Thursday, October 21, 2010

இறந்த உதடுகள் ஒன்று கூடும்போது - ரவிக்குமார்


பாப்லோ நெரூடா ( 1904- 1973) 

உலகமெங்கும் செத்துப்போன உதடுகள்  ஒன்று
கூடுகின்றன. “இறந்துகிடக்கும் உங்கள்  உதடுகளுக்காகப்
பேச வந்திருக்கிறேன்” என்று அறிவித்தவரைப் பற்றி
அவை பேசுகின்றன. பாப்லோ நெரூடாவின்( 1904- 1973)  நூற்றாண்டு
இது. காதலர்கள்  பரிமாறிக்கொண்ட ரகசியக்
கடிதங்களில் மட்டுமின்றி, புரட்சியாளர்களின் கடைசி
நாட்குறிப்புகளிலும் இடம்பெற்றிருந்தவை அவரது
கவிதைகள் .
ஓர் ஓவியனின் பெயரையும்(பாப்லோ பிக்காஸோ)
ஓர் எழுத்தாளனின் பெயரையும் (யேன் நெரூடா) கலந்து
தனது புனைப்பெயரை உருவாக்கிக்கொண்ட அவரது
உண்மையான பெயர் ((Ricardo Eliecer Neftali Reyes
Basoalto) பலருக்கும் தெரியாது. அவர் பிறந்த அடுத்த
மாதமே அவரது தாய் இறந்துவிட, அவரது அப்பா,
நெரூடாவுக்கு இரண்டு வயதானபோது மறுமணம்
செய்து கொண்டார்.
உலகப்புகழ்பெற்ற கவிஞராக அறியப்படும் நெரூடா
முதலில் எழுதியது கட்டுரைதான். அவர் வசித்துவந்த
டெமூகோ என்ற நகரத்தில் பிரசுரிக்கப்பட்டு
வந்த செய்தியேடு ஒன்றில் நெரூடாவின் முதல் கட்டுரை
வெளியானது. அப்போது அவருக்கு வயது பதின்மூன்று.
அதற்கு அடுத்த ஆண்டில் அவர் எழுதிய கவிதைகள் 
பிரசுரமாகின. சரியாகப் படிக்கக்கூடத் தெரியாத
வயதில் ஒரு நாள்  ஒரு கொந்தளிப்பான உணர்வு.
சில சொற்கள் , அறிமுகமில்லாத சொற்கள்  அவருள் 
தோன்றின. தினப்படி புழங்கும் சொற்களல்ல அவை.
அதற்குமுன் அனுபவித்திராத உணர்வை அனுபவித்த
நெரூடா தனக்குள்  தோன்றிய அந்தச் சொற்களை
ஒரு காகிதத்தில் எழுதிவைக்கிறார். அது தான் அவரது
முதல் கவிதை பிறந்த விதம்.
கவிதை, கட்டுரை, விமர்சனம் எனப் பலவாறாக
எழுதிக் குவித்த நெரூடாவின் ஐம்பதாவது பிறந்தநாள் 
கொண்டாடப்பட்டபோது உலகமெங்குமிருந்து
எழுத்தாளர்கள்  நேரில் சென்று வாழ்த்தினார்கள் .
தனது இருபத்து மூன்றாவது வயதில் பர்மாவுக்கான
சிலி நாட்டுத் தூதராக நியமிக்கப்பட்ட அவர் சிங்கப்பூர்,
இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும்
பணியாற்றினார். அவரது பணியின் காரணமாகவன்றி
அர்ப்பணிப் பின் காரணமாக அரசியலில் அவர்
தீவிரமாக ஈடுபட்டார். அரசியல் அவரது வாழ்வில்
மட்டுமல்ல கவிதையிலும் ஓர் அங்கமாக மாறியது.
இலக்கியம், அரசியல் ஆகியவற்றைப் போலவே
விதவிதமான உணவுகளின் மீதும், பெண்களின் மீதும்
நெரூடாவுக்கு அளவுகடந்த விருப்பம் இருந்தது. அவரது
நினைவுக் குறிப்புகளைப் படிக்கும்போது ( Memoirs, Pengu,1978) எந்த விதமான தயக்கமுமின்றி அவர்
தனது வாழ்வைத் திறந்து வைத்திருப்பதை நாம்
உணரலாம். “நினைவுக் குறிப்புகளை எழுதும் ஓர்
எழுத்தாளன் நினைவுகூர்பவை ஒரு கவிஞன்
நினைவுகூர்பவை அல்ல. ஒரு கவிஞன் குறைவாக
வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவன்
ஏராளமானவற்றைப் புகைப்படம் எடுத்ததுபோல
தன்னுஷீமீ பதிந்துவைக்கிறான். நமக்காக மிகுந்த
