Saturday, October 16, 2010

ஜாய் கோஸ்வாமி கவிதைகள்ஜாய் கோஸ்வாமி கவிதைகள்
தமிழில் : ரவிக்குமார்

1.

மாலையில் துயரம் வந்து என் கதவருகில் நின்றிருந்தது.
அதன் முகம் மறைந்திருந்தது
செத்துக்கொண்டிருக்கும் சூரியனிலிருந்து நிறங்களை எடுத்துத் தன் உடலில் பூசியிருந்தது
துயரம் மாலையில் வந்திருந்தது.
நான் எனது கரத்தை நீட்டினேன்
இரும்பின் உறுதியோடு அதைப் பற்றிக்கொண்டது
எனது அறையிலிருந்து இட்டுச் சென்றது
அதன் முகம் கறுத்திருந்தது
அது எனக்கு முன்னே செல்ல நான் அதைப் பின்தொடர்ந்தேன்
நான் மாலையைக் கடந்து இரவுக்குள் சென்றேன்
இரவிலிருந்து விடியலுக்கு
அதிலிருந்து காலைக்கு
பகலுக்கு, நாளுக்கு, மாதத்துக்கு
நீரைக் கடந்து, மரத்தை, படகை, நகரத்தை, மலையை
வீழ்ச்சியைக் கடந்து எதிர்ப்பை, நஞ்சை, சந்தேகங்களை, பொறாமையை, புதைகுழிகளை, படுகொலைகளை, நாகரீகத்தின் எலும்புகளை , சதுப்பு நிலங்களை, புல்வெளிகளைக் கடந்து
எனது மரணத்தையும் கடந்து,
மரணத்துக்குப் பின் மரணத்தைக் கடந்து
சென்றேன் சென்றேன்
எனது மெலிந்த விரல்கள் பற்றியிருக்கவில்லை எதையும்
எழுதுகோலைத்தவிர
எதுவுமில்லை

2.

அலைகிறது ஒரு கண் இன்னொருத்தனின் நேசத்துக்குரியவளைத் தேடி
அவளது காலைத் தேடி
அகஸ்மத்தாக அவளது சேலை சற்றே உயரும்போது -
வெளியே மழை பொழிகிறது. மேசைக்கு அடியில் இருளில்
ஒரு லாந்தர் விளக்குத் தாழ்கிறது
அவ்வப்போது
மறைந்திருக்கும் பாதத்தின் அழகொளி புரள்கிறது
கண்ணின் மீது தவறில்லை
பார்ப்பதைத்தவிர வேறுவழியில்லை
அங்கே இல்லையா? ஏன்?- சாரல் இரைச்சலோடு நுழைகிறது
அங்கே இல்லையா? ஏன்? - பூத்துக்குலுங்கும் புதர்கள் முட்கம்பி வேலியின்மீது தாவுகின்றன
அங்கே இல்லையா? ஏன்?- எந்த உரிமையும் இல்லாதவனிடமிருந்து
பூவேலைப்பாடு செய்யப்பட்ட துணியின் நுனியில் எல்லாமே மறைக்கப்பட்டிருக்கின்றன
இப்போது நின்றுவிட்டது மழை. அவளும் அறையைவிட்டுச் சென்றுவிட்டாள்
குளிர்ந்த காற்று மட்டும் திரும்பி வருகிறது
சக்தியற்ற மனிதனின் கண்ணைப்போல
அவ்வப்போது
மேசையின் அடியில் இருக்கும் லாந்தர் விளக்கு மட்டும்
நடுங்குகிறது.

