Wednesday, October 20, 2010

தேன்மொழி கவிதை : ஒரு மரணத்தை எப்படி உணர்வது





ஒரு மரணத்தை எப்படி உணர்வது
உறைய வைக்கும்  பயத்தோடா
தெவிட்டும் மகிழ்சியோடா

மரணத்திற்குக்  கோர உருவத்தைத் 
தீட்டிய கைகள் ரசனையற்றவை
மரணத்தை ஸ்நேகிக்கக்  கற்றுக்கொள்வோம் வாருங்கள்

நிச்சயமான மரணத்தை
நாம் நிச்சயமின்மைக்குள்
அடைக்க முயல்கிறோம்
ஆனால் மென்மையாக அலையும்
பூனையைப்   போல்
எப்போதும் அது நம்மைத் தொடர்கிறது

மரணத்தின் நிறம் கறுப்பு அல்ல
அதற்கு ஆயிரம் வண்ணங்கள்
திரவப் பளிங்கு  போலிருக்கும் அதில்
பிரதிபலிக்கிறது நம் உருவம்

பூக்களை உதிர்த்துச்  செல்லும்
காற்றைப் போல்
உயிர்களை உதிரச் செய்கிறது மரணம்
பூக்கள் உதிர்ந்த  பின்பு
மரங்களின் அழகு குறைந்தா  போகிறது?
பறவைகளைப் பாருங்கள்
அவை கோடை மழையில் நனைவதுபோல்
மரணத்தில் குளிக்கின்றன
ஒரு இறகைக் கூட  உதிர்ப்பதில்லை

முற்றத்தின்  மூலையில் படரும்
பட்டு ரோஜாவைப் போல
மரணத்தை வளரவிடுங்கள்
அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள வேண்டாம்
ஒரு குழந்தையை வாங்குவது  போல
ஏந்திக்  கொள்ளுங்கள்

மரணத்துக்கு அஞ்சி நாம் ஒளிந்துகொள்கிற இடம் யாவும்
சிறையாக மாறிவிடுகிறது
ஆயுளை நீட்டிக்க நாம் பருகும் அமிழ்தம்
நஞ்சாகிக் கொல்கிறது

மரணத்தை தண்டனை என்று
பழிப்பது சரியல்ல

பிறப்பே   தண்டனை
இறப்பு என்பது விடுதலை

No comments:

Post a Comment