Saturday, October 23, 2010

ஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்






துயர நதியில் பாய்ந்த மனமொன்று குழந்தையின் களங்கமற்ற ஒரு சிரிப்பை தெப்பமாக்கிக்கொண்டு கரை சேர்வதுபோல நல்ல படைப்பு நம்மைக் காப்பாற்றுகிறது. வாழ்வைப் புரிந்துகொள்ள வைக்கும் தத்துவத்துக்கும் வாழ்வின் கணந்தோறும் நம்மைப் பற்றியெரியச் செய்யும் இலக்கியத்துக்கும் இடையே பரந்துகிடக்கும் சமவெளியைப்பற்றி நமக்கு நிறைய சொல்லப்பட்டதுண்டு.  ஆனால் அதுவொரு கற்பித வெளிதான். ஆற்றல் மிக்க படைப்பு இலக்கியத்துக்கும் தத்துவத்துக்குமான இடைவெளியை அழித்துவிடும், வாழ்வின் நொய்ந்த தருணம் ஒன்றைப் பேசும்போதும்கூட அதன் உள் ரகசியங்களை நமக்குப் பரிச்சயப்படுத்தி வைக்கும். அத்தகைய படைப்புகளை உருவாக்கும் ஆளுமைகள் எல்லா மொழிகளிலுமே குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள்.அவர்களால் மதிப்புபெறும் மொழி அவர்களை எந்தவொரு அடையாளத்துக்குள்ளும் அடைப்பதற்கு ஒப்புவதில்லை. தமிழ் இலக்கியப் பரப்பில் அத்தகைய படைப்பாளிகள் மிகவும் அரிதாகவே தென்படுகிறார்கள்.  

நல்ல படைப்பு என்பது எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்தை நோக்கி எரிகல்லாய்ப் பாய்கிறது.  அதைப் பார்ப்பவர்கள் தர்க்கத்தை மறந்து விடுகிறார்கள். தர்க்கம் மறந்த மனம்தான் இலக்கியத்தின் வாசஸ்தலம். இக்கதைகளை வாஞ்சையோடு உள்வாங்கிக்கொள்ள அத்தகைய மனநிலை வேண்டும். இந்தப் படைப்புகளை வாசிக்கும்போது, சமூக நிர்ப்பந்தங்களுக்குப் பயந்து நம் மனம் அணிந்துகொண்டிருக்கும் உடைகள் ஒவ்வொன்றாய்க் கரிந்து சாம்பலாவதை நாம் நமது நாசியில் உணர்கிறோம்.கலாச்சாரத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் நம்மைத் தீய்த்து கருக்குகிறது அந்த நெருப்பு. அந்த ஜுவாலையிலிருந்து மீண்டும் புதிதாய் நாம் பிறக்கிறோம்.

படைப்பு என்பது பாய்ந்து கொண்டிருக்கும் நதியைப் போன்று எப்போதும் நகர்ந்து கொண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது.  அது ஒருபோதும் முழுமை பெறுவதில்லை.  சூழலின் நிர்ப்பந்தத்தால் வரையறுக்கப்பட்ட வெளிக்குள் நிறுத்தப்படும் படைப்பை படைப்பாளி இன்னொரு இடத்திலிருந்து தொடர்ந்து எழுதிச் செல்கிறார். ஒரு பிரதிக்குள் சந்தித்த மனிதர்கள் பிறிதொரு பிரதியில் வேறு பெயர்களோடு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப் புழங்கும் பாத்திரங்களுள் நாமும் நம்மைக் கண்டுபிடிக்கிறோம். இப்படியாக, இப்பட்டைப்புகள் யாவும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பது மட்டுமின்றி இவற்றுள் இருக்கும் மனிதர்கள் பிரதிகளுக்கு அப்பாலும் இயங்குவதைக் காணமுடிகிறது.