கவனத்தோடு துல்லியமாக அவற்றை அவன்
மறுஆக்கம் செளிணிகிறான். கவிஞன் அவனது காலத்தின்
தீயாலும், இருட்டாலும் அலைக்கழிக்கப்பட்ட
பேளிணிகளை ஒரு 'காலரி' நிறைய நமக்குத்
தருகின்றான்” என்ற நெரூடா, “நான் எனக்குள்  மட்டும்
வாழவில்லை; மற்றவர்களது வாழ்வுகளையும்
வாழ்ந்திருக்கிறேன்” என்கிறார்.
“வேலைச் சுமைகளை மீறி, கனவுகள்  தரும்
இடைவெளிதான் நம்மை எழுந்து நிற்கவைக்கிறது”
என்ற நெரூடாவின் வரிகளை இப்போது மீண்டும்
படிக்கும்போது காப்ரியல் கார்ஸியா மார்க்யெஸ்
நெரூடாவைச் சந்தித்தது பற்றி எழுதியுள்ளது
நினைவுக்கு வருகிறது ((Strange Pilgrims, Joanathan Cape,
London 1993). கனவு காண்பதையே
தொழிலாகக்கொண்ட ஃப்ரா ஃப்ரீடா என்கிற
பெண்ணைப் பற்றி விவரிக்கும் மார்க்யெஸ், அவளை
நெரூடாவுடன் சேர்த்து ஸ்பெயினில் சந்திக்கிறார்.
எல்லோரும் மதிய உணவு உண்டபின் நெரூடா
சிறிதுநேரம் தூங்கச் செல்கிறார். அந்தப் பெண்
அவளது அறைக்குச் செல்கிறாள்
பத்து நிமிடம் தூங்கிவிட்டு நெரூடா
புத்துணர்வோடு வருகிறார்.
“அந்தக் கனவு காணும்  பெண்ணை என் கனவில்
பார்த்தேன்” என்றார் அவர். அந்தக் கனவைப் பற்றிச்
சொல்லுங்கள் என்றார் (அவரது மனைவி) மெடில்டா.
கவி ஆளுமை “அவள்  என்னைப் பற்றிக் கனவு காண்பதுபோல
நான் கனவு கண்டேன்” என்றார் அவர்.
“இது போர்ஹே எழுதியது போல இருக்கிறது”
என்றேன் நான்.
அவர் என்னைப் பார்த்தார், அவமதிப்படைந்தது
போல அவரது தலை குனிந்திருந்தது “அவர் அதை
ஏற்கனவே எழுதிவிட்டாரா?”
“இதுவரை எழுதவில்லையென்றால் என்றாவது
ஒருநாள் அவர் அதை எழுதத்தான் வேண்டும்”
என்றேன் நான்.
. . . மாலையில் நெரூடா ஊருக்குப் புறப்படுகிறார்.
ஃப்ரா ஃப்ரீடாவும் அதே கப்பலில் கிளம்புகிறாள் .
“நான் உங்கள் கவிஞரை எனது கனவில் பார்த்தேன்.”
வியப்படைந்த மார்க்யெஸ் அவளிடம் அந்தக் கனவு
பற்றிக் கேட்கிறார்.
“ அவர் என்னைப் பற்றிக் கனவு காண்பதுபோலக்
கனவு கண்டேன் என்றாள்  அவள் . அதை நான்
நம்பவில்லை என்பதுபோல நான் பார்த்த பார்வை
அவளைக் குழப்பிவிட்டது. ‘நீ எதை எதிர்பார்க்கிறாய் ?
சிலநேரங்களில் நாம் காணும்  கனவுகளில் யதார்த்த
வாழ்க்கையோடு எந்தத் தொடர்புமில்லாத ஒரு கனவு
இருக்கக்கூடும்’ என்றாள் அவள் . ஆனால் நெரூடாவின்
கனவுகளிலும் கவிதைகளிலும் வாழ்வோடு
தொடர்பில்லாத எதுவுமே இருந்ததில்லை. “புராதன
விளக்குகளைச் சொற்கள்  உரசும் தன் கவிதைகளால்
பற்றவைத்துச் சாதாரண மக்களின் ரத்தத்தையும்
தழும்புகளையும் பார்த்தவர் அவர். நம்மையும் பார்க்கச்
செய்தவர் .”
“(கவிதை) இருளில் நடந்து செல்ல வேண்டும்,
மனிதர்களின் இதயங்களை எதிர்கொள்ள  வேண்டும்,
பெண்களின் விழிகளை, தெருக்களில் இருக்கும்
அறிமுகமற்ற மனிதர்களை, நட்சத்திரங்களை  ஒளிரும்
இரவின் நடுவில் அல்லது அதிகாலையின்
மெல்லிருட்டில் இருப்பவர்கள்  கவிதையின் ஒரே
ஒரு வரியேனும் வேண்டும் என உணர வேண்டும். . .
நாம் அறிந்திராதவற்றுக்குள்  நாம் மறைந்துபோக
