Wednesday, October 27, 2010

நிரம்பிய கூடை - அனார்




நான் வாசனையை சொற்களாக்கிக் கொண்டிருந்தேன்
எனது காதலும் அப்படித்தான்
என்னை பளுவற்று நறுமணமென மிதக்கச்செய்கிறது

உன்னை அழைக்கிறேன் எப்போதுமுள்ள கர்வத்துடன் 
என்னுடைய மேன்மைகளுக்கு 
எனது அப்பழுக்கற்ற  முழுமைக்கு

மின்னல்களுக்கு ஒளி பாய்ச்சிச் செல்கிறாள்
தேவதைகளின் ராணி

இதோ அண்மையில் நிரம்பிய கூடை
காட்டுப் பூவிலிருந்து எடுத்த முத்தம்
நீரின்  சல சலப்புக் கேட்கும் மேனி
‘அனாகத நாதம்’ தோய்ந்த பாரம்பர்யமான பியானோ

என் மகத்தான கவிதைகளில் 
கீர்த்தி  மிக்க வரலாறென நீ வீற்றிருக்கலாம்

இலையுதிர்கால  வனத்தின் மறைவிடங்களில் 
மின்னல் ஒளி குதிரையென பாய்கின்றது

வெளுத்து முளைக்கின்றது மழை நின்ற பிறகான வானம்

உன்னை அழைக்கிறேன் என்னுடைய மேன்மைகளுக்கு 
எனது அப்பழுக்கற்ற  முழுமைக்கு

சவால்கள் வெல்லப்பட்டு விடும்
நமது பெருமிதங்கள் நமது ஆற்றல்களோடு கலக்கும்

காதல் உலகத்துடைய  இரு உயிர்களை  
சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்லும்

No comments:

Post a Comment