Saturday, November 20, 2010

political correctness -தமிழில் அதை எப்படிக் குறிப்பிடுவது ?







தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் பயன்படுத்தும் மின்மோட்டார்கள் பழசாக இருந்தால் அவற்றை மாற்றிவிட்டு அரசாங்கமே புதிய மின் மோட்டாரைத் தர இருக்கிறது.  இலவசமாக அது வழங்கப்படும். விவசாயிகள் இந்தத் திட்டத்தை வரவேற்பார்கள் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் அவர்கள் இதை எதிர்க்கிறார்கள்.புதிய மின் மோட்டார் பொருத்தும்போது அதில் மீட்டர் பொருத்தப்போவதாக எழுந்த வதந்தியே அதற்குக் காரணம். புதிய மின்மோட்டார்களைப் பொருத்தினால் அதனால் கொஞ்சம் மின்சாரம் மிச்சமாகும் என்பதால்தான் இந்தத் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவந்ததே ஒழிய மீட்டர் பொருத்துவதற்காக அல்ல என்று அரசு தரப்பில் விளக்கம் தந்தும் கூட எதிர்க்கட்சிகள் அதை ஏற்கவில்லை. விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 
தமிழகத்தில் இருக்கும் மின் இணைப்புகளில் சுமார் ஒன்பது விழுக்காடு இந்த விவசாய மோட்டார்களுக்கானது. ஆண்டுதோறும் இரண்டு விழுக்காடு என்ற அளவில் இது அதிகரித்து வந்தது. தற்போது புதிதாக இரண்டு லட்சம் மின் இணைப்புகளை வழங்கப்போவதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். டிசம்பருக்குள் ஐம்பதாயிரம், மார்ச்சுக்குள் அடுத்து ஒரு ஐம்பதாயிரம் அதன் பிறகு ஆறு ஆறு மாத இடைவெளிகளில் அடுத்தடுத்து  ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும். இந்த அறிவிப்பையும் விவசாயிகள் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள். மீட்டர் பொருத்திவிடுவார்களோ கட்டணம் விதித்துவிடுவார்களோ என்ற அச்சம். 
தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் இரண்டு ஹெக்டேர் நிலம் உள்ள சிறு , குறு விவசாயிகள்தான் அதிகம். மாநிலத்தின் விவசாய நிலப் பரப்பில் சுமார் ஐம்பத்தாறு விழுக்காடு நிலம் அவர்களிடம்தான் உள்ளது. நாளாக நாளாக தமிழ்நாட்டில் சராசரி நில உடமையின் அளவு குறைந்தே வருகிறது. 1976-77 காலகட்டத்தில் அது 1.25 ஹெக்டேராக இருந்தது. தற்போதோ 0.8 ஹெக்டேராக குறைத்துவிட்டது. இது தேசிய சராசரியான 1.33 ஹெக்டேர் என்பதைவிடக் குறைவு. தமிழ்நாட்டில் வெகு வேகமாக நடந்துவரும் நகரமயமாக்கலுக்கும் இதற்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. 
விவசாயத்தை ஆதரிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது, அவற்றில் ஒன்றுதான் இந்த இலவச மின்சாரத் திட்டம். இத்திட்டத்தால் ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் மாநில அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. 
மின்வெட்டு இருந்தாலும் விவசாய பம்ப் செட்டுகளுக்கு பகலில் ஆறு மணி நேரமும் இரவில் மூன்று மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுவதாக மின்துறை சொல்கிறது. அந்த அளவுக்குக் கிடைப்பதில்லை என விவசாயிகள் குறை சொன்னாலும் பெரிய அளவில் புகார்கள் எதுவும் எழவில்லை. 
தொழில் வளர்ச்சிக்குக் கொடுக்கவேண்டிய மின்சாரத்தை விவசாயிகளுக்குக் கொடுக்கிறது அரசு. அவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்பது ஒரு கேள்வி. மனசாட்சி உள்ள விவசாயிகள் இதற்கு 'இல்லை ' என்றே பதில் சொல்வார்கள். இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள்கூட இதை உணர்ந்திருந்தும் வெகுசன அபிப்ராயத்துக்கு மாறாக பேசக்கூடாது என்று எண்ணி விவசாய சங்கங்களை ஆதரிக்கிறார்கள். 
இலவச மின்சாரத்தை வீணாக்காதீர்கள் என்று விவசாயிகளிடம் சொல்ல எவருமே தயாராக இல்லை. இத்தகைய நிலையை விளக்க ஆங்கிலத்தில் political correctness என்றொரு கலைச்சொல் உள்ளது. தமிழில் அதை எப்படிக் குறிப்பிடுவது ? 

