Wednesday, October 27, 2010

'‘மரண தண்டனை எதிர்ப்பு என்பது பொதுப்புத்திக்கு எதிரான ஒரு பிரச்சாரம். ’’ ரவிக்குமார்மரண தண்டனைக்கு எதிரான இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் பியுசிஎல் அமைப்பினருக்கும் இங்கே வந்திருப்பவர்களுக்கும் வணக்கம். இந்தியாவில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவது பற்றி சிறப்பான ஆய்வு நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ள விக்ரம் ஜிட் பத்ராவுக்கும், சுரேஷ், நாகசைலா ஆகியோருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நூலில் குறிப்பிட்டுள்ளதுபோல 1998ஆம் ஆண்டு பியுசிஎல் சார்பில் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தை பாண்டிச்சேரியில் இருந்து நாங்கள் முன்னெடுத்தோம். அப்போது நான் பாண்டிச்சேரி பியுசிஎல்லின் தலைவராக இருந்தேன். அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ராஜீவ் கொலை வழக்கில் இருபத்தாறு பேருக்கு ஒரேயடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அந்தச் சமயத்தில் இலக்கிய மாநாடு ஒன்றில் கட்டுரை வாசிப்பதற்காக ஹைதராபாத் சென்ற நான் அங்கே திரு. பாலகோபால் அவர்களை சந்தித்து தேசிய அளவில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்தார். ஆந்திராவில் சிலுக்கலூரிபேட் என்ற இடத்தில் பேரூந்து ஒன்றை எரித்து பலபேர் மரணம் அடைவதற்குக் காரணமாய் இருந்ததற்காக இரண்டு தலித் இளைஞர்கள் அப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய தண்டனையைக் குறைக்க வேண்டும் என்றப் பிரச்சாரத்தை அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்த மனித உரிமை ஆர்வலர்கள் மேற்கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகத்தான் நான் பாலகோபால் அவர்களை அணுகிப் பேசினேன்.
பாண்டிச்சேரியில் 1998ஆம் ஆண்டு மரண தண்டனையை எதிர்த்த இரண்டு நாள் மாநாட்டை மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஒருங்கிணைத்தது. அதில் அப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியாக இருந்த மோகினிகிரி அவர்கள் கலந்து கொண்டார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு அதிலும் குறிப்பாக, நளினிக்கு தண்டனையை குறைப்பது பற்றி திருமதி. சோனியா காந்தி அவர்களிடம் பேசுவதாக மோகினிகிரி அந்த மாநாட்டில்தான் வாக்குறுதி அளித்தார். அதனடிப்படையில்தான் அவர் சோனியா காந்தி அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்துதான் சோனியா காந்தி அவர்களின் தலையீட்டினால் இப்போது நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆக, நளினியின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு பாண்டிச்சேரியில் எங்களால் நடத்தப்பட்ட மாநாடுதான் காரணம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். சிறிய அளவில் நாம் செய்யும் முயற்சிகள் வீணாகிப்போய் விடுவதில்லை. அவற்றுக்கு நிச்சயமாக பலன் இருக்கும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
பாண்டிச்சேரி மாநாட்டைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய இயக்கங்களும் மரண தண்டனையை எதிர்த்துப் பிரச்சாரத்தில் இறங்கின. குறிப்பாக பெரியார் திராவிடர் கழகம் இதற்காக நூறு கூட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்து பல கூட்டங்களை நடத்தியது. திரு. நெடுமாறன் அவர்களும் இந்தப் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்து பரவலாக மக்களை சென்றடைவதற்கு இந்தக்கூட்டங்கள் பயன்பட்டன. என்றபோதிலும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் இதைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லவில்லை. ராஜீவ் கொலை வழக்கு தவிர, மற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பற்றி அவர்கள் அக்கறை காட்டவில்லை. உதாரணமாக, அப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதுபற்றி யாரும் பேசவில்லை. தமிழ்த் தேசிய இயக்கங்கள் மட்டுமல்ல, மனித உரிமைகளைப் பற்றி பேசுவது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சிக்கலானதுதான். ஏனென்றால் மனித உரிமைகளை ஒரு இடத்தில் வலியுறுத்திக்கொண்டு இன்னொரு இடத்தில் கைவிட்டுவிட முடியாது.
