Sunday, October 24, 2010
ஒபாமாவுக்கு வாழ்த்துகள் :ரவிக்குமார் .
‘‘நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதை நான் ஆற்றிய பணிகளுக்கான அங்கீகாரமாக பார்ப்பதைவிடவும், உலக நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கத் தலைமையின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் வெளிப்பாடாகவே நான் இதை உணர்கிறேன். இந்த விருது நீதிக்காகவும், கௌரவத்துக்காகவும் பாடுபடுகிற எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்’’ - தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் ஒபாமா கூறிய வார்த்தைகள் இவை. அவருக்கு இந்தப் பரிசு கிடைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிகாலையில் அந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டபோது அவரேகூட அதை ஆச்சர்யத்தோடுதான் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
’ அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஒபாமா, உலக அரசியலில் ஒரு புதிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தச் சூழல் காரணமாக ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது... சிக்கல் மிகுந்த சர்வதேசப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும்கூட பேச்சு வார்த்தை என்பதையே வழிமுறையாகக் கொள்ளவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. அணு ஆயுதங்கள் அற்ற உலகம் என்ற அவரது தொலை நோக்கு ஆயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்திருக்கிறது. உலகம் எதிர்கொண்டுள்ள வெப்பமயமாதல் பிரச்சனையை எதிர்கொள்வதில் இப்போது அமெரிக்கா முக்கிய பங்காற்ற முன்வந்திருக்கிறது. அதற்கு அவரது முன்முயற்சியே காரணம். உலக மக்களின் கவனத்தை ஈர்த்ததிலும் அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைக் கொடுத்ததிலும் ஒபாமாவைப் போல ஒரு தலைவர் கிடைப்பது மிகவும் அரிது ’ என நோபல் கமிட்டி ஒபாமாவைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை கூறியிருக்கிறது.
ஒபாமாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை ஃபிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்கள். கூடவே அதற்கு விமர்சனமும் எழுந்திருக்கிறது. ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வெளிப்பட்ட மகிழ்ச்சி அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது வெளிப்படவில்லை என்பது உண்மைதான். அதற்குக் காரணம் இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் வெற்றிபெற்றபோது கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமாக அது பார்க்கப்பட்டது. அப்போது, புறக்கணிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அவர் கருதப்பட்டார். ஆனால், இப்போதோ அமெரிக்காவின் அதிபருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்றே மக்கள் இந்தப் பரிசை எண்ணுகிறார்கள். ஒபாமாவை நேசிப்பது வேறு, அமெரிக்காவை விரும்புவதென்பது வேறு. இரண்டையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.
அறிவியல், மருத்துவம், இலக்கியம் போன்ற துறைகளில் வழங்கப்படும் நோபல் பரிசுகளுக்கும், அமைதிக்கான நோபல் பரிசுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற துறைகளுக்கான பரிசுக்குரியவர்களை ஒரு நிபுணர்குழு தேர்ந்தெடுக்கும். ஆனால் அமைதிக்கான நோபல் பரிசை ஐந்து பேர் கொண்ட நார்வே நாட்டு கமிட்டி ஒன்றுதான் முடிவு செய்யும். இந்தக் கமிட்டியின் உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தப் பரிசை உருவாக்கிய போது யாருக்கு அது வழங்கப்பட வேண்டும் என்பது பற்றித் தனது உயிலில் ஆல்ஃப்ரட் நோபல் சில தகுதிகளை வரையறுத்து இருக்கிறார். ‘‘நாடுகளுக்கிடையே சகோதரத்துவம் வளர பாடுபடுகிறவர், ராணுவத்தை முற்றாக ஒழிக்கும் அல்லது குறைக்கும் நடவடிக்கையை எடுப்பவர், அமைதிக்கான மாநாடுகளை நடத்துகிறவர் எவரோ அவருக்கு இந்தப் பரிசு அளிக்கப்பட வேண்டும்’’ என்று அவரது உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பரிசு உருவாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் அதாவது முதல் உலகப் போர் வரையில் அது அமைதிக்கான இயக்கங்களை நடத்தியவர்களுக்கே வழங்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ராஜதந்திர ரீதியாக அமைதிக்கு பாடுபட்ட அரசியல் தலைவர்களை நோக்கி இந்தப் பரிசின் கவனம் திரும்பியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆயுதக் குறைப்பு, அமைதிக்கான பேச்சுவார்த்தை, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள், அமைதியான உலகை உருவாக்குதல் ஆகிய நான்கு தளங்களில் செயல்படுகிறவர்களுக்கே இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2004ஆம் ஆண்டில் வங்காரி மாத்தாய் என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவர் மேலே சொன்ன எந்த தளத்திலும் செயல்படுபவர் அல்ல. அவர் சுற்றுச்சூழலுக்காக பாடுபட்டு வருபவர். அவருக்கும் 2007ஆம் ஆண்டில் அல் கோருக்கும் இந்த பரிசு வழங்கப்படதன் மூலம் ‘உலக அமைதி’ என்பதற்குள் இப்போது சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களையும் நோபல் பரிசுக் கமிட்டி உள்ளடக்கி இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
