Friday, October 29, 2010

கலைஞர் : குறளின் புதிய குரல் - ரவிக்குமார்




    தமிழக சட்டப்பேரவை - 2008 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள். அமைச்சர் ஒருவர் பற்றிய குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் எடுத்துரைக்கிறார்.  இறுக்கமான சூழல்.  முதல்வர் கலைஞர் பதிலளிக்கிறார்.  அந்தச் சூழலிலும்கூட அவருக்குத் திருக்குறள் ஞாபகம் "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங்கெடும்" என்ற குறளை எடுத்துச்சொல்லி அந்த அமைச்சர் பதவி விலகல் கடிதம் கொடுத்திருப்பதை அவைக்கு அறிவிக்கிறார்.  திருக்குறள் என்பது கலைஞரைப் பொருத்தவரை ஒரு அங்கம், இருளிலும் அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிழல்.

    நான் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்று அவையில் ஆற்றிய முதல் உரையின்போது திருக்குறளுக்குக் கலைஞர் எழுதியிருக்கும் உரையைக் குறிப்பிட்டுப் பேசினேன்.  புகழுரைகளையே எருவாய்கொண்டு தழைக்கும் இன்றைய அரசியல் சூழலில் எனது பேச்சும்கூட அதன் ஒரு பகுதியாய் "மற்றவர்களால்" புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம்.  ஆனால் நான் பேசியது எனது ஆய்வின் அடிப்படையிலான அறிவிப்பேயன்றி, பாராட்டு மொழியல்ல. 

    நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் திருக்குறள் உரைகளைத் தேடிப்பிடித்துப் படித்து வருகிறேன். திருக்குறளுக்கு ஏராளமானபேர் உரை எழுதியுள்ளளனர்.  மறைந்த எழுத்தாளர் சுஜாதாவைப்போல குறளுக்கு உரை எழுதுகிறேன் எனத் தனது போதாமையைக் காட்டிக்கொண்டவர்களும் உண்டு.  திருக்குறள் உரை பற்றிய எனது ஆர்வம் அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய முற்றுப்பெறாத உரையைப் படித்த பிறகு உண்டானது.  அயோத்திதாசப் பண்டிதர், தான் நடத்தி வந்த தமிழன் இதழில் (1907- 1914) திரிக்குறளுக்கு (திருக்குறள் என்பதை அயோத்திதாசப் பண்டிதர் திரிக்குறள் என்றே குறிப்பிட்டுள்ளார்) "தெரிந்து தெளிதல்"  என்ற அதிகாரம் வரை உரை எழுதியுள்ளார். தற்போதைய பதிப்புகளில் ஐம்பத்தொன்றாம் அதிகாரமாக இடம்பெறும் அது, அயோத்திதாசரின் கணக்கில் ஐம்பத்தைந்தாம் அதிகாரமாக இடம்பெற்றுள்ளது.  1914 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி அவர் இறக்கும் வரை தொடர்ந்து வெளிவந்த தமிழன் வார இதழில் அவரது திரிக்குறள் உரையும் பிரசுரமாகிவந்தது.  தமிழ் பெளத்த நோக்கில் அவர் திருக்குறளுக்கு எழுதியுள்ள உரையைப் படித்தபிறகு, இதுவரை தமிழில் வெளிவந்துள்ள உரைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் ஆர்வம் எனக்குள் உண்டானது.  பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து இந்திய அறிவுச் சூழலில் இந்துத்துவம் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம் அது.  திருக்குறள் உரைகளில் எவ்வாறு சமயச் சாயம் ஏறியிருக்கிறது  என்பதைப் பார்ப்பது எனக்கு சுவாரசியமான விளையாட்டாக இருந்தது.  அந்தச் சூழலில்தான் நான் கலைஞரின் உரையை வாசித்தேன்.  அவரது கருத்தியலின் ஆழத்தில், சமய வெறியோடு சமரசம் செய்துகொள்ளாத பகுத்தறிவின் கங்கு கனன்று கொண்டிருப்பதை அது எனக்குக் காட்டியது.  அவரது பேச்சில் எரிமலை உமிழ்வாக அவ்வப்போது அந்தக் கனல் வந்து விழுவதுண்டு.  அதனால் அவர் அரசியல் தளத்தில் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் ஏராளம்.  ஆனால் அந்த இடையூறுகளைஎல்லாம் தாண்டி கலைஞரைத் தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவராய் அடையாளப்படுத்திக் கொண்டிருப்பது அந்த அடியாழத்து நெருப்புதான்.  கலைஞருக்குள் கனலும் அந்த நெருப்பைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதில் திருக்குறளுக்கு மிக முக்கியமான பங்கிருக்கிறது.

