குண்டு பல்புகளுக்குத் தடை : எனது கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது
திரு. து. ரவிக்குமார்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய மின் பற்றாக்குறை நிலவரத்தை சமாளிப்பதற்காக, இடைக்காலத்திலே கொண்டு வரப்பட்ட அந்த மின் கட்டண உயர்வை, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் இரத்து செய்யவேண்டுமென்று கோரிக்கை விடுத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு, அந்தக் கட்டண உயர்வை இரத்து செய்த, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் முதலிலே என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைக்கு மின் கட்டண உயர்வு இரத்தானதற்குப் பிறகு, இப்போது மின் பற்றாக்குறையைப் பற்றி தொடர்ந்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த மின் பற்றாக்குறை பிரச்சனையை சமாளிப்பதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் பல ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நாம் இன்றைக்கு கொண்டு வந்த புதிய மின் திட்டங்கள், உடனடியாக நிறைவேற்றப்படாமல் இடையூறு ஏற்பட்டதற்கு, அங்கே நிலங்களை கையகப்படுத்துவதற்கு நேர்ந்த பிரச்சனைகளும், எதிர்ப்புகளும்தான் காரணம். இத்தகைய பிரச்சனைகள், குறிப்பாக கடலூர் மாவட்டத்திலே, கடலூர் பவர் புராஜக்ட், அதுபோல நெய்வேலி நிலக்கரி நிறுவனம் விரிவாக்கத் திட்டம் ஆகியவற்றிற்கு ஏற்பட்டபோது அங்கே பொதுமக்களின் பிரதிநிதிகளை அழைத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கூட்டங்களும் நடத்தப்பட்டிருக்கிறது.
இப்படியான நிலம் கையகப்படுத்துகிற பிரச்சனை வரும்போது மக்கள் அதிக விலை கோருகின்ற நேரத்திலே நம்முடைய அரசாங்கம் இன்றைக்கு இந்தியாவிலேயே மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கின்ற 2007 ஆம் ஆண்டுக்கான R & R Policy என்று சொல்லப்படுகிற Re-settlement and Rehabilitation Policy ஐ இன்றைக்கு நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு அதை அறிவித்திருக்கிறது. ஆனால் அது மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் போதுமானது அல்ல. இன்றைக்கு ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற சிறு, சிறு மாநிலங்கள் எல்லாம் மாநிலங்களுக்கென்று தனியே R & R Policy ஐ உருவாக்கி இருக்கின்றார்கள். அப்படி அந்தப் பாலிசியை உருவாக்கிய காரணத்தால் இப்படி நிலம் கையகப்படுத்துகிற பிரச்சனை வருகின்றபோது கூடுதலாக தொகையை வழங்கி அந்த நிலங்களைக் கையகப்படுத்துகின்ற வாய்ப்பு அங்கே ஏற்பட்டிருக்கிறது.
அதுபோல தமிழகத்திலும் நம்முடைய மாநிலத்திற்கென்று Re-settlement and Rehabilitation Policy உருவாக்கப்பட வேண்டும். அப்படி உருவாக்கப்பட்டால்தான் இத்தகைய நிலம் கையகப்படுத்துகிற பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
அடுத்ததாக, நம்முடைய மின் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு புதிதாக மின் உற்பத்தியை எப்படியெல்லாம் செய்யலாம் என்று யோசிக்கின்ற அதே நேரத்திலே ஏற்கெனவே நம்முடைய பயன்பாட்டை எந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ளலாம் அல்லது கட்டுப்படுத்தலாம். வீணாக செலவழிகிற மின்சாரத்தை எப்படி மிச்சப்படுத்தலாம் என்று யோசிப்பதும் மிக முக்கியமானது. சில மாதங்களுக்கு முன்னாலே உத்தரப்பிரதேச மாநிலத்திலே எடுக்கப்பட்டிருக்கிற நடவடிக்கையை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கடந்த ஜூலை மாதத்திலே உத்தரப்பிரதேச மாநிலம் ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறது. அரசாங்க அலுவலகங்கள், அரசு சார்பான அலுவலகங்கள் எல்லாவற்றிலும் பல்புகளைப் பயன்படுத்தக் கூடாது C.F.L. விளக்குகள் என்று சொல்லப்படுகிற Compact Fluoreacent Lamp - அவற்றைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல்புகளை முற்றாகத் தடை செய்திருக்கிறார்கள். அப்படிச் செய்ததன்மூலம் நாள் ஒன்றுக்கு 100 மெகாவாட் மின்சாரத்தை அந்த மாநிலத்திலே மிச்சப்படுத்துகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த முறையை வீடுகளிலும் பின்பற்றினால் நாள் ஒன்னுக்கு 800 