அமெரிக்காவுக்குப் பொருத்தமான அதிபராக ஒபாமா மாறிவிட்டார். அவர் பதவியேற்றபோது அமெரிக்காவின் ஆதிக்கப்போக்கை அவர் மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ‘மாற்றம்’ என்பதையே தேர்தல் முழக்கமாக வைத்து வெற்றி பெற்ற ஒபாமா அமெரிக்க அமைப்பையும், அதன் அணுகுமுறையையும் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதில் தவறில்லை. ஆனால், அமெரிக்காவை ஒபாமா மாற்றுவதற்குப் பதிலாக ஒபாமாவை அமெரிக்கா மாற்றிவிட்டது. தனக்கு முன்பு ஆட்சி செய்த அதிபர்களிடமிருந்து எந்தவிதத்திலும் தாம் வேறுபட்டவர் அல்ல என்பதை இப்போது ஒபாமா வெளிப்படுத்திவிட்டார். அண்மையில் அவர் வெளியிட்டிருக்கும் ‘ தேசிய பாதுகாப்புக் கொள்கை ’ அவருடைய சுயரூபம் என்ன என்பதை காட்டிவிட்டது. கிளின்டனைவிட, ஜார்ஜ் புஷ்ஷைவிட ஆபத்தான அதிபராக ஒபாமா இப்போது உருவெடுத்திருக்கின்றார். உலகம் முழுவதும் அமெரிக்க வல்லரசின் நச்சுக்கரங்களை அவர் மேலும் அதிகமாக இப்போது படரவிட்டிருக்கின்றார்.
‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற பெயரில் ஜார்ஜ் புஷ் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நாம் அறிவோம். ஒபாமா பொறுப்பேற்றதற்குப் பிறகு இத்தகைய வல்லாதிக்கக் கொள்ளைகள் கைவிடப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், அப்படி எதுவும் செய்யப்படவில்லை என்பது மட்டுமின்றி, முன்பு இருந்ததைவிட மிகவும் மூர்க்கமாக அமெரிக்க வல்லரசு இப்போது செயல்படத் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்கப் படைகள் போர் புரிந்து கொண்டிருக்கின்றன. அதை ஒபாமா மேலும் விரிவுபடுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டின் துவக்கத்தில் உலகில் அறுபது நாடுகளில் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருந்தன. அது இப்போது எழுபத்தைந்து நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸிலும், கொலம்பியாவிலும் ஏற்கனவே அமெரிக்கப் படைகள் இருக்கின்றன. இப்போது, மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலும், ஆப்ரிக்காவிலும், மத்திய ஆசிய நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் இறங்கியுள்ளன. ஏமன், சோமாலியா முதலான நாடுகளில் அமெரிக்கப் படைகளின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று வெளிப்படையாக ஜார்ஜ் புஷ் அறிவித்தார். ஒபாமாவோ அமெரிக்காவின் நடவடிக்கைகளை ரகசியமாக மாற்றி அமைத்திருக்கின்றார். இதுதான் புஷ்ஷுக்கும், ஒபாமாவுக்குமான ஒரே வித்தியாசம். ஒப்பிட்டுப் பார்த்தால் புஷ்ஷைவிட ஒபாமாவின் அணுகுமுறை ஆபத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒபாமாவின் ரகசிய அணுகுமுறை மூன்று அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. அமெரிக்கத் துருப்புகள் நிலைகொண்டுள்ள நாடுகளில் தன்னிச்சையாக இலக்குகளின் மீது தாக்குதல்களைத் தொடுப்பது, அந்த நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினருக்கு பயங்கரவாத எதிர்ப்புப் போருக்கான பயிற்சிகளை அளிப்பது, உள்நாட்டுப் படைகளோடு சேர்ந்து பயங்கரவாத இலக்குகள் என்று சொல்லப்படுபவற்றை தாக்குவது. இன்று உலகில் பல்வேறு நாடுகளிலும் இந்த மூன்று விதமான நடவடிக்கைகளிலும் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டுள்ளன. இத்தகைய ரகசியமான ராணுவ நடவடிக்கைகளுக்கு ஏராளமாக நிதி ஒதுக்கீடும் ஒபாமாவால் செய்யப்பட்டுள்ளது.
ஜார்ஜ் புஷ் காலத்தில் ஒரு நாட்டில் ரகசிய ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது அந்த நாட்டிலிருக்கும் அமெரிக்க தூதருக்குக்கூட தெரியாதபடி ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும், ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளும் வெவ்வேறாக இருந்தன. ஆனால், ஒபாமாவின் ஆட்சியிலோ அவை இரண்டும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதில் ஹிலாரி கிளின்டனின் பங்கு முக்கியமானதாகக் கூறப்படுகிறது. ரகசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான வீரர்கள் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றவர்களாக உள்ளனர். ஒரு நாட்டின் கலாச்சாரம், மொழி ஆகியவற்றில் அவர்களுக்கு விசேஷப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில நாடுகளில் அமெரிக்கத் தூதர்கள் நியமிக்கப்படுவதில்கூட இந்த ரகசிய ராணுவப் பிரிவினரின் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு அந்தப் படை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதிகாரம் வாய்ந்ததாகவும் உள்ளது. உலகமெங்கும் சுமார் பதின்மூன்றாயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இத்தகைய ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் சுமார் ஒன்பதாயிரம் பேர் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் உள்ளனர் என்றும் ‘ வாஷிங்டன் போஸ்ட்‘ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒபாமா அரசின் ரகசிய ராணுவ நடவடிக்கைகள் அவர் வெளியிட்டுள்ள தேசிய பாதுகாப்புக் கொள்கையின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் தனக்கான தேசிய பாதுகாப்புக் கொள்கை ஒன்றை அறிவிப்பது அமெரிக்காவின் வழக்கம். அப்படித்தான் ஒபாமாவும் தன்னுடைய கொள்கையை இப்போது அறிவித்துள்ளார். முந்தைய அதிபர்களிடமிருந்து தாம் எந்தவிதத்திலும் வேறுபடவில்லை என்பதைத்தான் இந்தக் கொள்கை மூலம் ஒபாமா வெளிப்படுத்திக்கொண்டுள்ளார். கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்னவாக இருந்ததோ அதைத்தான் இப்போது ஒபாமாவும் கடைப்பிடித்து வருகிறார். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்பது உலகத்தை மேலாதிக்கம் செய்வதையே நோக்கமாக கொண்டது. அதற்கு ராணுவ வலிமையைப் பயன்படுத்தலாம் என்பது அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படைகளை நிறுத்துவது மட்டுமின்றி, பூகோள எல்லைகளையும் தாண்டி இதர வெளிகளுக்கும் அமெரிக்க ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதில் ஒபாமா ஆர்வமாக இருக்கின்றார். அண்மையில் ‘ஸைபர் ஜெனரல்’ என்றதொரு புதிய பதவியை ஒபாமா உருவாக்கியிருக்கின்றார். இணைய உலகத்தை மேலாதிக்கம் செய்வதே இந்தப் பதவி உருவாக்கப்பட்டுள்ளதன் நோக்கமாகும். இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவ செலவும் ஒபாமா நிர்வாகத்தில் அதிகரித்துள்ளது. அமெரிக்க குடிமகன் வரியாகக் கட்டுகிற ஒவ்வொரு டாலரிலும் ஐம்பத்து இரண்டு சென்ட்கள் ராணுவ செலவுக்காகச் செல்கிறது.
அமெரிக்காவைத் தவிர உலகில் உருவாகிக் கொண்டிருக்கும் பிற அதிகார மையங்களையும் தனது ஆதிக்க வளையத்துக்குள் கொண்டுவரவேண்டுமென்பது ஒபாமா நிர்வாகத்தின் திட்டமாக இருக்கிறது. அப்படி உருவாகின்ற நாடுகளை அடையாளம் கண்டுள்ளது மட்டுமின்றி அந்த நாடுகளோடு நெருக்கமான உறவுகளைப் பேணுவதன் மூலம் அவற்றைத் தம்முடைய வழிக்குக் கொண்டுவருவதற்கும் ஒபாமா திட்டமிட்டுள்ளார். தற்போது உலக மக்கள் தொகையில் சுமார் நாற்பது சதவீதத்தைக் கொண்டுள்ள சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகள் உலகில் புதிய அதிகார மையங்களாக உருவாகிக் கொண்டுள்ளன. இதைச் சரியாக அடையாளம் கண்டுள்ள ஒபாமா இந்த நாடுகளை அமெரிக்காவின் செல்வாக்குக் கீழ் வைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றி பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா மற்றும் ஜி20 கூட்டமைப்பில் உள்ள செல்வாக்கு மிக்க நாடுகளையும் தன்னுடைய ஆதரவு நாடுகளாக மாற்றுவதற்கு ஒபாமாவின் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.