1960ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க மனித உரிமை ஆர்வலர் ஆல்பர்ட் ஜான் லுட்டுலி என்பவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதுவரை பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே இந்தப் பரிசு வழங்கப்பட்டு வந்தது. பெண்களும்கூட அவ்வளவாக இந்தப் பரிசைப் பெறாத நிலைதான். ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த நிலை வெகுவாக மாறியிருக்கிறது. ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் இந்த பரிசைப் பெற்றிருக்கிறார்கள். அதுபோல பெண்களும் சமீப ஆண்டுகளில் இந்த பரிசுக்காக அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒபாமாவுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டிருப்பதை விமர்சிப்பவர்கள் ’அமைதிக்காக இவர் அப்படி என்ன சாதித்துவிட்டார்? இவ்வளவு அவசரமாக இவருக்கு இந்த பரிசை வழங்கத்தான் வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த மார்ட்டின் லூதர் கிங்கைப்போலவோ, போலந்து நாட்டில் தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுத்த லெக் வலேஸாவைப் போலவோ, மியான்மரில்
இப்போதும் சிறைப்பட்டுக் கிடக்கும் ஆங் சான் சூகியைப் போலவோ, ஆப்ரிக்காவில் நிறவெறியை எதிர்த்துப் போராடி கால் நூற்றாண்டுகாலம் சிறையில் அடைபட்டிருந்த நெல்சன் மண்டேலாவைப் போலவோ ஒபாமாவைக் கருத முடியாது என்பது உண்மைதான். அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தப் பரிசை ஒபாமாவுக்கும் தருவதா? என்ற கேள்வியில் நியாயம் இருப்பதுபோலத்தான் தோன்றும். ஆனால் நாம் மற்ற அம்சங்களையும் கணக்கில்கொள்ளவேண்டும். இந்த பரிசு போராளிகளுக்குக்கு மட்டுமே தரப்படுவதல்ல. அல்லது ஒருவரின் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படுவதுமல்ல. உலக அமைதிக்காக ஒருவர் செய்துள்ள காரியங்களை வைத்தே இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. அப்படிப்பார்த்தால் ஒபாமாவுக்குக் கொடுத்தது சரி என்றே சொல்லத் தோன்றும். யாசர் அராபத்துக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டபோதும்கூட அதை விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள்..
ஒபாமாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு தரப்பட்டுள்ள அங்கீகாரம் என்று கருதுவதை விடவும் இதற்குமுன் அமெரிக்காவில் இருந்த ஜார்ஜ் புஷ் ஆட்சியின் மீதான கண்டனம் என்று சொல்லுவதே பொருத்தமாக இருக்கும். ஒபாமாவுக்கு நோபல் கிடைத்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஃபிடல் காஸ்ட்ரோகூட அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். இதுவரையிலுமான அமெரிக்க ஆட்சி பற்றிய கண்டனமாகவே இதைப் பார்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
உலக அமைதிக்காக ஒபாமா இதுவரை செய்ததைவிடவும் இனிமேல் செய்ய வேண்டிய கடமைகளே அதிகமாக இருக்கின்றன. இப்படிச் சொல்வதாலேயே அவர் உருப்படியாக இதுவரை எதையும் செய்துவிடவில்லை என்பதுபோல் நாம் அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம்கூட ஆகாத நிலையிலும், ஒபாமா குறிப்பிடத்தக்க பல காரியங்களைச் செய்திருக்கிறார். ஈரானில் அணுஆயுதப் பிரச்சனை தொடர்பாக கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்ததைவிடவும், இப்போது சாதகமான பல அசைவுகள் தென்படுகின்றன என்றால் அதற்கு ஒபாமாவே காரணம். அதுமட்டுமல்லாமல் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு அண்மைக் காலமாக ஒபாமா எடுத்துவரும் நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
க்யூபாவில் இருக்கும் குவாண்டநாமோ சிறைச்சாலையை மூடுவதற்கும், அங்கு அடைக்கப்பட்டிருப்பவர்களை நியாயமான நீதி விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் அவர் எடுத்துவரும் நடவடிக்கை எல்லோருமே அறிந்ததுதான். ஈராக்கிலிருந்து துருப்புகளை வாபஸ் பெறுவது, ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் நீண்ட கால யுத்தத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வைப்பது போன்ற விஷயங்கள் அவர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியவையாக இருக்கின்றன. அது மட்டுமின்றி இலங்கையில் வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதோடு இலங்கை அரசு மீது போர்க்காலக் குற்றங்களுக்கான விசாரணை நடத்தவும் ஒபாமா முயற்சி மேற்கொள்ளவேண்டும். ‘அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டருக்குப் பிறகு அரசாங்கத்தின் பொறுப்பை பற்றியும், மனித உரிமைகளைப் பற்றியும் பேசக்கூடிய ஒரு அதிபராக வந்திருப்பவர் ஒபாமா’ என்று அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டியிருப்பது மிகையானது அல்ல.
அமெரிக்கர்கள் எதற்காக ஒபாமாவை அதிபராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். நீதியும், சமத்துவமும் கொண்ட ஒரு அரசாங்கத்தை அவர் தலைமையேற்று வழி நடத்திச் செல்வார் என்ற நம்பிக்கையோடேயே அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு இருந்த அந்த நம்பிக்கை இன்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் உருவாகியிருக்கிறது. உலக அமைதி என்பது அமெரிக்காவின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியப்படாது. எனவே, அந்த அமைதியை நிலைநாட்ட ஒபாமா மேலும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதை நினைவுபடுத்துவதற்காகவே இந்தப் பரிசு ஒபாமாவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது போலும். உலகின் எதிர்பார்ப்பை அவர் உணர்ந்துகொள்ள முடியாதவர் அல்ல. ஒபாமாவுக்கு வாழ்த்துகள்.
நன்றி :ஜூனியர் விகடன் Oct 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment