Wednesday, October 27, 2010

தி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் - ரவிக்குமார்







      தமிழக தலித் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்ந்த தி.பெ.கமலநாதன் மறைந்து விட்டார். 1923ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் நாள் ஏ.பி.பெரியசாமி புலவருக்கும், கனகபூஷணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த கமலநாதன் தனது எண்பத்து நான்காவது பிறந்த நாளில் (04.11.2007) சென்னையில் காலமானார். அவருக்கு டாக்டர் தவமணி (74) என்ற மனைவியும், வித்யா ராஜேந்திரன் (39), டாக்டர். சுமித்ரா முருகன் (33) என்ற இரு மகள்களும் உள்ளனர்.
      ’வரலாற்று நூல்களைக் கையில் வைத்திருக்கும்போது கடந்த காலத்தையே நாம் கைக்குள் வைத்திருப்பதுபோன்ற மாயையில் நாம் இருக்கிறோம்.ஆனால் வரலாறோ நமது விரல்களுக்கிடையே நழுவிக்கொண்டிருக்கிறது அல்லது நமக்கு எட்டாத இடத்தில் இருக்கிறது’ என்றார் ரோபர்ட் டார்ன்டன் என்ற வரலாற்றறிஞர்.ஆனால் அதை இன்னும் நமது வரலாற்றாளர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.நமது ‘சிந்தனையாளர்களோ‘  தலித் மக்களுக்கென ஒரு வரலாறு இருக்கிறது என்பதையே ஏற்க மறுக்கிறார்கள்.அவர்களுக்கு கமலநாதன் என்று ஒருத்தர் இருந்ததோ, இறந்ததோ பொருட்படுத்தத் தக்கதாக இருக்காது.
கமலநாதனின் தந்தையரான ஏ.பி.பெரியசாமி புலவர் மிகவும் புகழ்பெற்று விளங்கிய தலைவராவார். அயோத்திதாசப் பண்டிதரோடு (1845&1914) இணைந்து தமிழ் பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அவர். கரந்தை தமிழ்ச்சங்கத்தில் புலவராக அங்கீகரிக்கப்பட்ட அவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். தமிழ் இலக்கியத்தில் தனக்கிருந்த ஆழமான அறிவைப் பயன்படுத்தி ராமாயணம், மகாபாரதம் முதலான புராணங்களின் பொய்மைகளை அம்பலப்படுத்தினார்.
1907ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கானவர்களோடு பௌத்தத்தைத் தழுவிய பெரியசாமிப்புலவர் 18.5.1909ல் திருப்பத்தூர் சப்&கலெக்டர் அலுவலகத்துக்கு அருகில் ‘‘யதார்த்த பிராமணர் யார்?’’ என்ற தலைப்பில் பௌத்த மாநாடு ஒன்றை நடத்தினார். அதற்கு சுவாமி விசுதா பிக்கு என்பவர் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து கோலார் தங்கவயல், சென்னையில் புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, பெங்களூர் எனப் பல்வேறு இடங்களில் சுமார் இருபத்திரண்டு பௌத்த மாநாடுகள் பெரியசாமிப் புலவரால் நடத்தப்பட்டன. 1922ல் திருப்பத்தூரில் அவரால் கட்டப்பட்ட பௌத்த விகாரை இப்போது சிதிலமடைந்து கிடக்கிறது. அயோத்திதாசப் பண்டிதர் துவக்கி நடத்திய ‘தமிழன்’ வார இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வந்தவர் பெரியசாமிப் புலவர்.
அயோத்திதாசரின் மறைவுக்குப்பிறகு பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பிரச்சார நடவடிக்கைகளில் பங்களித்து வந்தார். கமலநாதனுக்கு பதினாறு வயது ஆனபோது பெரியசாமிப்புலவர் காலமானர் (1939). பொதுவாழ்விலேயே மூழ்கிக் கிடந்த புலவரால் குடும்பத்துக்கான பாதுகாப்புகளை செய்துவைக்க முடியவில்லை. கமலநாதன் தனது படிப்பைத் தொடர மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. கமலநாதனின் அம்மா கனகபூஷணி அம்மையார் தின்பண்டங்களைத் தயாரித்துதர அதைச் சிறுவனாக இருந்த கமலநாதன் கடைவீதியில் சென்று விற்று வருவார். அதுபோல துணிகளை மொத்தமாக வாங்கி வீடு வீடாகச் சென்று கமலநாதன் விற்றிருக்கிறார். இப்படி வந்த வருமானத்தைக் கொண்டு தனது படிப்புக்கான செலவுகளை அவர் சமாளித்துக்கொண்டார். மிகுந்த மனஉறுதியோடு எம்.ஏ. வரை படித்தார்.அவரது  சகோதரி மணிமேகலை அம்மையார் தான் வேலைக்குச் சென்று தனது சகோதரனின் படிப்புக்கு உதவியாக இருந்துள்ளார்.
காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த கமலநாதன் 1983ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதால் பதக்கங்கள் பல அவருக்குக் கிடைத்தன. ஆனால் பதவி உயர்வு கிடைக்கவில்லை.தமிழ்நாட்டில் சப்&இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்து இன்ஸ்பெக்டராக ஓய்வு பெற்றவர் அனேகமாக அவர் மட்டும்தான் இருக்கும்.
கமலநாதனின் சிறப்பு அவர் பெரியசாமிப் புலவரின் மகனாகப் பிறந்ததிலோ, காவல் துறையில் வாங்கிய பதக்கங்களிலோ இல்லை. மாறாக, தலித் வரலாற்றை மீட்பதற்கு அவர் செய்த பங்களிப்பில்தான் அவரது முக்கியத்துவம் இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் தமிழ் நாட்டில் நடந்த தலித் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை சேகரித்துப் பாதுகாத்தவர் கமலநாதன். அவரது தந்தை ஏ.பி.பெரியசாமிப் புலவரால் சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளும், நூல்களும் அதில் அடங்கும். துண்டறிக்கைகள், பாராட்டு மடல்கள், திருமண அழைப்பிதழ்கள், மாநாட்டு உரைகள், மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இலக்கிய ஆக்கங்கள் என அவரால் சேரித்து பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் அந்த காலகட்டத்தின் தலித் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன. அயோத்திதாசப் பண்டிதர் நடத்திய தமிழன் இதழின் பிரதிகளும் கூட அவரால் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
தலித்துகள் எப்போதும் படிப்பறிவில்லாத அடிமைகளாகவே இருந்தனர். அவர்களை நாங்கள்தான் மனிதர்களாக்கினோம் என உரிமை கொண்டாடுவதில் அரசியல்கட்சிகள் போட்டி போட்டுக் கொள்வதைப் பார்க்கிறோம். இதுவே உண்மையாக பொதுப் புத்தியில் பதிந்து கிடக்கிறது. அதை மாற்றுவதற்கான தகவல்களைத் திரட்டித் தந்ததில் முக்கியமான பங்கு கமலநாதனுக்கு உண்டு. அவர் சேகரித்த ஆவணங்களில் பலவற்றை அவர் சில ஆண்டுகளுக்குமுன் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்குத் தந்து விட்டார்.
கமலநாதன் அரிய ஆவணங்களை தேடி சேகரித்த ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல. அவற்றின் அரசியல் மதிப்பை உணர்ந்தவரும்கூட. 1916ல் பெரியசாமிப் புலவரால் திருப்பத்தூரில் துவக்கப்பட்ட தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தைப் புனரமைத்து அதன் சார்பில் சில வரலாற்று ஆவணங்களை அவர் மறுபதிப்பு செய்தார். கோபால் செட்டியார் எழுதிய ‘ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம்’ அதன் முதல் வெளியீடாக வந்தது. 1920ல் வெளியான அந்த நூல் இக்காலம் ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என குறிக்கப்படுகிறவர்கள் பூர்வத்தில் பௌத்தர்களாய் இருந்தவர்களே என வாதிடுகிறது. ‘‘ஆலசிய மகாத்மியம் என்கிற பூர்வீக நூலில் 69ஆவது அத்தியாயத்தில் தங்கள் மதநம்பிக்கைக்காக பௌத்தர்களும், சமணர்களும் எப்படி தலை வெட்டுண்டார்களென்றும், சிலருடைய தலைகள் எப்படி எண்ணெய் செக்கில் வைத்து ஆட்டப்பட்டதென்றும், எப்படி கழுவேற்றப்பட்டார்களென்றும், அப்பேர்ப்பட்டவர்கள் திரேகங்களை குள்ளநரி, நாய், பட்சிகளுக்கு இரையாக விடப்பட்டதென்றும் பரக்கக் காணலாம்...’’ என விவரிக்கும் அந்த நூல் ‘‘இம்மாதிரியெல்லாம் சமணர், பெத்தர்களை நசுக்கியது பிராமணர் என்பதற்கு யாதொரு சந்தேகமுமில்லை’’ என்று கூறுகிறது.