16 comments:

  1. // இத்தகைய நிலையை விளக்க ஆங்கிலத்தில் political correctness என்றொரு
    கலைச்சொல் உள்ளது. தமிழில் அதை எப்படிக் குறிப்பிடுவது ? //

    இந்நிலையானது political incorrectness; political correctness அன்று! அரசியற் சூதானம்!!

    ReplyDelete
  2. "நனி நாகரிகர்" என்ற வழக்கு உண்டே.
    "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
    நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்"

    நாகரிகம் என்ற சொல் திருக்குறளிலும் உண்டே:
    "பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டுபவர்"
    இது political correctness-ஐத் தானே சுட்டுகிறது?
    அன்புடன்,
    ராஜம்

    ReplyDelete
  3. அன்புள்ள அறிஞர் ராஜம் அவர்களுக்கு,

    நான் Political Correctness என்பதற்கு அரசியல் நாநயம் என்ற சொல்லைப் பரிந்துரைக்க வந்தேன். நயத்தக்க நாகரிகம் இதனுடன் இசைந்து போகும் போலிருக்கிறதே!

    அன்புடன்,

    மணி மு. மணிவண்ணன்
    சென்னை, தமிழகம்

    ReplyDelete
  4. அன்பின் மணிவண்ணன்,
    "நகர்" என்பது "நாகரிகம்" என்ற சொல்லுக்கு அடிப்படையானால்...
    "Polity" என்பது "மக்கள்" அல்லது "குமுகாயம்" என்பதைக் குறிக்குமானால்...
    "Political correctness" என்பது பேச்சு மட்டுமின்றிச் செயலையும் உள்ளடக்குமானால்...
    "நயத்தக்க நாகரிகம்" பொருந்தும்தானே?
    அன்புடன்,
    ராஜம்

    ReplyDelete
  5. அன்புள்ள அறிஞர் ராஜம்,

    வள்ளுவர் கூறும் மக்கள் நஞ்சைக் கூட உண்ணும் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்கள்.

    நம் ரவிக்குமார் சொல்லும் "Political correctness" அரசியல் காரணங்களுக்காக நா நயத்தால் உண்மையை மறைத்து விளையாடும் சொல் விளையாட்டு. குழந்தைகளுக்குப் போக்கு காட்டுவது போல மக்களுக்கும் போக்கு காட்டுவது. இந்த வித்தைக்கு வள்ளுவர் சொல்லைக் கொடுத்து மதிப்பைக் கூட்டுவது சரியா என எண்ணிக் கொண்டிருக்கிறேன். :-)
    - Show quoted text -

    ReplyDelete
  6. அது உங்கள் பாடு! :-) எனக்கு அரசியல் வித்தையெல்லாம் ஒத்து வாராது! :-)
    என் தனிப்பட்ட கருத்து:
    "அரசியல் காரணங்களுக்காக நா நயத்தால் உண்மையை மறைத்து விளையாடும் சொல் விளையாட்டு" என்பதை விளக்கப் பிறமொழியிலிருந்து நாம் அறிகின்ற "Political correctness" என்ற தொடரைப் பயன்படுத்தமுடியாது என்று நினைக்கிறேன்.
    சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பது ஒரு வழி. பொருளைப் பெயர்த்துத் தருவது இன்னொரு வகை. உங்களுக்குத் தெரியாததில்லை.
    அன்புடன்,
    ராஜம்

    ReplyDelete
  7. சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்வதை கிராமத்தான்கள் என்றும்
    ஏற்பதில்லை... அப்படியே மொழியாக்கம் செய்தாலும், மக்கள் பெருவாரியாக
    வாழும் நாட்டில் அது ஈடேறுவதும் இல்லை. பொருளாக்கம் செய்து உகந்த சொல்ல
    இட்டுச் செல்வது மட்டுமே நன்மை பயக்கும்.

    ஆங்கிலத்தில் political correctness என்றால், அதைச் சொல்லின்
    அடிப்படையில் மாத்திரமே காண வேண்டுமா என்ன? சமூக, நிர்வாகச்
    செம்மைப்படுத்தலையும், கட்டமைப்புச் செப்பனிடுதலையும்
    கருத்திற்கொள்வதுதான் இச்சொல். ஆகவே, பரிபாலனச் செப்புமானம் என்பது
    போன்ற சொற்கள் பாவிக்கப்பட வேண்டும்.

    மேலும், அரசியல் என்பதே பொருள் மாறி விட்ட காலம் இது என்பதையும்
    கருத்திற் கொள்க!!

    இப்படிக்கு,
    ஒரு கிராமத்தான்.

    ReplyDelete
  8. விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இது! என்று சொல்லி,
    புண்ணியனை, புகலி(ந்) நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி,
    நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறை ஞானசம்பந்தன் சொன்ன
    பண் இயல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் "பரிபாலகரே!"

    ReplyDelete
  9. இதன் உட்பொருளைக் காணும்போது
    “கண்டும் காணாதிருக்கும்” செய்கையை புலப்படுத்துகிறது.

    ”கண்டுங்காணாவரசியல்” என்ற தன்மையை சுருக்கிச் சொல்லலாம் என்று கருதுகிறேன்.

    கண்டுங்காணா நெறி


    ”கண்டும் காணா” எனும் இடத்து கண்டும் என்ற சொல்லை
    மறைபொருளாக வைத்து அதனையும் நீக்கிவிடலாம்.

    அரசியல் என்ற சொல் அப்படியே வரவேண்டும் என்றில்லை. பொதுப்பெயராக விளங்கலாம்.


    காணா நெறி
    காணா நயம்
    காணா வினை

    மேலே உள்ள சொற்களில் ”கண்டும்” என்பது மறைந்து இருக்கிறதாகக் கருதலாம்.

    ”பொதுவுடைமைக் கட்சியினரும், வேளாண் அறிஞர்களும் கூட வேளாண் தொழிலிற்கிடக்கும் குறைகளைக் கண்டும், காணாநெறியில் நிற்கின்றனர்” என்று சொல்ல விரும்புவேன்.

    செ.ப.பேரகராதி இப்படிச் சொல்கிறது:
    காணாக்கண்ணிடு-தல் kāṇā-k-kaṇṇiṭu-
    , v. tr. < id. + id. +. To overlook, connive; பார்த் தும் பாராததுபோலுதல். இவன்செய்த குறையைத் தான்

    காணாக்கண்ணிடுதல் என்பதனை ”காணாக் கணித்தல்” என்று நான் சொல்ல விரும்புவேன்.

    கடைக் கணித்தல், கடைக்கணிப்பு, கடைக் கணிப்பாய் என்றவாறு திருமுறைகள் சொல்லும். (தேடமுடியவில்லை). சுருங்கச் சொன்னால் கணித்தல் என்பது கண்ணித்தல். கண்ணிடுதல் என்ற பொருளில் வரும். கண்டுக்காமல் இரு என்பதைக் கண்ணடித்து நாம் சொல்வதை இச்சொல் குறிப்பிடுகிறது.
    இதைச் சுற்றியும் political correctness என்பதற்குச் சொல்லமையக்கூடும்.


