Thursday, October 28, 2010

வாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்



உலகமயமாதல் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் சொற்களில் ஒன்றுதான், ‘அவுட்சோர்ஸிங்’. தமது நாட்டில் ஒரு வேலையைச் செய்வதற்கு அதிகமாக சம்பளம் தரவேண்டி இருப்பதால் அதே வேலையை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ளவர்களை வைத்து முடித்துக்கொண்டு செலவைக் குறைக்கும் வழியை அமெரிக்கா முதலிய நாடுகள் கண்டுபிடித்துள்ளன. தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிகம் பேசப்பட்டுவந்த இந்த ‘அவுட்சோர்ஸிங்’ முறை இப்போது அபாயகரமான வடிவத்தை எடுத்திருக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்வதையும் கூட இப்போது ‘அவுட்சோர்ஸிங்’ செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு மலிவான இடமாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பெண்கள் பலர் வாடகைத் தாய்மார்களாக (ஷிuக்ஷீக்ஷீஷீரீணீtமீ விஷீtலீமீக்ஷீs) மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
உடல் உறுப்பு வியாபாரம் வேகமாகப் பெருகிக் கொண்டிருக்கும் நமது நாட்டில் இப்போது ‘வாடகை அம்மாக்களின்’ எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது. சிறுநீரகத்தை விற்பதை விட இது பரவாயில்லையென்று அவர்கள் கருதக்கூடும். கருப்பையை வாடகைக்கு விடுவதன் மூலம் ஒரு லட்ச ரூபாய்வரை அவர்களுக்குக் கிடைக்கிறது. நமது நாட்டின் வறுமை நிலையை வைத்துப் பார்க்கும் போது இது லாட்டரி அடிப்பதற்கு சமம் என்றுதான் சொல்லத்தோன்றும். சிறுநீரகத்தை விற்பதால் ஏற்படும் உடல் நலக்கேடு இதில் உண்டாவதில்லை என்பது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஏஜெண்டுகளின் வாதம்.
மக்கள் தொகை வேகமாகப் பெருகிவிரும் நமது நாட்டிலும் கூட குழந்தை இல்லாத தம்பதிகள் ஏராளமாக இருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளிலோ அந்த எண்ணிக்கை இன்னும் அதிகம். இப்படி குழந்தையில்லாதவர்களின் குறையைத் தீர்ப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது தான் ‘டெஸ்ட்டியூப் பேபி’ முறையாகும். ஆனால் அதுவும் கூட பலருக்குப் பயனற்றுப் போய்விடுகிறது. இந்த நிலையில் தான் வாடகைக்குத் தாய்மார்களை அமர்த்திக் கொள்ளும் வழியை இப்போது மருத்துவ உலகம் கண்டுபிடித்துத் தந்திருக்கிறது.
வாடகைத் தாயாவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்தல் (கிக்ஷீtவீயீவீநீவீணீறீ மிஸீsமீனீவீஸீணீtவீஷீஸீ) என்பது ஒன்று. ‘டெஸ்ட் டியூப் பேபி’ எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐ.வி.எஃப் முறை என்பது மற்றொன்று. செயற்கை முறையில் கருத்தரிப்பதை ‘மரபான வாடகைத்தாய் முறை’ எனவும் அழைக்கிறார்கள்.
செயற்கை கருத்தரிப்பு என்பது தந்தையாக விரும்பும் ஒரு ஆணின் விந்தை எடுத்து ஊசி மூலமாக வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தி அவரது கருமுட்டையோடு கலக்கச்செய்து அவரை கர்ப்பமுறச் செய்வதாகும். குழந்தை இல்லாத தம்பதியில் பெண், சுத்தமாகக் கர்ப்பமுற வாய்ப்பே இல்லாது போனால் இந்த முறை கையாளப்படுகிறது. குழந்தையில்லாத பெண்ணுக்கு கருமுட்டை கூட உற்பத்தியாகாது என்ற சூழலில்தான் இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் வாடகைத்தாயாக வருபவருக்கு கருமுட்டை உற்பத்தியாவது தாமதமானால் மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி கருமுட்டையை உற்பத்தி செய்வதும் நடக்கிறது. இந்த முறையில் கருவை சுமக்கும் பெண்ணுக்கு அந்த குழந்தையோடு இறுக்கமான பிணைப்பு இருக்கிறது. இதனால் இந்த முறையைப் பெரும்பாலோர் விரும்புவதில்லை.
