Wednesday, October 20, 2010

ரவிக்குமார் : மேலும் சில கவிதைகள்












1. முன்பொரு காலமிருந்தது 

ஈழத்தில் அழுத கண்ணீர் 
இங்கே பெருக்கெடுத்து
தெருவெல்லாம் ஓடி
தீயை உசுப்பிவிட்ட காலம்

முன்பொரு காலமிருந்தது

துவக்கு, லோறி, சப்பாத்து, சாரம் என
நாமும் கதைத்து 
நண்பர்களைப் பார்த்து
விசரோ? எனக்கேட்டு வேடிக்கை செய்த காலம்

முன்பொரு காலமிருந்தது

குப்பியணிந்த சிறுவர்கள் 
ஒருகையில் துவக்கும்
மறுகையில் புல்லாங்குழலுமாய்
புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட காலம் 

முன்பொரு காலமிருந்தது 

‘தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை‘
முழக்கங்களின் கவர்ச்சியில் 
மூழ்கிக் கிடந்த காலம்

முன்பொரு காலமிருந்தது

கேப்றன், கேணல் 
தேசியத் தலைவர் மாவீரர்
பட்டங்களே அடையாளங்களாய்
மாறிவிட்டிருந்த காலம்

முன்பொரு காலமிருந்தது


செய்தியாளர் சந்திப்புக்கு
உலகமே திரண்டுவந்து
முண்டியடித்து நின்ற காலம்

அப்படியொரு காலமிருந்தது.......



2.

கைகளுக்குப் பதிலாக
கட்டுகளோடிருக்கும் குழந்தை
புன்னகைக்கும் விழிகளால்
நம்மைப் பார்க்கும்போது
நாம் ஏன் முகத்தைத் திருப்பிக்கொள்கிறோம்?

3.

கைகளைக் கோர்த்துக்கொண்டு
சுவர்போல நின்றோம். 
சாலையில் விரைந்தவர்களை
எதிரிகளாய் எண்ணிச் சபித்தோம்.
நீர்சவுக்காய் விளாசிய
மழையையும்மீறி முழக்கமிட்டோம்.
முகத்தில் வழிந்த தண்ணீர்பட்டு
நனைந்திருந்தது குரல்
எனினும் ஆக்ரோஷம் குறையவில்லை.
தொலைக்காட்சிக் காமிராக்கள்
படம்பிடித்துச் செல்லும்வரை
கட்டுப்பாடு காத்தோம்
அதன்பிறகு 
வீடுகளுக்கு விரைந்தோம்
செய்தியில் வரப்போகும் 
முகங்களைப் பார்ப்பதற்கு

4.
கால்களின்றிப் படுத்திருந்தவனிடம் கேட்டேன்
பதில்சொல்லவில்லை
விழிகள் இருந்த இடத்தில் 
பஞ்சு உருண்டைகளோடிருந்த 
பெண்ணிடமும் கேட்டேன்
பதில் சொல்லவில்லை
கன்னத்துச் சதை பிய்ந்து
கடைவாய்ப் பற்கள் தெரியக் கிடந்த முதியவனும்
மௌனமாகவே இருந்தான்

உங்களில் எவருக்கும் 
நாட்குறிப்பு எழுதும் பழக்கமில்லையா?
உங்களில் எவரிடமும் 
புகைப்படக் கருவி இல்லையா?
உங்களில் எவரும் கவிஞர்களில்லையா?
ஓவியம் தீட்டத் தெரிந்தவர்கள்
ஒருத்தருமே இல்லையா?
இறுதிநாளில் என்னதான் நடந்தது?

கேள்விகளுக்கு எவரும் பதில்சொல்லவில்லை
செத்தவர்களில் யாரிடமேனும் கேட்கலாமெனப்
பிணவறைக்குப் போனேன்
அங்கு கிடத்தப்பட்டிருந்தது எனதுடல்
மார்புக்கூடு பிரிக்கப்பட்டிருந்தது
இதயம் இருந்த இடத்தில் 
கிடந்ததொரு குழவிக்கல்

1 comment:

  1. Padmanabhan wrote
    "இப்போதெல்லாம் தொலைக்காட்சியிலும், நாளிதழ்களிலும் வரும் இலங்கை தமிழர்களின் துயரம் மிகுந்த முகங்கள் நம் மீது இயலாமையை சுமத்துகிறது. அதனாலேயே அதை காணும் போது முகத்தை திருப்பிக் கொள்ளவேண்டியதாய் இருக்கிறது. உங்கள் கவிதையும் அதன்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது."

    ReplyDelete