Wednesday, October 27, 2010

அள்ள விரும்பும் மஞ்சள் கிழங்குகள் - ஞானக்கூத்தன்


ரவிக்குமாரின் 'அவிழும் சொற்கள்' சுவாரஸ்யமான வாசிப்பைத் தருகிறது. குவளைக்கண், தாமரைக்கண், அங்கயற்கண் என்ற உவமைகள் இலக்கிய வாசகர்களுக்கு அலுத்துப்போகிற அளவுக்குப் பரிச்சயமானவை அந்த உவமைகள் இறந்துவிட்டன என்றே சொல்லலாம். ஆனால் கண்ணும் அதன் ஆற்றலும் என்றும் இருப்பவை. ரவிக்குமாரின் கவிதையில் கண் மீனோ மலரோ இல்லை . மாறாகக் கண் குளமாகிறது. கண் குளமானதென்றால்கூட அது ஒரு சமத்காரப் பேச்சுத்தான். ஆனால் ரவிக்குமாரின் கவிதையில் கண் குளமென்று உருவகிக்கப்படும்போது அது கூடுதலான ஆழத்தைப் பெறுகிறது.

'காத்திருக்கும் நேரத்தில்
மருளும் கண்களுக்குள் ஒரு
முழுக்குப்போட்டு எழலாம்
எனத் தோன்றுகிறது'

என்ற கவிதையில் கண்களுக்குள் முழுக்குப் போடலாம் என்று கூறும்போது கண் ஒரு நீர்நிலையாக உருவகம் பெறுகிறது. நீர்நிலையிலிருந்து மலரும் மீனும் விலக்கப்பட்டு நீர்நிலையே கண்ணுடன் உறவு கொள்கிறது.

'நடவு முடிந்து திரும்பும் தாயின்
கண்களுக்குள் தாவும் குழந்தையென'

என்று வேறொரு கவிதையில் குறிப்பிடப்படும்போது அங்கும் கண் நீர்நிலையெனவே தோற்றம் தருகிறது. மறுபடியும் ஒரு கவிதையில் கவிஞர் சொல்கிறார்:

'தாமரைக் குளமென இருக்கும்
உன் விழியின் ஓரத்தில்
கரிக்கும் ஒரு துளியாய்
கருக் கொள்கிறேன்'

மறுபடியும் மறுபடியும் கண்ணை ஒரு நீர்நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுவதால் கண் ஒரு பிரத்யேக உருவகத் தன்மையைப் பெறுகிறது. கவிஞருக்குக் கண் அசாதாரண மன எழுச்சியைத் தூண்டுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

        இலக்கியம் கற்பித்துவந்த ஓர் உறவை ரவிக்குமார் அசைத்துப் பார்க்கிறார் என்பதை இன்னொரு படிமத்திலும் கவனிக்க முடிகிறது. பணியிடத்திலிருந்து திரும்பும் தாய் என்னும் பெண் பற்றிய நவீன படிமத்தை அசைக்கிறார் கவிஞர். காலம் காலமாக ஒரு ஜனசமூகத்தில் நிகழ்ந்து ஆனால் பாடப்படாமல் போய்விட்ட ஒரு நிகழ்வுதான் அது என்கிறது ஒரு கவிதைப்பகுதி:

நடவுமுடிந்து திரும்பும் தாயின்
கண்களுக்குள் தாவும் குழந்தையென

என்பதில் பணியிடம் விட்டு வீடு திரும்பும் தாய் என்ற படிமம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தனது உரிமையைப் பெறுகிறது. நீர்நிலைகளைப் பற்றியும் நடவு பற்றியும் ரவிக்குமார் கவித்துவமாகக் கூறும்போது அவரிடம் ஒரு வியூகம் இருப்பது புலப்படுகிறது

நனைந்திருக்கிறது நெஞ்சு
நடவு செய்யக் காத்திருக்கும்
நல்ல நிலம்போல

இரண்டுமுறை நடவு நிலத்தைப் பற்றிப் படிக்கும்போது அது வாசகனுக்கு மகிழ்ச்சியையே தருகிறது. இரண்டு இடத்திலும் பெண்ணே நினைவுகூறப்படுவது நமது கவனத்தை ஈர்க்கிறது. நிலம் சிருங்கார ரஸம் சம்பந்தப்பட்டது என்பது பழங்காலக் கவிஞர்களின் கணிப்பு. 'இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்' என்ற குறள் சிரிப்பைக் கூறும் விதத்தைக் கவனியுங்கள். இதைக் காட்டவே தாமரையும் மீனும் பெண்ணின் கண்ணுக்கு உவமையாக்கப்பட்டன. ரவிக்குமாரின் கவிதையில் தாய்மை உணர்வு சேர்க்கப்படுகிறது.