புறத்தை நிராகரித்து எழுகிறது படைப்பு. அதற்குள் உருவாக்கப்படும் வெளி என்பது வெளியற்ற வெளி ஆகும்.  அது யதார்த்த வெளியும் அல்ல,  கற்பித வெளியும் அல்ல.  ஒரு கண்ணாடிக்குள் பிரதிபலிக்கப்படும் பிம்பத்தினுள் தெரியும் இடத்தைப் போல இடமற்ற இடமாக இருக்கிறது அது.  கண்ணாடிக்குள் நாம் இல்லாத நம்மைப் பார்க்கிறோம்.  நாமும், கண்ணாடியும் யதார்த்தம்.  ஆனால் கண்ணாடிக்குள் தெரியும் பிம்பமோ இல்லாது இருக்கிறது.  வெளியற்ற வெளிக்குள் தெரியும் பிம்பத்திலிருந்து யதார்த்தத்தில் நிற்கும் நம்மை நாம் நோக்கும்போது வெளியற்ற வெளியில் பட்டுத் தெறிக்கும் பார்வை நம்மை வடிவமைக்கிறது.  நிர்ணயிக்க முடியாத, இந்தத் தொடர்நிலை மனத்தின் இயக்கத்தோடு தொடர்பு கொண்டதாகும். அதில் உற்பவம் கொள்கிறது படைப்பு. மற்ற எதுவொன்றாலும் மாற்றீடு செய்ய முடியாத அதன் தனித்துவம் மரணத்தைப்போல நம்மை வசீகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்குள் இறங்கும் நாம் அப்படியே அதன் சுழிப்பில் உள்ளமிழ்ந்து போய்விடுகிறோம். படைப்பாளியைப் போலவே நாமும் அந்தப் படைப்பிடம் நம்மை ஒப்படைத்து விடுகிறோம்.

படைப்பாளி தான் விரும்புவதுபோல் தனது படைப்பை உருவாக்க நினைக்கிறார்.ஆனால் அவருக்குக் கிடைப்பதோ வார்த்தைகளின் கூட்டம் மட்டும்தான்.  இன்னொரு படைப்பில் தனது எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளலாம் என அவர் நினைக்க, படைப்போ அவரை உதாசீனப்படுத்திவிட்டு தன்போக்கில் தன்னை எழுதிச் செல்கிறது. ஒரு படைப்பாளி பூரணத்துவமடைந்த தன்படைப்பை ஒரு போதும் வாசிக்க முடிந்ததில்லை.  அது அவர் வாழ முடியாத இடமாக இடமற்ற ஒரு இடமாக இருக்கிறது. தனது படைப்பை தான் வாசிக்கவே முடியாத நிலைதான் படைப்பாக்கம் உருவாக்கித்தரும் வினோத விதி. தான் வாழமுடியாத, இடமற்ற இடத்தை எழுத்தின் மூலமாக எட்ட முயற்சிக்கும் படைப்பாளிக்கு மீண்டும் மீண்டும் எழுதுவது தவிர வேறு வழி கிடையாது. ஆனால் எழுதப்படும்போதே விலகிச் செல்லத் துவங்கிவிடும் படைப்பு தனிமையில் கிடக்கும்படி படைப்பாளியை சபிக்கிறது.  அவர் படைப்பைப் பின்தொடரவும் புரிந்து கொள்ளவும் முயற்சித்தபடி இருக்கிறார்.  தனது படைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியாத ஒரு துர்பாக்கிய நிலைதான் படைப்பாளியை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது. அதுவேதான் வாசகரின் கதியும்கூட.

"படைப்பாளியின் நோக்கம் அவரது வாழ்க்கையோடுதான் முடிகிறது என்று சொல்வது படைப்பாளியின் நோக்கத்தினூடாக நித்தியத்துவம் என்னும் பேரழிவை நோக்கி அவரது வாழ்க்கை பாய்ந்து செல்கிறது என்ற உண்மையை மறைத்து விடுகிறது" என்றார் மாரீஸ் ப்ளான்ஷொ. நித்தியத்துவம் என்பதும் பேரழிவாக இருக்கும்போது யார்தான் என்ன செய்யமுடியும்?