    திருக்குறளுக்கு உரை எழுதுவதை "இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சி" எனக் கலைஞர் குறிப்பிடுகிறார்.  அந்தப் "பொன்னாடையை நெய்வதற்கான" காரணம் எதையும் அவர் கூறவில்லை என்றபோதிலும் திருக்குறளுக்கு இதுவரை எழுதப்பட்டுள்ள உரைகளில் சொல்லப்பட்டுள்ள பொருள்களைத் தாண்டி வேறு பொருளும் இருக்கிறது என்ற எண்ணமே அவரை உந்தியிருக்கிறது.  "குறளில் அவர் (வள்ளுவர்) கையாண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மை நிலையைக் கடைப்பிடித்து" இந்த உரையை எழுதியதாகக் கலைஞர் குறிப்பிடுகிறார்.

    பரிமேலழகர் முதல் மு. வரதராசனார் வரை "கடவுள் வாழ்த்து" என்று குறிப்பிட்டு உரை எழுதிய அதிகாரத்தின் தலைப்பை வழிபாடு என கலைஞர் மாற்றியமைத்துள்ளார்.  "வள்ளுவரைக் கடவுள் மறுப்பாளர் அல்லது கடவுள் நம்பிக்கையாளர் எனும் வாதத்திற்குள் சிக்க வைக்க நான் விரும்பவில்லை". என்று அதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார்.  அகர முதல எழுத்தெல்லாம்... எனத் தொடங்கும் முதல் குறளில் வருகின்ற 'ஆதிபகவன்' என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன் முடிபு என்கிறார் பரிமேலழகர்.  அதை 'கடவுள்' என சுருக்கிப் பொருளுரைத்திருக்கிறார் மு.வ. அயோத்திதாசப் பண்டிதரோ அது புத்தபிரானின் நாமத்தைத்தான் குறிக்கிறது என்று வாதிடுகிறார்.  இருளை விலக்கிய சூரியனுக்குப் பகலவனென்னும் காரணப் பெயர் உண்டானதுபோல மக்களுக்குள்ள காம, வெகுளி, மயக்கமெனும் அஞ்ஞான இருளை அகற்றி சாந்தம், ஈகை, அன்பென்னும் மெஞ்ஞான உதயம் செய்வித்தபடியால் புத்தருக்கு 'பகவன்' என்று பெயர்வந்ததாகக் கூறும் அயோத்திதாசர் அதற்கு ஆதாரமாக பாலி மொழி நிகண்டுவில் கூறப்பட்டிருப்பதையும், திருமூலர், இடைக்காட்டு சித்தர், சீத்தலை சாத்தனார், திருத்தக்கதேவர் ஆகியோரின் பாடல்களில் உள்ள ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றார்.  கடவுள் உண்டா? இல்லையா? என்ற கேள்விக்குப்பதில் காண்பது இயலாத காரியம் மட்டுமல்ல அது தேவையற்றதும்கூட என நம்பிய அயோத்திதாசரும்கூட கடவுள் வாழ்த்து என்ற தலைப்பை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை.  அதை 'கடவுள் வாழ்த்து என்னும் புத்தரது சிறப்புப் பாயிரம்'  என்று தனது நோக்கில் மாற்றியமைத்துள்ளார்.  அதே விதமான அணுகுமுறை கலைஞரிடம் தென்படுகிறது.  கலைஞர் இன்னும் ஒருபடி மேலே சென்று கடவுள்வாழ்த்து என்பதையே கைவிட்டு வழிபாடு என்று அதிகாரத் தலைப்பை மாற்றியமைத்திருப்பது திருக்குறளை மதச்சார்பற்ற பிரதியாக மாற்றி அமைக்கும் கலைஞரின் முயற்சிக்கு ஒரு உதாணமாகும்.  அதே நோக்கில் அதன் பத்துக் குறள்களுக்கும் கலைஞர் உரை எழுதியுள்ளர்.