        கவிதை ஒரு வியூகம்தான். ஒரு நல்ல அக்கறை உள்ள கவிஞர் வியூகத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார். கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாதாரிடம் வேட்ப மொழிவதுதானே சொல். ரவிக்குமாரின் வியூகம் வாசகனுக்கு மகிழ்ச்சியையும் கவிஞருக்கு வெற்றியையும் உறுதி செய்கிறது.

உன் தெரு இல்லை உன் ஊர் இல்லை என
விலக்கிவிடாதே

என்ற பகுதியை ரவிக்குமாரின் வியூகத்துக்கு உதாரணமாகக் கூறலாம். பழந்தமிழ்நாட்டில் பெயரைச் சொன்னால் எல்லாவற்றையும் சொல்லிவிட்டதுபோல. எனவே யாருடைய பெயரையும் சொல்ல வேண்டாம் என்று அகத்திணை நியமித்துக் கொண்டது. இப்போது ஊரும் தெருவும் அந்த நிலமைக்கு வந்துவிட்டது. சங்க காலத்தில் தெருக்களுக்குப் பெயர் கிடையாது. இடைக் காலத்தில் தெருக்களுக்குப் பெயர் கொடுக்கப்பட்டன. 'உன் தெரு இல்லை', 'உன் ஊர் இல்லை' என்பதைத் தொடர்ந்து 'விலக்கம்' பிரஸ்தாபிக்கப்படுவதால் கவிதையின் வரி உணர்வாழம் கொள்கிறது. மேலும் சமூக இயல் ரீதியான கருத்துகளையும் ஈர்த்துக்கொள்கிறது.

        தற்குறிப்பேற்றம் இல்லாமல் கவிதை சாத்தியமில்லை என்றே சொல்லிவிடலாம். இருந்தாலும் அப்பட்டமான கவிதைகளைக் கவிஞர்கள் இன்னமும் விரும்பி எழுதுகிறார்கள். இவை அனேகமாக நான்கந்து வரிகளுக்குள் அடங்கிவிடக்கூடியதாக இருக்கும் இவற்றில் சமுதாய அர்த்தம் என எதுவும் இல்லாவிட்டாலும் வடமொழி சொல்லும் ரமணீயத்துக்குக் குறைவில்லை . ரவிக்குமாரின் மழைக் கவிதைகளில் இதைக் காணலாம். 'மழை அழுவதைக் கேட்டதுண்டா நீங்கள்? ' என்று ஒரு கவிதை திகைப்பான ஒரு கேள்வியைக் கேட்கிறது.

காத்திருக்கும் பயிர்களைக்
கருக விட்டுவிட்டுக்
கடலில் பெய்கிறது மழை

என்று ஒரு கவிதை மழையின் பாரபட்சத்தைக் கூறுகிறது. மழை எல்லா இடங்களிலும் பெய்துவிட்டிருக்கிறதா என்று மின்னல் என்ற கைவிளக்கின் ஒளியால் பார்க்கிறான் மழையின் தெய்வம் என்றது குசேலோபாக்கியானம். ரவிக்குமார் காட்டும் மழை மேற்பார்வையாளர் இல்லாமல் தவறான இடத்தில் பெய்கிறது.

கதிர்களை சிதைக்கிறது
காலம் தப்பிப் பெய்யும் மழை

என்ற கவிதையில் மழையின்மீது நமக்குக் கோபம் வருகிறது. ரவிக்குமாரின் கவிதையில் வருஷம் முழுவதும் மழை பற்றிய ஒரு விவாதம் நடந்துகொண்டே இருக்கிறது. வாசகர்களுக்குப் புரிந்துகொள்ள ஒன்றுமில்லாதபோதும் ரவிக்குமாரின் கவிதையில் மழை ஒரு ரம்மியமான உரையாடலைத் தருகிறது.

மழையில் நிற்கும் ரயிலைவிட சோகமானது
வேறெதுவும் உண்டா என்று கேட்கிறாய்
தண்டவாளம் எப்படி
மறந்தது உனக்கு