படைப்புச் செயல்பாடு படைப்பாளியின் "தான்" என்ற சுயத்துக்கும் வார்த்தைக்கும் இடையிலான பிணைப்பைத் துண்டித்துவிடும் ஒன்றாகும். அதனால் அவர் மற்றவர்கள் பேசாத ஒரு மொழியைப் பேச வேண்டியவராகிறார்.  அந்த மொழி எவரையும் நோக்கியதல்ல. அது படைப்பாளியானவர் தன்னை, தனது அடையாளத்தைத் தொடர்ந்து அழித்துக் கொள்ளும் செயல்பாட்டின் விளைபொருளாகத் தோற்றம் கொள்கிறது. அதைத்தான் தேன்மொழியும் தனது முன்குறிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.  "நிராகரிக்கப்பட முடியாத வலிகளையும் மாற்றத்தை உள்ளடக்காமல் காலத்தை விழுங்கி நிற்கும் அனுபவங்களையும் படைப்பாக்கும் முயற்சி வலிகளையே திரும்ப அளிக்கிறது"  என்ற அவரது வார்த்தைகள் படைப்பு குறித்த அவரது பிரக்ஞைக்கு சாட்சியங்களாய் நிற்கின்றன.

முதலில் கவிஞராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தேன்மொழி இந்தக் கதைகளை கவிதையால் கூரேற்றப்பட்ட சொற்களைக் கொண்டே நெய்திருக்கிறார்.இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் உரைநடை வடிவில் அச்சிடப்பட்ட கவிதைகளாகவே எனக்குத் தோன்றுகின்றன. "சிறுமி ஒருத்தி பொறுமையாய் சேகரித்துப் பின்பு அலட்சியமாய் இறைத்துவிட்டுப்போன பூக்களைப்போல என் இரவுக் கனவுகள் இறைந்து கிடந்தன"(கடல்கோள்) என்று அவர் எழுதும்போதும், "சுழலும் காற்றில் உதிர்ந்த இறகுகள் இரண்டு நடுவானில் சந்திப்பது போல்"(நாகாபரணம்) சந்தித்துக் கொண்டதாகச் சொல்லும்போதும் கவிதையின் அடர்த்தியில் மனம் குதூகலிக்கிறது.

