தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தின் சட்டமன்ற வரலாற்றில் சட்ட மேலவைக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்திய அரசு சட்டம் 1935ன் படி முதன்முதலில் சட்டமேலவை உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு மேலவை என்கிற பெயரில் ஒரு அவை இருந்தபோதிலும் தற்போது பல மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள மேலவைக்கும் அதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்பிருந்த மேலவையின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். 1937ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமைக்கப்பட்ட மேலவையானது சட்டப்பேரவையைப் போல ஐந்தாண்டுக்கு ஒருமுறை கலைந்துவிடக்கூடியதாக இல்லாமல் நிலைத்திருக்கக்கூடியதாக அமைக்கப்பட்டது. மேலவையின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பதவி இழந்து, வேறு உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள் என்ற நடைமுறை அப்போதுதான் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக கொண்டு வரப்பட்ட மேலவையில் குறைந்த பட்சம் 54 உறுப்பினர்கள் இருப்பார்கள் என வரையறுக்கப்பட்டது. அந்த நடைமுறை 1952ஆம் ஆண்டு வரை நீடித்தது.
அதுவரை 54 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வந்த மேலவை 1952ஆம் ஆண்டுக்குப் பிறகு 72 உறுப்பினர்கள் என எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதனுடைய உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுவது என்ற நடைமுறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும், சட்டப்பேரவை உறுப்பினர்களால் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் வரையறுக்கப்பட்டது. பட்டதாரிகளுக்கென ஆறு பிரதிநிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகமெங்கும் உள்ள ஆசிரியர்கள் வாக்களித்து ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள பன்னிரெண்டு உறுப்பினர்களை ஆளுநர் நியமிப்பார் என தீர்மானிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மேலவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி மூலம் பதவி இழப்பார்கள் என்றும் திருத்தம் செய்யப்பட்டது.
தமிழகத்தின் முக்கியமான தலைவர்கள் பலரும் சட்டமேலவையில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மேலவையின் விதிகளின்படி அதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிற உறுப்பினர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என வரையறுக்கப்பட்டிருந்ததால் மூதறிஞர் ராஜாஜியும், பேரறிஞர் அண்ணாவும் சட்டமேலவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுதான் முதலமைச்சர்களாக பதவி வகித்தனர்.
1952ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதுபோலவே 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை அரியணையில் ஏற்றிய பேரறிஞர் அண்ணாவும் மேலவையின் உறுப்பினராக நியமினம் பெற்றே முதல்வராக பொறுப்பேற்றார். பிற்காலத்தில் முதல்வராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆரும் தொடக்கக் காலத்தில் மேலவை உறுப்பினராக இருந்தவர்தான்.
இந்தியா முழுவதும் ஒரு சில மாநிலங்கள் தவிர, பெரும்பாலான மாநிலங்களில் மேலவை என்பது நடைமுறையில் உள்ளது. பாராளுமன்றத்திலும்கூட மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மாநிலங்களவை இருப்பதை நாம் அறிவோம். அதுவும் ஒரு மேலவைதான். நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்படியான இரு அவைகள் நடைமுறையில் இருக்கின்றன. நேரடியாக உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்து அனுப்புகின்ற அவை ஒன்று. பல்வேறு தரப்பினரை பிரதிநிதித்துவம் செய்வதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்படுகிற மேலவைகள் மற்றொன்று. அமெரிக்காவில் இப்படி இரு அவைகள் இருந்தபோதிலும், அந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் நேரடியாக தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிற நிலை உள்ளது. அத்தகைய நடைமுறை உள்ள நாடுகள் மிகக்குறைவுதான்.