பாண்டிச்சேரியில் நடத்தப்பட்ட மாநாட்டில் பல்வேறு சிந்தனையாளர்கள் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து we the Condemned  என்ற தலைப்பில் தொகுத்து நூலாக வெளியிட்டேன். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அந்த நூல் துரதிர்ஷ்டவசமாகத் தமிழக பியுசிஎல் ஆர்வலர்களோடு முடங்கி விட்டது. இப்போது விரிவாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இதற்காகத் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்ட அனைவரும் நமது பாராட்டுக்குரியவர்கள். இந்த நூலைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவது அவசியம். அதற்கு நான் என்னால் ஆன உதவிகளைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். மரண தண்டனை பற்றி விவாதித்தவர்கள் பலபேர் அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும்போது அதில் வெளிப்படும் இனவெறி பற்றி நிறைய ஆய்வுகள் வெளியாகி இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதுபோல இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அந்தத் தீர்ப்புகளில் இங்கும் அதேபோல மத, சாதி, துவேஷம் வெளிப்பட்டிருக்கும் என்று அப்போது நாங்கள் பேசினோம். இன்று 1950 முதல் 2006 வரை கடந்த ஐம்பத்தாறு ஆண்டுகளில் வெளியான சுமார் எழுநூறு தீர்ப்புகளை ஆராய்ந்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை எழுதியவர்கள் நமது நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் குற்றவாளிகளின் மதம், சாதி பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படாததால் அதுபற்றித் தெளிவாக எதுவும் சொல்ல முடியவில்லை என்று கூறியுள்ளனர். மரண தண்டனை கைதிகளின் மதம் மற்றும் சாதியைத் தெரிந்து கொள்வது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. இந்திய சமூகத்தில் குறிப்பாக வடஇந்தியாவில் எல்லோருடைய பெயரும் சாதி பின்னொட்டுடன்தான் முடிகிறது. அவற்றை ஒரு மானுடவியலாளரின் துணையோடு ஆராய்ந்தால் அவர்களின் சாதி, மதம் என்ன என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். பாண்டிச்சேரி மாநாட்டை நடத்தியபோது நான் கும்கும்சாதா என்பவர் எழுதிய ‘இண்டியன் ஜெயில்ஸ்’ என்ற நூலை வாசித்தேன். அது காஷ்மீர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மக்பூல்பட் என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து விரிவாக ஆராய்ந்துள்ள ஒரு நூலாகும். அதில் ஆண்டுவாரியாக இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை பட்டியலாகத் தரப்பட்டிருந்தது. அதை நான் தொகுத்த நூலிலும் வெளியிட்டிருக்கிறேன்.
டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட பிரியதர்ஷினி மட்டூ வழக்கை நாங்கள் தொடர்ந்து கவனித்து வந்தோம். அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபரின் தந்தை பாண்டிச்சேரியில் ஐ.ஜி.யாக பணியாற்றியவர் என்பதால் எங்களுக்கு அந்த வழக்கு மீது கூடுதல் அக்கறை இருந்தது. அந்த நபருக்கு கடைசியில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.நான் இப்போது ஜூனியர் விகடனில் எழுதிவரும் பத்தியிலும் அதுபற்றி எழுதியிருக்கிறேன். வெகுகாலம் தப்பித்து வந்த அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அது கூடாது என்று வாதிடுவது எனக்கேகூட சிரமமாக இருந்தது. மரண தண்டனை எதிர்ப்பு என்பது பொதுப்புத்திக்கு எதிரான ஒரு பிரச்சாரம். அதனால் அது மிகவும் சிரமமான ஒரு காரியமாகும். ஆனாலும் அதை நாம் செய்துதான் ஆகவேண்டும். இன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மரண தண்டனையை எதிர்த்துப் பேசி வருவது நம்மைப் போன்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. ஆனால் அண்மையில் நடந்துவரும் பயங்கரவாத தாக்குதல்களை ஒட்டி ‘பொடா‘ போன்ற கடுமையான சட்டம் வேண்டுமென்று பிஜேபி போன்ற கட்சிகள் வலியுறுத்துகின்றன. குஜராத் மாநிலத்தில் அத்தகைய சட்டம் ஒன்றை உருவாக்கி அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கிறார்கள். பொடா போன்ற சட்டங்கள் மரண தண்டனையை வலியுறுத்துகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த நூலிலும்கூட ‘பொடா‘ வழக்குகளில் எப்படித் தவறாகத் தண்டனைகள் வழங்கப்பட்டன என்பது தெளிவுப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே பயங்கரவாத சட்டங்கள் புதிதாக உருவாக்கப்படாமல் தடுக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.
