'சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். ஆனால் ஆண்கள் கொஞ்சம் கூடுதல் சமத்துவம் கொண்டவர்கள்' என்பது தான் நமது நடைமுறையாக இருந்து வருகிறது. நம் நாட்டின் சட்டங்களைப் பெண்ணிய நோக்கில் யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. தற்போது தேசிய மகளிர் ஆணையம் அதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியாக திருமதி கிரிஜா வியாஸ் வந்ததற்கு பிறகு அதன் செயல்பாடுகள் வேகமடைந்துள்ளன. பெங்களூரில் பிபிஒ மையம் ஒன்றில் பணி புரிந்த பெண் ஒருவர் கார் டிரைவரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அத்தகைய மையங்களில் பணி புரியும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மகளிர் ஆணையம் வழிகாட்டு நெறிகளை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தேசிய மகளிர் ஆணையம் அண்மையில் தெரிவித்துள்ள மூன்று பரிந்துரைகள் முக்கியமானவை. ஒரு ஆணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஒரு பெண்ணுக்கு சட்டப்பூர்வமாக ஒரு மனைவிக்கு உரிய அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று மகளிர் ஆணையம் கூறியுள்ளது. அதற்கேற்ப சட்டங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அது அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125ன் படி சட்டப்பூர்வமான மனைவியும், குழந்தைகளும், பெற்றோர்களும் ஒரு ஆணிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமையுள்ளவர்கள். முறைப்படி திருமணம் செய்துகொள்ளாத மனைவிக்கு இந்த உரிமை கிடையாது.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரு ஆணுடன் வாழ்ந்து குழந்தையும் பெற்றுள்ளார். அதன்பிறகு அந்த ஆண் அந்தப் பெண்ணை விரட்டியடித்து விட்டான். தனக்கு ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று அந்தப்பெண் வழக்கு தொடுத்தார். அவரது வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ''குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ் முறையான மண உறவில் பிறந்த குழந்தைகள் மட்டுமின்றி முறையற்ற உறவில் பிறந்த குழந்தைகளும் ஜீவனாம்சம் பெறத் தகுதியானவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் முறையாகத் திருமணம் செய்து கொள்ளாமல் மனைவியாக வாழ்பவருக்கு சட்டம் எந்தப் பாதுகாப்பையும் தரவில்லை. இதில் உரிய திருத்தம் கொண்டு வரவேண்டியது சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்களின் பொறுப்பு'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
திருமணம் செய்து கொள்ளாமல் மனைவியாக வாழும் ஒரு பெண்ணுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரமும் பாதுகாப்பும் இல்லாததால் அத்தகைய உறவை மறுப்பது ஒரு ஆணுக்கு எளிதாக இருக்கிறது. இந்த அவலத்தை மாற்ற வேண்டுமெனில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதே மகளிர் ஆணையத்தின் வாதமாகும். அண்மையில் நடைமுறைக்கு வந்துள்ள குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் திருமண உறவு மட்டுமின்றி திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் பெண்களையும் உள்ளடக்கியே இயற்றப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை முன்னுதாரணமாகக்கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என மகளிர் ஆணையம் கோரியுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் பழக்கம் இந்தியாவின் நகர்ப்புறங்களில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திரையுலகப் பிரபலங்கள் பலர் இப்படி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகர் ஆமீர்கான், கிரண் ராவோடு வெகுகாலம் சேர்ந்து வாழ்ந்து வந்தார். பிறகு தான் அவரைத் திருமணம் செய்து கொண்டார். புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ரியா பிள்ளை என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் இந்த வழக்கம் பரவலாக உள்ளது. நகரங்களைப் போல விருப்பத்தின் அடிப்படையில் அல்லாமல் அங்கு பல்வேறு நிர்ப்பந்தங்களால் பெண்கள் அப்படியான வாழ்க்கையை வாழ வேண்டியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் சேர்ந்து வாழ்க்கை நடத்தினால் அவரை சட்டப்பூர்வமான மனைவியாகவே கருதவேண்டும் என ஏற்கனவே மலிமத் கமிட்டி பரிந்துரைத்திருந்தது இங்கே நினைவு கூரத்தக்கதாகும்.