    'அறவாழி அந்தணன்' என்று தொடங்கும் குறளில் உள்ள 'அந்தணன் என்பதற்குப் பொருள் சான்றோர்' எனக் குறிப்பிடுகிறார் கலைஞர்.  அறவாழி என்பது தருமசக்கரத்தைக் குறிக்கும் என்கிறார் அயோத்திதாசர்.  அப்படி ஒரு பொருள் இருப்பதைப் பரிமேலழகரும் ஏற்றுக்கொண்டுள்ளார் எனினும் அறக்கடல் என்றே அவர் பொருள் உரைத்துள்ளார்.  இக்குறளுக்கு தெளிவுரை எழுதியிருக்கும்   மு. வரதராசனார் 'அறவாழி அந்தணன்' என்பதை 'அறக்கடலாக விளங்கும் கடவுள்' என்று குறிப்பிடுகிறார்.  ஆனால் கலைஞரோ அதைச் சான்றோர் என அறிவு நிலையில் வைத்துப் பொருள் கூறியுள்ளளார்.  இது குறளை மத நீக்கம் செய்யும் கலைஞரின் முயற்சிக்கு இன்னொரு உதாரணமாகும்.  திராவிட இயக்கத்தின் அடையாளங்களுள் ஒன்றாய் திருக்குறள் மாற்றப்பட்டது என்றாலும், திராவிட இயக்கத் தலைவர்களில் பெரியார் தொடங்கிப் பலரும் திருக்குறளைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள் என்ற போதிலும் இப்படி அதற்குப் பொருளுரைக்க  முனைந்தது அனேகமாக கலைஞர் மட்டும்தான்.

    திருக்குறளின் கருத்துகளில் தனது மனதைப் பறிகொடுத்த கலைஞர், திருவள்ளுவரை சமகாலத் தமிழ்ச சமூகத்தின் நினைவில் பதிப்பதற்குப் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.  வள்ளுவர் கோட்டமும், குமரிமுனையில் சுனாமியின் சீற்றத்தையும் தாண்டி நெடிதுயர்ந்து நிற்கும் வள்ளுவரின் சிலையும் கலைஞரின் இந்த முயற்சிக்கு அடையாளங்கள்.  சட்டப் பேரவை கூடும்போது ஒவ்வொரு நாளும் குறள் ஒன்றைப் படித்து அதன் உரையையும் எடுத்துரைத்து பேரவைத் தலைவர் அவையைத் துவக்கி வைப்பது வழக்கமாயிருக்கிறது.  எப்போது உட்காரலாம் என எண்ணுகிற உறுப்பினர்களிடையே நுட்பமான ஒருசில செவிகளுக்குள்ளாவது குறளின் கருத்து நுழையாதா என்ற கலைஞருடைய ஆதங்கத்தின் விளைவே இந்த நடைமுறையாக இருக்கக்கூடும்.

    திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள உரையில் மிக முக்கியமாக சுட்டிக் காட்டப்படவேண்டியது பெண்ணிய நோக்கில் பொருளுரைக்கும் முயற்சியாகும்.  அயோத்திதாசப் பண்டிதர் ஆத்திச்சூடிக்கு எழுதியுள்ள உரை இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.  'தையல் சொற்கேளேல்' என்பதற்கு பெண்ணின் வார்த்தைகளைக் கேட்கக் கூடாது என்ற பொருளே பலராலும் கூறப்பட்டு வந்தது.  அதை மாற்றிப் புதிய கோணத்தில் அயோத்திதாசர் அதற்கு விளக்கமளித்திருக்கிறார்.  எதிரியால் உன்னைத் தைக்கக்கூறுமொழிக்கு செவி கொடுப்பாயாயின் கோபம் ஏற்பட்டு அவனுடன் போர்ச் செய்ய நேரும் அதனால் துக்கம் பெருகும்.  எனவே எதிரியின் அந்த மொழிக்கு செவி கொடுக்கவேண்டாம் என்று விளக்கம் அளிக்கிறார் அயோத்திதாசர்.  நமது இலக்கியப் பிரதிகளில் படிந்துள்ள ஆணாதிக்க சிந்தனையை அகற்றும் மிகக் கடினமான பணியின் துவக்கப் புள்ளியாக அயோத்திதாசரின் இந்த முயற்சியைப் பார்க்கலாம்.  அந்த வழியில் கலைஞர் குறளுக்கு விளக்கமளித்துள்ளார்.  பெண் வழிச் சேறல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள 'இல்லாளை அஞ்சுவான்' எனத் தொடங்கும் குறளுக்கு, 'தன் மனையாளுக்கு பயப்படுகிறவன், தான் தேடின பொருளேயானாலும், நல்லவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்கிறதுக்கு எந்நாளும் அஞ்சுவான்' என்று ஜைன உரையில் (சரசுவதி மகால் நூலக வெளியீடு) குறிப்பிட்டுள்ளனர்.  ஆனால் இந்தக் குறளுக்கு இதுவரை கூறப்பட்டுவந்த விளக்கங்களுக்கு நேர் எதிரான விளக்கத்தைக் கலைஞர் கூறுகிறார்.  'எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.' என்று கலைஞர் கூறியுள்ளார்.  பெண்டாட்டிக்கு அஞ்சி நடப்பது குற்றம் என மற்றவர்களெல்லாம் கூறும்போது 'தவறு நேராமல் கண்காணிப்பவள் மனைவி' என்று மனைவிக்கு உயர்ந்த இடத்தை வழங்குவது மட்டுமின்றி அப்படியான மனைவிக்கு அஞ்சி நடப்பது சரியானது என்ற பொருள்பட கலைஞர் உரை எழுதியிருக்கிறார்.   இப்போது பெண்ணியவாதிகள் நமது இலக்கியங்களைஎல்லாம்  முற்போக்கான கோணத்தில் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.  அவர்கள்கூட இதுவரை திருக்குறளுக்கு பெண்ணிய நோக்கில் உரை எழுத முற்படவில்லை.  இந்நிலையில் கலைஞரின் உரை பெண்ணிய நோக்கிலான உரையாகவும் திகழ்கிறது.