அப்சல்குரு வழக்கைப்பற்றிய பிரச்சாரம் நடந்துகொண்டிருந்தபோது நான் ஒரு செய்தியைப் பார்த்தேன். டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து திகார் சிறையில் கடந்த அறுபது ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைக் குறித்த விவரங்களை வாங்கியிருந்தார். அதில் இருபத்துநான்கு பேர் இதுவரை திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களது பெயர்களும், தூக்கிலிடப்பட்ட தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது அதில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள் என்பதும், அதற்கடுத்து இஸ்லாமியர்கள் அதிகமாக தூக்கிலிடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. ஆக, இப்படியான பெயர்களைக் கொண்டே நாம் இந்த வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளின் தன்மையை கணித்துவிட முடியும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்த ஆய்வு நூலை வெளியிட்டிருக்கிற நண்பர்கள் தங்களிடம் உள்ள விவரங்களை இந்த நோக்கில் மீண்டும் ஆய்வு செய்து இதுவரை இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனைத் தீர்ப்புகளின் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இத்தகைய அரிய நூலை வெளியிடும்போது, இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் கருத்துருவாக்கத்தைச் செய்கின்ற தரப்பினரை நாம் ஈடுபடுத்துவது அவசியம். நமது சமூகத்தில் ஒரு கருத்தை வலுவாக எடுத்துக்கூறக்கூடிய ஆற்றல் எழுத்தாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் உள்ளது. எனவே இனியாவது இத்தகையப் பிரச்சாரத்தில் நாம் தவறாமல் ஒரு எழுத்தாளர், ஒரு பத்திரிகையாளர் என இடம் பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பாண்டிச்சேரியில் மாநாடு நடத்தியதற்குப் பிறகு நான் தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளான படைப்பாளிகள் மத்தியில் இந்தப் பிரச்சாரத்தை எடுத்துச்செல்ல விரும்பினேன். அதற்காக எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி அவர்களை அணுகினேன். அவரோ, தனக்கு இதில் போதிய அனுபவம் இல்லை, எனவே நீங்கள் எஸ்.வி. ராஜதுரை அவர்களை சேர்த்துக்கொண்டு இதைச் செய்யுங்கள் என்று எனக்கு ஆலோசனை கூறினார். அதன்பிறகு நான் எஸ்.வி.ஆர். அவர்களோடு இணைந்து மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்களின் மாநாடு ஒன்றை சென்னையில் நடத்தினேன். அதில் சுந்தர ராமசாமி அவர்களும் கலந்து கொண்டு பேசினார். ஆனால் அந்த முயற்சி அத்துடன் நின்று விட்டது. அதன்பிறகு எந்த எழுத்தாளரும் அதை முன்னெடுத்துச் செல்லவில்லை. இப்போது மீண்டும் நாம் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். பியுசிஎல் போன்ற இயக்கத்துக்கு எத்தனையோ விதமான மனித உரிமை மீறல்கள் பற்றிப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையிருக்கிறது என்றபோதிலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மரண தண்டனை ஒழிப்பு என்ற ஒற்றை நோக்கத்தோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் நிச்சயம் அதற்கு ஒரு பலன் இருக்கும். மரண தண்டனையை எதிர்க்கின்ற தமிழக முதல்வர் போன்றவர்களையும் இதில் நாம் அணுகலாம். இப்போது 123 ஒப்பந்தம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நாம் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டால் இந்தியாவை 135 நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிட முடியும். அதாவது இன்று உலக நாடுகளில் 135 நாடுகள் மரண தண்டனையை பின்பற்றுவது இல்லை. அந்தப் பட்டியலில் இந்தியாவை நாம் இடம்பெற வைத்துவிட முடியும்.