வேண்டும். அவர்கள்  திடீரென்று நம்முடைய ஒன்றைக்
கண்டெடுக்க வேண்டும், தெருவிலிருந்து, மணலிலிருந்து,
அதே காடுகளில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
வீழ்ந்துகொண்டிருக்கும் இலைகளிலிருந்து. . . நாம்
உருவாக்கிய ஒரு பொருளை அவர்கள்  கண்டெடுக்க
வேண்டும். . . அப்போதுதான் நாம் கவிஞர்கள் . அந்தப்
பொருளில் நம் கவிதை வாழும். . .”
நெரூடாவைப் பற்றி எழுதுபவர்கள்  அவரது
கொந்தளிக்கும் கவிதை வரிகளால் அடித்துச்
செல்லப்படுவதிலிருந்து தப்பிக்க முடியாது. 1973
செப்டம்பர் 11இல் சல்வடார் அலண்டேயின் அரசு
கவிழ்க்கப்பட்டு அவர் இறந்த பன்னிரெண்டாவது
நாளில் நெரூடா இறந்தார். தனது இளம் வயதில்
தான் எழுதிய கவிதைகளில் கற்பனையாகச்
சித்தரித்திருந்த தனிமை; இறக்கும்போது தன்னையும்,
ராணுவத்தினரால் உடைத்து நொறுக்கப்பட்ட தனது
வீட்டையும் சூழ்ந்திருக்கப் போகிறதென்பது
நெரூடாவுக்குத் தெரியாது.
சிலியில் நடந்த ராணுவப் புரட்சியும் 
அலெண்டேயின் மரணமும், நெரூடாவின் இறப்புக்கு
ஒரு துயரார்ந்த பின்னணியைத் தந்துவிட்டன. ஆனால்
அவற்றைத் தாண்டி நெரூடாவை நினைவுகூர
எத்தனையோ அற்புதமான வழிகள்  இருக்கின்றன.
நெரூடாவின் நினைவுக் குறிப்புகளைப் படித்து
முடித்தபோது அவரது கனவுகளையும், கவிதைகளையும்,
காதல் அனுபவங்களையும் மீறி என்னுள்  ஒரு கேள்வி 
உறுத்தியது. காந்தியின் சத்திய சோதனை பெண்களை
எப்படிக் கையாண்டது என்பது நமக்குத் தெரியும்.
அதுபோலவே நெரூடா ‘அனுபவித்த’ பெண்களுக்கும்
சொல்வதற்கு நிறைய இருந்திருக்கும். அதிலும்
குறிப்பாக அவர் பர்மாவிலிருந்தபோது சந்தித்த ஜோஸி
ப்ளிஸ் என்ற பெண்ணுக்கு . ஆங்கிலேயப்
பெண்ணைப்போல உடுத்திக்கொண்டிருந்த,
அதுபோலவே பெயர் வைத்துக் கொண்டிருந்த பர்மியப்
பெண் அவர். நெரூடாவுடன் சேர்ந்து வாழ்ந்தார்.
தன்னை நெரூடா கைவிட்டுவிடுவாரோ என்ற பயம்.
இரவெல்லாம் கத்தியோடு நெரூடாவின் படுக்கையைச்
சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருப்பார். தன்னை மட்டுமே
நெரூடா நேசிக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு
மந்திரச் சடங்குகளைச் செய்வார் . ‘அதிர்ஷ்டவசமாக’
அந்த நேரத்தில் நெரூடாவுக்கு இலங்கைக்கு மாற்றல்
உத்தரவு வந்தது. ஜோஸியிடமிருந்து தப்பித்து அவர்
இலங்கைக்குச் சென்றுவிட்டார்.
ஆனால் சில நாட்களில் அவரைத்தேடி ஜோஸி
இலங்கைக்கு வந்துவிட்டார். அவரை நெரூடா
வீட்டுக்குள்  சேர்க்கவில்லை. எதையும் செய்யக்கூடிய
“love - smitten terrorist” என்று நெரூடாவால்
வர்ணிக்கப்பட்ட ஜோஸி தெருவிலேயே கிடந்து
தோற்றுத் தனது ஊருக்குத் திரும்புவதென முடிவுசெய்து 
நெரூடாவை வழியனுப்ப வரும்படி கேட்கிறார். கப்பல்
புறப்படும் நேரம் கண்ணீர் வழிய நெரூடாவை
முத்தமிடுகிறார். அவரது ஷுக்களை முத்தமிடுகிறார்.
ஷு பாலிஷ் ஜோஸியின் முகமெங்கும்
அப்பிக் கொள்கிறது . “அடக்கமுடியாத துக்கம், அவளது