 கோயிலைப் பற்றி இதுவரை எவரும் சிந்தித்திராத கோணத்தில் அற்புதமான சித்திரமொன்றை தேன்மொழி வரைந்திருக்கிறார். "கோயில்களை இயங்கவைக்க மனிதர்கள் வேண்டும், தெய்வங்கள் உறவாட இயங்க மனிதர்கள் வேண்டும்.  கோயிலுக்கு வராமல் மனிதர்கள் இருந்துவிடலாம்.  மனிதர்கள் இல்லாமல் தெய்வங்களால் வாழமுடிவதில்லை.  அவை பாழடைந்துவிடும். தெய்வம் சக்தியை இழந்துவிடும்.  அதன் புனிதம் கலைக்கப்படும்.  கோயில்கள் சபிக்கப்பட்ட இடங்களாகும்.  கோவிலுக்கு மனிதர்கள் தேவை.  மனிதர்கள் மறக்கும்பொழுது தெய்வங்கள் மனிதரைத் தேடி புறப்பட்டுவிடுகின்றன" என்கிறார் தேன்மொழி(நாகாபரணம்). கோயிலின் புனிதமும், தெய்வத்தின் சக்தியும் மனிதர்களால் வழங்கப்பட்டவைதான்.  எனினும் அவற்றை வழங்கிய மனிதர்களே அந்தப் புனிதத்துக்கும், சக்திக்கும் கட்டுப்படுபவர்களாக மாறிவிடுவதுதான் விந்தை.  தங்கள் காதலைப் பகிர்ந்து கொள்ளாத இருவர் வெவ்வேறு நபர்களை மணந்துகொண்டு அதன்பின் ஒரு தருணத்தில் சந்திப்பதையும், வறளாத நேசத்தைப் பகிர்வதையும், மரபுகளை மீற விரும்பினாலும் தம்மைப் பிணைத்திருக்கும் உறவுச் சங்கிலிகளைத் துண்டித்துக் கொள்ள வலுவின்றி மீண்டும் கூண்டுகளை நோக்கி நகர்வதையும் பேசுகிற (நாகாபரணம்) அந்தக் கதையின் பகைப்புலமாக கோயில் இருக்கிறது.  அச்சத்தையும், பாதுகாப்பையும் ஒருசேர வழங்கியபடி இருக்கும் கோயில் குடும்பத்தின் குறியீடாக அங்கே நிற்கிறது.குடும்பம் என்ற அமைப்பைப் பற்றி அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் கோயிலைப் பற்றிப் பேசுவதன்வழியாக அவர் குடும்பத்தைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். குடும்பம் என்ற அமைப்பும் கோயிலைப் போலத்தான். நாம் தான் அதற்கு புனிதத்தையும், சக்தியையும் கொடுக்கிறோம்.  துணிந்தால் தாண்டிவிடக்கூடிய எல்லைகள்தான் அதற்கு. எனினும் நம் கால்கள் அதற்குள்ளாகவே துவண்டு கிடக்கின்றன. சூர்ப்பனகையின் நிறைவுறாக் காமம் போல நம் ஒவ்வொருவரிடத்திலும் மண்டிக் கிடக்கின்றன கனவுகள். ஆனால் அவற்றைக் கனவுகளாகவே நாம் பூட்டிவைக்கப் பழகிக்கொண்டுவிட்டோம். கோயில் என்ற படிமம் இந்தக் கதையைத் தாண்டி வளர்ந்துகொண்டே போகிறது. அதிகாரத்தின் இயக்கத்தையும், நுணுக்கத்தையும் குடும்ப உறவுகளினூடே திறந்து காட்டிய காஃப்காவைப் போல இந்தக் கதையின்வழியே மரபின் வன்முறை முழுவதையும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார் தேன்மொழி.

