உலகிலேயே தொன்மையான தொழில் விபச்சாரம்தான் என்று சொல்லப்படுவதுண்டு. பொருளை வைத்து வர்த்தகம் செய்வதற்கு முன்பே உடலை வைத்து வியாபாரம் செய்ய மனிதகுலம் கற்றுக்கொண்டு விட்டது. அதைத் தடுப்பதற்கு எவ்வளவோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அந்தத் தொழில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தனது உடலை விற்றுப் பிழைக்கும் எந்தவொரு பெண்ணும் மனம் விரும்பி அதில் ஈடுபடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தத் தொழிலில் பெண்ணைவிடக் கூடுதலாக சம்பாதிப்பவர்கள் அவளை வைத்துப் பிழைக்கும் ஆண்கள்தான். பிற தொழில்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் போல இந்தத் தொழிலிலும்கூட காலச்சூழலுக்கு ஏற்ப எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதை கருத்தில் கொண்டு விபச்சாரத்தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு கொண்டு வர உத்தேசித்திருக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல நகரங்களில் இதற்காக ஊர்வலங்களை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். கொல்கத்தாவில் நடந்த ஊர்வலத்தில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது நடைமுறையில் உள்ள விபசாரத் தடுப்பு சட்டம், 1956ஆம் ஆண்டு இயற்றப்பட்டதாகும். அதற்கு முன்னர் மாநில அளவிலான சட்டங்களே இந்தப் பிரச்சனையைக் கையாண்டு வந்தன. 1949ஆம் ஆண்டில் ஐ.நா. சபையால் இதற்கென உருவாக்கப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து 1956ல் இந்த சட்டம் இயற்றப்பட்டது. 1978ஆம் ஆண்டிலும் 1986லும் இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால் அந்தத் திருத்தங்களும் கூட போதுமானவையாக இல்லை என்பதால் தான் இப்போது புதிதாக விரிவான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தியாவில் சுமார் இருபது லட்சம் பெண்கள் விபச்சாரத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் சுமார் முப்பது சதவீதத்தினர் 18 வயதுக்குட்பட்ட மைனர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. சிவப்பு விளக்குப் பகுதிகள் என அழைக்கப்படும் விபசார விடுதிகள் நிரம்பிய ஏரியாக்களில் இருந்துகொண்டு இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம்தான். இப்போது இது பல இடங்களுக்கும் பரவிவிட்டது. ‘மொபைல் டெக்னாலஜி’ இந்தத் தொழிலிலும் நடைமுறைக்கு வந்து விட்டது.
புதிதாகக் கொண்டு வரப்படும் சட்டத்திருத்தத்தின் முக்கியமான நோக்கம் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை குற்றவாளிகளாகப் பார்க்காமல் அவர்களை பாதிக்கப்பட்டவர்களாக (க்ஷிவீநீtவீனீ) பார்க்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் இந்த சட்டத்தில் இதுவரை இருந்துவந்த செக்ஷன் எட்டை இப்போதைய மசோதா ரத்து செய்துள்ளது. விபச்சாரத்துக்கு ஒருவரை அழைப்பது குற்றம் என இந்த செக்ஷன்தான் வரையறுத்திருந்தது. காவல் துறையினர் இந்தப் பிரிவைத் துஷ்பிரயோகம் செய்துதான் ஏராளமானவர்களைக் கைது செய்து வந்தனர். பெண்களை வைத்து தொழில் செய்யும் தரகர்களும், பலவந்தமாகப் பெண்ணை இதில் ஈடுபடுத்துபவர்களும் தண்டிக்கப்பட்டதை விடவும் அதிகமாகப் பெண்களே இதுவரை தண்டிக்கப்பட்டு வந்ததற்கு காவல்துறையினரின் இந்த அணுகுமுறையே காரணம். இதை கருத்தில் கொண்டு தான் ஒட்டுமொத்தமாக இந்த சட்டப்பிரிவையே ரத்து செய்து விட அரசு தீர்மானித்துள்ளது.
இந்த சட்டப்பிரிவை நீக்கினாலும் கூட மாநிலங்களில் உள்ள போலீஸ் சட்டப்பிரிவுகளின் கீழ் தொடர்ந்தும் பெண்களை தண்டிப்பதற்கு இடமிருக்கிறது. மும்பை போலீஸ் சட்டம், டெல்லி போலீஸ் சட்டம் முதலியவற்றில் இதற்கான பிரிவுகள் உள்ளன. எனவே விபச்சார தடுப்பு சட்டத்திலிருந்து இந்தப் பிரிவை நீக்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் அதற்கேற்ப மாநில சட்டங்களிலும் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘விபச்சாரம்’ என்பதை நமது சட்டம் எப்படி வரையறுத்துள்ளது என்று காவல்துறையினர் புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை. 1956ல் முதன்முதலாகக் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் ‘‘விபச்சாரம் என்பது ஒரு பெண் காசுக்காகவோ அல்லது வேறு பொருட்களுக்காகவோவேண்டி உடலுறவுக்கு சம்மதிப்பது’’ என விளக்கமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1986ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தில் ‘‘விபச்சாரம் என்பது பாலியல் ரீதியாக ஒருவரைச் சுரண்டுவது’’ என அந்த விளக்கம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தைக் காவல்துறையினர் கவனத்தில் கொள்ளவே இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது அது குறித்துக் கடுமையான ஆட்சேபணைகள் எழுந்தன. அதனால் அந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. திரு.ஜனார்தன் த்விவேதி தலைமையிலான நிலைக்குழு ஏழுமுறை இதற்காகக்கூடி விரிவாக இந்த மசோதாவை ஆராய்ந்தது. அது தனது பரிந்துரைகளைக் கடந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பித்தது.