முகத்தில் உருண்ட கண்ணீர்த் துளிகள்  இன்னும்
என் நினைவில் பசுமையாக உள்ளன ” என்று கூறுகிறார்
நெரூடா. ஜோஸி ப்ளிஸ்ஸுடனான நெரூடாவின்
உறவில் இரண்டு மனிதர்களின், முரண்பட்ட இரு
கலாச்சாரங்களின் மோதலையே பார்க்கிறோம்.
நெரூடாவிடம் வெளிப்படுகிற ‘ஓரியண்டலிச’
மனோபாவம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
இலங்கையில் நெரூடாவுக்கு ஏராளமான பெண்கள் 
கிடைக்கிறார்கள். அவர்களில் பெருபாலானோர்
‘காலனியத்தின் விளைபொருட்கள்’. அதில் ஒரு பெண்
ஒரே இரவில் பதினான்கு பேரைப் புணர்ந்தவள்  .
ஆனால் அவள்  விபச்சாரியல்ல. எல்லாம் ஒரு
‘ஜாலிக்காக’. அவ்வளவுதான். இப்படிப் பெண்கள்
சுலபமாகக் கிடைத்தாலும் நெரூடா
திருப்திகொள்ளவில்லை . அவரது உடல் இரவு பகல் இடையறாது பெரு
நெருப்பாக எரிந்துகொண்டிருந்தது. பல பெண்கள் தாங்களாகவே
விரும்பி அந்த நெருப்புக்குத் தமது உடல்களைத்
தந்து சென்றனர். போயர் பெண்கள், ஆங்கிலேயப்
பெண்கள், திராவிட ரத்தம் ஓடும் பெண்கள்.
நெரூடா கொழும்பில் வசித்த பங்களா மிகப்
பெரியது. அதன் கழிவறை வெளியே தனியே
அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கழிவறையை யார்
சுத்தம் செய்கிறார்கள்என்பது நெரூடாவுக்குத்
தெரியாது. ஒரு நாள்  அது யாரென்பது நெரூடாவுக்குத்
தெரியவந்தது. “இலங்கையில் நான் இதுவரை
சந்தித்திராத அழகி. ஒரு சிலையைப் போல இருந்தாள்.
அவள்  ஒரு தமிழ்ப் பெண், பறையர் சாதியைச்
சேர்ந்தவள் அவள்  சிவப்பும் பொன் நிறமும் கொண்ட
மட்டரகமான புடவையை உடுத்தி இருந்தாள் . கைகளில்
கனமான வளையல்கள். அவளது மூக்கின் இருபுறமும்
இரண்டு சிறிய சிவப்பு மூக்குத்திகள்
மின்னிக்கொண்டிருந்தன. அவை வெறும்
கண்ணாடிதான் என்ற போதிலும் அவளது
முகத்தில் ரத்தினங்களாக  மின்னிக்கொண்டிருந்தன.”
அவளை வசியப்படுத்த நெரூடா பலவித
முயற்சிகளைச் செய்கிறார். எதற்கும் பலனில்லை.
“ஒரு நாள்  நேராகச் சென்று அவளது கையைப்
பிடித்தேன், கண்களைப் பார்த்தேன். அவளோடு
பேச என்னிடம் ஒரு மொழியும் இல்லை. ஒரு சிறு
புன்னகைகூட இன்றி அவள்  படுக்கையறைக்கு
வந்தாள்.” ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட
தென்னிந்தியச் சிற்பத்தைப் போல அவள்  இருந்ததாக
நெரூடா வர்ணிக்கிறார். “அவளைப் புணர்ந்தது ஒரு
சிலையைப் புணர்ந்ததுபோல இருந்தது. கடைசிவரை
அவளது கண்கள் திறந்தபடியே இருந்தன.
அவளிடமிருந்து ஒரு எதிர்வினையும் இல்லை”.
நெரூடாவின் வர்ணனையைப் படிக்கும்போது ஏறத்தாழ
நெரூடா அப்பெண்ணைக் கற்பழித்தார் என்றே சொல்லத்
தோன்றுகிறது.
நெரூடாவின் அற்புதமான நினைவுக் குறிப்புகளைப்
படித்து முடித்தபோது (15 ஆண்டுகளுக்கு முன்)
அந்நூலைப் பெண்ணிய நோக்கில் வாசித்தால்
எப்படியிருக்கும் என எண்ணிப் பார்த்தேன்.
நெரூடாவின் நூற்றாண்டிலாவது யாரேனும் அதைச்
செய்ய  வேண்டும். ஒரு பெண்தான் அத்தகைய
வாசிப்பைச் செய்ய  முடியும் என்பதைத் தனியே
சொல்லத் தேவையில்லை.