"இரவு கறைகள் அற்றது.  திசைகள் அற்றது, எல்லைகள் அற்றது, களங்கம் அற்றது, இரவுக்கு பகை நிலவு. இரவை அழித்து நிலவு தன்னை ஏற்றுகிறது. அமாவாசை நாளில் இரவு நிலவைத் தோற்கடித்து தன் விஸ்வரூபத்துடன் பிரபஞ்ச ஆளுகை சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்கிறது"  என்று இரவை விவரித்துச் செல்கிறார் தேன்மொழி (நாகதாளி).இதுவரை நமக்கு சொல்லப்பட்டிருந்ததற்கு மாறாக இருக்கிறது இந்த சித்திரிப்பு. நமது மூளை புலன்களை நம்பியிருக்கிறது. விழிகள் தோற்கும்போது மூளை திகைக்கிறது. இரவு& விழிகளின் இயலாமையை உணர்த்தும் காலம். அது மூளையை ஐயம் கொள்ள வைக்கிறது. அறியாததைப் பற்றிய அச்சம் நம்முள் இரவு குறித்த எதிர்மறை எண்ணங்களை ஏற்றியிருந்தது. அதை தீமையோடு பிணைத்தே நாம் அடையாளப்படுத்தி வந்தோம். ஆனால் விஞ்ஞானத்தால் மெருகேறிய மனம் கொண்ட தேன்மொழி இரவை மிகவும் பிரியத்தோடு பார்க்கிறார்.ஒளிச்சேர்க்கையால் உயிர்க்கும் தாவரங்கள் பகலை எதிர்கொள்வதற்கான தயாரிப்புக் காலமாக இரவைப் பயன்படுத்திக்கொள்கின்றன. அவற்றுக்கு ஜீவனை வளர்ப்பதாக இருக்கிறது இரவு. ’ இரவு களங்கமற்றது’ என்று தேன்மொழி எழுதியிருந்ததைப் படித்தபோது மனிதர்கள் வாழத்தக்க ஒரு புதிய கிரகத்தைக் கண்டுபிடித்ததுபோல சந்தோஷம் கொண்டேன். இரவின் மதிப்பை உணரும்போது நம் ஆயுட்காலம் இரு மடங்காக மாறிவிடுகிறது. இரவு& சுதந்திரத்தின் குறியீடு. நாம் அங்கே கண்காணிக்கப்படுவதில்லை.நமது பாவனைகளைக் களைந்துகொள்ள இரவுதான் வாய்ப்பளிக்கிறது. விடுதலையை அவாவும் மனங்களுக்கு இரவைவிடவும் பெரிய கொடுப்பினை வேறென்ன இருக்க முடியும்? இரவு தனது களங்கத்தை ஒளித்துக்கொண்டிருப்பதில்லை. அது களங்கமற்றதாயிருக்கிறது. ஒரு பெண்ணைப்போல. அதனால்தானோ என்னவோ பெண்கள் மிகவும் பாதுகாப்பானதாய் இரவைக் கருதுகிறார்கள். உறக்கம் கொண்டுவரும் இரவை அவர்கள் எப்படி வெறுக்க முடியும்? "ஒளி & ஆபத்துக்களாலும், குற்றங்களாலும் பளபளப்பூட்டப்பட்டது"  என்று தேன்மொழி சொல்கிறார். உயிரின் ஊற்றாய் கருதப்பட்ட ஒளியின் உண்மையான சொரூபம் இதுதான். நாம் பகலின் வெளிச்சத்தில் பாவனைகளுக்குள் பதுங்குகிறோம். அது நம் சுதந்திர உணர்வை குறுக்குகிறது. சுதந்திரம் குறுகும்போது உயிர் எப்படி செழிக்க முடியும்? இதுவரை நாம் பார்த்திராத முறையில் உலகத்தைப் பார்ப்பதற்கு உதவுகிறார் தேன்மொழி. மரபால் பழக்கப்படுத்தப்பட்ட நமது மனம் அதிரும்போது அதன்மீது  நாம் கட்டிவைத்த பண்பாட்டுக் கோபுரங்கள் தரை மட்டமாகின்றன. அந்தச் சிதைவுகளினூடே சுதந்திர விருட்சங்கள் செடிகளாய் முளைத்துச் சிரிக்கின்றன.

தேன்மொழியின் விவரணைகள் கூட சாணை தீட்டப்பட்ட கத்தி போன்ற சொற்களால் எழுதப்பட்டுள்ளன.  "வீதியெங்கும் காலடித் தடங்களில் மரணத்தின் ரேகைகள் வரிவரியாய் ஓடிக்கொண்டிருந்தன.  சிலர் வந்து கொண்டிருந்தார்கள்.  சிலர் போய்க் கொண்டிருந்தார்கள்.  வருவோரும் போவோரும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். பிறன் மரணம் குறித்த செய்திகளை ஏந்தி வந்தவர்கள், தன் மரணம் குறித்த குறிப்புகளைத் தாங்கிப் போனார்கள். மரணம் அனைவரையும் உற்று கவனித்துக் கொண்டிருந்தது.  இவர்கள் அனைவரும் ஒருநாள் தன் வாசல் வரப்போகும் உறவு என்ற வாஞ்சை அதனிடம் பொங்கி வழிந்தது"(நாகதாளி) என்று விரிகிறது ஒரு காட்சி. தெரு என்ற புவியியல் வெளியும் அங்கு நடமாடும் மனிதர்களின் உணர்வு வெளியும் இழைந்து ஒரு புதிய அனுபவத்தை இங்கே நெய்கின்றன. ’யாரையும் தேடிச் செல்லாத யாராலும் தேடப்படாத’ ஆரோக்கியம் என்பவனைப் பற்றி பேசுகிறது ஒரு கதை( நாவாய் பறவை). அவனுடைய நிலையை ஒரே வரியில் மிக அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறார் தேன்மொழி ‘ பாலைவனப் புழுதிப்புயல் மணல்போல் வெறுமையாய் வாழ்வில் இடம்பெயர்ந்து கொண்டிருந்தான்’. நம்மில் பலருக்கு அனுபவப்படாத ஒரு காட்சிதான் அது. எனினும் சுழல் காற்றில் இடம்பெயர்ந்து படியும் மணலின் வெறுமை நம்மால் உணரக்கூடிய ஒன்றுதான்.

பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதன் வரலாற்றையும் அவர்கள் ’ காய்ந்த ஊற்றுபோல்’ வாழப் பழகிக் கொண்டுவிட்ட கொடுமையையும் ஒரு மரப்பாச்சியின் மொழியில் பேசிச் செல்லும் தேன்மொழி ஆயிரம் பக்கங்களில் சொல்ல முடியாததை ஐந்து பக்க சிறுகதையில் சொல்லிவிடுகிறார்( மரப்பாச்சி மொழி) .அதுபோலவே சுனாமிப் பேரழிவை ஒரு கதையில் பேசுகிறார்( தாழி) .அங்கே நாம் பார்க்கும் முதியவர், சாதத் ஹசன் மாண்டோவின் படைப்பு ஒன்றில் தனது மகளைத் தேடி அலையும் தந்தையை நினைவுபடுத்துகிறார். ஆனால் இக்கதையின் முடிவு மாண்டோவின் படைப்பைவிடவும் உக்கிரமானதாய், அதிரவைப்பதாய் இருக்கிறது. சடலங்களை உயிரற்றவையாக மட்டுமே பார்க்கும் மரத்துப்போன நமது மனங்களைக் கீறி அவற்றுக்குள்ளிருந்தும் கண்ணீரைப் பெருகச் செய்கிறது இந்தக் கதை.

கிராம வாழ்க்கையையும், அங்கே நிலத்தின் மீதான உரிமையை அடிப்படையாகக் கொண்டு உடலகள் பகிரப்படும் அதிகார சமன்பாடுகளையும் எத்தனையோ கதைகள் பேசியிருக்கின்றன. அதிலும் நமது ’முற்போக்கு எழுத்தாளர்கள்’ அதன் சூக்குமத்தை நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். புரட்சியாளனாய் மாறுவதற்கான எளிய வழி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எங்கிருந்தாவது ஒரு பண்ணையாரைக் கூட்டிவரவேண்டும். அந்தப் பண்ணையாரின் கொடுமைகளால் வாசகரின் ரத்தத்தை சூடாக்கிவிட்டால் போதும். அதற்கு சாகித்ய அகாடமி விருதுகூடக் கிடைத்துவிடும். இத் தொகுப்பில் உள்ள ’ நிலக்குடை’ என்ற கதை அந்த ரகத்தில் சேர்ந்திருக்கவேண்டியதுதான். ஆனால் அக்கதையின் நுட்பமான வர்ணனைகளும் கிளியம்மா என்ற பாத்திரத்தின் ஆளுமையும் அப்படி நேராமல் அதைக் காப்பாற்றிவிடுகின்றன. 

