கரையேறுவார்களா கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள்? |
ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில் அரசியல் விறுவிறுப்புக்கு என்றுமே குறைவில்லை. தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் என அனைத்துக் கட்சியினருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் இந்த மாவட்டத்தில் தொகுதி நிலவரம் பார்க்க பல்வேறு தரப்பிடமும் பேசினோம். கடலூர்: தி.மு.க-வில் சேர்ந்து குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ-வான ஐயப்பன், சாதனைகளைக் காட் டிலும்... சங்கடங்களையே அதிகம் சம்பாதித்து இருக்கிறார்! வர்த்தகர் களிடம் நிதி கேட்டு இம்சைப்படுத்தும் இந்த ஏரியா அரசியல் வழக்கத் துக்கு மாறாக, அதில் ஒதுங்கியிருப்பது மட்டுமே இவருக்கு இருக்கும் ப்ளஸ்! மற்றபடி தொகுதி நிதியைப் பயன்படுத்தி ஓரளவுக்கு சில பணிகளைச் செய் திருக்கிறார். ஆனாலும், வன்னியர் மற்றும் மீனவர் வாக்குகள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வரான ஐயப்பன் பெரிதாக சாதித்து இருந்தால்தான் மீண்டும் சாதிய பலமில்லாமல் ஜெயிக்க முடியும். அதைச் செய்யாததுதான் சிக்கலே! பண்ருட்டி: தொடர்ந்து இரண் டாவது முறையாக இங்கே வென்று இருக்கிறார் பா.ம.க-வின் வேல் முருகன். அனல் பறக்கும் பேச்சால் கட்சியில் ஸ்டார் அந்தஸ்து பெற்ற இவர், கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது வெறும் 46 ஓட்டு வித்தியாசத்தில்தான்! தொகுதி மற்றும் மாநிலம் தழுவிய பிரச்னை களுக்காகக் கடுமையாகப் போராடுவதால் தொகுதி வாசிகளுக்கு இவர் மீது ஈர்ப்பு உண்டு. அதேநேரம், வேல்முருகனின் தடாலடிப் பேச்சு அவர் மீது சற்று பயம் கலந்த பார்வையை பதியச் செய்திருப்பதும் நிஜம்! வன்னிய வாக்குகள் அதிகமாக இருப்பதால், சற்று சிரமப் பட்டாலும் கடந்த முறை போலவே குறைந்த வித்தியாசத்திலாவது ஜெயித்துவிடுவார்! குறிஞ்சிப்பாடி: இந்தத் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். தொகுதி யில் எந்தக் கட்சியிலும் இவரைத் தாண்டி யாரும் பெரிதாகத் தலையெடுக்க முடிந்ததில்லை. அதில் எம்.ஆர்.கே. வல்ல வர். அமைச்சர் தொகுதி என்ற காரணத்தினால் அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் பெருமளவில் மக்களைச் சென்று அடைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தின் எந்தத் தொகுதி யிலும் இல்லாத அளவுக்கு குறிஞ்சிப்பாடி தொகுதியில் இவர் சார்ந்த வன்னிய இன ஓட்டுகள் அதிகமாக உள்ளது. இன்றைய நிலைமைக்கு இவருக்கு இங்கே வெற்றி நிச்சயம்! புவனகிரி: இங்குஜெயித் தவர் அ.தி.மு.க- வின் செல்வி ராம ஜெயம். தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு வாக்கு வங்கியும் அதிகம்! எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருப்பதாலோ என்னவோ... தொகுதியில் இவ ரால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. அதேசமயம், அரசு உதவிகளை போராடிப் பெறுவதற்கு இவர் மெனக்கெடவும் இல்லை. அதனால் தொகுதிவாசிகளின் அதிருப்திக்கு ஆளாகி இருக்கிறார். ஆள் மாற்றிப் போடுவதில் அசராத அ.தி.மு.க. தலைமை, இந்த முறை மீண்டும் இவருக்கு ஸீட் கொடுக்குமா என்பதும் சந்தேகமே... ஒருவேளை கிடைத்தால் வெற்றியும் அதுபோலவே அதிசயமாகத்தான் இருக்கும்! விருத்தாசலம்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் தொகுதி! பா.ம.க-வின் கோட்டையான இந்தத் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றபோது தமிழகம் திரும்பிப் பார்த்தது. ஆனால், அந்த வியப்பை விஜயகாந்த் தக்க வைக்கும் விதமாகச் செயல்படாதது வேதனை. ஒரு எம்.எல்.ஏ-வாக செலுத்த வேண்டிய நேரத்தையும் கவனத்தையும் விருத்தா சலம் மீது இவர் செலுத்தவில்லை என்று மக்களுக்குக் குறை இருக்கிறது. பெரிய அளவில் அரசு நலத் திட்டங்களை தொகுதிக்குள் கொண்டுவர முடியாமல் போன தும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக் கிறது. 'தி.மு.க-வின் திட்ட மிட்ட புறக்கணிப்பு' என்று குற்றச்சாட்டு வைத்துக்கொண்டே, தனது சொந்தப் பணத்தில் ஓரளவுக்கு நலத்திட்டங்களைச் செய்தும் இருக்கிறார் விஜயகாந்த். விருத்தாசலம் தொகுதியின் தோல்வி யைப் பாடமாக எடுத்துக் கொண்ட பா.ம.க. கடந்த ஐந்து ஆண்டுகளில் தன்னைத் தானே இத்தொகுதியில் புதுப் பித்துகொண்டு இழந்த பலத்தை மீட்டெடுக் கும் பகீரத முயற்சியில் இருக் கிறது. வரும் தேர்தலில் விஜயகாந்த் மீண்டும் இங்கு களமிறங்கப் போவதில்லை என்பது பா.ம.க-வின் நம்பிக்கை. அப்படியே களமிறங்கினாலும், இவருக்கு எதிராக பிரசாரம் செய்ய ஏராளமான மக்கள் பிரச்னைகளை கையில் வைத்திருக்கிறது பா.ம.க! காட்டுமன்னார் கோயில் (தனி): விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுமுக வேட்பாளராக களமிறக்கப்பட்ட எழுத்தாளர் ரவிக்குமார் வெற்றி பெற்ற தொகுதி. அ.தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்றாலும் பின்நாட்களில் தி.மு.க. அணிக்கு தன் கட்சி மாறியதும், அதையே தனக்கு சாதகமாக்கி அரசு நலத்திட்டங்களை தொகுதிக்குப் பெரு மளவில் கொண்டுவந்து இருக்கிறார் (சமீபத்து 'கலைஞர் வீடு கட்டும் திட்ட'த்தின் மூலம் முதல் வீடு ஒப்படைப்பு தன் தொகுதிக்குள் நடக்கிற மாதிரி பார்த்துக்கொண்டார்!). வன்முறைக்குத் துணை போகாதவர் என்கிற நல்ல பெயர் அனைத்து சமூக மக்களிடத்திலும் இவருக்கு இருக்கிறது. உட்கட்சி ரீதியாக இவருக்கு சிக்கல் இருந்தாலும் தொகுதி மக்களிடத்தில் எவ்வித அதிருப்தியும் இல்லை. சிபாரிசு, வம்பு, வழக்கு என இந்தத் தொகுதிக்கு உட்பட்ட எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் இவர் பேசுவதும் இல்லை! சுலபத்தில் கரையேறும் செல்வாக்கு இவருக்கு இருக்கிறது. மங்களூர் தொகுதி (தனி): விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெற்றிபெற்று, தற்போது காங்கிரஸில் கலந்து இருக்கும் செல்வப் பெருந் தகையின் தொகுதி! கட்சி மாறுவதில் காட்டிய அக்கறையை, இவர் தொகுதி வளர்ச்சியில் காட்டாதது அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. சொல்லிக்கொள்ளும் விதமாக எத்தகைய சாதனைகளையும் இவர் செய்யவில்லை எனப் புலம்புகிறார்கள் தொகுதி வாசிகள். அதேநேரம், 'மீண்டும் அவர் போட்டி யிட்டால், எங்கள் கட்சிக்கு செய்த துரோ கத்துக்கு சரியான பாடம் கொடுப்போம்!' எனச் சொல்லிக் காத்திருக் கிறார்கள் சிறுத்தைகள். எளிமையாக அணுகிப் பேச முடியும் என்பது மட்டுமே இவரின் ப்ளஸ் பாயின்ட்! அதை மட்டுமே வைத்து மறுபடி கரையேறுவது கஷ்டம் தான்! சிதம்பரம்: அ.தி.மு.க- வின் அருண்மொழித் தேவன் சிட்டிங் எம்.எல்.ஏ! இவர் தொகுதிக்குப் புதியவராக இருந்தாலும், ஜெயித்த காலத்தில் இருந்தே தொகுதிக்குள் தொடர்ந்து வலம் வருகிறார். ஆனால், பெயருக்குக்கூட அரசு நலத்திட்ட உதவிகள் எதையும் இவர் நிறைவேற்றிக் கொடுக்காதது இயலாமையின் பிரதிபலிப்பு! தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி எடுக்கவில்லை என்றும் மக்கள் நினைக்கிறார்கள்! கட்சியில் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தாலும், அதிருப்தி ஆட்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக் கிறது. அதனால், 'மீண்டும்!' என்பது மிரட்டலாகவே இருக்கும். நீக்கப்பட்ட தொகுதி நெல்லிக்குப்பம்: இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்ப வர் தி.மு.க-வின் சபா.ராஜேந்திரன். தொகுதி வாசிகளின் வீட்டு நல்லது - கெட்டதுக்கு முதல் ஆளாக ஆஜராகி விடுவார். நீண்ட காலமாக தூர் வாரப்படாமல் இருந்த மலட்டாற்றை தூர்வாரியது சொல்லக் கூடிய சாதனை! தொகுதி மறுசீரமைப்பில் நெல்லிக்குப்பம் காணாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக உருவெடுத்திருக்கும் நெய்வேலி தொகுதியில் இவருக்கு ஸீட் கிடைக்கலாம். போராடினால் மறுபடியும் சட்ட'சபா' போகலாம் ராஜேந்திரன்! | |
|
//வன்முறைக்குத் துணை போகாதவர் என்கிற நல்ல பெயர் அனைத்து சமூக மக்களிடத்திலும் இவருக்கு இருக்கிறது//
ReplyDeleteஇது ஒன்றே போதுமே.
வாழ்த்துகள்
இளமுருகன்
நைஜீரியா