Thursday, October 28, 2010

சிறுகதை : படுகளம் - லதா

சண்பகலட்சுமியின் உடலில் சன்னமாகச் சுருதியேறத் தொடங்கியிருந்தது
நாலாபுறமும் மக்கள் இடித்து நெரித்துக்கொண்டிருந்தனர்.
வசதியான இடத்தைப் பிடிப்பதில் ஒவ்வொருவரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
சண்பகலட்சுமி 11 மணிக்கே வந்து மறைப்பில்லாத, வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்து விட்டாள். 
பெரியாச்சி பூசையில் தொடங்கி தர்மராஜா பட்டாபிஷேகம் வரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் நடைபெறும் தீமிதித் திருவிழாவின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒன்றுவிடாமல் தவறாமல் கலந்துகொள்ளும் சண்பகலட்சுமிக்கு, எந்த விழாவுக்கு எந்த நேரத்தில் வந்தால் இடம் கிடைக்கும், எங்கே நின்றால் வசதியாகப் பார்க்கலாம் என்பதெல்லாம் அத்துப்படி. 
கோயிலில் பல முறை கட்டுமானப்பணிகள் நடைபெற்றிருந்தன. வழமைகளின் கால நேரங்களும் இடங்களும் அவ்வப்போது மாறியிருந்தாலும் அது எல்லாமே சண்பகலட்சுமிக்கு மிகச் சரியாகத் தெரிந்திருந்தது.
கூட்டம் நெருக்க நெருக்க அவளது இடத்தில் காற்றோட்டம் தடைப்படத் தொடங்கியது. 
கிடைத்த சிறு இடைவெளியில் பாதை அமைத்து “முன்னுக்குப் போயி நில்லு” என்று தன் பேத்தியை தள்ளினார் ஒரு மாது.

எப்ப தொடங்குவாங்க.... அருகில் நின்ற சிறுவன் தொணதொணத்தான்.

இரு இரு. பாரு மணல்ல உருவம் எல்லாம் செஞ்சிருக்காங்க. இவங்க யாருன்னு தெரியுமா.. முதல்ல இருக்கிறது அபிமன்யூ. அது யாரு தெரியுமா.... என்று சிறுவனுக்குக் கதை சொல்லத் தொடங்கியிருந்தார் அவனுக்கு அருகில் நின்ற பெரியவர்.

நேரமாக ஆக எல்லாக் குழந்தைகளும் பொறுமையிழக்கத் தொடங்கினர். கூட்டத்தின் நெரிசலுடன் குழந்தைகளின் அழுகையும் நச்சரிப்பும் சண்பகலட்சுமிக்கு எரிச்சலுìட்டியது.
எம் பிள்ளையும் வெளியில வந்து இப்படித்தான் அழுது அடம்பிடிக்குமோ... நினைப்பே அவளைப் பயமுறுத்தியது. வெளிச் சத்தத்தை தன் உடலுக்குள் புகவிடாமல் தடுப்பதுபோல் இரு கைகளையும் பரப்பி வயிற்றைக் கெட்டியாக மூடிக்கொண்டாள். 

அபிமன்யூ அர்ஜுனனின் மகன். சிறந்த வீரன். இன்னிக்கு காலையில சக்கரவர்த்தி கோட்டை பார்த்தயில்ல. அதில செத்துப்போனானே அவன்தான்...

அத்தே... அது என்ன சக்கரவர்த்தி கோட்டை...

மறுபக்கம் நின்ற சிறுமி தன் அத்தையைக் குடைய ஆரம்பித்தாள்.

சக்ரவர்த்தி கோட்டை என்கிறது பாரதப் போரில வரும். சண்ட போடுற முறையில ஒண்ணு. சக்ரவியூகத்துக்குள்ள போன அபிமன்யூ வெளிய வரமுடியாம சிக்கின கதை...

சண்பகலட்சுமியும் எத்தனையோ முறை சக்கரவியூகத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறாள். அவள் பலமுறை பழகிய போர் வியூகம்தான். ஆனாலும் கடைசி நேரத்தில் அவளால் வெளியில் வரமுடியாமல் போய்விடுகிறது. எப்படியும் ஒருமுறையாவது வெற்றிகரமாகத் தப்பி வந்துவிட வேண்டும் என்றுதான் நினைப்பாள். ஆனால் முடிவதில்லை. 
எதிரி இருந்தால்தானே அவள் போரிடமுடியும்... அவள் மாட்டிக்கொள்வது எதிரியிடம் இல்லையே... 
ஆமாம்... எதிரியிடம் இல்லைதான்... தனக்குத்தானே சத்தமாகச் சொல்லிக்கொண்டாள். அருகில் நின்றிருந்தவள் ஒரு தரம் சண்பகலட்சுமியைத் திரும்பிப் பார்த்தாள். 
மீண்டும் ஒரு முறை பார்க்க வைக்கும் ஒருவித கவர்ச்சி சண்பகலட்சுமியிடம் இருந்தது. 
அவள் மிக நேர்த்தியாகக் கட்டியிருந்த கடுமையான மஞ்சள் நிற காட்டன் புடவை, அவளின் மெருகேறிய கரு நிறத்தையும் தசைகள் கெட்டிப்பட்டு திண்ணென்றிருந்த உடல் வாகையும் மேலும் எடுப்பாகக் காட்டியது. நீளக் கூந்தலை அள்ளிக் கட்டியிருந்தாள். ரோஜாப் பூ ஒன்றையும் வேப்பிலைக் கொத்தையும் செருகியிருந்தாள். தோளில் தொங்கிய சிவப்புத் துணிப் பை அதன் சக்தியையும் மீறிப் புடைத்திருந்தது. சிவப்புக் கற்கள் பதித்த ஜிமிக்கி. இரு கைகளிலும் தங்க வளையல்கள். கழுத்தில் நீளமான உருத்திராட்ச மாலை. 
அந்தப் பெண் மீண்டும் சண்பகலட்சுமியை உற்றுப் பார்த்தாள். அவள் காதில் புளூ டுத்தோ, எயர்போனோ இல்லை. கையிலும் போன் இருப்பதாகத் தெரியவில்லை. பக்கத்தில் நிற்பவரிடம் பேசுகிறாளா என்றும் பார்த்தாள். அதற்கான எந்த அடையாளமும் இல்லை... அருகில் நிற்பவர் தம் குழந்தையோடு பேசிக் கொண்டிருந்தார். மறுபடியும் சண்பகலட்சுமியிடம் பார்வையை ஓட்டினாள். அவள் லேசாகக் கண்களை மூடிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள். 
அந்தப் பெண் சற்றுத் தள்ளி நின்றாள்.


அபிமன்யூ தன் அம்மா சுபத்திரை வயித்தில இருக்கும்போது, சுபத்திரையின் அண்ணனான கிருஷ்ணர் ஒருநாள் பொழுதுபோக்கா போர் வியூகங்களைப் பற்றிச் சுபத்திரைக்கு விளக்கினார். சக்ரவியூகம் பற்றியும் அதனுள் இருக்கும் பத்மவியூகம் பற்றியும் கிருஷ்ணர் சொன்னார். சுபத்திரை வயித்துக்குள்ள இருந்து அபிமன்யூவும் அதக் கவனமாகக் கேட்கிறான். சக்ரவியூகத்துக்குள் செல்லும் வழியைக் கூறி, அதிலிருந்து வெளியே வர்ற உத்தியைச் சுபத்திரைக்கு சொல்றதுக்கு முன்னாடி பொழுதுவிடிஞ்சு போச்சு. கிருஷ்ணர் கதையை அத்தோட நிறுத்திட்டார். பாரதப்போரில கௌரவர்கள் படை, அதேபோல் சக்ரவியூகம் அமைத்து, அதுக்குள்ள பத்மவியூகம் உண்டாக்கி, அதில் துரியோதனனை ஒளிச்சு வச்சிட்டாங்க. அந்தச் சமயத்தில அர்ஜுனன் அந்த இடத்தில் இல்லாததால, அங்கிருந்த அபுமன்யூ தானே படைக்குத் தலைமை தாங்கப் போறதாச் சொல்லிக் கிளம்பினான்.....
அத்தை தன் மருமகளுக்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்... 
சிறுமி காலையில் தான் பார்த்த சக்ரவர்த்திக் கோட்டை சடங்கை அசை போடுகிறாள்.... 

