Saturday, November 6, 2010

நூலகங்களிலே புத்தக விற்பனை மையங்களைத் துவக்க வேண்டும்







16-4-2010
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்



திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பள்ளிக் கல்வியின் பொற்காலம் என்று சொல்லப்படுகின்ற அளவுக்கு மிகச் சிறப்பாக பள்ளிக் கல்வித் துறை இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது நாடறிந்த உண்மையாகும்.  அதிலே அறிமுகப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்விமுறை என்ற புதிய அணுகுமுறைகள் இன்றைக்கு மத்திய அரசின் பாராட்டுதலைப் பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலே அந்த முறையைக் கடைப்பிடிக்கிற நிலை உருவாகியிருக்கிறது.  ஆனால், இன்றைக்கு சமச்சீர்க் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துகிற இந்த சூழலிலே அரசுப் பள்ளிகளிலே மட்டும்தான் இந்த முறையை நாம் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்.  மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலோ, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலோ, ஓரியன்டல் முறையைப் பின்பற்றுகிற பள்ளிகளிலோ இந்தச் செயல்வழிக் கற்றல் முறையோ, படைப்பாற்றல் கல்வி முறையோ அறிமுகப்படுத்தப்படவில்லை.  இந்தியா முழுவதும் போற்றிப் பாராட்டுகிற இந்த முறையை இங்கே இருக்கிற மற்ற பள்ளிகள் கடைப்பிடிக்காமல் இருப்பது மாணவர்களிடையே தொடர்ந்து ஏற்றத்தாழ்வை உண்டு பண்ணுகிற ஒரு நிலையைத்தான் கொண்டுவரும்.  எனவே, இங்கே இருக்கிற அனைத்துப் பள்ளிகளிலுமே இந்தச் செயல்வழிக் கற்றல் முறையையும், படைப்பாற்றல் கல்வி முறையையும் அறிமுகப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த பட்ஜெட்டிலே அறிவிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று, இலவசமாக மாணவர்களுக்கு அகராதிகள் வழங்குகிற திட்டம்.  9 ஆம் வகுப்பு படிக்கிற மாணவர்கள் 10 இலட்சம் பேருக்கு இலவசமாக ஆண்டுதோறும் அகராதிகள் வழங்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.  இதை வரவேற்கிற அதேநேரத்திலே இந்த அகராதிகள், ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதிகளாக வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு மொழியைப் படிப்பதற்கு இன்னொரு மொழியைப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் கல்வியாளர்கள் சொல்லுகின்ற ஒரு நிலை. ஆங்கிலத்தைப் படிப்பதற்காக, ஆங்கிலத்திலே தெளிவு பெறுவதற்காகத்தான் இந்த அகராதியை நாம் வழங்குகிறோம் என்று சொன்னால், அதை ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதியாக வழங்கி புண்ணியம் இல்லை.  அதை ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியாகத்தான் நாம் வழங்க வேண்டும். ஒரு மொழியிலே இருக்கின்ற பொருளைத் தெரிந்துகொள்வதற்கு, அதற்காக நாம் கொடுக்கிறோம் என்று சொன்னால் அது மொழி பெயர்ப்பாளர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம், மாணவர்களுக்குப் பயன்படாது.  