மகளிர் ஆணையம் செய்துள்ள அடுத்த பரிந்துரை 'கள்ள உறவில்' ஈடுபடும் பெண்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 497ல் திருத்தம் கொண்டு வருவதைப் பற்றி தேசிய மகளிர் ஆணையத்தின் கருத்தை மத்திய அரசு கேட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்துள்ள மகளிர் ஆணையம் 'பிற ஆணோடு கள்ள உறவில் ஈடுபடும் பெண்ணை பாதிக்கப்பட்டவராக (க்ஷிவீநீtவீனீ) பார்க்க வேண்டுமேயொழிய குற்றம் செய்தவராகப் பார்க்கக்கூடாது' என்று கூறியுள்ளது. தற்போதைய ஆணாதிக்க சமூகத்தில் பெரும்பாலான 'கள்ள உறவுகள்' ஆண்களின் வற்புறுத்தலால்தான் நடக்கின்றன.
சட்டத்தின் முன்பு ஆண், பெண் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 497ன் கீழ் பெண்ணுக்கும் தண்டனை தர வேண்டும் என மலிமத் கமிட்டி கூறியுள்ளது. கள்ள உறவில் ஈடுபடும் ஆணுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் தற்போதைய சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. பெண்ணுக்கு இதே தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்பது மலிமத் கமிட்டியின் நிலைபாடு. ஆனால் பெண்களைப் பொறுத்தவரை 'கள்ள உறவு' என்பதை சமூக வழுவாகப் பார்க்க வேண்டுமே தவிர அதை கிரிமினல் குற்றமாகப் பார்க்கக்கூடாது என்பது தேசிய மகளிர் ஆணையத்தின் வாதமாகும்.
ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ள நாடுகளில் 'கள்ள உறவில்' ஈடுபடும் பெண்களைப் பொது இடத்தில் நிறுத்திக் கல்லால் அடித்துக் கொல்கிற வழக்கம் இப்போதும் நடைமுறையில் உள்ளது. பாகிஸ்தான் சட்டப்படி ஒரு பெண் தான் கற்பழிக்கப்பட்டதாகப் புகார் கூறினால் அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருடையது தான். அதற்கு நான்கு ஆண்களை சாட்சிகளாக அவர் கொண்டு வர வேண்டும். அந்த ஆண்களும் கூட முஸ்லீம்களாக இருக்க வேண்டும். கற்பழிப்புக் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் அந்தப் பெண் 'கள்ள உறவில்' ஈடுபட்டதாக கருதப்பட்டு அவருக்குத் தண்டனை வழங்கப்படும். தற்போது பாகிஸ்தான் சிறைகளில் உள்ள பெண்களில் பாதிபேர் 'கள்ள உறவில்' ஈடுபட்டதான குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் தான். ஈரான் நாட்டில் அண்மையில் ஒன்பது பெண்கள் இந்தக் குற்றத்துக்காக கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். நமது நாட்டிலும் கூட அப்படியான கொடூரச் சட்டங்கள் ஒரு காலத்தில் இருந்துள்ளன.
குடும்பம் என்ற அமைப்பு உருவான காலந்தொட்டே குடும்பத்துக்கு அப்பாலான கள்ள உறவும் இருந்தே வந்துள்ளது. டால்ஸ்டாயின் 'அன்னா கரினீனா', ஷேக்ஸ்பிரியரின் 'மாக்பெத்' போன்ற மகத்தான இலக்கியங்கள் கள்ள உறவைப் பற்றிப் பேசுபவைதான்.