மெகாவாட் மின்சாரம் அங்கே மிச்சப்படுத்தப்படும் என்று திட்டமிட்டு அதற்கான செயல்பாட்டிலே அவர்கள் இறங்கியிருக்கின்றார்கள். புதிதாக மின்னிணைப்புகள் பெற வேண்டுமென்று சொன்னால் அந்த வீடுகளிலே பல்புகளுக்குப் பதிலாக C.F.L. Lamp மட்டும்தான் பயன்படுத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்தால்தான் அங்கே புதிய மின்னிணைப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படி ஒரு அறிவிப்பை நம்முடைய மாநில அரசும் செய்வதற்கு முன்வர வேண்டும். ஏற்கெனவே நம்முடைய மின்சாரத் துறை சார்பாக C.F.L விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தாலும் அது Optional ஆகத்தான் இருக்கிறது. அது நுகர்வோர்களுடைய விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது. அது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அதிலும் குறிப்பாக மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர்அவர்கள் இதிலே முன்முயற்சி எடுத்து உள்ளாட்சித் துறை சார்பாக செய்யப்படுகின்ற அனைத்துப் பணிகளுக்கும் குறிப்பாக பஞ்சாயத்துக்களிலே மின் விளக்குகள் பொருத்துகின்ற பணிகள் உட்பட அனைத்துப் பணிகளுக்கும் இந்த C.F.L. விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் நாம் இன்றைக்கு இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே 60 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கி இருக்கின்றோம். மேலும் 40 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு இப்பொழுது நாம் அனுமதியளித்திருக்கின்றோம். இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும்போது அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பெறுகிறவர்கள் வீடுகளிலே சி.தி.லி. விளக்குகள் இருக்க வேண்டும் என்பதையும் ஒரு நிபந்தனையாக மாற்றினால் நிச்சயமாக தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற கூடுதல் மின் செலவை நாம் இந்த சி.தி.லி. விளக்குகளைப் பயன்படுத்துவதன்மூலம் ஈடுகட்ட முடியும்.
அதுமட்டுமல்லாமல் இன்றைக்குத் தொழிற்சாலைகளிலே பயன்படுத்துவதற்கு ஜெனரேட்டர்களை நாம் அனுமதித்திருக்கிறோம். ஜெனரேட்டர்களுக்கு மானியமும் நம்முடைய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இன்றைக்கு சர்வதேச சந்தையிலே கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறைந்திருக்கிறது. ஒரு பேரல் 57 டாலர் என்கிற அளவுக்கு விலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு நாம் இந்த ஜெனரேட்டர்களுக்கு வழங்குகின்ற டீசலுக்கு கொடுக்கின்ற அந்த டீசல் மொத்தத்திற்கும் மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை நாம் முன்வைத்து மத்திய அரசிடமிருந்து அந்த டீசலுக்கான வரி விலக்கைப் பெற வேண்டும். அப்படிச் செய்தோமேயானால் நம்முடைய மாநிலத்திற்கான நிதி இழப்பையும் ஈடுகட்ட முடியும்.
அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு நமக்கு மத்திய மின் பகிர்மானத்திலிருந்து வரவேண்டிய மின்சாரம், அதிலே குறைவு ஏற்பட்டதனால்தான் இத்தகைய தடையை நாம் இங்கே சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இதனிடையே ஒரு செய்தி எனக்கு மின்னஞ்சலிலே வந்தது. அதிலே நமது மாநிலத்தைச் சேர்ந்த கார்வேந்தன் என்கிற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. அவர்கள் பிரதிநிதித்துவம் செய்து அவர் கோரிக்கை விடுத்து இன்றைக்கு 600 மெகாவாட் அளவுக்கு மின்சாரம்...மத்திய அரசு வழங்குவதற்கு முன் வந்திருப்பதாக ஒரு செய்தி வந்து இருக்கிறது. அது உண்மையா என்பதையும் நான் உங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இத்தகைய நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாகத் தமிழகம் திகழும் என்ற ஒரு கருத்தை மட்டும் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி சொல்லி அமைகிறேன், வணக்கம்.
சட்டமன்றத்தில் இத்தகைய பயனுள்ள உரைகள் நடைபெறுவதும் விளைவுகள் ஏற்படுவதும் மகிழ்ச்சி அழிக்கிறது.
ReplyDeleteDear Ravi,
ReplyDeleteVery Happy to hear this. I could understand our state's growth only when I am staying a state like UP (Noida).
Hats Off !