Thursday, October 28, 2010

கொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக்குமார்




பெண் ஒருவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லிக்கொள்ள முடியாதபடி உலக அரங்கில் இப்போது இந்தியா தலை குனிந்து நிற்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரிசாவில் நயாகார் என்ற ஊரில் ஒரு பாழுங்கிணற்றிலிருந்து நாற்பது பெண் குழந்தைகளின் சடலங்கள் மற்றும் எலும்புகளைப் போலீசார் கண்டெடுத்திருக்கிறார்கள். ஒரிசாவின் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து தொண்ணூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த ஊர் இப்போது ‘உலகப் புகழ்’ பெற்றுவிட்டது. அந்தப் பகுதியில் சுமார் முப்பது தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில்தான் அந்த பெண் குழந்தைகள் கொல்லப்பட்டு அந்தப் பிணங்கள் கிணற்றில் வீசப்பட்டிருக்க வேண்டுமெனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஐந்து மருத்துவமனைகளின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறியும் கருவிகளை அந்த மருத்துவமனைகளில் எவ்வித அனுமதியும் பெறாமலேயே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் பெண் சிசுக் கொலையில் முன்னணியில் நிற்கும் மாநிலங்களின் வரிசையில் ஒரிசா ஐந்தாவது இடம் வகிக்கிறது. அங்கே நகர்ப்புறத்தில் ஆயிரம் ஆண்களுக்கு எண்ணூற்று அறுபது பெண்கள்தான் உள்ளனர் என 2001 சென்சஸில் கண்டறிந்துள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வை கிராமப்பகுதிகளுக்கும் பரப்புவதற்கு ‘மொபைல் கிளினிக்’ என்கிற புதிய யுக்தியை அங்கே இப்போது கையாண்டு வருகின்றனர். கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சோதனைக்குப் பயன்படுத்தப்படும் ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ கருவியை மாருதி வேனில் வைத்து கிராமங்களுக்குக் கொண்டு செல்கின்றனர். வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்து பெண் குழந்தை எனத் தெரியவந்தால் உடனே கருக்கலைப்பு செய்யவும் அந்த வேனில் வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரிசாவின் கஜபதி மாவட்டத்தில் இந்த ‘மொபைல் கிளினிக்’ மிகவும் பிரசித்தம்.
2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண்களுக்கு தொள்ளாயிரத்து முப்பத்து மூன்று பெண்கள்தான் இந்தியாவில் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் அதிகரித்து வரும் பெண் சிசுக் கொலைகளே இதற்குக் காரணம். கருவில் உள்ள குழந்தை பெண்ணா ஆணா என்பதைக் கண்டறியும் கருவிகள் புழக்கத்துக்கு வந்ததனால்தான் பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து விடும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதன் பொருட்டே 1994ஆம் ஆண்டில் இத்தகைய பரிசோதனைகளை இந்திய அரசு தடை செய்து சட்டம் இயற்றியது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் ஒருகோடி பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டு விட்டதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் மருத்துவ இதழான ‘லான்செட்’ தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஏழாயிரம் பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவதாக யுனிசெஃப் அறிக்கை கூறியுள்ளது. 2011ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பெண் சிசுக்கள் கொல்லப்படலாம் என்றும் அந்த ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
பெண் சிசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இப்போது புதியதொரு திட்டத்தை இந்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. கருவுற்ற தாய்மார்கள் கட்டாயம் அரசாங்கத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதே அந்தத் திட்டம். கருவுறுகிறவர்கள் அனைவரும் குழந்தை பெறுகிறார்களா? அல்லது இடையில் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்களா? என்பதைக் கண்டறியவே இந்த முறையை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. முதலில் பத்து வட்டாரங்களைத் தெரிவு செய்து அங்கே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் அந்த வட்டாரங்களில் பிறக்கும் பெண் குழந்தை ஒவ்வொன்றுக்கும் ஏழாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுவதோடு ஒரு லட்ச ரூபாய்க்கு இன்ஷ்யூரன்சும் செய்யப்படும். அந்தப் பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அவற்றின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். அந்தக் குழந்தைகளுக்கு பதினெட்டு வயதாகும்போது மேலும் ஒரு சிறு தொகை வழங்கப்படும். நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 15 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக பெண்கள் மற்றும குழந்தைகள் நல அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறியிருக்கிறார். இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைப் பொருத்து இது நாடு முழுவதற்கும் விரிவு படுத்தப்படுமெனவும் அவர் கூறியிருக்கிறார்.
‘பெண்ணைத் தெய்வமாகப் போற்றுவதே நமது மரபு’ என்று கூறப்பட்டாலும் உண்மையில், பெண்ணை சுமையாக கருதுவதே நமது வழக்கம். இதற்கு வரதட்சணையே மிகவும் முக்கியமான காரணம் என்று சொல்லலாம். பெற்றோர்களோடு ஆண் பிள்ளைகளே கடைசிவரை இருப்பார்களென்பதால் வயதான காலத்தில் தம்மை கவனித்துக்கொள்ளப் போகிறவர்களென்ற நம்பிக்கையில் ஆண் பிள்ளைகளையே பெரும்பாலும் பெற்றோர்கள் விரும்புகின்றனர். பெண் குழந்தைகளுக்கு எதிராக ஊறிப்போயுள்ள இந்த மனோபாவத்தை மருத்துவர்கள் என்ற பெயரில் செயல்படும் சில கொள்ளையர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உயிரைக் காப்பதற்காகப் படித்த படிப்பை ‘கருக்கொலை’ செய்வதற்காக அவர்கள் உபயோகிக்கிறார்கள்.
பெண் சிசுக்கொலை என்ற வழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசிய நாடுகள் அனைத்திலும் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு 1979ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை திட்டம் பெண் சிசுக் கொலையை அதிகப்படுத்துவதில் சென்று முடிந்துள்ளதாக அந்த நாடே ஒப்புக்கொண்டிருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் திருமணத்துக்குப் பெண் கிடைக்காத பத்து லட்சம் இளைஞர்கள் சீனாவில் இருப்பார்களென செய்திகள் தெரிவிக்கின்றனஇ தற்போது சீனாவில் ஆண்களைவிடப் பெண்கள் பதினேழு சதவீதம் குறைவாக உள்ளனர். சில பிரதேசங்களில் இந்த இடைவெளி முப்பது சதவீதம் அளவுக்கு கூட இருக்கிறது.
பெண் சிசுக் கொலையில் சீனாவும், இந்தியாவும்தான் முன்னணியில் இருப்பதாகப் ‘‘பெண் குழந்தைகளுக்கான செயல்பாட்டு குழு’’ என்ற அமைப்பு குறை கூறியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அது வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது உலகில் நூறு மில்லியன் பெண்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அதில் எண்பது சதவீதம் பெண்கள் இந்தியாவிலும், சீனாவிலும் குறைவாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில், குழந்தை பிறப்பில் 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் என்ற நிலை காணப்படுகிறது எனக் குறிப்பிடும் அந்த அறிக்கை சீனாவில் 100 பெண் குழந்தைகளுக்கு 117 ஆண் குழந்தைகள்; இந்தியாவில் 100 பெண் குழந்தைகளுக்கு 120 ஆண் குழந்தைகள் என்ற நிலை இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவற்றோடு பாகிஸ்தான், பங்களாதேஷ், தைவான், தென்கொரியா, இந்தோனேஷியா, வியட்நாம் முதலான நாடுகளிலும் கூட பெண் சிசுக் கொலை வழக்கத்தில் இருக்கிறது. உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதி அளவு இந்த நாடுகளில்தான் உள்ளது. இவற்றில் ஏற்படும் பாலின ஏற்றத்தாழ்வு உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் எச்சரித்திருக்கிறார்கள்.
கருச்சிதைவு மட்டுமின்றி பெண் சிசுக் கொலைக்கு மேலும் பல வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. விஷம் கொடுப்பது, கழுத்தை முறிப்பது, பட்டினி போட்டுக் கொல்வது, கிணற்றில் வீசுவது போன்ற முறைகளைக் கையாண்டும் பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றன. மருத்துவமனைகளில் பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு இயற்கை மரணம் அல்லது இறந்து பிறந்ததாகச் சான்றிதழ் பெறும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது. உரிய பணத்தைக் கொடுத்தால் இப்படியான சான்றிதழ்களைத் தருவதற்கு மருத்துவர்கள் சிலர் தயாராக இருப்பதாகப் பெண் குழந்தைக்கான செயல்பாட்டுக் குழுவின் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா? என்பதைக் கண்டறிவதைத் தடை செய்யும் 1994 ஆம் ஆண்டு சட்டத்தில் 2003 ஆம் வருடத்தில் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். ஆண் குழந்தை பிறப்பதற்கு உத்தரவாதமளிக்கும் விளம்பரங்கள் அதன் மூலம் தடை செய்யப்பட்டன. இந்த சட்டத்தின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்வதற்கென 2005 ஆம் ஆண்டு தேசிய அளவில் கூட்டப்பட்ட கூட்டத்தில் எட்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. பெண் சிசுக்கொலையைத் தடுப்பதற்காக தேசிய அளவில் கண்காணிப்புப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துதல், பெண் குழந்தைகளின் பெருமையைப் பரப்பும் நபர்களுக்கு விருது வழங்குவது, மதத் தலைவர்களோடு கலந்தாலோசித்து பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் பிரச்சாரத்தில் அவர்களை ஈடுபடுத்துவது, 2010 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் ஆண் பெண் எண்ணிக்கை சமமாக இருப்பதற்காகப் பாடுபடுவது உள்ளிட்ட பரிந்துரைகள் அந்தக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன.
மாநில அளவில் ஆலோசனைக் குழுக்களை உருவாக்கவும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்களில் செய்யப்படும் பாலின நிர்ணய சோதனைகள் பற்றிய விவரங்களை இரண்டு ஆண்டுகள் வரை அழிக்காமல் வைத்திருக்க ஆணையிடவும், அப்போது தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவை சரிவர நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து  கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய அரசு இயற்றிய சட்டம் அமுலுக்கு வந்து ஒன்பது ஆண்டுகளான பிறகும் அந்த சட்டத்தின் கீழ் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என தெரிவித்தார். அந்த சட்டத்தின்கீழ் மார்ச் 2005 வரை நாடெங்கும் 303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும் எவரும் தண்டிக்கப்படவில்லை.
2006 மார்ச் மாதத்தில்தான் ஹரியானா மாநிலத்தில் நாட்டிலேயே முதன்முறையாக ஒரு டாக்டரும் அவரது உதவியாளரும் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டனர். இரண்டு வருட சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்பட்டன.
மத்திய சுகாதாரத்துறையில் இந்த சட்டத்துக்கான கண்காணிப்புப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ரட்டன் சந்த் பல மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டபோது மாநில அளவில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுக்கள் சரிவர செயல்படாதது தெரியவந்தது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட மாநில அளவிலான அமைப்புகள் போதுமான பணியாளர்கள் இன்றி செயலிழந்து கிடக்கின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார். ஆனால் இந்த நிலைமை மாற்றப்படவில்லைல.
நடைமுறை ரீதியான இத்தகைய சிக்கல்கள் ஒருபுறமென்றால், அறிவியல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் இன்னொரு புறம் பெரிய சவாலாக இருக்கிறது.  கரு நன்கு வளர்ச்சியடைந்த பிறகே அது பெண்ணா, ஆணா என்று பார்க்க முடியும் என்ற நிலை இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. ஆனால் இப்போதோ மிக ஆரம்ப கட்டத்திலேயே கூட அதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். பாலினத்தை நிர்ணயிக்கும் இந்தப் பரிசோதனை முறையில் இப்போது மேலும் ஒரு ‘முன்னேற்றம்’ ஏற்பட்டிருக்கிறது. கருவுற்ற பெண்ணின் ரத்தத்திலிருந்து கருவின் அணுவைப் பிரித்தெடுத்து அதைக் கொண்டு அந்தக் கருவில் இருப்பது பெண்ணா ஆணா என்று கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த முறை புழக்கத்துக்கு வந்தால் பெண் சிசுக் கொலையை தடுப்பது மேலும் சிக்கலானதாகி விடும்.
பெண் சிசுக்கொலையைத் தடுப்பதற்கென தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தை பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியாவெங்கும் நடைமுறைப்படுத்தப்போவதாக அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறியுள்ளார். ஆனால், ‘‘பெண் சிசுக்கள் பெரும்பாலும் கருவிலேயே அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே தொட்டில் குழந்தை திட்டம் அதைத் தடுப்பதற்கு பெரிய அளவில் உதவிடாது’’ என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
பெண்களே உயிரைக் காப்பவர்கள், உயிரைச் சேர்ப்பவர்கள் என்று போற்றிய பாரதி ‘‘உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா’’ என்று பாடி மகிழ்ந்தார்இ ஆனால் அந்தப் பெண் குழந்தைகளைத் தான் நாம் கருவிலேயே அழித்துக் கொண்டிருக்கிறோம். ஒரிசாவில் நிகழ்ந்துள்ள பெண் சிசுக் கொலைகள் தேசிய அளவில் தினந்தோறும் நடக்கும் ‘இனப் படுகொலையின்’ அங்கம்தான். இதை ஒரு தேசிய அவமானமாக நாம் கருதவேண்டும். பெண் சிசுக் கொலையைத் தடுத்து நிறுத்தும் பிரச்சாரம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி : ஜூனியர் விகடன் 

No comments:

Post a Comment