‘டெஸ்ட் டியூப் பேபி’ முறை என அழைக்கப்படும் ஐ.வி.எஃப் முறையில் நான்கு கட்டங்கள் உள்ளன. முதலில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருப்பையைத் தூண்டி கரு முட்டையை உருவாக்குகின்றனர். அடுத்து அந்த கருமுட்டையை கருப்பையிலிருந்து வெளியே பிரித்தெடுக்கின்றனர். பிரித்தெடுக்கப்பட்ட கருமுட்டையை ஆய்வுக்கூடத்தில் விந்தணுவுடன் சேர்த்து கரு உருவாக்கப்படுகிறது. கரு உருவானதும் அதை எடுத்து வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கின்றனர். கரு உருவாகி மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அது வாடகைத் தாயின் வயிற்றில் வைக்கப்படுகிறது. அப்படி வைக்கப்பட்டதும் அவர் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். இந்த முறைதான் உலகில் இப்போது அதிகம் கடைபிடிக்கப்படுகிற முறையாகும்.
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாடகைத் தாய்மார்களை அமர்த்தித் தருவதற்கு ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. அப்படியிருந்தும் அவர்கள் இந்தியாவைத் தேடி வருவதற்கு பணம் மட்டும் காரணமல்ல, அங்குள்ள கடுமையான சட்டங்களும் ஒரு காரணமாகும். இங்கிலாந்தை எடுத்துக்கொண்டால் வாடகைத் தாயாக இருப்பவர் தான் பெற்ற குழந்தைக்கு இரண்டு வயது ஆகும்வரை எப்போது விரும்பினாலும் குழந்தையைத் தானே எடுத்துக்கொள்ளலாமென சட்டம் சொல்கிறது. ஏராளமாகச் செலவு செய்து குழந்தை பிறந்தாலும் அது பறிபோய்விடுமோ என்ற அச்சம் செலவு செய்கிற தம்பதிக்கு இருக்கும். இந்தியாவில் அந்த தொந்தரவு கிடையாது. வாடகைத் தாய்க்கு சம்பளம் தருவதை பிரிட்டன் தடை செய்துள்ளது. அவர்கள் மருத்துவ செலவை மட்டுமே தரவேண்டும்.
அமெரிக்காவில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற வேண்டுமானால் சுமார் 25 லட்சம் ரூபாய் செலவாகும். வாடகைத் தாய்க்கு மட்டும் பத்து லட்ச ரூபாய் தர வேண்டும். இங்கிலாந்திலும் இதே நிலைதான். ஆனால் இந்தியாவில் வாடகைத் தாயாக இருப்பவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலே போதுமென்ற நிலை. அதுமட்டுமின்றி குழந்தைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று முதலிலேயே எழுதி வாங்கிக் கொள்கின்றனர். வெளிநாட்டிலிருந்து வந்து இங்கே குழந்தை பெறச் செய்து உடனே அவர்கள் எடுத்துக்கொண்டு போய்விடுவதால் அந்த வாடகைத் தாய் விரும்பினாலும்கூட அந்தக்குழந்தையை மீண்டும் சந்திக்க வாய்ப்பில்லை. இது குழந்தை பெற எண்ணும் தம்பதிக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறது.
மேலை நாடுகளில் வாடகைத் தாயாக யார் வேண்டுமானாலும் மாறிவிட முடியாது. அவரது ஆரோக்கியம், முதலில் பரிசோதிக்கப்படும். அவர் திருமணமாகிக் குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். அந்தக் குழந்தை உயிரோடு இருக்க வேண்டும். அவர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். குற்றப்பின்னணி கொண்டவராக இருக்கக்கூடாது. கடந்த காலத்தில் நடந்த பிரசவங்கள் குறித்த மருத்துவ விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இத்தகைய சட்டதிட்டங்கள் எதுவும் இந்தியாவில் இல்லை. ஐரோப்பிய நாடுகளிலிருந்து மட்டுமின்றி சிங்கப்பூர் முதலான ஆசிய நாடுகளிலிருந்தும் கூட குழந்தை வேண்டி பலர் இந்தியாவுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் வாடகைத் தாய்மார்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகப் பெருகி இருப்பதாகக் கூறப்படுகிறது. எத்தனைபேர் இப்படி இந்தியாவில் தமது கருப்பையை வாடகைக்கு விடுகிறார்கள் என்பது பற்றி சரியான புள்ளிவிரங்கள் இல்லை என்றபோதிலும் ஆண்டுதோறும் இப்படி நூறுமுதல் நூற்றைம்பது குழந்தைகள் வரை பிறப்பதாகக் கூறப்படுகிறது. உலகில் பிறக்கும் இப்படியான குழந்தைகளின் எண்ணிக்கையில் இது சுமார் கால் பங்காகும். இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளிலிருந்து மட்டுமின்றி ஃப்ரான்ஸ், போர்த்துக்கல், கனடா முதலான நாடுகளிலிருந்தும் கூட இந்தியாவுக்கு இப்படியான தம்பதிகள் குழந்தை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.
