிந்துள்ள பல பரிந்துரைகள் சிறப்பானவைதான் என்றாலும், இந்த ஆணையம் சிலவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாததையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ‘தற்போது நடவடிக்கைக்குள்ளாகியிருக்கும் காவல்துறை அதிகாரிகள் பலிகடாக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் தொடர்பு கொண்ட பல உயரதிகாரிகள் தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டார்கள்’ என்பதுபோன்ற ஒரு மனக்குறை காவல்துறையினரிடமும், பிற பிரிவினரிடமும் காணப்படுகிறது. இந்த உணர்வை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சட்டக்கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தற்போது பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்துள்ள தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சட்டக்கல்லூரியில் நிரந்தரமாக பணிபுரியும் ஆசிரியர்கள் நீதிமன்றங்களில் ப்ராக்டிஸ் செய்யமுடியாது என தடையிருக்கின்ற காரணத்தினால் திறமையான வழக்கறிஞர்கள் ஆசிரியப் பணிக்கு வரத்தயங்குகின்றனர். இதுமட்டுமல்லாமல், இதுவரை செய்யப்பட்டுள்ள ஆசிரிய நியமனங்களிலும்கூட இடஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்படவில்லை. குறிப்பாக, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு பணி நியமனங்களில் சரியாகப் பின்பற்றப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் சட்டக்கல்லூரிகளில் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது. அதுமட்டுமின்றி சட்டக்கல்லூரிகளிலேயே சமூக நீதியை மறுப்பது எந்தவிதத்தில் நியாயம்?

சட்டக்கல்வியை சீர்திருத்தித் தரமுயர்த்துவதற்காக தேசிய அறிவுசார் ஆணையம் பத்து விதமான பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. அவற்றை இந்த விசாரணை ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாதது மிகப்பெரிய குறைபாடாகும். சட்டக்கல்விக்கென்று இருபத்தைந்து உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது அறிவுசார் ஆணையத்தின் பரிந்துரை. அந்தக்குழுவில் முன்னணி வழக்கறிஞர்கள், பார்கவுன்சில் உறுப்பினர்கள், நீதிபதிகள், கல்வியாளர்கள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என்று அது கூறியுள்ளது. தற்போதைய தேவைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை சமாளிக்கும் விதமாக அந்தக்குழு தனது ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்று அறிவுசார் ஆணையம் கூறியிருக்கிறது. சட்டக்கல்லூரிகளின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு சுயேச்சையான மதிப்பீட்டு முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். தற்போது சட்டக்கல்லூரிகளில் பயிற்றுவிக்கும் பாடங்கள் இன்றைய காலத்தின் தேவைகளை ஈடுசெய்வதாக இல்லை. எனவே அந்தப் பாடங்களும், பயிற்றுவிக்கிற முறைகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதுபோலவே தேர்வு முறையும் மாற்றப்படவேண்டும். மாணவர்களிடையே ஆய்வு மனப்பான்மையையும், சீர்தூக்கிப் பார்க்கிற திறனையும் வளர்க்கும் விதமாக தேர்வுமுறை இருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் இருப்பதுபோல சட்டக்கல்லூரிகளில் ஆராய்ச்சி மனோபாவத்தை ஊக்குவிக்கும் விதமாக வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும். இத்தகைய ஆராய்ச்சிகளை நடத்துவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய அளவில் குறைந்தபட்சம் நான்கு ஆராய்ச்சி மையங்களாவது உருவாக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கும் அறிவுசார் ஆணையம் சட்டக்கல்விக்கு நிதி ஒதுக்குவதற்கு மத்திய , மாநில அரசுகள் தயங்கக்கூடாது என்றும் தற்போதைய உலக மயமாக்கல் சூழலுக்கேற்றபடி நமது சட்டக்கல்வியை மாற்றியமைக்காவிட்டால் நமது நீதித்துறை மிகவும் பின்தங்கிவிடும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

  நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு தேசிய அறிவுசார் ஆணையத்தின் கருத்துகளையும் உள்ளடக்கி செயல்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் கல்வியாளர்களை அழைத்து மீண்டும் ஒரு ஆலோசனை நடத்துவதில் தப்பில்லை.

No comments:

Post a Comment