    சிந்தனையைக் கிளரும் சொல். நன்றி திரு,இரவிக்குமார்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  10. politically correct = அரசியற்படி இது முறைதான் (அரசியற்படி இது சரிதான்.)
    political correctness = அரசியல் முறைப்பாடு

    அரசியல் முறைப்பாடு தெரிந்தவர், அதற்கான செயற்பாடுகளையும், பேச்சுமுறைகளையும் கையாளுவார்.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  11. இந்தச் சொற்சேர்க்கையில் இருக்கும் எள்ளலை நாம் கவனிக்கவேண்டும். வெகுமக்கள் அரசியல் உருவாக்கி வைத்திருக்கும் கருத்தை ஏற்பதுபோல் மேற்கொள்ளப்படும் நிலைப்பாடு. இதில் ' பொதுப் புத்தி ' (common sense) என்பதற்கும் முக்கியமான பங்கிருக்கிறது.
    prostitute என்று சொல்லக்கூடாது அவர்களை sex worker என்று அழைக்கவேண்டும். ஊனமுற்றவர் என்பதை மாற்றுத் திறனாளி என அழைக்கவேண்டும். என்பவையெல்லாம் இதற்கான உதாரணங்கள் என்கிறார்கள். politically correct ஆக இருக்கவேண்டும் என்பது எதிர்நிலையில் வைத்தே , கேலியாகவே குறிப்பிடப்படுகிறது. எனவே நாம் இதற்கான சொல்லை உருவாக்கும்போது இவற்றை மனங்கொள்ள வேண்டும்.
    -ரவிக்குமார்

    ReplyDelete
  12. தமிழில் உள்ள இடக்கரடக்கல் போன்ற ஒன்று,
    ஆனால் இது நயம்பெருகக்கூறல். இதனை
    நயம்படக்கூறல் எனலாம். நயன்மொழி என்றும் சொல்லலாம்,
    மணிவண்ணன் சொன்ன நாநயம் என்பதும் நல்ல சொல்லே.
    முனைவர் இராச'ம் அவர்கள் கூறிய நனிநாகரிகர் என்பதும்
    சொல்லும் சூழலைக் கருதினால் பொருந்துவதே.

    வேந்தனார் எடுத்துக்காட்டிய தேவரப் பாட்டை இரசித்தேன், அவருடைய
    அரசிய நாசூக்கையும், நாசுழுக்கையும் இரசித்தேன்.
    பழமை பேசியாரின் பரிபாலனச் செப்புமானம்,
    அரசியற் சூதானம் இவையும் நன்றே. இராம.கி ஐயாவின்
    அரசியல் முறைப்பாடு இங்கு பொருந்தாது என்பது
    என் தனிக்கருத்து (political correctness என்பது சுட்டும் பொருள்
    வேறு).

    ரவிக்குமார், அது கேலி இல்லை. புண்படுத்தாமல் சொல்லும்
    பண்பாட்டுச் சொல்வழக்கு. இப்படிச் சொல்வதை விரும்பாதவர்,
    கேலியாகச் சொல்லக்கூடும், ஆனால் அதுவல்ல பொருள்.
    fat என்றால் குண்டாக, உடல் பருமனாக இருத்தலைக் குறிக்கும்.
    அப்படி சொன்னால் (அது உண்மையே ஆயினும்), அவர்கள்
    மனம் புண்படக்கூடும், என்பதால் obese என்று மருத்துவ
    விளக்கப்பாடு போல உள்ளதால் கூறுவது. இது ஒருவகையான
    இடக்கரடக்கல் (பிறர் மனம் புண்படாதவாறு நயம்படக் கூறல்,
    பண்பாடுடன் கூறுதல், பண்படக்கூறல்).