கமலநாதன் அடுத்ததாக வெளியிட்டது பதினெட்டு பக்கங்கள் கொண்ட ஒரு சிறு நூலாகும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூன்று வரலாற்று ஆவணங்கள் அதில் தொகுக்கப்பட்டிருந்தன. 'ஷிநீலீமீபீuறீமீபீ சிணீstமீs stக்ஷீuரீரீறீமீ யீஷீக்ஷீ மீனீணீஸீநீவீஜீணீtவீஷீஸீ வீஸீ sஷீutலீ மிஸீபீவீணீ' என்ற அந்த நூலில், சென்னையிலிருந்த பெரிய பறைச்சேரியின் (தற்போதைய ஜார்ஜ் டவுன்) பிரமுகர்களும், மற்றும் அந்த சமூகத்தின் தலைவர்களுமாக நாற்பத்து நான்குபேர் கையெழுத்திட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் 1810ஆம் ஆண்டில் அளித்த கோரிக்கை மனுவும்; 1891ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி, அயோத்திதாசரின் முன்முயற்சியில் ஊட்டியில் கூட்டப்பட்ட ‘திராவிட மகாஜன சபை’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், திவான் பகதூர் சீனிவாச ராகவ அய்யங்காருக்கு அயோத்தி தாசப் பண்டிதர் எழுதிய ‘திறந்த மடலின்’ பிரதியும் தொகுக்கப்பட்டிருந்தன.
‘‘பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமது கடந்த கால வரலாற்றை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்’’ என்ற விருப்பத்தோடு இந்தப் பணியை செய்வதாக அந்த சிறுநூலின் முன்னுரையில் கமலநாதன் குறிப்பிட்டிருந்தார். 1810 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு விதித்த ‘‘துப்புரவு வரியிலிருந்து’’ தமக்கு விலக்களிக்கவேண்டுமென தலித்துகள் கோரிக்கை விடுத்து சமர்பித்த மனுவில், 1758ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையினர் சென்னையைத் தாக்கியபோது அன்றைய கவர்னர் ஜார்ஜ் பிகோட் என்பவரும் அவரிடம் துபாஷியாக இருந்த முத்துக்கிருஷ்ண முதலியார் என்பவரும் பெரிய பறைச்சேரிக்குச் சென்று உதவி கேட்டதையும், அதைத் தொடர்ந்து தலித்துகள் திரண்டு சென்று கோட்டையிலிருந்த இரண்டாயிரம் சிப்பாய்களுக்கு உதவியாகப் போரில் ஈடுபட்டதையும், அப்போது பலர் உயிர் இழந்ததையும் குறிப்பிட்டு அப்படி உதவி புரிந்த தம் மீது வரி விதிக்க வேண்டாமென தலித்துகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரிய பறைச்சேரி என்பது பறையர்கள் மட்டுமின்றி போர்த்துகீசியர்கள், கீழ்நிலைப் பணிகளிலிருந்த ஐரோப்பியர்கள் முதலானவர்கள் குடியிருந்த இடம் என்பதால் எல்லோருக்கும் வரிவிலக்கு அளிக்க முடியாது. சிறிய வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம் என அப்போது பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவரங்கள் அந்த மனுவோடு சேர்த்து பிரசுரிக்கப்பட்டுள்ளன.
