Thursday, November 4, 2010

கால்ல ஆர்குமெண்ட் கடையில மேற்கோள்

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மா.ராசேந்திரன்


கிரந்த யூனிகோடு தொடர்பாகத் தமிழக முதல்வர் அவர்கள் கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு நானும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களும் திரும்பிக்கொண்டிருந்தோம். இரவு பத்து மணி ஆகிவிட்டது.ஊரெங்கும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்டிக்கொண்டிருந்தன. வெடிக்கும் பட்டாசுகளிடமிருந்து தப்பித்துத் தப்பித்து வாகனங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. துணைவேந்தர் நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். சிரிப்பு வெடிகளை அவ்வப்போது கொளுத்திப் போட்டுக்கொண்டே இருப்பார். தான் சிரிக்காமல் நம்மைச் சிரிக்கவைக்கும் வித்தை தெரிந்தவர்.
நான் அவரிடத்தில் ஒரு சம்பவத்தைச் சொன்னேன். எனக்குத் தெரிந்த கிராமம் ஒன்றில் ஒரு இளைஞர் இருந்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு விவசாய வேலைக்குச் செல்வதை அவமானமாக நினைத்துக்கொண்டிருந்த அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கில வார்த்தைகளை வைத்து அந்தக் கிராம மக்களை பயமுறுத்திக்கொண்டிருந்தார். அவரிடம் லிஃப்கோ அகராதி ஒன்றிருந்தது.’ அகராதி படிச்ச பய அவன்கிட்ட வாயை கொடுக்கக்கூடாது ’ என்று கிராம மக்களும் விலகி விலகிப் போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அவருக்குக் காலில் வலி வந்துவிட்டது. வாத நோயாக இருக்குமோ என்று அவரது அம்மா முடக்கத்தான் தோசை சுட்டுக் கொடுத்துப் பார்த்தார் . வயிறு நிறைந்ததே தவிர வலி குறையவில்லை. பக்கத்து ஊரிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போகலாமென்றால் அங்கு டாக்டர் எப்போது வருவார் எப்போது போவார் என்பது எவருக்குமே தெரியாத மர்மமாக இருந்தது. திங்கள் கிழமை மட்டும் டாக்டர் காலை பத்துமணிவரை இருப்பார் என்று விவரம் தெரிந்த ஒருவர் சொன்ன ரகசியத் தகவலையடுத்து நம் இளைஞர் டாக்டரைச் சந்திக்கத் தயாரானார். டவுனிலிருந்து வரும் டாக்டரிடம் தனது நோயின் அறிகுறியைத் தமிழில் சொல்ல அவருக்கு விருப்பமில்லை. எஸ்.எஸ்.எல்.சி படித்தவராயிற்றே. எடுத்தார் லிஃப்கோவை . தனது நோயின் ஆங்கிலப் பெயரைப் பார்த்துக்கொண்டார். போனார் டாக்டரிடம்.
டாக்டர் கேட்டார்:’ என்ன தம்பி செய்யுது?’
‘’ கால் முட்டியில ஒரே வலியா இருக்கு . ஆர்குமெண்டா இருக்குமோன்னு பயமா இருக்கு டாகடர் “
“ ஆர்குமெண்டா? அப்படின்னா?”
தான் சொன்ன இங்கிலீஷ் வார்த்தை டாக்டருக்கே தெரியவில்லை என்றதும் நம் இலைஞருக்குத் தலைகால் புரியவில்லை. சட்டை காலர் தானாகவே விறைத்துக்கொண்டுவிட்டது.
” என்ன டாக்டர் இப்படி கேட்டுட்டீங்க? அது ஆர்குமெண்டா இருக்கும்னுதான் எங்க அம்மாவும் முடக்கத்தான் தோசை சுட்டுக் கொடுத்தாங்க”
“ உங்களுக்கு என்ன செய்யுதுன்னு தெளிவா சொல்லுங்க தம்பி”
‘’ அதான் டாக்டர். அது ஆர்குமெண்ட் தான்.லிஃப்கோவுலயே அப்படித்தானே போட்டிருக்குது”
‘’ என்ன போட்டுருக்கு?”
“ ஆர்குமெண்ட்னா வாதம்னு போட்டுருக்குது டாக்டர்”

இந்த சம்பவத்துக்குப் பிறகு டாக்டர் அந்த மருத்துவமனைக்கே வரவில்லையாம். இப்பவும்கூட அங்கே யாரை போஸ்ட் பண்ணினாலும் வர மாட்டேன் என்கிறார்களாம்.

நான் சொன்ன இந்த கதையைக் கேட்டு என் கார் ட்ரைவர் சிரித்த சிரிப்பில் சைக்கிளில் போன ஒருவர் ‘ டிக்கெட் ‘ வாங்கிவிடப் பார்த்தார்.

துணைவேந்தர் சிரிக்கவே இல்லை. கூலாக ஒன்றைச் சொன்னார்: ‘ நீங்க சொன்ன ஆளாவது கிராமத்தைச் சேர்ந்தவர். மன்னிக்கலாம். நான் மொழிபெயர்ப்புத் துறையில் வேலைபார்த்த நேரம். என்னிடம் கையொப்பம் பெற ஒரு கோப்பு வந்தது. அதில் ‘ நான்கு கடைகளில் மேற்கோள்கள் பெறப்பட்டன’ என்று எழுதியிருந்தது.நான் அவர்களிடம் கேட்டேன்: ‘ என்னங்க இது? மேற்கோள்களை கடையில விக்கிறாங்களா?’’
அந்த அதிகாரி அமைதியாகச் சொன்னார்: ‘ இல்ல சார். கொட்டேஷன் வாங்கினோம்.  கோட்டேஷன்னா தமிழ்ல மேற்கோள்தானே?’’

3 comments:

  1. மாண்புமிகு துணைவேந்தர் அவர்களுக்கும்
    தங்களுக்கும் நல்ல நகைச் சுவை உணர்வு..!

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்...!

    எண்பதுகள் துவக்கம் என்று நினைவு...?

    தனித்தமிழ் ஆர்வலர் ஒருவரிடம்
    ஐயா வண்ணம் சாப்பிடுகிறீர்களா..வண்ணம்..!?
    என்று கேட்டதும்.. அவர் விழித்ததும்....
    (முன்பெல்லாம் எங்கள் பகுதியில்
    தம்சப்/ஃபேண்டா முதலான பானங்களை
    அதன் நிறத்தை முன்னிட்டு"கலர்" என்று அழைப்பது வழக்கம்..!)

    இன்னொரு அன்பர்..
    அண்ணனின் பட்டணத்து நண்பர்...
    கேட்போரை தலை கிறுகிறுக்க வைக்கும் .. (like a roller-coaster)
    அவரது ஆங்கிலபப் பேச்சுக்கும் (with no accent meaning American accent ) ;-/
    பாடம் பண்ணின ஆங்கில உரைவீச்சுக்கும்.. படாந்தியில் பேர் போனவர்..
    (Othello's The Evil Iago /Nietzsche's whither is God.. madman monologues....)

    அவரிடம் ஆங்கிலம் பேச வேண்டும் என்கிற ஆசையில்
    அடியேன் "would you like a young water with soft nut..?
    என்று கேட்டதும்.. அவர் மண்டை காய்வதைக் கண்ட
    எனது அண்ணன் மு றை த் த து ம்....

    மிகவும் நன்றிகள்..!

    அன்புடன்.../ பூபதி

    ps: BTW.. Tender coconut is known as "Ilaneer" in Tamil. :o|
    _______________________________________

    ReplyDelete
  2. இது பழைய ரெயில்வே ஜோக் ஒன்றை ஞாபகப் படுத்துகிறது.

    அந்தக் காலத்தில் ரெயிலே ட்ராக்கில் காளை மாடு விழுந்து ட்ரெயின் தாமதம்.

    ஸ்டேஷன் மாஸ்டர் தந்தியடித்தார், ஏன் தாமதம் என்று.

    Cow-Husband crossed the line. So time delay.
    மோகனரங்கன் ஸ்ரீரங்கம்

    ReplyDelete
  3. ஓம்
    பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்ற பொறியாளர் ஒருவர் தன் மூத்த நண்பர் ஒருவர் மருத்துவ மனையில் இருப்பதை அறிந்து அவரைப் பார்க்கச்சென்றார்.
    பொறியாளர் வந்த நேரத்தில் நண்பர் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில்திரும்புவதாக இருந்தார். மருத்துவரிடம் பிரியாவிடை பெறும் போது மருத்துவர் ஆங்கிலத்தில் கூறினார்.
    ”யூ ஆர் கோயிங் டு டை” நண்பர் மிரள மிரள விழித்தார். சிகிச்சை முடிந்து திரும்பும் போது இப்படி ஓர் அவச்சொல்லை மருத்துவர் கூறுகிறாரே என்று நொந்தார். அப்போது பொறியாளர் சொன்னார், ’இன்று நீங்கள் வீடு திரும்புகிறீர்கள்’ என்று தான் அவர் கூறுகிறார். ’டு டை என்பது’ நாம் ’டுடே’ என்று உச்சரிப்பதையே அவரது வழக்கப்படி சொல்கிறார். என்று விளக்கினார்

    ReplyDelete