அமானுஷ்யத்தை எழுதிய மகத்தான கலைஞன் புதுமைப்பித்தன். அவனைப்போல் தத்துவப் பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்றபோதிலும் இத்தொகுப்பில் உள்ள ‘ பேச்சிமரம் ’ என்ற கதை புதுமைப்பித்தனின் மரபில்வைத்துப் பேசத்தக்க ஒரு கதைதான் என்பதில் சந்தேகமே இல்லை. தலை கிள்ளியெறியப்பட்ட பனைமரம் ஒன்று ஒரு மனிதனின் வாழ்க்கைத் துணையாக மாறிவிடுவதையும், அதை  அந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொள்வதையும் மிகவும் லாவகமான மொழியில் சொல்லிச் செல்கிறார் தேன்மொழி. கனவும் நனவும் குழம்பும் மொழியில் அவர் எழுதியிருக்கும் இந்தக் கதை தமிழின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாகக் கருதத்தக்கது. 

தமிழில் சிறுகதை வடிவத்தை அற்புதமாகக் கையாண்ட படைப்பாளிகள் இருக்கிறார்கள். சிறுகதைகளில் உலகத்தரம் என்பதை நாம் ஜெர்மானிய, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை வைத்து நிர்ணயித்தால் அவற்றுக்குக் கொஞ்சமும் தரம் குறையாத படைப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் முடியப்போகும் கடந்த பத்து ஆண்டுகளில் நம்மைப் பிடித்து உலுக்கும்படியான கதை எதுவும் தமிழில் எழுதப்படவில்லையென்பது மறுக்க முடியாததொரு கூற்றாகும். இப்படித்தான் முடிந்துவிடுமா இந்த தசாப்தம் என்று துயருற்றிருந்போதுதான் தேன்மொழியின் கதைகளைப் படிக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது. பெண்களின் கதைகளை மொழி பெயர்த்தும், அவர்களின் தத்துவப் பிரதிகளை வாசித்தும் அவர்களது அக உலகோடு கொஞ்சம் பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவன் நான். ஆண்மை என்பது அழிக்கப்படவேண்டிய கற்பிதம் என்பதை ஒப்புக் கொள்பவன். ஆனால் ஒரு படைப்பை அதை எழுதிய படைப்பாளியின் பாலின அடையாளத்தோடு சேர்த்தேதான் நானும்கூட பார்த்துவந்திருக்கிறேன். இந்தக் கதைகள் ஆண்கள் எண்ணியே பார்க்க முடியாத படிமங்களையும், கோணங்களையும் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான் எனினும் பெண் எழுத்தாளர்களில் ஒருவராக தேன்மொழியை வைத்துப் பேசுவது அவரது ஆளுமையைச் சிறுமைப்படுத்துகிற காரியமாகவே இருக்கும். 

 கதைசொல்லும் யுக்திகள், கதையின் மொழி, அவற்றுக்குள் ததும்பி நிற்கும் அனுபவம், இவற்றால் பேசப்படும் மனிதர்கள் எல்லாமே இது ஒரு படைப்பாளியின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பதை நம்பமுடியாமல் ஆக்குகின்றன. தமிழ்ச் சிறுகதை உலகில் நிராகரிக்கமுடியாத ஆளுமைகள் எனப் பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எந்தவொரு படைப்பாளியின் முதல் தொகுப்போடும் இணையாக வைத்துப் பேசத்தக்கதாக இருக்கிறது இந்தத் தொகுப்பு.

இந்த முன்னுரையை வாசிப்பவர்கள் மிகையான சொற்களைக் கொண்டு இது எழுதப்பட்டிருப்பதாக சிலவேளை கருதக்கூடும். ஆனால் இந்தக் கதைகளை அவர்கள் படித்து முடிக்கும்போது இந்த முன்னுரையை எழுதிய நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதையெண்ணிப் பொறாமை கொள்ளப்போவது நிச்சயம்.


(தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பான நெற்குஞ்சம் நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை )
நெற்குஞ்சம் 

- தேன்மொழி 
வெளியீடு : மணற்கேணி பதிப்பகம் 
விலை : 90/-
பிரதிகளுக்கு manarkeni@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும் 

No comments:

Post a Comment