எனவே, ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி என்பதற்குப் பதிலாக ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதைப்போலவே இங்கே பல்வேறு உறுப்பினர்களும் தெரிவித்த ஒரு கருத்து, தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது. இன்றைக்கு தமிழுக்கு எத்தனையோ சிறப்புகளைக் கொண்டு வந்திருக்கிற நம்முடைய முதல்வர் அவர்கள், அதிலும் அதனுடைய உச்சமாக தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்து இன்றைக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும் நடத்திக் கொண்டிருக்கிற முதல்வர் அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே தமிழ் ஆசிரியர்கள் கண்ணீர் விடக்கூடாது.  எனவே, நடுநிலைப் பள்ளிகள் மட்டத்திலே அவர்கள் பணியிடங்களிலே நியமிக்கப்பட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதைப்போல இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருந்தபோது, 1997 ஆம் ஆண்டிலே, தகுதியுள்ளவர்கள் இல்லாத காரணத்தினாலே அன்றைக்கு முதுநிலை பட்டம் பெற்றவர்கள் எல்லாம் எஸ்.சி./எஸ்.டி. பிரிவிலிருந்து அங்கே நியமிக்கப்பட்டார்கள்.  அவர்களிடம் ஓர் ஒப்புதல் வாங்கப்பட்டது; ‘நாங்கள் இதைக் காட்டி பதவி உயர்வு கேட்க மாட்டோம்’ என்று அப்போது அவர்களிடத்திலே எழுதி வாங்கப்பட்டது.  ஆனால், அவர்களுக்கு கல்விக்காகக் கொடுக்கப்படுகின்ற ஊக்கத் தொகைகூட கொடுக்கப்படாத ஒரு நிலை இருக்கிறது.  இந்த ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடிப்பது நல்லதல்ல. எனவே, அவர்களுடைய குறைகள் களையப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
பள்ளிக் கல்வித் துறையை மிகச் சிறப்பாக நிர்வகித்து வருகின்ற நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவரது துறையின்கீழ் இருக்கிற தொல்லியல் துறையையும், நூலகத் துறையையும் அதே அளவிற்குச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டுமென்பதுதான் நம்முடைய வேண்டுகோள். தொல்லியல் துறையைப் பொறுத்தவரையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பெயராலே உருவாக்கப்பட்டிருக்கின்ற அந்த விருதினை உலக அளவிலே சிறப்புமிக்க நோபல் பரிசுக்கு இணையான விருதாக இன்றைக்குக் கல்வியாளர்கள் எல்லாம் மதிக்கின்ற அந்த விருதினை முதன்முதலாகப் பெற்றிருக்கிற அறிஞர் அஸ்கோ ஃபர்போலா அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் ‘இந்து’ நாளிதழிலே ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.  அந்தப் பேட்டியிலே ஒன்றைக் குறிப்பிட்டிருக்கின்றார்; ‘இன்றைக்குத் தமிழக வரலாற்றுக்கு அடிப்படையாக விளங்குகின்ற கல்வெட்டுகள் பல, கல்குவாரிகளால் சிதைக்கப்படுகின்றன’ என்ற கவலையை அவர் தெரிவித்திருக்கிறார்.  இந்தக் கவலையை பலமுறை நானே இந்தச் சட்டப் பேரவையிலே எடுத்துச் சொல்லியிருக்கின்றேன். அதைத் தடுத்து நிறுத்துவதற்கு நம்முடைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.  அதுமட்டுமல்லாமல் இன்னும் பல கல்வெட்டுகள் இன்றைக்குப் பதிக்கப்படாத நிலையில் இருக்கின்றன.  அந்தக் கல்வெட்டுகள் எல்லாம் பதிக்கப்பட வேண்டும்.  அதுபோல, செப்பேடுகள் பல இன்னும் பதிப்பு செய்யப்படாத நிலை இருக்கிறது.