( பாப்லோ நெரூடாவின் நூற்றாண்டின்போது எழதப்பட்டது. 
நன்றி : காலச்சுவடு, ஆகஸ்ட் 2004)

1 comment:

  1. திரு ரவிக்குமார்

    பாப்லோ நெருடாவைப் பற்றிய இத்தகைய மாறுபட்ட தொரு அறிமுகத்தைத் தந்தமைக்கு நன்றி. உங்கள் ஆசை, பெண்ணியப் பார்வையில் அவரை அணுகுவது, அதன்பின் (2004க்குப் பிறகு) நடந்ததா எனத் தெரியவில்லை. காந்தியின் பாலியல் பார்வையைப் பாப்லோ நெருடாவுடன் ஒப்பிட்டது உளவியல் ஆய்வுக்கு நல்ல களன். செய்வார் யாரோ?
    அறுபது வயது கடந்த நிலையில் கிழக்கு வங்க இந்து முஸ்லிம் மோதலைத் தவிர்க்கச் சென்ற நேரத்தில் பல்வேறு அரசியல், போராட்டச் சூழல்களுக்கு இடையே, காந்தியிடம் காணப்பட்ட பாலியல் சோதனைக்கான சிந்தனை என்னை வியப்பில் ஆழ்த்தியது.(Freedom at midnight)

    புதுவைப் பல்கலைக் கழகத்தில் பாப்புலோ நெருடாவையும் பாரதிதாசனையும் ஒப்பிட்டு ஒரு பெண் ஆய்வுசெய்தார். அவர் உங்கள் கட்டுரையைப் பார்த்தாரா என்பதும் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.

    பாப்லோ நெருடாவின் கவிதைகளை நீங்கள் மொழிபெயர்த்திருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    அன்புடன்
    ஆராதி

    ReplyDelete