மரண தண்டனை விதிக்கப்படுவது என்பது இப்போது பெரும்பாலும் நீதிபதிகளின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் சார்ந்ததாகவே இருக்கிறது. வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி, என்று நாம் சில நீதிபதிகளின் பெயர்களை இப்போது சொல்கிறோம் என்று சொன்னால் அவர்களின் தனிப்பட்ட ஆளுமை சார்ந்தே அதைக் கூறுகிறோம். வழக்கறிஞராக இருந்தபோதே மக்கள் நலனில் அக்கறையோடு இருந்த திரு. சந்துரு அவர்கள் இப்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆனபிறகு கடந்த ஒரு மாதத்துக்குள் மிக முக்கியமான ஐந்து தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். எனவே யார் நீதிபதியாக வருகிறார்கள் என்பது முக்கியம். அண்மையில் நீதித்துறையில் மலிந்து விட்ட ஊழல் பற்றி செய்திகள் வெளியாகி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நீதித்துறை ஊழியர்களின் பொதுவைப்பு நிதி பணத்தைக் கையாடல் செய்த வழக்கில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, எட்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நீதிபதிகளின் பெயர் அடிபடுகிறது. அதுபற்றி சிபிஐ விசாரணை செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. அரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த இரண்டு பெண் நீதிபதிகள் பதினைந்து லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கொன்றில் விசாரணைக்கு ஆளாகி உள்ளனர். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சுமித்ரா சென் என்பவர் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். சுமித்ரா சென் வழக்கறிஞராக இருந்தபோது ஒரு வழக்கில் ரிசீவராக நியமிக்கப்பட்டு அந்த ரிசீவரின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கென்று நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தொகையை அவர் தனது சொந்த அக்கவுண்டில் போட்டுக் கொண்டதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்த சுமித்ராசென் எப்படி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்று இப்போது கேள்விகள் எழுந்துள்ளன. மரண தண்டனையை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொள்கிற நாம் இப்போதைக்கு மரண தண்டனையை தடுத்து நிறுத்தவேண்டுமென்றால் அத்தகைய உணர்வு கொண்ட நீதிபதிகள் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வருகிறார்களா? என்று நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் என்றால் அதற்கு முன் செனட்டில் உள்ள சப்-கமிட்டியில் அவரைப்பற்றி விரிவான விசாரணை நடத்துகிறார்கள். அந்த நேரத்தில் பத்திரிகைகளும் அவரைப்பற்றி அலசி ஆராய்கின்றன. இதனால் நீதிபதி நியமனத்தில் ஒரு வெளிப்படைத்தன்மை காப்பாற்றப்படுகிறது. நமது நாட்டிலும் அத்தகைய வெளிப்படைத் தன்மையை நாம் வலியுறுத்த வேண்டும். எனவே செஷன்ஸ் நீதிபதியாக இருக்கும்போது மரண தண்டனை அளிப்பவர்கள் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுச் செல்கிறார்களா? என்பதை நாம் கண்காணிக்க வேண்டும். இப்படி நீதிபதிகள் நியமிக்கப்படும்போது நாம் ஒரு குறுக்கீட்டை செய்தோமேயானால் நிச்சயம் நல்ல நீதிபதிகள் உயர்நீதிமன்றத்துக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே மரண தண்டனை எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக இதையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
மரண தண்டனையை இந்திய அளவில் ரத்து செய்வதைவிடவும், அதற்கு முன்பாக மாநில அளவில் ஐபிசி, சிஆர்பிசி முதலிய சட்டங்களில் திருத்தங்கள் செய்வதன் மூலம் இங்கே மரண தண்டனையை நாம் ஒழித்துவிட முடியும் என்று சுதா ராமலிங்கம் அவர்கள் குறிப்பிட்டார்கள். மரண தண்டனைக்கு எதிரான கருத்துடைய டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருக்கும் இந்த நேரத்தில் இதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வது பொருத்தமானதாக இருக்கும். இத்தகைய திருத்தங்களை செய்வதற்கான தனிநபர் மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதைத் தயாரிப்பதில் சுரேஷ், சுதா ராமலிங்கம் போன்றவர்கள் எனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் தான் சட்டமன்றத்தில் இருக்கிறோம் என்றபோதிலும், இதற்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை நாம் அணுகலாம்.
1995ல் நாம் மரண தண்டனையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தபோது நம் கையில் போதுமான புள்ளி விவரங்கள் இல்லை. பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையில்தான் நாம் அப்போது பேசினோம். ஆனால் இன்று கடந்த ஐம்பத்தாறு ஆண்டுகளாக வழங்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகளை ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வு நூல் நம்மிடம் இருக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக இது திகழ்கிறது. எனவே இப்போது முன்னைவிடவும் பலமடங்கு அதிகமான ஊக்கத்தோடு நாம் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லமுடியும். எனவே ஆம்னஸ்டி இண்டர்நேஷனலும், பியுசிஎல் அமைப்பும் இதைப் பரவலாக தமிழகமெங்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். அதற்கு நான் எப்போதும் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொண்டு வாய்ப்புக்கு நன்றி சொல்லி அமைகிறேன். வணக்கம்.

(2007, செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை ஐகஃப் அரங்கில், ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பும், பியுசிஎல் தமிழக-புதுச்சேரி கிளையும் இணைந்து வெளியிட்டுள்ள Lethal Lottery - The death Penalty in India, A study of Supreme Court judgments in death penalty cases 1950-2006  என்ற நூலின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசியது )

No comments:

Post a Comment