Saturday, October 23, 2010

கீப் என்பதை வைத்துக்கொள்ளலாமா ?





திருமண பந்தத்துக்கு உட்படாமல், சேர்ந்து வாழும் ஆணும் பெண்ணும் பிரியும்போது, அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டுமா என்ற வழக்கை இந்திய உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது.அப்போது, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் டி.எஸ். தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டது.அதில், திருமணம் செய்துகொள்ளாமல், ஆண் ஒருவர் பெண் ஒருவருடன் உறவு வைத்திருக்கும் நிலையில், அந்த பெண்ணை '" கீப்  " என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தி நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந் நிலையில், வெள்ளிக்கிழமை அதே நீதிபதிகள் முன்பு வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக, மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் ஆஜரானார். அப்போது, வியாழக்கிழமை தீர்ப்பின்போது, திருமணமாகாமல், ஓர் ஆணுடன் உறவு வைத்திருக்கும் பெண்ணை,     வைப்பாட்டி என்று பொருள்படக்கூடிய, 'கீப்' என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியது கடும் ஆட்சேபத்துக்குரியது என்று இந்திரா ஜெய்சிங் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்தியாவின் உச்சநீதிமன்றம், 21-வது நூற்றாண்டில், பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு வார்த்தையை எப்படிப் பயன்படுத்த முடியும்? தான் ஒரு ஆணை வைத்திருப்பதாக ஒரு பெண் கூற முடியுமா என்று கேட்டார் இந்திரா ஜெய்சிங்.அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புவதாகக் கூறிய அவர், அந்த நீதிமன்றத்தின் முன் தான் ஆஜராக விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.ஆனால், தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்குத் தொடர்பாக மட்டும் பேசுமாறு கூடுதல் சொலிடர் ஜெனரலை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அறிவுறுத்தினார்.
அப்போது நீதிபதி தாகூர் குறுக்கிட்டு, 'கீப்' என்ற வார்த்தைக்குப் பதிலாக, ஆசைநாயகி என்ற பொருள்படும் கான்குபைன் என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தலாமா என்று இந்திரா ஜெய்சிங்கிடம் கேட்டார்.தனது ஆட்சேபம், வியாழக்கிழமை தீர்ப்பில் 'கீப்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு மட்டும்தான் என்று தெரிவித்த இந்திரா ஜெய்சிங் ஆசைநாயகி என்ற வார்த்தை கீப் என்பதைக்காட்டிலும் மோசமானது என்று பின்னர் தெரிவித்தார். 
பள்ளி ஆசிரியர் ஒருவர் குடும்ப நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட் செய்திருந்தார். அதை விசாரித்தபோதே உச்சநீதிமன்றம் இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டது. அந்த ஆசிரியர் தன்னைத் திருமணம் செய்துகொண்டார் எனவும் இப்போது தன்னைக் கைவிட்டுவிட்டார் எனவும் பெண் ஒருவர் குடும்ப நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அதை விசாரித்த குடும்ப நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு மாதம் ஐநூறு ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தது. தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது எனவும் எனவே தன்னால அந்த ஜீவனாம்சத் தொகையைக் கொடுக்க முடியாது என்றும் அந்த ஆசிரியர் கூறிவிட்டார். 
திருமண பந்தத்துக்கு உட்படாத ஆணும் பெண்ணும் பிரியும்போது, அவர்கள் இருவரும் குறிப்பிட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்திருந்தால்தான், அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. '" ஒரு ஆண் ஒரு பெண்ணை '"கீப் " ஆக வைத்துக்கொண்டு பாலியல் தேவைகளுக்காகவோ அல்லது வேலைக்காரியாகவோ அவரை பொருளாதார ரீதியில் பராமரித்துவந்தால் அதைத் திருமண உறவுக்கு இணையாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது " என்று நீதிபதிகள் கூறினர். 
இந்த ஆண்டுத் துவக்கத்தில் வேறொரு வழக்கில் தீர்ப்பளித்த  உச்ச நீதிமன்றம் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறொன்றுமில்லை எனக் கூறியிருந்தது. திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை உச்ச நீதிமன்றம் பரிவோடு அணுகத் தொடங்கியிருப்பது இந்திய நீதித்துறையின் மனப்பாங்கில் ஏற்பட்டுவரும் மாற்றத்தையே வெளிப்படுத்துகிறது. 
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அணுகுமுறையை விமர்சித்திருக்கும் இந்திரா ஜெய்சிங் வழக்கறிஞர்  மட்டுமின்றி புகழ்பெற்ற பெண்ணியவாதியும் ஆவார். சிரியன் கிறித்தவ பிரிவைச்  சேர்ந்த பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பை புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் அம்மா மேரி ராயின் வழக்கில் வாங்கித் தந்தவர் இவரே. குடும்ப வன்முறைச்  சட்டம் உருவாகக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.  

No comments:

Post a Comment