        நவீன கவிதையில்தான் சாலை கவனத்துக்கு வருகிறது. சங்கக் கவிதையில் ஒரு காதலன் மழையால் சாலை சேறு சகதியாகித் தேர் ஓட்ட முடியாமல் வேந்தன் கொடுத்த வேலையைச் செய்ய முடியாமல்போனதைப் பற்றிக் குறிப்பிடுகிறான். சாலையை நவீன காலத்தின் அடையாளமாகக் கொள்ளலாம். கவிதையில் பிரயாணம் உருவகத் தொனி பெற்றதுபோல சாலையும் உருவகத்தன்மை பெற்றுவிட்டது. ஆண் கவிஞர்களிடம்தான் சாலை பேசப்படுகிறதென்று நான் நினைத்தேன். உமாபதியின் கவிதைத் தொகுப்பு 'நெடுஞ்சாலை மனிதன்' என்று பெயர்பெற்றுள்ளது. தமிழ் மணவாளனின் கவிதைத் தொகுப்புக்கு 'புறவழிச் சாலை' என்று பெயர். எஸ். ராமகிருஷ்ணனின் புத்தகம் ஒன்றும் 'வாக்கியங்களின் சாலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் பெண் கவிஞர்களும் சாலை பற்றி எழுதியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. லதா ராமகிருஷ்ணனும் கிருஷாங்கினியும் சாலை பற்றி எழுதியிருக்கிறார்கள். ரவிக்குமாரின் கவிதையில் சாலை மற்றும் தார்ச் சாலை பலமுறை இடம் பெறுகின்றன. 'நான் தடங்கள் தெரியாத வழியில் பயணிப்பவன், நீயோ சாலையைவிட்டு இறங்காதவள்' என்ற ரவிக்குமாரின் கவிதை வரிகளில் சாலை என்பது பத்திரத்தன்மைக்குப் பெயரெடுக்கிறது. சாலை என்பது பொதுவாகப் பலரது கவிதைகளிலும் இடம் பெற்றாலும் தார்ச் சாலை ரவிக்குமார் கவிதையில் மட்டும்தான் குறிப்பிடப்படுகிறது என்பது என் அனுமானம். தார்ச்சாலை பற்றிக் கன்னடத்தில் ஒரு அழகான சிறுகதை எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் தேவனூரு மகாதேவ என்று ஞாபகம்.


       சிறுவர் சிறுமியர் பற்றித் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கும் அளவு வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்குமா என்று கேட்கத் தோன்றுகிறது. ரவிக்குமாரின் கவிதைகள் சில இவ்விஷயமாக அழகாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் அதிர்ச்சி தருகிற விஷயங்களையும் அவர் எழுதத் தவறவில்லை.

ரயில் வரும் சப்தத்தை ரசித்தபடி
கிடக்கிறது தண்டவாளத்தில்
கைவிடப்பட்ட குழந்தை

என்ற கவிதையை உதாரணமாகக் கூறலாம். இக்கவிதையில் வரும் 'கைவிடப்பட்ட குழந்தை'  என்பதை வேறொரு கவிதையில் வரும் 'கைவிடப்பட்ட காலி நிலங்கள்' என்பதுடன் இணைத்துப் பார்க்கும்போது அர்த்தம் அதிர்ச்சி தருகிறது.

       ரவிக்குமாரின் ஐம்பத்தேழு கவிதைகளில் சிலவற்றைத் தவிர மற்ற கவிதைகள் அனைத்தும் திணை நலம் உடையவை. நான் விலக்கும் அந்தச் சில கவிதைகள் அன்னியத்தன்மை கொண்டவை. அவை பாப்லோ நெருதாவின் பலத்தால் எழுந்தவை ஆகலாம். உதாரணமாக 'இரவுகளின் சூனியக்காரி' என்ற கவிதையைக் குறிப்பிடலாம். சூனியக்காரி இன்னமும் தமிழ் மனதில் உருவாகவில்லை என்பது என் கருத்து. தமிழில் சாமியாடிகள் உண்டு. ஆனால் சூனியக்காரிகள் இல்லை. ஒருவேளை இருக்கிறார்களோ? மற்றொரு கவிதையான 'இரவு ஒரு ஆதித் தாய்' தன்னளவில் சிறப்பாக அமைந்திருந்தாலும் ரிக் வேத ஐதீகக் கதையான 'யமி' பற்றித் தெரிந்தவர்களுக்கு ரவிக்குமாரின் கவிதை வினோதமான வாசிப்பைத் தரும். அந்தக் கதையில் குறிப்பிடப்படும் யமி என்பவள் தனது சகோதரனான யமனைக் காதலிக்கிறாள். தேவர்கள் அது தவறென்றாலும் அவள் கேட்பதாயில்லை. எனவே தேவர்கள் இரவைப் படைக்கிறார்கள். அந்த ஆதி இரவு நெடுங்காலம் தொடர்கிறது. யமி தூங்கிவிடுகிறாள். இரவு விலக்கப்பட்டதும் அவளுக்குக் காதல் மறந்து போய்விடுகிறது என்பது கதை. அன்றிலிருந்து இரவும் பகலும் என்பதையே வழக்காகக் கொண்டுள்ளது நமது பூமி. ரவிக்குமாரின் கவிதைகளில் 'தரையில் சிரித்திருக்கும் மஞ்சள் கிழங்கு' போன்ற செய்திகளைப் படிக்கும்போது அவரைப் பாராட்டத் தோன்றுகிறது. 'வரப்பு மேட்டில் தப்பி முளைத்த எள் செடியின் பூ' நமக்குக் கூறப்படும்போது தேன்வந்து பாயுது காதினிலே.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அவிழும் சொற்கள்
- ரவிக்குமார் கவிதைகள்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: 50 ரூபாய்

No comments:

Post a Comment