    நமது மண விழாக்களில் அதிகம் கூறப்படுகிற குறள் ஒன்று உண்டு.  'தெய்வம் தொழா அள் கொழுநற் றொழு தெழுவாள் பெய்யெனப்  பெய்யும் மழை' என்பதே அந்தக் குறள்.  கணவன் சொல்லைக் கேட்டு நடக்கும் பத்தினிப் பெண், பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்று அதற்குப் பொருள் சொல்வதுண்டு.  மழை இல்லாத காலங்களில் அதற்கான காரணங்களைத் தேடுபவர்கள் நமது நாட்டில் பத்தினிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதையும் ஒரு காரணமாகக் கூறுவதை கிராமங்களில் கேட்டிருப்போம்.  அதற்கு இந்தக் குறளுக்கு தரப்பட்டுவந்த விளக்கமே அடிப்படை.  ஆனால் கலைஞர் இந்தக் குறளுக்கு மிகவும் புரட்சிகரமான விளக்கத்தைக் கூறுகிறார்.  'கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினைவிட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்கொள்பவள் ஆவாள்' எனக் கலைஞர் உரை எழுதியுள்ளார்.  கணவனைத் தொழுவதே பத்தினிப் பெண்ணின் இலக்கணமாகக் கூறப்பட்டதை மாற்றி அது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்கிறார் கலைஞர்.

    திருக்குறளைப் போற்றுவதில் பல வகைகள் உண்டு.  அதில் இல்லாதது எதுவுமே இல்லை எனப் பெருமை பேசுவது உண்மையில் திருக்குறளுக்குப் புகழ் சேர்ப்பதாகாது.  அப்படி ஜம்பம் அடிப்பவர்களைப் பற்றி புதுமைப்பித்தன் திருக்குறள் குமரேசப்பிள்ளை என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  புதுமைப்பித்தனின் கூர்மையான விமர்சனத்துக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் சான்றாக இருப்பது அந்தக் கட்டுரை.  திருக்குறளை மலினப்படுத்தும் முயற்சிகளைக் கேலி செய்வதுதான் புதுமைப்பித்தனின் நோக்கம்.  குறளை நிராகரிப்பதல்ல.  ஆனால் இன்றைய தமிழ்ப் படைப்பாளிகளின் நிலையோ வேறு.  தமிழே படிக்காமல் இப்போது பட்டதாரி ஆகிவிடலாம் என்பதுபோல பழந்தமிழ் இலக்கியங்களின் வாசனையே இல்லாமல் இப்போது தமிழின் மாபெரும் படைப்பாளியாக வலம் வரலாம்.  தமிழ்ச் சூழலின் அவல நிலைக்கு இது ஒரு அடையாளம்.