பாராளுமன்ற நிலைக்குழு தற்போதைய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள செக்ஷன் 2 உட்பிரிவு எஃப் என்பதற்கான புதிய விளக்கத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரியிருந்தது. இந்தப் பிரிவு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த விளக்கத்தை விரிவுபடுத்துவதாக உள்ளது. ‘‘வியாபார நோக்கத்துக்காக’’ பாலியலைப் பயன்படுத்துவது எனக்கூறப்பட்டிருந்த விளக்கத்தை ‘‘வியாபார நோக்கத்துக்காகவோ அல்லது பணத்துக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ’’ என இப்போதைய மசோதாவில் விரிவுபடுத்தியுள்ளனர். இந்தப் புதிய விளக்கமானது மனமொப்பி உடலுறவில் ஈடுபடுபவர்களையும் தண்டிக்க வகை செய்வதால் பாலியல் தொழிலாளிகளை முழுவதுமாக முடக்கிப் போட்டுவிடும் என்று பல்வேறு அமைப்புகள் அச்சம் தெரிவிக்கின்றன. இது பாலியல் தொழிலில் ஒருவரைப் பலவந்தமாக ஈடுபடுத்தி சுரண்டுபவரை விட்டுவிட்டு மனமொப்பி அந்தத் தொழிலைச் செய்யும் பெண்களைக் குறிவைப்பதாக உள்ளது என அந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதை ஏற்றுக்கொண்ட நிலைக்குழு இந்தப் புதிய விளக்கத்தை மறுவரையறை செய்யுமாறு பரிந்துரைத்திருந்தது. ஆனால் அந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை.
பாலியல் தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளான மற்றொரு திருத்தம் இந்த சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 5 உட்பிரிவு ஏ, பி மற்றும் சி ஆகியவை குறித்ததாகும்.
செக்ஷன் 5 உட்பிரிவு ‘ஏ’ ஐ.நா. சபையின் ஒப்பந்தத்துக்கு ஏற்ப கொண்டுவரப்பட்டுள்ள திருத்தமாகும். விபச்சாரம் என்பதையும் ‘மனித வியாபாரம்’ என்பதையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது. ஐ.நா. ஒப்பந்தம் விபச்சார நோக்கத்துக்காக மட்டுமின்றி வேறு காரணங்களுக்காக குழந்தைகளை, பெண்களை கடத்துவதுபற்றிப் பேசுகிறது. ஆனால் இந்த சட்டத்திருத்தமோ அதை விபச்சாரத்தோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கிறது. குறிப்பாகக் குழந்தைகளைக் கடத்திப் பிச்சை எடுக்கவைப்பது, பலவந்தமாக வேலை வாங்குவது, கொத்தடிமைகளாக வைத்திருப்பது உள்ளிட்ட பலவிதமான குற்றங்கள் குறித்து ஐ.நா. ஒப்பந்தம் பேசுகிறது. ஆனால் இந்த சட்டத்திருத்தம் அவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை.
இதைப்பரிசீலித்த பாராளுமன்ற நிலைக்குழு இந்த மசோதாவில் அந்த அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லையென்ற போதிலும் ‘‘குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத்’’ தடுப்பதற்காகத் தற்போது விரிவான மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் இந்த அம்சங்களை உள்ளடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
செக்ஷன் 5 உட்பிரிவு ‘பி’ மேலே சொன்ன குற்றத்துக்கான தண்டனையை வரையறுக்கிறது. ‘‘மனித வியாபாரத்தில்’’ ஈடுபடுகிறவர்களுக்கு முதன்முறை ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, மறுபடியும் அவர்கள் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை விதிக்கலாமென இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இது வயது வந்தவர்களையும், குழந்தைகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. குழந்தைகளைப் பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்குக் குறைந்தபட்சம் பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கவேண்டும் எனப் பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களாலும், பல்வேறு தொண்டு நிறுவனங்களாலும் அதிகம் எதிர்க்கப்படுவது செக்ஷன் 5 உட்பிரிவு ‘சி’ என்பதுதான். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண் ஒருவரை நாடிச் செல்லும் எந்தஒரு நபரையும் தண்டிப்பதற்கு இது வழிசெய்கிறது. அவருக்கு மூன்று மாதம்வரை சிறை தண்டனையும் இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம் எனக்கூறும் இந்தப்பிரிவு இரண்டாவது முறை அதே நபர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டால் ஆறுமாதம் சிறை தண்டனை ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்று வரையறுத்துள்ளது.
‘‘சட்டத்திருத்தத்தில் இந்த செக்ஷன் சேர்க்கப்பட்டால் எந்தஒரு ஆணும் விபச்சாரிகளைத் தேடி வரமாட்டார்கள். அப்புறம் அந்தத் தொழிலை நம்பி இருப்பவர்கள் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டியதுதான்’’ என இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் கூறுகின்றனர். ஸ்வீடன் நாட்டில் இப்படியொரு சட்டம் 1999ல் கொண்டு வரப்பட்டது. அது விபச்சாரத்தை ஒழிப்பதற்கு பதிலாக தலைமறைவாக அதைச் செய்வதற்கு வழிவகுத்து விட்டது என்று அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
விபச்சாரம் நடக்கும் இடத்துக்கு எவர்போனாலும் அவரைத் தண்டிப்போம் எனச் சொல்வது சரியல்ல. ஒரு பெண் பலவந்தமாக அந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறாரா அல்லது மனமொப்பி அதைச் செய்கிறாரா என்று அங்கே செல்பவரால் கண்டுபிடிக்க முடியாது. எனவே அவர் உடலுறவில் ஈடுபடும்போது அங்கே ‘பாலியல் சுரண்டல்’ நடக்கிறதா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்துவது கடினம். இந்த சட்டத்திருத்தம் வந்தால் விபச்சாரம் நடக்கும் இடத்துக்கு ஒருவர் போவதே அவரைக் கைது செய்ய போலீசுக்குப் போதுமான காரணமாகிவிடும். அவர் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்பது கூட அவசியமில்லை. இது மேலும் மோசமான அதிகார துஷ்பிரயோகத்துக்கே வழிவகுக்கும்.
இந்த விமர்சனங்களைப் பரிசீலித்த பாராளுமன்ற நிலைக்குழு ‘‘பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட்ட பாதிக்கப்பட்டவர்’’ என்பதையும், ‘‘வணிக ரீதியான பாலியல் சுரண்டல்’’ என்பதையும் இந்த மசோதாவில் தெளிவுபடுத்த வேண்டும். அதனடிப்படையில் இந்த செக்ஷனை மறுவரையறை செய்யவேண்டும் என்று கூறியது. ஆனால் அந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட கேரளாவ¬ச் சேர்ந்த நளினி ஜமீலா என்பவரின் சுயசரிதை சமீபத்தில் வெளியாகியுள்ளது. பாலியல் தொழிலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘‘பாலியல் தொழிலைப் பாதுகாப்பதே தனது விருப்பம்’’ என்று பதில் சொன்னதாக அவர் கூறியுள்ளார். ‘‘இப்போதைய பாலியல் தொழிலாளர்கள் பழைய பாலியல் தொழிலாளர்களின் வாரிசுகள் அல்ல. பிளஸ் டூவில் தோற்றவர்கள், படித்தும் வேலை கிடைக்காதவர்கள், ஐம்பதாயிரம் ரூபாய் வரதட்சணை தருவதாகச் சொல்லி முப்பதாயிரம்தான் கிடைத்தது என்பதற்காகக் கணவனால் விரட்டியடிக்கப்பட்டவர்கள்’’ என்று குறிப்பிடுகிறார் நளினி ஜமீலா. இதன் மூலம் நாம் அறிவது என்ன?
விபச்சாரத்தொழில் என்பது அதில் ஈடுபட்டிருப்பவர்களால் மட்டுமே பாதுகாக்கப்படவில்லை. மாறாக, நமது சமூகம்தான் அந்தத் தொழிலைப் பாதுகாத்து வளர்த்துக் கொண்டிருக்கிறது. மனிதனின் பாலியல் வேட்கைக்கும் அவன் விதித்துக்கொண்ட சமூக மதிப்பீடுகளுக்கும் இடையிலான முரண்பாடுதான் ‘விபச்சாரம்’ என்ற செயலுக்கு அடிப்படை. அது களையப்படும் வரை விபச்சாரமும் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால் நமது வேட்கைக்குப் பலியாகிறவர்களையே குற்றவாளிகளாக நாம் சித்திரிப்பது சரியா? என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்வியாகும். இந்த சட்டத்திருத்தம் அதை நோக்கியதாக இருக்கிறதா? என்பதை அரசுதான் தெளிவுபடுத்தவேண்டும்.
நன்றி : ஜூனியர் விகடன்
nice sir
ReplyDelete