2004ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் 47 வயது பெண்மணி ஒருவர் தனது மகளுக்காக வாடகைத் தாயாக மாறினார். அவருக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு பெண் தனது பேரப்பிள்ளைகளைத் தானே சுமந்து பெற்ற அந்தச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற நகரத்தில் நடந்தது. அதன்பிறகு அங்கே வாடகைத்தாய் விஷயம் சஜகமானதாகிவிட்டது. இப்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாடகைத் தாய்மார்கள் குஜராத்தில் தான் இருக்கிறார்கள். கிராமத்துப் பெண்கள் இதில் அதிகம் ஈடுபடுகிறார்கள். கர்ப்பம் தரித்தும் அருகாமையில் உள்ள சிறு நகரம் ஒன்றுக்குச் சென்று தங்கியிருந்து குழந்தையைப் பெற்றுக்கொடுத்து விட்டு வந்து விட வேண்டியது. உறவினர்களோ, அண்டை வீட்டுக்காரர்களோ கேட்டால் குழந்தை இறந்து விட்டதென்று பொய் சொல்லிவிட்டால் போதும். இதுதான் குஜராத்தில் உள்ள வாடகைத்தாய்மார்கள் கையாளும் தந்திரம். இது பாவச் செயல் இல்லையா? எனக்கேட்கப்பட்டால், குழந்தையில்லாத ஒரு தம்பதிக்குக் குழந்தை பெற்றுத் தருவது புண்ணியம் தானே? என்று அந்தப் பெண்கள் கேட்கிறார்கள். இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தின் காரணமாக ஒருவரே மீண்டும், மீண்டும் வாடகைத் தாயாக இருக்கவும் முன்வருகிறார்கள். புதிதாக ஒருவரைக் கண்டுபிடிப்பதைவிட இது சுலபமானதாகத் தெரிவதால் ஏஜண்டுகளும் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஒரு குழந்தையைத் தந்து எடுப்பதைவிட இப்போது இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதையே பலரும் விரும்புகின்றனர். தத்து எடுக்கப்படும் குழந்தையோடு தத்து எடுப்பவர்களுக்கு ரத்த சம்பந்தம் எதுவும் இருப்பதில்லை என்பதால் உணர்வுபூர்வமான உறவு ஏற்படுவதில்லை. வாடகைக் குழந்தை என்பது மரபணு ரீதியில் (நிமீஸீமீtவீநீ) பார்த்தால் அவர்களது குழந்தை தான். எனவே இதை விரும்புவதற்கு நியாயம் இருக்கிறது.
இந்தியாவைப் போலவே சீனாவிலும் வாடகைத் தாய்மார்கள் பெருகிவருவதாகச் செய்திகள் கூறுகின்றன. அந்த நாட்டின் சட்டங்கள் கருப்பையை வாடகைக்கு விடுவதைத் தடை செய்துள்ளன என்ற போதிலும் சட்டத்தை மீறி இந்தத் தொழில் நடந்து கொண்டுதானிருக்கிறது. படித்த பெண்களுக்கு அங்கு கூடுதல் கிராக்கி. பட்டப்படிப்பு முடித்திருந்தால் அவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரைக் கூடுதலாக அங்கு தரப்படுகிறது.
வாடகைத்தாய் தொடர்பாக சட்டங்கள் கொண்டு வர வேண்டுமென்று இப்போது இந்தியாவிலும் கோரிக்கை எழும்பத் தொடங்கியுள்ளது. தேசிய பெண்கள் ஆணையம் இது தொடர்பாக முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். நமது நாட்டின் கதவுகளை வேகவேகமாக அந்நிய நாடுகளுக்குத் திறந்து விட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசு இதுபற்றி இதுவரை எந்தவித அக்கறையும் காட்டவில்லை.
சில்லறை வாணிபத்தில் அந்நிய முதலீட்டுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சோனியாகாந்தி இப்போது கருத்து தெரிவித்துள்ளார். இந்திய சந்தையைத் திறந்து விடலாமா? கூடாதா? என்பதில் கூட இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நமது நாட்டுத் தாய்மார்களின் கருவறைகளை அந்நிய நாட்டினருக்குத் திறந்து விடுவது நமது பெண்களுக்கு இழைக்கப்படும் அவமானமாகும்.
நாட்டைத் தாயோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டுகிற நாம், நமது தாய்மார்களை இப்படி வாடகைத் தாய்களாக வைத்திருப்போம் என்றால் அதைவிடக் கேவலம் வேறெதுவும் இருக்க முடியாது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கான சட்டங்களை இயற்ற வேண்டியது நமது அரசின் கடமை. பணத்துக்காக இந்தத் ‘தொழிலில்’ ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் இனியாவது தமது மருத்துவத்துறையின் பெருமையைக் காக்க முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment