‘காணமுடியாக் கனவு’
முன்னுரை
போன நூற்றாண்டு பின் எண்பதுகளில் நான் புதுச்சேரியில் இருந்தபோது, இளைமைத் துடிப்புடன் கூடிய ஒரு புதிய அறிவு ஜீவி உலகம் எனக்கு அறிமுகமாயிற்று. அதற்கு ரவிக்குமாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் என்னைச் சந்தித்து, அவரும் மற்றைய இளைஞர்களும் இணைந்து நடத்தி வந்த ‘நிறப்பிரிகை’ என்ற பத்திரிகையை’ எனக்குத் தந்தார்.
புரட்சிகரமான எண்ணங்கள் என்றால், அலங்காரச் சொற்களால் பின்னப்பட்டஅரசியல்- பாலியல் கவர்ச்சிக் கோஷங்களின் அணிவரிசை என்றிருந்த அக்கால கட்டத்தில், ஆழமான அறிவு வீச்சுடன் கூடிய கட்டுரைகளைத் தாங்கி வந்த அப்பத்திரிகையைப் படித்த போதுதான் தமிழ் நாட்டில், ஆரவாரமின்றி, ஆனால் வேர்கொண்டு நிகழ்ந்துவரும், சிந்தனையை அடித்தளமாகக் கொண்ட, அறிவு சார்ந்த ஒரு மாற்று உலகம் எனக்குத் தெரிய வந்தது. ரவிக்குமாருக்கும் எனக்குமிடையே ஏற்பட்ட நட்புக்கு இது அடிக்கல்லாக அமைந்தது. ஐரோப்பிய,அமெரிக்கப் பல்கலைக்கழகத் தாழ்வாரங்களில் எண்பதுகளில் ஒலித்த டெரிடா, அல்தூஸர், லெவி ஸ்ட்ராஸ், ஃபூக்கோ போன்ற பெயர்கள், ‘நிறப்பிரிகை’யில் மிக இயல்பாக இடம் பெற்றிருந்தன என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.. சமூகக் கலாசார உரிமைகள் இனி எந்த இனத்தினுடைய மேலதிகாரமாக இருக்க இயலாது என்பதை இது உணர்த்தியது.
ரவிக்குமாரின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுதி இந்நூல்.
‘ ‘படைப்பியல் கட்டுரை’ (Creative essay) என்பது அண்மைக்காலத்திய புது வகையான வரவு’ (genre)என்று சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ‘புஷ் கார்ட்’ இலக்கியத் தொகுதி அறிவித்தது. அவ்வாறு சொல்வதற்கு இல்லை என்றாலும், (காரணம், ஆலிவர் கோல்ட்ஸ்மித், சார்ல்ஸ் லாம்ப், ஜி.கே.செஸ்டர்டன் போன்றவர்கள் இவ்வகையான கட்டுரைகள் கடந்த நூற்றாண்டுகளில் எழுதியிருக்கிறார்கள்)) இலக்கிய விமர்சனத்தைப் ‘படைப்பியல் ஆக்கமாக’(creative literary) criticism) ரவிக்குமார் அளித்திருப்பது புது வரவு என்று சொல்ல வேண்டும்.
‘படைப்பியல் ஆக்கம்’ என்று நான் சொல்வதற்குக் காரணம், பொதுவாக,ஒரு புத்தகத்தை விமர்சனம் செய்கின்றவர்கள், அந்நூல் எப்படி படித்த பிறகு அவர்களை எப்படி அந்நூலைத்தாண்டிச் சிந்திக்க வைக்கின்றது என்பதைப் பற்றி எழுதுவது இல்லை.நூலின் கிணற்று எல்லைக்குள் சுற்றி சுற்றிவருவதுதான் பொது இயல்பு. ஆனால், ரவிக்குமாருக்கு அவர் படிக்கின்ற நூல் ஒரு ‘தொடக்கக் கேந்திரமாக’ (take-off point)
அமைந்து, அந்நூல் வழியே அவரை உரக்கச் சிந்திக்கத் தூண்டுகிறது. இத்தொகுதியில் உள்ள பெரும்பான்மையானக் கட்டுரைகள் இந்நிலையில்அமைந்திருக்கின்றன..அவ்வாறு சிந்திக்கத் தூண்டும் எந்த நூலும் குறிப்பிடத் தக்க நூலாக இருக்க வேண்டுமென்பதும் அவசியமாகின்றது. சிந்திக்கத் தூண்டாத நூலைப் பற்றி எழுத வேண்டுமென்ற அவசியமும், எந்த நல்ல விமர்சகனுக்கும் இல்லை.
ஒரு மிகச் சிறந்த படைப்பாளியை வரையறுக்கப்பட்ட ஒரு கோட்பாட்டுச் சிறைக்குள் அடைத்துவிட முடியாது. அவன் ஒரு குறிப்பிட்ட இட, கால எல்லைக்குள்ளிருந்து அவன் காலத்திய சமூகத்தை மனத்தில் கொண்டு எழுதியிருந்தாலும், அவன் படைப்பின் வீச்சு இவற்றைத் தாண்டி, எல்லாக் காலத்துக்கும் அர்த்தப் படுவதாய் அமைந்து விடுகின்றது. ஷேக்ஸ்பியரையோ, திருவள்ளுவரையோ, எந்தக் கால, இட, கோட்பாட்டுச் சிமிழியில் அடைத்து விடமுடியும்? ஆகவே தான், புதுமைப் பித்தனைப் பற்றி எழுதும் போது, ரவிக்குமார், அவர் (புதுமைப்பித்தன்) நவீனத்வத்தைத் தாண்டிச் சென்றார் என்று கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. புதுமைப்பித்தனுடைய சில கதைகளை இப்பொழுது நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடிவது போல், அவர் காலத்தில் நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகந்தான். ஷேக்ஸ்பியர் படைத்த ஃபால்ஸ்டாஃப்(Falstaff) பின் நவீனத்வக் காலத்திய கலகக்காரன். அவனுக்கு எதுவுமே புனிதமில்லை. அண்மைக் காலத்து வரை அதிகம் படிக்கப் படாமல், மேடை ஏறாமலிருந்த, ஷேக்ஸ்பியரின் ‘ Troilus and Cressida’ என்ற நாடகம்,இன்று, அவருடைய படைப்புக்களிலேயே மகத்தானதாகக் கருதப் படுகின்றது.. காரணம் அது எழுப்பும் கேள்விகள்.. சிறந்த ஆக்கங்கள், கேள்விகளுக்கு விடை தருவன அல்ல. புதுக் கேள்விகளைச் சிந்திக்கத் தூண்டும். புதுமைப்பித்தனைப் பற்றிய ரவிக்குமாரின் கட்டுரை, ஒரு நல்ல வாசகனின் மனத்தைப் பல பரிமாணங்களில் சலனப் படுத்தும்
கட்டுரை.
மொழிபெயர்ப்பைப் பற்றிய ‘காணமுடியாக் கனவு’ பல கேள்விகளை எழுப்புகின்றது.
‘மொழி ஆக்கம்’ என்பதைக் காட்டிலும், ‘மொழிபெயர்ப்பே’ சரியான சொல்லாட்சி என்று ரவிக்குமார் கருதுகின்றார்.’பெயர்ப்பு’என்ற சொல் ‘போக்குதல்’ ‘தன்வயப்படுத்திக் கொள்ளுதல்’ என்ற இரண்டி எதிரெதிரான அர்த்தங்களை ஒருங்கே கொண்டிருக்கிறது.
அதனால் உண்டாகும் ஈர்ப்பின் ஆற்றலைக் கருத்தில் கொண்டு, ‘மொழி ஆக்கம்’ என்பதைக் காட்டிலும், ‘ மொழிபெயர்ப்பு’ என்று சொல்வதே சரி என்று கருதுகிறேன்’ என்கிறார் ரவிக்குமார்.
ஆங்கிலத்தில் உள்ள ‘ Translation’ என்ற சொல்லினுடைய லத்தீன் வேர்ச்சொல்லின் பொருள் ‘அக்கரைக்கு அழைத்துச் செல்லுதல்’ அதாவது நாம் இக்கரையயிலேயே இருந்து கொண்டு,அக்கரையின் வளங்களைக் கண்ணாரக் கண்டு களிப்பதற்கு வகை செய்தல். அக்ரையில் உள்ளவனவற்றை அநுபவிக்க இக்கரையில் நமக்குப் பாரம்பரியமாக நமக்கு இருந்து வரும் கலாசாரத் தொடர்புகளின் நினைவாற்றலிலேதான் சாத்தியமாகும். கம்பனின் அயோத்திமா நகர் பூகோள வருணனை, தமிழ்நாட்டுக் கலாசார ஐந்திணை சித்திரங்களின் அடிப்படையிலேதான் அமைந்திருக்கின்றது. வான்மீகி ராமாயணத்தைக் கம்பன் எவ்வாறு ‘தன்வயமாக்கு’கிறான் என்பதை இது உணர்த்தும்.
ஆசையினால் அறையலுறும் மொழிபெயர்ப்புகளே சிறந்து அமையும் என்று ரவிக்குமார் சொல்வது உண்மைதான். உமர்கய்யாமின் ‘ருபையத்’ உலகமெங்உம் பரவுவதற்குக் காரணம், இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஃபிட்ஜ்கெரால்ட்தான். ஆனல், பாரசீக மொழிப் பண்பாட்டாளர்கள், ஃப்ட்ஜ்கெரால்ட் இம்மொழிபெயர்ப்பில், ‘நிறையச் சுதந்திரம்’ எடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். ‘ருபையத்தை’ப் பாரஸீக மொழி அறிஞரான சையத் ருடால்வி என்ற என் தில்லி நண்பர் ஒருவர் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்துச் சொல்ல நான் கேட்டபோது, எனக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டாக்கின அந்த இலக்கிய அநுபவம் கிடைக்கவில்லை.. காரணம், பாரசீக மொழியின் உள்ளார்ந்த, இலக்கியப் பண்பாட்டு நயங்களைப் (literary nuances)பற்றிய என் அறியாமையே என்று நினைக்கின்றேன். அவ்வகையில், ஃபிட்ஜ்கெரால்ட் எடுத்துக் கொண்ட ‘சுதந்திரம்’ தேவையோ என்று கூட எனக்குப் பட்டது.
பெண்மொழி ஆக்கங்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்களையும் ரவிக்குமார் நுணுக்கமாக ஆராய்கிறார். நம் இலக்கிய மரபில், ஆண் கவிஞர்கள் மட்டுமன்றி, பெண்கவிஞர்களும் கூட பெண்ணின் அந்தரங்க உடலுறுப்புக்களைப் பற்றித்தான், விரக தாபத்தின் போது பேசுவதாகப் பாடல்கள் வருகின்றன. ‘தன்னுடை முலைகளைக் கிழங்குடன் பறித்து விரக தாபம் நீங்க கண்ணன் மீது எறிவேன்’ என்கிறாள் ஆண்டாள். ஆண்களின் அந்தரங்க உறுப்புக்களைப் பற்றி எந்த ஆண் அல்லது பெண் கவிஞரும் குறிப்பிடுவதாக இலக்கியச் சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை..
ஆணின் அந்தரங்கம் பேணப்பட்டு, பெண்ணின் அந்தரங்கம் பகிரங்கமாக ஆவதற்குக் காரணம், பெண் தொன்று தொட்டு உடைமைப் பொருளாகத்தான் கருதப்பட்டாள் என்பது காரணமாக இருக்கலாம்.
ரவிக்குமாரின் ஒவ்வொரு கட்டுரையைப் பற்றியும் தனித்தனியாக ஒவ்வொரு நூல் எழுத முடியும். ஆழமான, சிந்தனையைக் கிளரும் கட்டுரைகள்.
- இந்திரா பார்த்தசாரதி.
No comments:
Post a Comment