பிற்பகல் 1-00
அண்மையிலே சோழர் கால செப்பேடுகளை எல்லாம் பதிப்பித்து வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நம்முடைய முதல்வர் அவர்களுடைய ஆணையினாலே எடுக்கப்பட்டிருக்கிறது.  தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலே வெளியிடப்படும் என்ற தகவல் வந்துள்ளது.  அதுபோல், செப்பேடுகள், கல்வெட்டுகள் அனைத்துமே தமிழக வரலாற்றுக்கு ஆதாரமான அனைத்துமே நு£ல்களாக பதிக்கப்படுவதற்கு நம்முடைய தொல்லியல் துறை சார்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
நூலகத் துறையைப் பொறுத்தவரையிலே இன்றைக்கு இந்தியாவிலே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 172 கோடி ரூபாயிலே 12 இலட்சம் புத்தகங்கள் இடம்பெறுகின்ற மாபெரும் நூலகத்தை நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுடைய சாதனை வரலாற்றிலே அடுத்த மிகச்சிறந்த சின்னமாக விளங்கப்போகிறது அந்த நூலகம். அந்த நூலகத்திலே இன்றைக்கு எந்தெந்த நூல்கள் எல்லாம் இடம் பெறவேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த நூலகத்தைப் பொறுத்தவரையிலே, இந்திய தேசிய அறிவுசார் ஆணையம் மத்திய அரசுக்கு 2006 ஆம் ஆண்டிலே சில பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.  மத்திய  அரசுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளாக இருந்தாலும், மாநில அரசு அவற்றைப் பின்பற்றுவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை.  அந்தப் பரிந்துரைகளையெல்லாம் நிறைவேற்றப்பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதிலே குறிப்பாக தமிழகத்திலே இருக்கின்ற அத்தனை நூலகங்களும் கணக்கீடு செய்யப்பட வேண்டும். பொது நூலகங்கள், தனியார் நூலகங்கள், Lending Library  என்று சொல்லப்படுகின்ற  புத்தகங்களை வாடகைக்கு வழங்குகின்ற நூலகங்கள், தனி நபர்களுடைய பராமரிப்பில் இருக்கின்ற நூலகங்கள் எல்லாவற்றையும் census எடுத்து, அங்கே இருக்கின்ற நூல்களை எல்லாம் catalogue செய்து, இணையதளத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தோமேயானால் புதியதாக உருவாக்கப்படுகின்ற அந்த நூலகத்திலிருந்தபடியே  தமிழ்நாட்டில் இருக்கின்ற, தனிநபர்களுடைய பராமரிப்பில் இருக்கின்ற அந்த நூல்களுடைய எண்ணிக்கையை அல்லது அதனுடைய விவரங்களையும்கூட அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
அடுத்ததாக மிக முக்கியமான விஷயம், நான் எனது கன்னிப் பேச்சிலேயே இங்கே வேண்டுகோளாக வைத்தேன்.  தமிழக வரலாறு தொடர்பான பல முக்கியமான ஆவணங்கள் இன்றைக்கு பல்வேறு நாடுகளிலே சிதறிக் கிடக்கின்றன.  இன்றைக்கு ஏறத்தாழ 15 நாடுகளிலே இருக்கின்ற 22 நூலகங்களிலே தமிழக வரலாறு தொடர்பான மிக முக்கியமான அடிப்படை ஆவணங்கள் பராமரிப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  அந்த ஆவணங்களுடைய ஒரு பிரதியை நாம் கேட்டுப் பெறுவதிலே எந்தத் தடையும் கிடையாது.  அதற்கான தொகையைக்கூட தமிழக அரசு செலுத்தி அந்த ஆவணங்களுடைய ஒரு பிரதியை நாம் புதியதாக உருவாக்குகின்ற நூலகத்திலே வாங்கி வைத்தால்தான் தமிழக வரலாற்றைப் பற்றி இதுவரை மறைந்து கிடக்கின்ற பல உண்மைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு நூலகத் துறையில் எடுக்கப்படவேண்டிய சில சீர்திருத்தம். குறிப்பாக, மத்திய அரசு ராஜாராம் மோகன்ராய் பவுன்டேஷன் என்ற பெயரிலே ஒரு நூலக இயக்கத்தைத் துவக்கி இன்றைக்கு பல்வேறு மாநிலங்களில் இருக்கின்ற நூலகங்களுக்கெல்லாம் புத்துயிரூட்டி வருகிறது. அதுபோல் இன்றைக்கு நூலகத்திற்காக, பதிப்பாளர்களுக்காக, எழுத்தாளர்களுக்காக, தமிழ் மொழிக்காக அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கின்ற மாண்புமிகு முதல்வர் அவர்கள் பெயரிலே ஒரு யீஷீuஸீபீணீtவீஷீஸீ-ஐத் துவக்கி, அதேபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுப்பதற்கு முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதனடிப்படையிலே, நூலகக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும், நூலகர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், பல்வேறு ஏற்பாடுகளை நாம் செய்ய முடியும்.  