Sunday, October 31, 2010

உங்கள் கனவு எனக்குத் தெரியும் - ரவிக்குமார்



மனிதர்கள் ஏன் கனவு காண்கிறார்கள் என்பதற்கு இதுவரை அறிவியல் ரீதியான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் , குறிப்பிட்ட ஒரு கனவை  நாம் எப்போது காண்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாகச் சொல்லக்கூடிய காலம் நெருங்கிவிட்டது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தான் கண்ட கனவுகள் குறித்து ஒருவரிடம் கேட்டறிவது பின்னர் அவற்றை மனோவியல் ரீதியாக வியாக்யானம் செய்வது என்பதை இதுவரை மனோதத்துவ நிபுணர்கள் செய்துவந்தனர். ஆனால் இனி ஒரு கனவு எப்படி உண்டானது என்பதைக் கண்டறிந்துவிடலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கான வழிமுறை ஒன்றைத் தாம் கண்டறிந்திருப்பதாக"' நேச்சர்" என்ற பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரை  ஒன்றில் விஞ்ஞானி டாக்டர் மோறன் செர்ப் ( Dr Moran Cerf  ) கூறியிருக்கிறார். குறிப்பிட்ட சில நியூரான்கள் அல்லது மூளையின் செல்கள் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையோடு தொடர்புகொண்டதாய் இருக்கின்றன என்று அவர் கூறுகிறார். எனவே , நியூரான்களோடு தொடர்புடைய பொருட்கள் , நபர்கள் கருத்தாக்கங்கள் முதலானவற்றைத் தொகுத்து ஒரு டேட்டா பேஸை உருவாக்கிவிட்டால் அதன்பின் நாம் எளிதில் கனவு காண்பவரின் மூளையைப் படித்துவிடலாம் என்கிறார் டாக்டர் செர்ப். http://www.nature.com/news/2010/101027/full/news.2010.568.html


உதாரணமாகச் சொன்னால் ,    பரிசோதனைக்கு உட்படும் ஒரு நபர்   நடிகை மர்லின் மன்றோவை நினைக்கும் போது அந்த நினைப்புடன் தொடர்புடைய அவருடைய மூளையில் இருக்கும் நியோரோன் சுடர்விடும் . தற்போது இந்த ஆராய்ச்சியில் இருக்கும் சிரமம் என்னவென்றால் ஒருவரது மூளையின் செயல்பாட்டைப் படிக்க அறுவை சிகிச்சை மூலம் அவரது மூளையின் ஆழத்தில் சில  எலக்ட்ராடுகளைப் பதித்துவைக்க வேண்டியிருக்கிறது. மூளை பாதிக்கப்பட்ட சில நோயாளிகளிடம்தான் இப்போது இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது ஆனால் இப்படியான அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமலேயே இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் சாத்தியம் இருக்கிறது என்று டாக்டர் செர்ப் கூறுகிறார்.  
தூங்குபவர்களின்  மூளையின் அலைகளை புரிந்துகொள்வதும், அதில் இருந்து அவர்கள் காணுகின்ற கனவுகளை புரிந்து கொள்வதும்தான் ஆய்வாளர்கள் எடுக்கப்போகின்ற அடுத்த கட்ட முயற்சியாகும். ஒரு நபரின் மூளையைப் படித்து அவரது எண்ணங்களை அறிந்துகொண்டுவிட்டால் அதுவொரு புரட்சியாகவே இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் அடுத்த கட்டம் என்னவென்பதையும் அவர்கள் யூகமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு மின்னஞ்சலை எழுதுவதற்குப் பதிலாக நாம் கணினித் திரையின் முனனால் உட்கார்ந்து அதை நம் மனதில் நினைத்தாலே போதும் எழுத்துகள் உருப்பெற்றுவிடும். கடிதம் மட்டுமல்ல கட்டுரைகளையே கூட நாம் அப்படி எழுதிவிட முடியும். 
இன்று என் நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன் . அவர் நியூமரலாஜியில் நம்பிக்கைகொண்டவர். எனது பிறந்த தேதியைக் கேட்டு உடனே எனக்கு பலன் சொல்ல ஆரம்பித்துவிட்டார். '" உங்களுடைய பர்த் நம்பர் ஒன்று லைப் நம்பர் ஆறு . ஒன்றின் பலன் இதுவரை இருந்தது. அது உங்களைப் பிரபலப்படுத்திவிட்டது. இனி உங்களுக்கு நம்பர் ஆறின் பலன்தான். அது கலைத் துறையில் உங்களைக் கொண்டுபோய் சேர்த்துவிடும். உங்களுக்கு காதல் உறவுகளும்கூட ஏற்படலாம் " என்றார். நான் விவரம்தெரிந்த நாளிலிருந்தே பகுத்தறிவுவாதி. இப்படியான சோதிடங்களை நம்பாதவன் . ஆனால் நண்பர் சொன்னதைக் கேட்டதிலிருந்து அதை நம்பலாம் போலத்  தோன்றுகிறது. ஆனால் இந்த கனவு மெஷினை உருவாக்கிவிட்டால்  சோதிடர்களுக்கு வேலை போய்விடும் அல்லவா ?. அந்த மெஷினை உடனே காவல்துறையில் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் இல்லையா . ஏற்கனவே ப்ரைன் மேப்பிங் என்று கொல்கிறார்கள். இந்த மெஷின் கிடைத்தால் சும்மா இருப்பார்களா .
அடுத்தவர்களின் கனவைப் படிப்பது சுவாரஸ்யமானதுதான் . ஆனால் அதற்கென்று ஒரு மெஷின் வந்துவிட்டால் அந்த ஈர்ப்பு போய்விடும். வாழ்க்கையில் வெறுமை படிந்துவிடும். ஆனால் மனதில் நினைப்பதை எந்த ஊடகத்தின் துணையும் இல்லாமல் பதிவுசெய்ய முடிந்தால் அற்புதமான இலக்கியங்கள் உருவாகும் என்றே தோன்றுகிறது. இப்போதைக்கு நாம் அந்த மெஷினைப்பற்றிக் கனவு காண்போம். 

No comments:

Post a Comment