கள்ள உறவு என்பது நம்பிக்கை துரோகமாகக் கருதப்பட்டு சமூகப் பிரச்சனையாகவே அணுகப்பட வேண்டும். பெண்ணை தனது சொத்தாக கருதும் ஆணாதிக்க மனோபாவமே குடும்பத்துக்கு அப்பால் உறவு கொள்ளும் பெண்ணுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்று கூறியுள்ள மகளிர் ஆணையம், இது தொடர்பாக பொது விவாதம் நடத்தப்பட்டு கருத்தொற்றுமை எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. மகளிர் ஆணையம் தெரிவித்துள்ள இந்த கருத்தையொட்டி இதுவரை மாதர் அமைப்புகள் எதுவும் கருத்து தெரிவிக்காதது வியப்பளிக்கிறது.
இந்தியாவில் ஆண், பெண் விகிதம் மோசமாகக் குறைந்து வருவதும் கூட திருமணத்துக்கு அப்பாலான உறவுகள் உருவாகக் காரணமாக இருக்கக்கூடும். அடுத்த இருபது ஆண்டுகளில் பெருமளவில் மணமகள் பற்றாக்குறை ஏற்படும் என்று ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இந்தியாவில் 1981க்கும், 1991க்கும் இடையில் ஒரு கோடி ஆண்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் இருந்தனர் எனவும், தற்போது சுமார் 4 கோடி ஆண்கள் பெண் தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. கருவிலேயே பெண் குழந்தைகளைக் கண்டறிந்து கொல்கிற கொடுமை இந்தியாவில் அதிகரித்து வருவதாக ஐ.நா. சபை சுட்டிக் காட்டியுள்ளது. இந்தச்சூழலில் 'பிறன்மனை நோக்காப் பேராண்மை'யைப் பற்றி பேசினால் அதை நமது இளைஞர்கள் கேலியாகத்தான் பார்ப்பார்கள். 'கள்ள உறவு என்பது காதலின் ஜனநாயகம்' என்று ஒரு மேற்கத்திய எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலும் கூட அதை ஏற்கும் காலம் நெருங்குகிறது போலும்.
மூன்றாவதாக மகளிர் ஆணையம் செய்துள்ள பரிந்துரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பற்றியதாகும். அந்த சட்டத்தின் பிரிவு 198(2)ல் திருத்தம் செய்ய வேண்டும் என்று மகளிர் ஆணையம் கூறியுள்ளது. கணவன் ஒருவன் வேறு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தால் அதற்காக அவனது மனைவி வழக்கு தொடுக்க முடியாத நிலையை அந்த சட்டப்பிரிவு ஏற்படுத்தியுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 498(கி)ல் ஒரு மனைவிக்கு அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளபோது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் ஏன் அது தடுக்கப்பட வேண்டும்? என்று மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. கணவன் மீது மனைவியோ, அல்லது அவரது உறவினரோ மட்டும் தான் வழக்கு தொடுக்க முடியும் என்ற சட்டப்பிரிவையும் திருத்தி மனைவிக்காக பெண்ணுரிமை அமைப்புகள் கூட புகார் செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் மகளிர் ஆணையம் வற்புறுத்தியுள்ளது.
திருமணங்கள் எல்லாவற்றையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இன்னும் கூட போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கற்பழிப்பு வழக்குகளை பெண் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் கூட நடைமுறைக்கு வராமல் தான் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இப்போது பெண் நீதிபதி ஒருவர் கூட இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி அல்ல. பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் நமது நாடு பின்தங்கியே இருக்கிறது.
தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு. பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை பத்து ஆண்டுகளாக முடக்கிப் போட்டுள்ள நம் ஆட்சியாளர்கள் இந்த சட்டத்திருத்தங்களை அவ்வளவு எளிதாகச் செய்து விட மாட்டார்கள்தான். இதற்காக மகளிர் இயக்கங்கள் வலுவாகக் குரல் எழுப்ப வேண்டும். சமத்துவத்தில் நம்பிக்கையுள்ள எல்லோருமே அந்தக் குரலை எதிரொலிப்போம்.
நன்றி : ஜூனியர் விகடன்
No comments:
Post a Comment