    திருக்குறளை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்கக வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.  இன்பத்துப் பாலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்களுக்கு இளையராஜாவைக் கொண்டு இசையமைக்கச் செய்து செல்போன்களின் 'காலர் ட்யூன்களாக ' வழங்கினால் நல்ல வரவேற்பிருக்கும் என்பது என் எண்ணம்.  (அறம், பொருளும் கூட விதிவிலக்கல்ல)  கலைஞர் அவர்கள் இதைப் பரிசீலிக்க வேண்டும்.  நமது சினிமாக் கவிஞர்கள் பாடல் எழுதுவதற்குமுன் கொஞ்சம் குறளைப் புரட்டிப்பார்க்கலாம்.  அதிலிருந்து திருடுவதுகூட தப்பில்லை. நல்ல பாடல்கள் கிடைத்தால் சரிதான்.

    கலைஞர் அரசியல்வாதியாக இருந்து எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கிறார் முதலமைச்சராக இருந்து பல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்; பேச்சாளராக இருந்து மறக்க முடியாதபல உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.  ஆனால் அவை எல்லாவற்றையும்விட எழுத்தாளராக இருந்து அவர் தமிழுக்குச் செய்திருக்கும் பணியே மிக முக்கியமானது.  அதில் அவர் எழுதியுள்ள திருக்குறள் உரை குறள் உள்ளளவிற்கும் நிலைத்திருக்கும், தமிழ் உள்ளவரை நினைக்கப்படும். 

    ( 2008 ஆம் ஆண்டு , இந்தியா டுடே இதழின் சார்பில் வெளியிடப்பட்ட கலைஞர் சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை )

1 comment:

  1. மிக அருமையான கட்டுரை ரவிக்குமார்!
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    கீழே நீங்கள் பதித்த அயோத்திதாசர் கருத்து அருமை!

    // 'தையல் சொற்கேளேல்' என்பதற்கு பெண்ணின் வார்த்தைகளைக் கேட்கக் கூடாது என்ற பொருளே பலராலும் கூறப்பட்டு வந்தது. அதை மாற்றிப் புதிய கோணத்தில் அயோத்திதாசர் அதற்கு விளக்கமளித்திருக்கிறார். எதிரியால் உன்னைத் தைக்கக்கூறுமொழிக்கு செவி கொடுப்பாயாயின் கோபம் ஏற்பட்டு அவனுடன் போர்ச் செய்ய நேரும் அதனால் துக்கம் பெருகும். எனவே எதிரியின் அந்த மொழிக்கு செவி கொடுக்கவேண்டாம் என்று விளக்கம் அளிக்கிறார் அயோத்திதாசர். //

    வேறுசில இடங்களில் கருத்து மாறுபாடு உண்டு. பெய்யெனப் பெய்யும்
    மழை என்பது சங்க இலக்கியத்திலும் பயின்று வந்துள்ளது என்று
    பி.எல் சாமி எங்கோ குறிப்பிட்டதைப் படித்த நினைவு உள்ளது.
    அதாவது இப்பொழுது மழை பெய்தால் நன்றாக இருக்கும்
    என நினைத்தால் அப்பொழுதே மழை பெய்தால் எத்தனை
    இன்பம் பயக்குமோ அத்தனை இனியள் என்று பொருள் என்றும்.
    பெய்யெனப் பெய்தல் என்பது ஒரு மரபுத் தொடர் என்றும் படித்த
    நினைவு. தொழுதெழல் என்பது கூடி, சேர்ந்து எழுதல். தொழு என்பது
    சேர், கூடு. தொழுதி என்றால் கூட்டம். தொழுவம் என்றால் மாடுகள்
    சேர்ந்து கட்டியிருக்கும் இடம். தொழுகை என்றால் பலர் கூடுவது மட்டும்
    இன்றி உள்ளத்துள் ஒன்றித்து (சேர்ந்து) இருத்தல். கை இரண்டும் கூப்புவதும்
    (சேர்த்தி இருப்பதும்) தொழுதலைக் குறிக்கும்.

    பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தில் சேறல் என்பதும் பிற குறள்களும்
    கலைஞரின் கருத்தோடு ஒத்து உள்ளதா?

    உங்கள் கட்டுரையால் கலைஞரின் உரையைப் படிக்கவேண்டும் எனத்
    தூண்டுகின்றது. நன்றி.

    அன்புடன்
    செல்வா

    ReplyDelete