Wednesday, October 13, 2010

தேன்மொழி கவிதைகள்

.தேன்மொழி கவிதைகள்

பிரியமானவர்களே வாருங்கள்
உலகின் மிகச் சிறந்த காதலனை
நாம் சந்திப்போம்

ஏதோ ஒன்றிலிருந்து தொடங்கக்
காத்திருக்கும் அவன்
எந்த வார்த்தையையும்
உச்சரித்தவன் இல்லை

விரிந்த தரையிலிருந்து
மேகங்களின் நகர்வை
ஆயிரம் கோடி கண்களால்
அளந்துகொண்டே இருக்கிறான்

ஊற்று பறித்து அணைகட்டி
நீரை சேகரிக்கிறான்
அழுக்கற்ற ஒரு மனம்
நீராட வரும் எனும்
உத்தரவாதம் ஏதுமின்றி

உன்னதங்களால் நிரப்புகிறான்
ஒரு குடுவையை
பரிசளிக்கவோ அல்லது நன்றியை
திரும்பப் பெறவோ அல்ல
சில புன்னகைகளை அது
பெற்றுத் தரும் என்பதால்

பூவுக்குள்ளிருந்து காதலியை
வடித்தெடுக்கும் முயற்சியில்
புசிக்காத கனிகள் அற்ற ஒரு
தோட்டத்தை உருவாக்குகிறான்

அவன் இருந்த இடங்களிலெல்லாம்
அந்தக் காதலி இல்லாதிருந்தாள்
ஆகவே தனிமையை
தேடித் தேடி அழிக்கிறான்

அவன் ஒரு சிலுவையை
செய்து வைத்திருக்கிறான்
நிராகரிக்கப்பட்டால்
சுமப்பதற்கும்
ஏற்றுக்கொண்டால் தன்னை
அறைந்துகொள்வதற்கும்.

2.

குளத்திற்குள் தண்ணீர் பாம்புகள்
கரைமீது கொட்டை வாழை செடிகள்
அவளது தாய்நிலம்
இருப்புக்கும் தவிர்ப்பிற்கும்
இடையே தளும்பிக் கிடக்கிறது

நிராகரிக்கப்பட்ட பாடல் ஒன்றை
தோள்வழி இறக்கி
பறையோடு கலந்தபோது
அவளது ஆடுகள்
கரம்பு நிலத்தைக் கரண்டிக் கொண்டிருந்தன

அவற்றுக்கு
புத்தகங்களிளிருந்த ஸ்டெபி பாம்பாஸ்
புல்வெளிகளை அறிமுகம் செய்து வைத்தாள்
காட்டு இலந்தை வாசம்
காணாமல் போனதொரு நாளில்
அவற்றை அழைத்துச் சென்று
புல்வெளிகளில் இளைப்பாற்றினாள்
தமது மொச்சை வாடையால் அந்தப்
புல்வெளிகளை ஆக்கிரமித்தன ஆடுகள்
அவற்றின் குரல் வெளிகளைக் கடந்தது

வறண்ட நிலத்தில்
இசை பொறுக்கிக் கொண்டிருக்கும்
அவளை நினைத்து
புல்வெளிக்குப் புரியாத
வேறு பாடலை இசைக்கத் தொடங்கின
ஆடுகள்

1 comment:

  1. ரவிக்குமார் சார், எந்திரனைப் பற்றிய உங்கள் விமர்சனத்தை சாருவின் தளத்தில் படித்தேன்.மிக நன்றாக இருந்தது.நன்றி

    http://denimmohan.blogspot.com/2010/10/blog-post_05.html

    ReplyDelete