தமிழகத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த சட்டமேலவையானது பல்வேறு சிறப்பு வாய்ந்த விவாதங்கள் நடைபெற்ற பெருமைக்கு உரியதாகும். பேரவையில் நடைபெற்ற விவாதங்களை விடவும், மேலான தரப்பில் சட்டமேலவை விவாதங்கள் அமைந்திருந்ததை நாம் அறிய முடிகிறது. கட்சிகள் காரசாரமாக மோதிக்கொள்ளும் சட்டப்பேரவையை போலல்லாது நயதக்க நாகரீகத்தை பேணுகிற அறிவார்ந்த விவாதங்களை நடத்துகிற மன்றமாக மேலவை விளங்கியது. இதை சுட்டிக்காட்டுவதற்குத்தான் பேரவையையும், மேலவையையும் ‘கப் அண்டு சாசர்’ என்ற உதாரணத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் பயன்படுத்தினார்கள். கப்பிலே இருக்கும் தேனீர் சூடாக இருந்தால் அதை ஆற்றி குடிப்பதற்கு எப்படி சாசரைப் பயன்படுத்துகிறோமோ அப்படி சூடு பறக்கும் விவாதங்கள் நடைபெறும் பேரவையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்களை ஆற, அமர விவாதிக்கும் இடமாக மேலவை விளங்குகிறது என்ற பொருளில்தான் அவர் அப்படி கூறினார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மேலவை எந்தவித வலுவான காரணமுமின்றி எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் 1986ஆம் ஆண்டில் திடீரென கலைக்கப்பட்டது.
மேலவை கலைக்கப்பட்டதற்கான காரணத்தை அறியும்போது அதை மீண்டும் கொண்டுவர வேண்டிய அவசியத்தை நாம் உணரலாம். 1984ஆம் ஆண்டு ஈழப் பிரச்சனையை முன்வைத்து அன்று எதிர்க்கட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். அதன்பிறகு கலைஞர் அவர்கள் மேலவைக்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் மேலவை உறுப்பினராக பதவி ஏற்றார். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் மேலவையையே கலைக்கின்ற முடிவுக்கு வந்தார் என்பது அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும். அன்று சமூகத்தின் பல தரப்பினரும் வேண்டாம் என்று சொல்லியும்கூட கேட்காமல் எம்.ஜி.ஆர். அவர்கள் விடாப்பிடியாக மேலவையை கலைக்கின்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். 1986ஆம் ஆண்டு மே மாதத்தில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்துக்கு அதே ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். அப்போது மத்திய அரசோடு இணக்கமான உறவை கொண்டிருந்த காரணத்தால் மிக விரைவாக அந்த சட்டத்துக்கான ஒப்புதலை எம்.ஜி.ஆரால் பெறமுடிந்தது. 1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழக சட்டமேலவை கலைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். எடுத்த முடிவை மாற்றுவதில் உறுதியாக இருந்த தி.மு.க. 1989ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக சட்டப்பேரவையில் அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மீண்டும் சட்டமேலவையை உருவாக்க வேண்டும் என்ற அந்தத் தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டது. அப்போது இருந்த மத்திய அரசு நிலையற்றதாக இருந்த காரணத்தினால் தமிழக அரசின் தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் பெறமுடியவில்லை. 1990ஆம் ஆண்டு மே மாதத்தில் மாநிலங்களவை அதற்கான ஒப்புதலை வழங்கியது. அதன்பிறகு பாராளுமன்றத்துக்கு அந்தத் தீர்மானம் அனுப்பப்பட்டது. அதனிடையில் தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டுமென்று இங்கிருந்த எதிர்க்கட்சியினர் நெருக்குதல் கொடுத்த காரணத்தாலும், அவர்களுக்கு ஏற்ப ஆட்சியாளர்கள் அங்கே பொறுப்பேற்ற காரணத்தாலும் அந்தத் தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. சட்டமேலவையை கொண்டு வரவேண்டும் என்கிற தீர்மானத்தை ரத்து செய்து ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.
