தீபாவளிப் பண்டிகையின் வரலாறு
தீபாவளி எனும் எள் நெய் எடுத்த தீபவதி ஸ்நானம்
1. எள் நெய் ஆரம்பம்
ஆதிதேவனாகிய புத்த சுவாமியை வணங்கி சமாதியான தேவர்களாலும், சங்கஞ்சார்ந்த சமணாசிரியர்களாலும் ஞானவிசாரிணைக்காலம் நீங்களாக மற்றக்காலங்களில், விருஷக்குணாகுணங்கள், கனிவர்க்கக்குணாகுணங்கள், நெய் வர்க்கக் குணாகுணங்கள், கலைநூல் விர்த்திக் குணாகுணங்கள் முதலியவைகளையுணர்ந்து உலோகோபகாரமாகத் தங்கள் தர்மத்தை அரசர்கள் மூலமாய்ப் பரவச் செய்து வந்தார்கள். அவ்வனுபவ மாறாமல், தென்பாரதத்துள் பூர்வம் சிறப்புற்றோங்கிய பள்ளிநகர் எல்லை சங்கத்தில் வசித்திருந்த பிக்ஷுக்களால் ‘‘எள்’’ என்னாந்தானியவிதைக்கண்டு அதிலுள்ள நெய்யையெடுத்து ஔஷதத்துடன் கலந்து நோயாளியின் தேகத்துள்ளுக்கும், மேலுக்கும் பிரயோகித்து மேகம் முதலிய ரோகங்களைக்கரைத்து, அவயவங்களுக்கு நல்ல பலனையும், தேகத்தை சுத்தமாகவைப்பதையுங் கண்டுணர்ந்தார்கள்.
பதார்த்தசூண சிந்தாமணி:
நேத்திரக் கபாலரோகம் நீங்கிடும் சுரங்கள் மேகம்
காத்திர மானசேத்மம் கரைத்திடு மலத்திரட்சை
பாத்திடும் சோம ரோகம் வளரெலும் புருக்கி யீளை
சேத்த ‘நல்லெண்ண’ யாலே தேகமுங் காந்தியாமே.
2. தீபவதி ஸ்நானம்
எள்நெய்யின் சுகுணங்களை யறிந்த சமணாசிரியர்கள் அவ்வூர் குடிகட்குதவுமாறு ‘‘பள்ளியம்பதி வேந்தனாகிய * பகுவராஜ’’னுக்குத் தெரிவிக்க, அவன் குருக்களின் மொழியைச் சிரமமேற்கொண்டு எள்நெய்யை ஆராய்ந்து, தனது மந்திராலோசனையிற்பேசி, எள்ளை மிகவும் விளைவித்து நெய்யெடுத்து தன் தேசக் குடிகள் யாவரையும் வரவழைத்து; எள் நெய்யைக் கொடுத்து சிரசிற்றேய்த்து, அருகிலோடும் தீபவதியென்னு நதியில் ஸ்நானஞ் செய்யவும்; அந்நெய்யில் பலகாரஞ் செய்து சாப்பிடவும் உத்தரவளித்தான். அப்படியே குடிகளேற்று முதலில் கொஞ்சம் எள்நெய்யை யெடுத்து புத்த தன்ம சங்கமென்று மூன்று பொட்டுகள் தரையில் வைத்து நினைத்து, அவைகளை யெடுத்து உச்சியில் தடவிக்கொண்டு பின்பு மூன்று முறை எள்நெய்யை சிரசில் தேய்த்து தங்கலூரிலோடும் ‘‘தீபவதி’’ நதியில் தலைமுழுகி புதுவஸதிரமணைந்தும், பலகாரங்கள் வட்டித்து புசித்தும், யாதொரு கெடுதியும் விளையாததால் ஆநந்தங்கொண்டு எள் நெய் கண்டுபிடித்த அற்பிசி மாதம் சதுர்த்தி நாளை தீபவதி ஸ்நான நாளாகக் கொண்டாடினார்கள். அந்த எள்நெய் நினைவுமாறாமல் இந்நாண் மட்டும் கொண்டாடப்படுகிறது. இதுவே எள்நெய் கண்ட தீபவதி ஸ்நான பூர்வ சரித்திரமும் தற்காலம் நடப்பது மாகும்.
Informatic ! Thanks Ravi.
ReplyDelete