Wednesday, October 20, 2010

மழை மரம் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்







1.
இனியும் தருவதற்கு என்ன இருக்கிறதென்று
ஒரு சுருக்குப் பையை திருப்பிக் காட்டுவதுபோல்
இதயத்தை உள்ளும் புறமுமாய்
திறந்து காட்டுகிறாய்

நான் எதையும் கேட்கவில்லை
வாங்கிக் கொள் என்றுதான்
மன்றாடுகிறேன்

தருவதை விடவும் கடினமானது
பெறுவதுதான்

தாங்க முடியா பெருவலியிலிருந்து
என்னை விடுவித்துவிடு எனக்
கதறும் என்னிடம்
யாரோ வரைந்துவைத்த கோட்டுக்கு  அப்புறமிருந்து
சொல்கிறாய்
' மிச்சம் மீதி எதுவும் இல்லை '

நான் எதையும் கேட்கவில்லை
எடுத்துக் கொள் என்றுதான் இறைஞ்சுகிறேன்

என் காலத்தை எடுத்துக்கொள்
கனவுகளை ,கண்ணீரை
குருதி கசியுமென் இதயத்தை எடுத்துக்கொள்

ரத்தத்தில் பிறந்து அதையே தின்று
பெருகும் புற்று நோய் போல
என்னுள் நொடிதோறும் கிளைத்துப் பரவுகிறது
நேசம்
அதன் பாரம் என்னை அழுத்துகிறது
அதை நீ எடுத்துக்கொள்

இவை எதையும் நீ எடுத்துக்கொள்ள
முடியாதுபோனால்
என் அன்பே !
குறைந்தபட்சம்
உயிரையாவது எடுத்துக்கொள்
----------------------------------
-=================================================----------
2.

மழை கழுவிய சாலையில்
படர்கிறது
தெருவிளக்கின் மஞ்சள்
காற்றைத் தடுத்து மறிக்கும்
கண்ணாடிக்கு இப்புறமிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறோம்

தனிமையின் ஆவேசத்தில்
மொழிக்குள் நாம் எளிதாய்க்
கடந்த எல்லைகள்
இறுக்குகின்றன குரல்வளைகளை

கலையாத படுக்கை விரிப்பில்
சென்று பதுங்குகிறது
குளிர்

தீண்ட நெருங்கிய விரலும்
திறந்திருக்கும் சருமமும்
பற்றியெரிய
புகையாய்க்  கவிகிறது
தயக்கம்

விடியத் துவங்குகையில்
விழியின் நுனியில் துளிர்க்கும் துளியில்
கரையத் தொடங்குகிறது
அச்சம்
-----------------------------------------------------------------------------------

3.

நினைவிருக்கிறதா
பாரதியின் கதியை நினைவுகூர்ந்தபடி
யானையைக் கடந்து
பார்த்தசாரதியைப் பார்க்கப் போயிருந்தோம்

ஆசாரம் போர்த்திய முதியவர்களின்
தோல் சுருக்கங்களை ரசித்தவாறு
வரிசையில் நின்று
பேச்சின் இடையே மந்திரமும் சொன்னவர்
உடைத்துத் தந்த தேங்காயைப்
படியில் அமர்ந்து பகிர்ந்து தின்றோம்

நினைவிருக்கிறதா ?

அப்போது
பார்த்தசாரதியின் மீசையை
வியந்தபடி என்
கண்களைப் பார்த்தாய்
அவற்றுள்
குழந்தை ஒன்று தவழ்வதைப் பார்த்தாய்
அதற்கும் மீசை இருந்ததைப் பார்த்தாய்
திகைப்பு அடங்குவதற்குள்
அது உன்
உந்திச் சுழி வழியே
உள்ளே புகுவதையும் பார்த்தாய்

நினைவிருக்கிறதா?

No comments:

Post a Comment