ஒபாமா வெளியிட்டுள்ள தேசிய பாதுகாப்புக் கொள்கை அமெரிக்க நலன்களை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பதை விளக்கியுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத் தளத்தில் பல்வேறு நாடுகளோடும் ஒன்றிணைந்து பணியாற்றுவது, அதன்மூலம் அறிவியல் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவின் தலைமையை நிறுவுவது என்பதை இந்தக் கொள்கை விவரித்துள்ளது. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் அனுகூலங்களை அமெரிக்கப் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவது, பயங்கரவாதத் தாக்குதல்கள், கொள்ளை நோய்கள், பேரழிவு ஆயுதங்கள் போன்றவற்றிலிருந்து அமெரிக்கக் குடிமக்களையும், அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் காப்பாற்றுவதற்கு தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது, விண்வெளியில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவது, அதற்கான ஆராய்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, விண்வெளியிலும் அமெரிக்காவின் தற்காப்புக்கான உரிமையை நிலைநாட்டுவது, இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்காவின் நலன்களை விரிவுபடுத்துவது என அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கொள்கை பல்வேறு விஷயங்கலைப் பேசுகிறது. உலகப் பொருளாதார கட்டமைப்பில் தடுமாற்றங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும்கூட அமெரிக்க நலனுக்கு முக்கியமானது என்று அந்தக் கொள்கை கூறுகிறது. அமெரிக்க மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும், ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அந்தக் கொள்கை வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒபாமா சர்வதேச ஒழுங்கைப்பற்றிப் பேசினார். ‘‘21ம் நூற்றாண்டு முன்வைத்துள்ள சவால்களை எந்தவொரு நாடும் இப்போது தனியாக நின்று எதிர்கொள்ள முடியாது. அதே நேரத்தில் தன்னுடைய விருப்பத்தை மற்ற நாடுகளின்மீது திணிக்கவும் முடியாது. அதனால்தான் மனித உரிமைகளை மதிக்கின்ற, அமைதியான முறையில் வளர்ச்சிப் பாதையில் செல்கின்ற சர்வதேச ஒழுங்கு ஒன்றை அமெரிக்கா வலியுறுத்துகிறது. அது எல்லோருக்குமே சமமான உரிமைகளும், பொறுப்புகளும் கொண்டதாக இருக்கும்’’ என்று ஒபாமா பேசினார். ஆனால், இப்போது அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஒபாமாவின் பேச்சுக்கு நேர் எதிரானவையாகவே இருக்கின்றன. ஒபாமாவின் தேசிய பாதுகாப்புக் கொள்கை பிற நாடுகளோடு வலிமையான உறவை வலியுறுத்துகிறது. ஆனால், அந்த உறவு அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்குமாறு அது பார்த்துக் கொண்டுள்ளது. ஆசியாவைப் பொறுத்தமட்டில் ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றோடான உறவுதான் மிகவும் அடிப்படையானது என்று குறிப்பிட்டுள்ள ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு கொள்கை இந்தப் பகுதியில் அமெரிக்க ராணுவ நிலைகளை வலுப்படுத்தவும், உள்நாட்டுப் பாதுகாப்போடு இணைந்த சர்வதேச பாதுகாப்பை வலியுறுத்தவும் அதிக கவனம் எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
21ஆம் நூற்றாண்டில் புதிதாக உருவாகி வரும் செல்வாக்கு மையங்கள் என்று சில நாடுகளை இந்தக் கொள்கை சுட்டிக்காட்டுகிறது. ஆசியாவில், சீனாவையும், இந்தியாவையும் அத்தகைய மையங்களாக இதில் குறிப்பிட்டுள்ளனர். சீனாவைப் பொறுத்தவரை அதன் ராணுவ நவீன மயமாக்கல் திட்டத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அது அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், அதன் தோழமை நாடுகளுடைய நலன்களுக்கும் எதிராக இல்லாதவாறு பார்த்துக் கொள்வதற்கு தயாரிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுக்கும், தைவானுக்கும் இடையிலான முரண்பாட்டை குறைப்பதற்கு அமெரிக்கா பாடுபடும் என்றும், சீனாவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவது குறித்து தொடர்ந்து அமெரிக்கா அக்கறை செலுத்தும் என்றும், ஆனால் அது சீன & அமெரிக்க கூட்டுறவைப் பாதித்துவிடாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பற்றி இந்தக் கொள்கையில் ஒன்பது இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். ‘‘இந்தியாவோடான அமெரிக்காவின் உறவு என்பது இரண்டு நாடுகளின் பொதுவான நலன்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. அமெரிக்காவோடான உறவை இந்தியா வலுப்படுத்தி வருவது மற்ற வளரும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. ஜி20 நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும், உலக அளவிலான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அது ஆற்றி வரும் பாத்திரத்தையும் அமெரிக்கா கவனித்து வருகிறது. தென்னாசிய பிராந்தியத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் ஸ்திரத்தன்மையையும், அமைதியையும் நிலைநாட்ட இந்தியாவோடு இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது’’ என்று இந்த தேசிய பாதுகாப்புக் கொள்கையில் கூறியுள்ளனர்.
ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அமெரிக்காவில் இருக்கும் கறுப்பினத்தவர் மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். அவர் தரப்போகும் ஆட்சி மாறுபட்டதாக இருக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர். அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டும் அந்த நம்பிக்கை வந்துவிடவில்லை. ஒபாமாவின் பின்னணியும் அவர் பேசிய பேச்சுகளும் அந்த எதிர்பார்ப்புக்குக் காரணங்களாய் அமைந்தன. ஆனால் அது தவறு என்பதை ஒபாமா சொல்லாமல் சொல்லிவிட்டார். வரலாற்றில் தனிமனிதர்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு ஆனால் தனிமனிதர்களைவிடவும் வலிமையானது அமைப்புதான். ஒபாமா விஷயத்தில் அதுதான் உறுதிப்பட்டுள்ளது.
நன்றி : ஜூனியர் விகடன்
அன்புடன் ரவிக்கு
ReplyDeleteநிறப்பிரிகை வலைப்பூவைத் தொடங்கி தினசரி கட்டுரைகள் இடுவதை வாசிக்கிறேன்
ஒபாமா பற்றிய கட்டுரைகள் ஓரிடத்தில் கிடைப்பது வாசகனுக்கு
மகிழ்ச்சி .
அ.ராமசாமி