3.
ஒரு நாள் சந்தேகம் வந்து அவன் தோளில் அமர்ந்தது
நீண்ட மெல்லிய அலகால் அவனது காதைக் குடைந்தது
அந்த சுகத்தில் அவனது கண்கள் மூடிக்கொண்டபோது- சந்தேகம்- அவனது காதுக்குள் புகுந்துகொண்டது
அவன் அதைக் கவனிக்கவில்லை

அதுமுதற்கொண்டு அவனது மண்டைக்குள் சந்தேகப் பறவை சிறகடிக்கும் ஓசை கேட்கத் தொடங்கிற்று
அவன் எதையோ கவனிக்க முனைவான் ஆனால் அந்த ஓசைதான் அவனுக்குக் கேட்கும்
அவன் யாரோ ஒருவரின் கண்களைப் பார்ப்பான் அங்கு
அதன் கண்களே அவனுக்குத் தெரியும்
ஒவ்வொரு நாள் காலை விழித்தெழும்போதும் ஒரு நட்பை அவன் இழந்துகொண்டிருந்தான்
இரவில், மனைவியின் அருகில் படுத்திருக்கும்போது
தனது உடம்பையே அவன் சோதித்துக்கொள்கிறான்
அவள் வேறுயாரோடும் படுத்திருக்கவில்லை என்பதை
உறுதி செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக

4.

கிடத்துங்கள் உங்களை நீங்கள் மீண்டும் பிறக்க விரும்பினால்
கிடத்துங்கள் உங்களை
அடர்ந்த புல்வெளியில் கிடத்துங்கள் உங்களை
சொல்லுங்கள் அம்மா அப்பா அம்மா அப்பா
உங்கள் உடல் இந்தக் காலை வேளையில் இத்தனூண்டாகச் சுருங்கிப்போய்விடும்
வேலைக்குச் செல்பவர்கள் பார்ப்பார்கள்
புல்லின்மீது பனித்துளிகள் இருப்பதை
சூரியனின் கதகதப்பில் உங்களின் ஒரு துளி மறைந்துபோகும்
செல்லுங்கள் நீங்கள் பிறக்க விரும்பினால் செல்லுங்கள்
மேகங்களிடம் சொல்லுங்கள் அம்மா அப்பா அம்மா அப்பா
அந்த மேகங்கள் தமது கருவறையிலிருந்து உங்களை வீசியெறியும்
அப்படியொரு மழை அப்படியொரு மழை அப்படியொரு மழை
கீழே அழகிய பெண்ணொருத்தி கூரையற்ற குளியலறைக்குள் செல்கிறாள்
மழை பெய்யும்போது குழாயில் அவ்வளவாகத் தண்ணீர் வரவில்லை
அவள் உங்களைத் தன் மார்போடு சேர்த்துத் தழுவிக்கொள்கிறாள்
அப்படியொரு அன்பு அப்படியொரு அன்பு அப்படியொரு அன்பு

5.

காதலனுக்காகக் காத்திருக்காதே

பொழுது சாய்ந்துவிட்டது வீட்டுக்குப் போ
காத்திருக்கவேண்டாம் இனி
மரங்கள், வீடுகள், விளம்பரப் பலகைகள், மரங்கள்
சாம்பல் நிற வானத்துக்கிடையில் - தொலைவில் அந்திநேரக் கடைகள்
ஒவ்வொரு ஸ்கூட்டரும், மாருதி காரும்
மதகுக்கு அருகில் திரும்பும்போது ஒளியை இரைக்கின்றன
போன வாரம் வீசிய அதே புயல்
வருகிறது மீண்டும்
தெருவில் பாலித்தீன் பையுடன் காற்று சுழல்கிறது
காற்றின் குரல் மெள்ள அதிகரித்து உறுமலாகிறது
என்னவொரு அதிசயம் புறநகரின் குளத்து நீரில்
நடுங்குகிறது அமைதியின்மை.....

வீட்டுக்குப் போ, காத்திருக்காதே. போய்ப் பார்
நீ பாட்டியிடம் விட்டுவிட்டு வந்த குழந்தை
தரையில் தூங்கும்போது
சின்னதும் பெரியதுமான பொம்மைகளின் காட்டில் விளையாடிக்கொண்டிருப்பதை


6.

இன்று மதியம் நான் உறங்கப்போவதில்லை, விழிக்கப்போவதில்லை, சாகப்போவதில்லை, வாழப்போவதில்லை
ஜன்னலின் வழியே அறைக்குள் நுழைகிறது காலம்
இன்று மதியம் வரை நான் அறிந்ததில்லை எனது கரத்தை.
எனது கரம் ஒரு யாழ் என்ற விவரத்தை.
ஒரு இசைக்கலைஞனைப்போல என் கரத்தை நீ பற்றினாய்
தோளிலிருந்து சுட்டுவிரலின் நுனி வரை
‘ என்னவொரு அற்புதம்’ என்பதுபோல் அதை நீ பார்த்தாய்
விரலின் நுனியில் பதிந்த உன் உதடுகள்
இசையை இரைத்தபடி முன்னேற
எனது உள்ளங்கையில் நீ கண்டுபிடிக்கிறாய் ஒரு சிவப்பு நரம்பை
என்னவொரு ஆச்சர்யம் அது நடுங்குகிறது
இந்தநேரம் வரை அதை நான் பார்த்ததில்லை

இன்று மதியம்வரை எனக்குத் தெரியாது
நீர், காற்று, ஆகாயம் எதைப்பற்றியும்
நான் உறங்கவில்லை, விழிக்கவில்லை, சாகவில்லை, வாழவில்லை பறவையொன்று பறந்துவந்து என் முகத்தின்மீது அமர்கிறது
ஒரு கிராமம் கல்லைப்போல ஆற்றுக்குள் விழுகிறது ஆறு தனது பாதையை மாற்றுகிறது
அப்போதுமுதல் மலையிலிருந்து சுனையொன்று பெருக்கெடுத்து என் ஊருக்குள் வருகிறது நான் மூழ்கவில்லை , மிதக்கவில்லை பறக்கவில்லை

நான் இந்த சுனையைப் போலத்தான், என்னை உன் கைகளில் அள்ளிப் புத்துணர்வு பெறலாம்
நான் உன் முகத்தைக் கழுவுவதைக்காட்டிலும் வேறெதையும் செய்யவில்லை
நீ நீந்தவேண்டிய நேரம் வந்துவிட்டது...

நீ மூச்சைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் மூழ்கி என் கண்களைத் தேடுகிறாய்
மூடிய எனது விழிகளின்மீது அழுந்துகின்றன உன் உதடுகள்
எனக்கு நினைவுக்கு வருகிறது என் ஓநாய் வாழ்க்கை, என் தேள் வாழ்க்கை, என் மலைப் பாம்பு வாழ்க்கை
என் கொலையாளிகளின் வாழ்க்கை, காட்டில் பதுங்கியிருந்த வாழ்க்கை
ஒருகாலத்தில் உன்னை முத்தமிடுவதாக நான் வாக்குறுதி கொடுத்திருந்தேன்
காலங்கள் பலகடந்து அதை நிறைவேற்ற வந்திருக்கிறேன்
இப்போது யாரும் வரப்போவதில்லை, உனது தலை மட்டும்தான் என் மடியை நோக்கித் தழைகிறது

மீண்டும் நாம் ஒருவரையொருவர் தேடுவோம்
உனது உதடுகளின் அழுத்தம் கண்டுபிடிக்கிறது
இந்த நண்பகலின் உயிரை
இந்த மதியவேளை ஒரு சுனையைப் போன்றது
நாம் கிடப்போம் அதனடியில் தூங்கவும் வேண்டாம் விழிக்கவும் வேண்டாம்
சாகவும் வேண்டாம் பிறக்கவும் வேண்டாம்
ஏனென்றால் இந்தச் சுனையில் காலம் உறைந்துவிட்டது...ஏனென்றால்
இப்போது நாம் புணர்ந்துகொண்டிருக்கிறோம்

ஜாய் கோஸ்வாமி :
புகழ்பெற்ற ஆனந்த்பஜார் பத்ரிகா குழுமத்திலிருந்து வெளியாகும் தேஷ் என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றும் ஜாய் கோஸ்வாமி , தனக்கான மொழியையோ , நடையையோ இதுவரைக் கண்டடையவில்லை என்கிறார். கல்கத்தாவில் பிறந்த கோஸ்வாமி , கவிதைகள் மட்டுமின்றி நாவல்கள் , கட்டுரைகள் முதலானவற்றையும் படைத்துவருகிறார். அவரது நாவலொன்று அஞ்சன் தாஸ் என்பவரின் இயக்கத்தில் திரைப்படமாகியுள்ளது.

No comments:

Post a Comment