    அன்புடன்
    செல்வா

    ReplyDelete
  13. விக்கிபீடியா அளிக்கும் வரையறை:
    Political correctness (adjectivally, politically correct; both forms
    commonly abbreviated to PC) is a term which denotes language, ideas,
    policies, and behavior seen as seeking to minimize social and
    institutional offense in occupational, gender, racial, cultural,
    sexual orientation, disability, and age-related contexts. In current
    usage, the term is primarily pejorative,[1][2] while the term
    politically incorrect has been used as an implicitly positive self-
    description. Examples of the latter include the conservative
    Politically Incorrect Guides published by the Regnery editorial
    house[3] and the television talk show Politically Incorrect. In these
    cases, the term politically incorrect connotes language, ideas, and
    behavior unconstrained by a perceived orthodoxy or by concerns about
    offending or expressing bias regarding various groups of people.

    அரசியல் நாசூக்கு (அ) ஒப்பனை - எனக்குப் பொருத்தமாக தெரிகிறது.

    நா. கணேசன்

    ReplyDelete
  14. Dear VSR,
    Dear Ravikumar,
    dear participants in this brain-storming session for finding "le mot juste" (the right word),

    after reading many messages in this thread,
    I decided to have a look at the Wikipedia pages (in various languages)
    which deal with what is translated in English as "Pharisees" and "Pharisaism".

    It is interesting to see that German, English and French do not have the same kind of explainations concerning them
    and that each language brings specific colours to the debate.

    Since I suspect that most participants in the discussion
    are more familiar with English than with French or German,
    I provide only links to the English Wikipedia.

    SEE:


    SEE ALSO:


    I do NOT say that the Christians' perception of Pharisees
    is identical with the perception of PC by advocates of "political incorrectness"
    but what I am suggesting is that
    in some passages of the Tamil translation(s) of the New Testament (புதிய ஏற்பாடு),
    some vocabulary items might be found
    which might be useful in Contemporary Tamil
    for talking of the polarity between "political correctness" and "political incorrectness"

    I hope this suggestion is useful

    அன்புடன்

    -- Jean-Luc Chevillard

    P.S. I should probably add that I do not consider myself now as a christian but that, as a child, I was educated in a christian milieu. And therefore, this vocabulary is very familiar to me.

    P.S.2 It is probably only 10 years since the twin expressions "politiquement correct"/"politiquement incorrect" have entered standard French. The first time I heard them, I was really at a loss to understand what such a jargon might refer to :-)

    P.S.3 I suspect that those French speakers who do not belong to the public sphere (and who are not part of minorities) spontaneously favor "politiquement incorrect" :-)
    How is it with Tamil speakers?

    ReplyDelete
  15. here are also other technical expressions

    "அவையல் கிளவி"
    (see TC442c
    "அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்"
    (and the commentaries)

    "தகுதி"
    (See TC17c:
    "தகுதியும் வழக்குந் தழீஇயின வொழுகும்
    பகுதிக் கிளவி வரைநிலை யிலவே"
    (and the commentaries)

    Those also contain useful vocabulary resources

    -- jlc

    ReplyDelete
  16. அரசியல்நயம் கருதி, இலவச மின்சாரத்தை வீணாக்காதீர்கள் என்று விவசாயிகளிடம் சொல்ல எவருமே தயாராக இல்லை.

    நயம் எனும் சொல்லுக்கு இரு பொருள்கள் உள

    நயம்- நுண்மையாக அழகு செய்தல், விருப்பம்

    கொத்தனார்கள் சுதை பூசி பின் நயம் வைப்பர்கள்


    நீ நயந்து உரைநருக்கும் நின் நயந்து உரைநருக்கும்
    இன்னோர்ர்க்கு என்னாது என்னொடும் சூழாது
    எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே
    - Show quoted text -

    ReplyDelete