Sunday, October 24, 2010

மாயா ஏஞ்சலூ கவிதைகள் - தமிழில் : ரவிக்குமார்-- 1.
அவர்கள் வீட்டுக்குச் சென்று மனைவியிடம் சொன்னார்கள்
தங்கள் வாழ்வில் ஒருபோதும்
என்னைப்போல ஒரு பெண்ணைப் பார்த்ததே இல்லையென்று
ஆனால்... அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள்
அவர்கள் சொன்னார்கள் -
எனது வீடு எவ்வளவு சுத்தமாக இருந்ததென்று
நான் பேசிய சொற்கள் எவ்வளவு உயர்ந்தவையாக இருந்தனவென்று
நான் எப்படிப் புதிராக இருந்தேனென்று
ஆனால் ... அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள்
ஒவ்வொரு ஆணின் உதட்டிலும்
 என்னைப் பற்றிய புகழ் மொழிகள்
 அவர்களுக்குப் பிடித்திருந்தது
 என் புன்னகை, என் பேச்சு, என் இடுப்பு
 அவர்கள் என்னோடு கழித்தார்கள்
 ஒரு இரவை, இரண்டு அல்லது மூன்று இரவுகளை
ஆனால்........
2.
மென்மையாக இரு நாளே! வெல்வெட்டைப்போல மிருதுவாக
எனது உண்மையான காதலன் வருகின்றான்
பிரகாசமாக இரு அழுக்கடைந்த சூரியனே
உன் தங்கத்தேரை தயாராக வைத்துக்கொள்
மென்மையாக வீசு காற்றே, பட்டைப்போல் மென்மையாக
எனது உண்மையான காதலன் பேசுகிறான்
பறவைகளே உங்கள் பாடலை நிறுத்துங்கள்
அவனது பொன்னான குரலை நான் கேட்கவேண்டும்
வருக மரணமே விரைந்து வருக
 எனது சவத்துணி நெய்யப்படுகிறது
அமைதிகொள் நெஞ்சே சாவின் அமைதி
 என் உண்மையான காதலன் போகின்றான்
3.
நமது ஆன்மாக்கள் திரும்பிப் பார்க்கின்றன
வியப்போடு ஆச்சர்யத்தோடு
எப்படி அதை சாதித்தோம்
எங்கிருந்து ஆரம்பித்தோம்
தந்தையரே சகோதரர்களே
தனயர்களே நண்பர்களே
உங்கள் தோள்களுக்கு அப்பால்
நம் வரலாற்றைப் பாருங்கள்
இரவு நீளமானது
காயங்கள் ஆழமானவை
பள்ளம் இருண்டது அதன்
சுவர்களோ செங்குத்தானவை
மணல் நிறைந்த கடற்கரையில்
வண்ணக் கயிறுகளால் கட்டப்பட்டு
நான் இழுத்துவரப்பட்டேன்
உங்களுக்கு அருகில் ஆனால்
உங்களுக்கு எட்டாத தொலைவில்
நீங்கள் பிணைக்கப்பட்டிருந்தீர்கள்
கண்கள் கட்டப்பட்டிருந்தன
நான் அழுவதைக் கேட்டபோது
திமிறியெழ முயன்ற ஒவ்வொருமுறையும்
உங்கள் ஆன்மா காயம்பட்டது
விடுதலை அடைவதற்காக
நீங்கள் முட்டினீர்கள் மோதினீர்கள்
எனவே நாம் எவருமே
அடிமைத்தனத்தை உணரவில்லை
அந்தக் கயிற்றின் வலிமை
சங்கிலியின் வலிமை
மறந்துவிட்டது உங்களுக்கு
உங்கள் ஆண்மையின் அவமானம்
அதைமட்டும்தான் நினைத்திருந்தீர்கள்
நீங்கள் உங்களுக்கு உதவிக்கொள்ளவில்லை
எனக்கும் உதவி செய்யவில்லை
வரலாறு நெடுக
அந்த உண்மையைச் சுமந்துவந்தீர்கள்
அந்த வெறுப்பின் நூற்றாண்டுகளை மீறி
நாம் பிழைத்திருந்தோம்
கன்றிப்போகவைக்கும் அதன் பாரத்தை
நாம் மறுக்கவில்லை ஒருபோதும்
லட்சோபலட்சமாய்த் திரண்டிருக்கும் ஆடவரே
அந்தக் காட்சியை நாம்  ஒதுக்கிவைப்போம்
இன்று நம் மக்கள் எப்படி
பெருமையோடும் ஆற்றலோடும் நடைபோடுகிறார்கள்
அதை நாம் பார்ப்போம்
கொண்டாடுங்கள், எழுங்கள் நமக்காக
நமக்கு முன்னால் நடந்தவர்களுக்காக
கைதட்டுங்கள்
எழுங்கள் கை தட்டுங்கள்
நமது மொழிக்குள்
நேசமிக்க சொற்களை மீண்டும் வரவேற்போம்
எழுங்கள் கைதட்டுங்கள்
நமது படுக்கை அறைகளுக்குள்
இங்கிதங்களை மீண்டும் வரவேற்போம்
எழுங்கள் கைதட்டுங்கள்
நமது சமையலறைகளுக்குள் பெருந்தன்மையை வரவேற்போம்
கை தட்டுங்கள் நமது ஆன்மாக்களுக்குள்
நம்பிக்கை குடியேறட்டும்
கை தட்டுங்கள்
நமது இதயங்களில் நம்பிக்கை குடியேறட்டும்
நாம் பிழைத்திருக்கிறோம்
வேட்கையால்
சகோதரத்துவத்தால்
நகைச்சுவை உணர்வால்
நமக்கான தனித்தன்மையால்
நாம் பெருகியுமிருக்கிறோம்
இரவு நீளமானது
காயங்கள் ஆழமானவை
பள்ளமோ இருட்டானது
அதன் சுவர்களோ செங்குத்தானவை
கை தட்டுங்கள் கொண்டாடுங்கள்
நாம் அதற்குத் தகுதியானவர்கள்
களிப்புறுங்கள்!
( 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற  லட்சக்கணக்கான கறுப்பின மக்கள்
கலந்துகொண்ட  ‘ மில்லியன் மேன் மார்ச் ‘ என்ற பேரணியில் வாசிக்கப்பட்ட கவிதை

No comments:

Post a Comment