அ.தி.மு.க. ஆட்சியை இழந்து தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மேலவையை கொண்டு வருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்போது இருந்த மத்திய அமைச்சரவை இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவது என்று முடிவெடுத்தும்கூட அதில் காலதாமதம் நேர்ந்து வந்தது. தி.மு.க. ஆட்சியிலிருந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசு இதுபற்றி சாதகமான முடிவெதையும் எடுக்கவில்லை. 2001ல் தி.மு.க. ஆட்சி முடிவுற்று அ.தி.மு.க. மீண்டும் பதவிக்கு வந்த பிறகு வழக்கம்போல மேலவை தேவையில்லை என்று தீர்மானம் ஒன்றை அது சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இப்படி மாறி, மாறி தீர்மானங்கள் போடப்பட்டதில் சட்டமேலவை வராமலேயே போய்விட்டது.
தற்போது சட்டமேலவை வேண்டாமென்று கூறுகிற கட்சிகள் அதற்கு தகுதியான காரணங்கள் எதையும் சுட்டிக்காட்டவில்லை. இடதுசாரிக் கட்சிகள் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் இப்படியான மேலவைகள் இல்லை என்பதை ஒரு காரணமாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி சட்டமேலவை கலைக்கப்பட்ட கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் சட்டப்பேரவை நன்றாகத்தானே இயங்கி வருகிறது என்று அவர்கள் கேட்கிறார்கள். மேலவை உருவாக்கினால் அதனால் கூடுதல் செலவு ஏற்படுமே தவிர, வேறு எந்த பயனும் வராது என்றும் அவர் சொல்கிறார்கள். ஆனால் இந்தக் காரணங்களை நாம் ஏற்க முடியாது. சட்டப்பேரவையே இல்லை என்றால்கூட அரசாங்கத்தை நடத்தலாம்தான். இதுவும்கூட அனாவசிய செலவு என்று சொல்லி விடலாம். செலவை வைத்து ஜனநாயகத்தை மதிப்பிட முடியாது. மேலவை என்பது ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதித்துவத்தின் வெளிப்பாடு ஆகும். எனவே, அதை மறுப்பது சரியல்ல. மேலவை வேண்டாமென்று ரத்து செய்த அ.தி.மு.க.வினருக்கு சொல்வதற்கென்று எந்தக் காரணமும் இல்லை என்பதே உண்மை.
இந்தியாவெங்கும் இருக்கின்ற சட்டப்பேரவைகளிலும், பாராளுமன்றத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு உள்ளது. இப்போது அதில் கூடுதலாக மகளிருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய இடஒதுக்கீடு சட்டமேலவையிலோ, மாநிலங்களவையிலோ கிடையாது. சட்டமேலவை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 1937ஆம் ஆண்டில் 54 உறுப்பினர்களைக் கொண்டதாக அது விளங்கியது என்று பார்த்தோம். அந்த 54 உறுப்பினர்களில் 35 இடங்கள் பொது இடங்களாக வைக்கப்பட்டிருந்தன. ஏழு இடங்கள் முஸ்லீம்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஐரோப்பியர்களுக்கு ஒரு இடமும், இந்திய கிறிஸ்தவர்களுக்கு மூன்று இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. எட்டு உறுப்பினர்கள் முதல் பத்து உறுப்பினர்கள் வரை ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். 52ஆம் ஆண்டில்தான் இந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டது. தற்போது மேலவைகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்து வருகிறது. மகளிர் இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படும் இந்த நேரத்தில் மேலவைகளில் இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டியது மிகமிக அவசியமாகும்.
மேலவையைக் கொண்டுவருவதென்று முடிவெடுத்து அதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது மேலவையில் ஆதிதிராவிடர்களுக்கும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என நான் வலியுறுத்திப் பேசினேன். நேரில் முதல்வரை சந்தித்தபோதும் அதை எங்கள் கட்சி சார்பில் வலியுறுத்தினோம். முதலில் மேலவைக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கட்டும் என முதல்வர் கூறினார். இப்போது ஒப்புதல் கிடைத்து அதற்கான தேர்தலும் நடக்க இருக்கிறது. ஏதேதோ காரணங்களைச் சொல்லி மேலவையை எதிர்த்த கட்சிகள் இதைப் பற்றி மட்டும் மௌனம் சாதிப்பது ஏன் ?
No comments:
Post a Comment