அதுமட்டுமல்லாமல், இன்றைக்குப் பதிப்பாளர்களுக்குக் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையே தாங்கள் பதிப்பிக்கும் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு வசதிகள் இல்லாததுதான். ஏற்கெனவே புத்தகப் பூங்கா என்ற திட்டத்தினைக் கொண்டு வந்து கன்னிமாரா நூலகத்திலே நிரந்தர புத்தகக் கண்காட்சி ஒன்றை நம்முடைய நூலகத் துறை செய்து வருகிறது.  அதுபோல் இன்றைக்கு நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நூலகங்கள் இருக்கின்றன.  அவற்றில் 25 விழுக்காடு நூலகங்களில், வெறும் ஆயிரம் நூலகங்களில்  இதுபோன்ற விற்பனை மையங்களைத் துவக்கினால் நல்ல புத்தகங்களைப் பதிக்கின்ற பதிப்பாளர்கள் புத்துயிர் பெற முடியும்.  நாம் அவர்களுக்கு எத்தனை உதவிகளைச் செய்தாலும் விற்பனைக்கான ஏற்பாடுகளைச் செய்யும்போதுதான் அந்தப் புத்தகங்கள் எளிதாக நல்லவர்களுக்குப் போய்ச் சேரும்.  இன்றைக்கு நல்ல புத்தகங்களைப் தேடிப் பெறுவதற்கு மக்கள் நல்ல வழிமுறைகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எனவே, இன்றைக்கு நூலகங்களிலே புத்தக விற்பனை மையங்களைத் துவக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.  அதிலே புத்தகப் பதிப்பாளர்கள் கொடுக்கக்கூடிய அந்த 40 விழுக்காடு வரை கழிவு கொடுக்கிறார்கள். அந்தத் தொகையிலே ஒரு பத்து விழுக்காட்டை நூலகர்களுக்கு ஊக்கத் தொகையாகக்கூடக் கொடுத்து--ஏனென்றால் அதனை ஒரு கூடுதல் சுமையாகக்கூட அவர்கள் கருதக்கூடும்.  எனவே, பத்து விழுக்காடு ஊக்கத் தொகையாக நூலகர்களுக்குக் கொடுத்து--இந்தப் புத்தக விற்பனை மையங்களைத் துவக்கினால் நிச்சயமாக அது பதிப்புத் துறையை புத்துயிர் பெற வைக்கும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.      
மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. து. ரவிக்குமார், நேரம் ஆகிவிட்டது.
திரு. து. ரவிக்குமார்: அதுபோல நம்முடைய அமைச்சர் அவர்கள் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, நீதி போதனை வகுப்புகள் கொண்டுவரப்படும் என்று சொன்னார்கள்.  ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனத்தார் ‘‘Living in Harmony' ' என்ற பெயரிலே எட்டாம் வகுப்பு வரைக்கான நூல்களைத் தயாரித்திருக்கிறார்கள்.  ஆங்கில வழிப் பள்ளிகளிலே அதை உடனடியாக அறிமுகப்படுத்தலாம். மிகச் சிறப்பான முறையிலே கல்வியாளர்களுடைய உதவியிலே தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதையே தமிழ்படுத்தி நாம் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கலாம். இன்றைய காலக்கட்டத்திலே அந்த நீதி போதனை வகுப்புகள் மிக மிக அவசியம்.  எனவே, அந்த நீதி போதனை வகுப்புகளைத் துவக்க வேண்டும் என்று கேட்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி, அமர்கிறேன்.  வணக்கம்.

1 comment:

  1. really, a innovative idea. some times, when v cross good books, v want to buy. but laziness to go to shop and search--problem. here , this novel idea may be boon to almost everybody. it may be useful to earn money for library thro' sales.
    -ponnambalam kalidoss ashok

    ReplyDelete