திராவிட மகாஜன சபை மாநாட்டுத் தீர்மானங்களில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ‘பறையர்’ என்ற சொல்லை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்துவோரைத் தண்டிக்க சட்டமியற்ற வேண்டும்; சிறைகளில் இழிவான வேலைகளை அங்கு அடைக்கப்பட்டுள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த கைதிகளே செய்ய வேண்டும் எனக் குறிப்பிடுகின்ற சிறை கையேட்டின் விதி 446ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் பிரதியொன்று 21.12.1891ல் காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பப்பட்டதாகவும் அதைப் பெற்றுக்கொண்டதாக காங்கிரஸின் பொதுச் செயலாளராயிருந்த எம்.வீரராகவாச்சாரி என்பவர் பதிலெழுதியதாகவும் ஆனால் அதற்குப் பிறகு காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லையெனவும் அதுபோலவே தீர்மானங்களின் பிரதி முகமதியர் சங்கத்துக்கும் அனுப்பப்பட்டு அவர்களும்கூட அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அயோத்திதாசர் குறிப்பிட்டிருந்ததையும் கமலநாதன் இதில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
கமலநாதனின் மிகமுக்கியமான பங்களிப்பு அவர் ஆங்கிலத்தில் எழுதிய"Mr. K. Veeramani M.A.,B.L. is Refuted and the historical facts about the scheduled Caste's struggle for emancipation in South India"  என்ற நூலாகும். ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பும் பின்பும் தலித் மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது, அவர்கள் நடத்திய போராட்டங்கள், மாநாடுகள், பத்திரிகைகள் என்னென்ன என்பவற்றையெல்லாம் அதில் அவர் ஆதாரங்களோடு தொகுத்திருந்தார். 1886க்கும் 1932க்கும் இடையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தலித்துகளால் நடத்தப்பட்ட 12 பள்ளிகள், இரண்டு இரவுப் பாடசாலைகள், இரண்டு மாணவர் விடுதிகள், ஒரு நூலகம் முதலியவை குறித்த விவரங்களும்; 1891க்கும் 1935க்கும் இடையே நடத்தப்பட்ட 40 மாநாடுகள் குறித்த தகவல்களும்; 1909க்கும் 1932க்கும் இடையே நடத்தப்பட்ட 18 பௌத்த மாநாடுகள் பற்றிய செய்திகளும், 1869க்கும் 1916க்கும் இடையில் தலித்துகள் நடத்திய 11 பத்திரிகைகள் பற்றிய விவரங்களும் கமலநாதனால் அட்டவணைப்படுத்தப்பட்டு அந்நூலில் வெளியிடப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டு கோரிக்கையை முதலில் எழுப்பியவர்கள் தலித்துகள் தான் என்பதற்கு ஆதாரமாக  சட்டசபையிலும் வேலை வாய்ப்புகளிலும் தலித்துகள், சாதி இந்துக்கள், முகமதியர்கள், ஐரோப்பியர்கள், உள்நாட்டு கிறித்தவர்கள் ஆகியோருக்கு இடங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென 1909 ஆம் ஆண்டே அயோத்திதாசப் பண்டிதர் ‘தமிழன்’ இதழில் எழுதியிருந்ததையும் கமலநாதன் பதிவு செய்திருக்கிறார். 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 14 பக்கங்கள் கொண்ட அந்த நூல் தமிழக தலித்துகளின் சுயச்சார்பான வரலாற்றுக்கு அசைக்க முடியாத ஆதாரமாக விளங்குகிறது.
       ஏ.பி.பெரியசாமி புலவரும், கமலநாதனும் அரும்பாடுபட்டு காப்பாற்றிய ஆவணங்களை பாதுகாத்து வைக்க இப்போதும் கூட ‘தலித் ஆவண மையம்’ ஒன்று தமிழ்நாட்டில் இல்லை. அத்தகைய ஆவணங்களின் ‘பரிவர்த்தனை மதிப்பை’ அறிந்தவர்கள் தலித்துகள் மீது சிலகாலம் போலிப் பரிவு காட்டி அவற்றில் பலவற்றை கையகப்படுத்திக் கொண்டு விட்டார்கள். இன்னும் கூட ஏராளமானவை சேகரிக்கப்படாமல் உள்ளன. அவற்றை சேகரிக்க இப்போதாவது ஒரு கூட்டு முயற்சி அவசியம்.
தலித் மக்களின் சுயச்சார்பான வரலாற்றை தொகுக்க வேண்டும் என்று செயல்பட்ட அன்பு பொன்னோவியம், தி.பெ.கமலநாதன் முதலானவர்களால் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து பாதுகாப்பதும், அவற்றில் தேவையானவற்றை மறுபதிப்பு செய்வதும் இன்று உடனடித் தேவையாகும்..

       ’மனிதன் என்பவன் இறந்துபோகக்கூடியவன்தான்.அனைவருமே என்றோ ஒருநாள் இறந்துபோகத்தான் செய்வார்கள்.ஆனால் ஒருவர் தனது சுயமரியாதைக்காகவும் தனது மனிதத்துவத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் தனது உயிரைவிடவும்கூடத் தயங்கக்கூடாது.’என்றார் அம்பேத்கர்.தனது மரியாதை என்பது தனது சமூகத்தின் மரியாதையில்தான் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்திருந்த கமலநாதன் அந்த சமூகத்தின் சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காகத் தனது பொருளையும் உழைப்பையும் செலவிட்டார்.தலித் வரலாற்று மீட்பரான அவரும்கூட ஒரு போராளிதான்.

1 comment: