Tuesday, October 26, 2010

காலும் காற்று - இராம.கி.


காலும் காற்று
இராம.கி. 

(தமிழ் மன்றம் மடல்குழுவில் நான் துவக்கிய விவாதத்தில் பங்கேற்று 
திரு. இராம .கி அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை )

அண்மையில் வெள்ளிவீதியார் எழுதிய, பாலைத்திணையைச் சேர்ந்த, குறுந்தொகை 130 ஆம் பாட்டைப் பற்றிய, உரையாட்டொன்று இங்கு எழுந்தது. அதில் வரும் ”கால்” என்ற சொல்லுக்கு ”உடலுறுப்பு” என்றே பல்வேறு உரையாசிரியர்கள் பொருள் கொண்டிருக்க, அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் செ.வை.சண்முகம் மட்டும் ”அதைக் காற்று என்று கொண்டது சரியா?” என்று பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இந்தப் பாட்டில் கால் என்ற சொல்லிற்குக் காற்று என்று பொருள் கொள்ளுவதே சரியென்று எனக்கும் படுகிறது.
 
கால்தல் என்பதற்கு இயங்குதல் என்றே சொல்லாய்வர் கு.அரசேந்திரன் பொருள் சொல்லுவார். அப்படிக் கொள்ளுவது பொருத்தமாகவே எனக்குத் தென்படுகிறது. நிலம், நீர், காற்று, தீ, வான் என்னும் ஐம்பூதங்களைச் சொல்லும் போது இயங்குதல் இயல்பே காற்றிற்குக் கற்பிக்கப் படும். இற்றை அறிவியலின் படியும், இயங்காக் காற்று, அசையா வளி என்பது முற்று முழுதான சுழிய வெம்மையிற் (absolute zero temperature) தவிர்த்து வேறெங்கும் காணமுடியாது. ”காலும் காற்று” (கால்தல் = இயங்குதல்; இயங்கும் காற்று) பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்து பாட்டின் பின்புலத்தில் இழையும் அக்கால மெய்யியற் கற்பிதம் பற்றியும் இங்கு பேச விழைகிறேன்.
 
கல் என்னும் வேருக்குக் கருமை, கூட்டம், செலவு, கூர்மை, வெப்பம், துளை ஆகிய ஆறு அடிப்படையான பொருட்பாடுகளை முனைவர் கு.அரசேந்திரன் தன்னுடைய “உலகம் தழுவிய தமிழின் வேர் - கல்” என்ற பொத்தகத் தொகுதியிற் பேசுவார். அவற்றிற் செலவுப் பொருளை (=இயக்கப் பொருளை) மட்டுமே இங்கு கோடி காட்டுகிறேன். (மல்>மால், பொல்>போல் என்பது போல் கல்>கால் என்ற விரிவு அமையும்.) கூட்டக் கருத்து மிகுதிக் கருத்தையும், மிகுதிக் கருத்து செலவுக் கருத்தையும் தோற்றுவிக்கிறது என்பதை அழகாக பல்வேறு சொற்களின் மூலம் அவர் பொத்தகத்தில் விளக்குவார். கால்தல் என்ற சொல்லிற்குத் தோன்றுதல், வெளிவருதல், பாய்தல், ஓடுதல், பரவுதல், வீசுதல் என்ற பொருட்பாடுகள் உண்டு.
 
இயற்கையிற் பல இடங்களில் பொதுள் ஆற்றலே (potential energy) துனைவாற்றலாக மாறுகிறது. (dynamic energy. ”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியல் 798 ஆம் நூற்பா.) பொதுளாற்றல் என்பது கூட்டப் பொருளை ஒட்டியது. ஓர் அணையில் நீர்ச் சேகரிப்புக் கூடக் கூட நீர் மட்டம் உயர்ந்து, மதகைத் திறந்துவிடும் போது நீர் வெளிவரும் கதி கூடும். (கூட்டம் -> உயரம் -> பொதுளாற்றல் கூடுதல்.) குறிப்பிட்ட இடத்துள் மந்தைகளை மேலும் அடைக்க, அவை முட்டி மோதிக்கொண்டு அடைப்பைத் திறந்தவுடன் வேகமாய் வெளிவரும். வெள்ளை மேகத்துள் நீராவி கூடக் கூடக் கருமை நிறம் கூடி, ஒரு குறிப்பிட்ட அளவில் நீர்ச்செறிவு (water concentration) தெவிட்டிப் போய் (gets saturated) நீர்த்துளிகளை வெளியிட்டு மழையாய்க் கொட்டும். மழை இயக்கமும் நீராவிக் கூட்டமும் ஒன்றோடொன்று இணைந்தவை. ஏதொன்றும் கூடினால் தான் கூட்டத்துள் அடங்கிய உறுப்புகளின் முரண்பாட்டால் நுண்ணியக்கம் (micromotion) ஒருப்பட்டு, பேரியக்கம் (macro motion) வெளிப்படும் என்பதை இயற்கையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம் உணரலாம். இவ்வியற்கை மாற்றத்தை தொடக்க கால மாந்தனும் பல்வேறு பட்டறிவுகளால் உணர்ந்திருந்தான்.
 
இது தவிர கூட்டம் கூடும்போது கூட்டவுறுப்புக்கள் சும்மா இருக்க முடிவதில்லை. அவை இயங்கிக் கொண்டே இருக்கும் தேவையேற்படுகிறது. மேய்ச்சல் நிலத்தில் இரைதேடும் விலங்குகள், தம் அருகேயிருக்கும் தீவனம் கரைந்த பிறகு, மேய்வதன் தொடர்பாய் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இயக்கம் இல்லாது அவை வாழ்வதில்லை. மேய்ச்சலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் நடை காலு நடை>கால்நடை என்றாகும். ஒருபக்கம் மேய்ச்சல் இன்னொரு பக்கம் காலுதல். இரு தொழில்களும் ஒன்றோடொன்று பிணைந்தவை. கால்தல் இல்லா மேய்ச்சல் கற்பனை செய்ய முடியாதவொன்று.
 
எப்படி மாந்தவுடம்பிற் கொள்ளும்/கொய்யும் உறுப்பு (இன்னொரு விதமாய்ச் சொன்னால் கவ்வும் உறுப்பு) ”கொள்>கொய்>கை”யாயிற்றோ (கிணற்றின் மேல் இருக்கும் உருளையைக் கொண்டிருக்கும் கை = கொண்டி என்றே சொல்லப்படும். கொள்ளுதல் = to have) அது போல காலுதற்கு உதவும் உறுப்பு கால் ஆயிற்று. வண்டிகளில் இயங்கும் சக்கரமும் கூட  தொழிலொப்புமை கருதிக் கால் என்றே தமிழிற் சொல்லப் படும். காலும் தடம் காற்றடம் ஆயிற்று. காலுகின்ற (=ஓடுகின்ற) நீரை உடைய இயற்கை வாய் கால்வாய் ஆயிற்று. அதே ஓட்டத்தைச் செயற்கையாய் அமைக்கும் போது அது வாய்க்கால் ஆயிற்று.
 
காலிக் கொண்டே இருக்கும் காரணத்தால், இயங்கும் வளியும் கால்+து = காற்று எனப்பட்டது. காலுகின்ற காற்றால் பேரோசைகள் ஏற்பட்டன. காற்றுவளியின் கதிக்குத் (velocity) தக்க பேர்விசைகள் உருவாகின. இதே காலை gale, gal, என்று மேலை இரோப்பிய மொழிகள் சொல்லும். வழக்குத் தமிழில் இன்று சூறைக் காற்று, சூறாவளி என்று சொல்லுவோம். சூறை என்பது மிகுபடச் சொல்லும் ஒரு முன்னொட்டு..
 
நாற்பரிமானக் காலவெளியில் (four dimention space-time) மூன்று பரிமானங்கள் இடத்தைக் குறிக்க, நாலாவது பரிமானம் காலத்தைக் குறிக்கும். இந்தப் பரிமானத்திற்கு மட்டும் தொடக்கம் என்று நிலையை இற்றை அறிவியல் காட்டும். பருவம் என்பதைக் குறிக்கும் இந்தக் காலமும் கூட கால்தல் பொருளில் உருவான சொல் தான். காலப் பெருவெளியைக்  குறிக்கத் தொல்காப்பியத்தில் இரண்டு நூற்பாக்கள் உண்டு. ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் அந்த நூற்பாக்களின் வரையறுப்பு நம்மை வியக்கவைக்கும்.
 
”ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்
கரும நிகழ்ச்சி இடமென மொழிப”
 
என்று “கருமம் நிகழ்வது ஒரு களத்தில் (you need a place for an occurrence to happen).” என்று தெளிவாக வரையறுக்கும். [தொல்.செய்யுளியல் 1457 ஆம் நூற்பா.]  இடமும் களமும் ஒன்றுதானே? அடுத்த நூற்பாவில் (செய்யுளியல் 1458)
 
“இறப்பே நிகழ்வே எதிரது என்னுந்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உள்ளபே
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்”      
 
காலம் என்ற கருத்தீட்டை வரையறுப்பார். (occurrence of an event is proscribed by time.) இங்கு கூறிய இரண்டு நூற்பாவும் இற்றைப் பூதியலில் (physics), குறிப்பாகக் காயவியலில் (cosmology) கால-வெளி (space - time) என்று கூறும் கருத்தீட்டை விளக்குவதற்கு மிகவும் பயன்படக் கூடியவையாகும். இயக்கமின்றேல் காலத்தை யாராலும் உணரமுடியாது. ஓர் இயக்கத்தை இன்னோர் இயக்கத்தின் மூலம்தான் ஒப்பிட்டு ”இது விரைவு, இது சுணக்கம்” என்று சொல்ல முடியும். அடிப்படையில் விரைவான துடிப்பைக் கால அளவாய்க் கொண்டு, அதன் மடங்காகவே மற்ற இயக்கங்களை (இது நடந்து முடிப்பதற்குள் இத்தனை அடிப்படைத் துடிப்புகள் நடந்துவிட்டன) இற்றை அறிவியல் காலத்தை அளக்கிறது. நுண்ணிதாகச் சிந்தித்தால் கால்தல் என்ற இயக்க வினை காலம் என்னும் சொல்லுக்குள் ஆழ்ந்து புதைந்திருப்பதை உணரமுடியும். காலம், காலை, கால் என்ற சொற்கள் எல்லாமே time என்ற கருத்தீட்டைத் தமிழில் உணர்த்தி நிற்கின்றன.
 
இனிக் காற்று என்ற பொருளை மட்டும் ஆழ்ந்து பார்ப்போம். நீரைக் கடப்பதற்கு வெறும் துடுப்பு உதவியையும் நீரோட்டத்தையும் மட்டுமே மாந்தன் பயன்படுத்துவதில்லை. அவையெல்லாம் குறைந்த தொலைவைக் கடக்கவே பயன்படுகின்றன. நீண்ட தொலைவைக் கடப்பதற்குப் படகிற் பாய்மரங்கள் நட்டு அவற்றில் பாய்களைக் கட்டிக் காற்றுவிசை மூலம் கலஞ்செலுத்தும் நுட்பம் எப்பொழுது கண்டுணரப் பட்டது என்பது ஓர் ஆழ்ந்த ஆய்வாகும். அந்த நுட்பியல் சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் அறிந்திருக்க வேண்டும். இப்பாட்டில் அந்த நுட்பம் இரண்டாம் வரியால் உய்த்துணரப் படுகிறது. முந்நீரில் யாரும் கால் என்று உடலுறுப்புக் கொண்டு நடப்பதில்லை. ஒருவேளை மீமாந்தத் தந்திரம் அறிந்தோர் அதைச் செய்யமுடியலாம். பொதுவான மாந்தர் கால் என்னும் காற்றைக் கொண்டு கலஞ் செலுத்தியே முற்காலத்திற் கடந்திருக்கிறோம். முந்நீரைக் கடத்தல் என்றாலே இந்த நுட்பம் பயன்பட்டதாகத்தான் அன்று பொருள். இற்றை நாளில் கால்நுட்பம் இல்லாது பொறி நுட்பம் கொண்டு, நீருக்குள் ஓட்டத்தைக் கிளப்பிக் கலத்தை முன்செலுத்த வைக்கும் நுட்பம் வந்துவிட்டது. அதனால் நாம் கால்நுட்பத்தின் நெளிவு சுளிவுகளை, அதன் வீச்சை உணராது போகிறோம். கால்நுட்பத்தின் வழியும், கடலில் இருக்கும் இயற்கை நீரோட்டத்தின் வழியும் உலகையே பழம் மாந்தன் வலம் வந்திருக்கிறான். அதை இற்றை நாளில் நடத்திக் காட்டி (demonstrate) பல முன்னோட்டாளர்களும் நம்மை உணரவைக்கிறார்கள். 
 
சரி, கால் என்ற சொல் இயக்கம் என்ற பொருளில் மட்டும் தான் வந்ததா? - என்றால் இல்லையென்று சொல்லவேண்டும். இதே வெள்ளி வீதியார் குறுந்தொகை 44 இல் உடலுறுப்பு என்ற பொருளில் கால் என்னும் சொல்லைப் பயன்படுத்துவார். அந்தப் பாட்டு செவிலித்தாய் பாடுவதாய் அமையும். தலைவனோடு, தலைவி உடன்போக்காய்ச் சென்று விட்டாள். இருவரும் எங்கு சென்றார்கள் என்று செவிலித் தாய்க்குத் தெரியவில்லை. வருவோர் போவோரிடம் கேட்டுப் கேட்டுப் பார்க்கிறாள். அலைந்து திரிகிறாள். கால்களின் இயக்கம் தொலைந்து மரத்துப் போகின்றன. (பரி = இயக்கம்) கண்கள் ஒளி குன்றி பூத்துப் போகின்றன. பெரிய இருள் வானில் தெரியும் மீன்களைக் காட்டிலும் நிறையப் பேரைப் பார்த்தாயிற்று; தன் மகளையும் அவள் கொழுநனையும் மட்டும் எங்கும் காணவில்லை. சோர்ந்து போகிறாள் செவிலித்தாய்:
 
காலே பரி தப்பினவே கண்ணே
நோக்கி நொக்கி வாள் இழந்தனவே
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே 
 
ஆனால் குறுந்தொகை 130 ஆம் பாடலில் வரும் கால் உடலுறுப்பு என்ற பொருளில் வரவில்லை. செலவு/இயக்கம் என்ற பொருளிலேயே வந்திருக்கிறது. இதே போல இன்னும் இருபாடல்கள் அதே குறுந்தொகையில் கால் என்ற சொல்லாட்சியைச் செலவு/இயக்கம் என்ற பொருளிற் காட்டும்.
 
இன்றே சென்று வருதும் நாளைக்
குன்று இழி அருவியின் வெண்தேர் முடுக
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்
கால் இயல் செலவின் மாலை எய்தி,
சில்நிரை வால்வளைக் குறுமகள்
பல்மாண் ஆகம் மணந்து உவக்குவமே
 
 -குறுந்.189 மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
 
பரல் அவற் படுநீர் மாந்தித் துணையொடு
இரலை நல்மான் நெறிமுதல் உகளும்
மாலை வாரா அலவைக், கால் இயல்
கடுமாக் கடவுமதி பாக! நெடுநீர்ப்
பொருகயல் முரணிய உண்கண
தெரிதீம் கிளவி தெருமரல் உயவே
 
 - குறுந்.250 நாமலார் மகன் இளங்கண்ணனார்
 
இனிப் பாட்டினுள் அடங்கியிருக்கும் மெய்யியற் கற்பிதம் பற்றிப் பார்ப்பொம். முதலிற் பாட்டின் சூழலைச் சற்று ஆழமாய்ப் பார்ப்போம். ”வணிகத்தின் மேற்சென்ற தலைவன் எங்கு போயிருக்கிறான்?” என்று தலைவிக்கும் தோழிக்கும் தெரியாத நிலையில், ”அவன் திரும்பி வாரானோ, என்னவாயிற்றோ?” என்று அலமருந்து, பிரிவாற்றாமை மேம்படத் தலைவி புலம்புகிறாள். அவள்துயரைப் பொறாத தோழி, ஆற்றுவிக்கும் முகமாய்,என்ற  இப்பாட்டைச் சொல்லுகிறாள்:
 
நிலம் தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ நம் காதலோரே

”ஏனடி, கவலைப் படுகிறாய்? நம் காதலர் நம் நாட்டில் இல்லையென்றால், நாவலந் தீவினுள் வேறெதோவொரு நாட்டில், ஊரில், குடியில் தான் இருக்க வேண்டும். நாடு நாடாய், 
ஊரூராய், குடி குடியாய்த் தேடின் அவர் தென்படாமலா போவார்? காற்றுவழி செல்லும் பாய்மரக் கப்பலில் ஏறி விலகிக் கிடக்கும் இரு பெருங்கடலிலும் ஏதேனும் ஒரு தீவுக்கு அவர் சென்றவரில்லையே? வானுலகும் போயிருக்க மாட்டாரே?. புவிக்கடியில் உள்ள பா(ள்)தல உலகத்திற்கும் சென்றிருக்க மாட்டாரே?” என்று அன்றைக்கிருந்த இயல்பான மெய்யியற் புரிதலோடு (philosophical understanding) தோழி இயம்புகிறாள்.
 
[பாளப்பட்ட தலம் பா(ள்)தலம். பா(ள்)தலம்>பாதலம்>பாதளம்>பாதாளம் என்பது நல்ல தமிழ்ச்சொல் தான். இங்கே நிலம் தொட்டுப் புகுதல் என்பதால் பாதலம் குறிக்கப் படுகிறது. தொடுதல் = பள்ளுதல், பாளுதல், பறித்தல், தோண்டுதல். இது ஏதோ ஒரு வடமொழிச்சொல் என்று நம்மிற் பலரும் நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் வடமொழியில் இதற்குச் சரியான வேரில்லை. இந்தச் சொல் முதன்முதலாய் மிகப் பிற்கால உவநிடதமான அருணேய உவநிடதத்திலும், மாபாரதத்திலும் தான் ஆளப்படுகிறதாம். அதோடு பாத = விழுதல் என்ற சொல்லே மூலமாக மோனியர் வில்லியம்சில் குறிக்கப் படுகிறது.
 
”நம் தலைவர் மூவேந்தர் அரசுகளைத் தவிர்த்து நாவலந்தீவினுள் தான் சென்றிருப்பார். எத்தனையோ வணிகக் குழுக்கள் இப்பாதைகளில் சென்று வருகின்றனவே? அக்குழுக்களின் மூலம் நம் காதலர் எங்கு போயிருக்கிறார் என்று உறுதியாக நாம் அடையாளம் காணலாம்” என்று அவள் காலத்துப் புரிதலை முன்வைத்துத் தோழி தலைவியை ஆற்றுப் படுத்துகிறாள். அப்படிச் சொல்லும்போது அந்தக் காலத் தமிழரின் உலகப் பார்வையும் (world view) நம்முன் அவிழ்ந்து விழுகிறது. பாட்டெழுந்த காலத்தையும் ஓரளவு நம்மால் ஊகிக்க முடிகிறது. அன்றைய மூவேந்தர் அரசுகளை விட்டு ஒருவன் வெளியே போவதாய் இருந்தால், அடுத்தடுத்த கடினப் பாங்குடன், நாவலந்தீவில் உள்ள மற்ற நாடுகள், கடற் பயணத்தின் வழி செல்லக் கூடிய தீவுகள், வானம், பாதலம் என்ற வரிசையிற் தான் பயணம் செய்ய முடியும். இப்படி அறுதியாக உரைப்பது ஒருவித மெய்யியற் பார்வையைச் சார்ந்தமட்டும்து. இந்தப் படிமானத்தைப் பாட்டின் முதல் நாலு வரிகள் கடினமான உகப்பில் (choice) இருந்து எளிதான உகப்பு வரை சொல்லுவதாய் தோழி அடுக்குகிறாள்.
 
இத்தகைய உலகப் பார்வை காட்டுவிலங்காண்டி காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் இல்லை. பாதலம் என்ற மெய்யியற் கட்டுமானம் சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் இருந்ததா என்று உறுதியாகச் சொல்ல நமக்கு ஆதாரங்கள் இதுவரை கிடையா. இருக்கு வேதத்தில் (கி.மு.1500) கூடப் பாதலம் என்று கருத்தியல் இருந்ததா (வான உலகம் என்ற கருத்தியல் அந்தக் காலத்தில் இருந்தது.) என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. (திரிபுரங்கள், மூவுலகங்கள் என்ற சிந்தனை இதைக் குறித்ததோ என்ற ஐயம் உண்டு.) வேத  நெறியை மறுத்து எழுந்த சாருவாகம் / உலகாய்தம், தொடக்க காலச் சாங்கியம் போன்றவை (கி.மு.800-600) மூவுலகக் கருத்தியலை முற்றும் ஏற்காதவை கண்ணுக்குத் தெரியும் காட்சியுலகை மட்டுமே உண்மை என்று அவை விளம்பின. ஆனால் அதே காலத்திலும் அவற்றிற்குச் சற்று முன்னும் (கி.மு.800களில்) எழுந்த உவநிடதச் சிந்தனைகளிலும் கி.மு.600 களில் எழுந்த வேத மறுப்பு இயக்கங்களான சமண நெறிகளிலும் (ஆசீவகம், செயினம், புத்தம்) ”நாம் வாழும் நிலம், நமக்கு மேலே உள்ளதாகக் கொள்ளப்பட்ட வானுலகம், நமக்குக் கீழுள்ளதாகக் கொள்ளப் பட்ட
பாதல உலகம்” என்ற மெய்யியற் கருத்தீடு தோன்றிவிட்டது. இந்தக் கருத்தீடு தோன்றியது தென்னகமா, வடபுலமா என்பது கேள்விக்குரியது.
 
பூருவ நுண்ணாய்ஞ்சையைப் (பூர்வ மீமாஞ்சையைப்) புறந்தள்ளி உயர் நுண்ணாய்ஞ்சையைத் (உத்திர மீமாஞ்சை) தன் கொள்கையாக வேதநெறியினர் கொண்டது கி.மு.800-600 காலமாகும், வேத மறுப்பாளர் வேத நெறியாளரோடு மூவுலக இருப்பில் ஒன்றுபட்டாலும் அவற்றின் ஆக்கத்தில் வேறுபட்டிருந்தார்கள். ”இந்த மூவுலகங்களையும் மாந்தனுக்கு மேம்பட்ட யாரோவொரு
இறைவன்தான் படைத்தான்” என்பது உயர் நுண்ணாய்ஞ்சை நெறியின் துணிபு. “இம்மூவுலகங்களும் என்றும் இருந்தன/இருக்கின்றன/இருக்கும். இவற்றை யாரும் படைக்கவில்லை” என்பது சமண நெறிகளின் கூற்று. ஆக முதற் கணிப்பாக இந்தப் பாடல் கி.மு.600 க்கு அப்புறம் எழுந்தது என்று சொல்ல முடியும்.
 
இனி நாவலந்தீவில் இருந்த வணிகக் குழுக்கள் எளிதாகப் போய்வர உறுதுணையாக இருந்த உத்திர, தக்கணப் பாதைகள் பெரிதும் பயன்பட்டிருந்த காலம் நந்தர், மோரியர் காலமாகும். சங்கத் தமிழிலக்கியங்களிலும் வரலாற்றுக் கால முதல் நிகழ்வாகப் பேசப்பட்டது முதலாம் கரிகாலனின் படையெடுப்பே. அது கி.மு.462 க்கு அருகில் நடந்திருக்க வேண்டும் என்று “சிலம்பின் காலம்” என்ற என் கட்டுரைத் தொடரில் நிறுவியிருந்தேன். அதற்கு அப்புறந்தான் நந்தர் காலத்தில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே வணிக உறவு பெரிதும் செழித்தது. நம் இலக்கியங்கள் அதற்கு அப்புறமே வடபுலத்துச் செல்வ நிலை பற்றிப் பேசுகின்றன. சங்க இலக்கியத்திற் பாதிப் பாட்டுக்கள் பாலைத்திணைப் பாட்டுக்கள். அதிலும் பல பாட்டுக்கள் வடக்கே வணிகம் நோக்கிப் பிரிந்து போன பாட்டுடைத் தலைவர்கள் பற்றிப் பேசுகின்றன. இங்கு வெள்ளி வீதியாரின் தோழியும் அது பற்றிப் பேசுகிறாள். சங்க காலம் என்பது கி.மு.462க்கு அண்மையிற் தொடங்கி கி.பி.200 வரைக்கும் தொடர்ந்தது போலும். இந்த 650 ஆண்டு காலத்தில் எப்பொழுது இந்தப் பாடல் எழுந்தது என்று உறுதியாகச் சொல்ல இயலாது.அதற்கான தரவுகள் பாடலில் இல்லை. அதே பொழுது கிடத்திருக்கும் தரவுகள் மிக எளிதாக இந்த 650 ஆண்டு காலக் கட்டத்துள் பொருந்துகின்றன.      
 
ஐம்பூதங்களை தம் உலகப் பார்வையுள் கொண்டுவருவது சங்கத் தமிழ் இலக்கியத்தில் பெரிதும் நடப்பதாகும். ஐம்பூதப் பார்வை ஒரு சாங்கியப் பார்வை. பின்னால் ஆசீவகத்திலும் அது பெரிதும் தழைத்தது  இங்கும், நிலம், வானம், முந்நீர் என்பவை பேசப்படுகின்றன. இதே போன்ற பார்வை தேவகுலத்தார் பாடிய குறுந்தொகை 2 ஆம் பாட்டில் வரும்.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
 
நாடனுடைய நட்பு நிலத்தினும் பெரிது, வானிலும் உயர்ந்தது, மூந்நீரினும் ஆழமானது. சமண நெறிகளின் தாக்கம் தமிழகத்திற் பெரிதும் இருந்திருக்க வேண்டும்.
 

 

No comments:

Post a Comment