அபிமன்யூ சக்ரவியூகத்தைக் காவல் புரியும் நான்கு பூதங்களிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்கிறான். முதல் மூன்று பூதங்களான காளி, காண்டா பூதம், ஏலைய கன்னி ஆகிய பூதங்கள் அபிமன்யூ உள்ளே செல்ல அனுமதி வழங்க மறுக்கிறது. ஆனால், நான்காவது பூதமான கரண்டர் அபிமன்யூ உள்ளே செல்ல அனுமதிக்கிறது. சக்ரவியூகத்தை உடைத்துகொண்டு உள்ளே சென்ற அபிமன்யூவை கௌரவர்கள் படை சுற்றி வளைத்து கொள்கிறது. வெளியே வர வழித்தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த அபிமன்யூ தமக்கு ஆபத்து என்பதைத் தன் தந்தைக்கு தெரிவிக்க தனது சங்கை ஊதுகிறான்..... 
அந்தச் சங்கொலி அர்ஜுனன் காதுக்கு எட்டக்கூடாது என்ற காரணத்தால் கிருஷ்ணர் தனது சங்கை அதைவிட பலமாக ஊதி, அபிமன்யூவின் சங்கொலியை மங்கச் செய்கிறார். அந்தத் தருணத்தில் அபிமன்யூ கொல்லப்படுகிறான். இதுதான் “சக்ரவர்த்தி கோட்டை”.... 
சிறுமியின் நினைவோடலும் அத்தையின் கதையும் முடிகிறது.

தானும் எப்போதாவது இதுபோல் ஒருமுறை கொல்லப்பட்டு விடக்கூடும் என்று நினைத்த சண்பகலட்சுமிக்கு திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது. லேசாகக் குனிந்து மெதுவாகக் கேட்டாள்.... 
நீ அர்ஜூனனோட பிள்ளையா, கிருஷ்ணனோட பிள்ளையா... துச்சாதனனோட பிள்ளையா... அல்லது அம்மன் கொடியில பறக்கிற ஆஞ்சநேயரோட பிள்ளையா....
அவளுக்குப் பதில் கிடைக்கவில்லை.
இன்னும் கொஞ்சம் குனிந்து, வயிற்றை அழுத்திப் பிடித்தபடி, நான் பேசுறது உன் காதில விழுதா... என்று உரக்கக் கேட்டாள்.

கேட்கும்... கேட்கும்... அருகில் நின்றவர்கள் கெக்கலித்தார்கள்.

சண்பகலட்சுமி காதில் அது விழவில்லை.

ஒருவேள என் குழந்தையும் அபிமன்யூபோல வெளியில் வரத்தெரியாம உள்ளேயே மாட்டிக்கொள்ளுமோ... பெரும் கவலை அவளைக் கனமாகப் போர்த்தியது. மூச்சு முட்டியது. அவள் பதற்றமுற்றாள். வியர்த்துக் கொட்டியது. தன்னைச் சுற்றிய வெளியைப் பெரிதாக்கிக் கொண்டாள்.

என்னம்மா இடிக்கிற... பக்கத்தில ஆளுங்க நிற்கிறது கண்ணுக்குத் தெரியலயா...

சொன்னவள் முறைக்க, சண்பகலட்சுமியின் பதற்றம் மேலும் கூடியது. பல மணி நேரமாகப் பிடித்து வைத்திருந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். வாட்டசாட்டமான அவளின் தோற்றம் அவளுக்குச் சுலபமாக இடம் பிடித்ததுத் தந்தது. துìணோரமாகச் சென்று சாய்ந்து கொண்டாள். மூச்சை இழுத்து விட்டாள். 

ஒரே மாதிரி கருப்பு நிறத்தில் மொட்டைக் கட்டை டீ சட்டையும் பேண்டும் அணிந்திருந்த ஒரு இளையர் கூட்டம் சலசலப்புடன் வந்து மண்டியது. அவர்களின் சிரிப்பிலும் பேச்சிலும் குழந்தைகளின் சிணுங்கல் மறைந்துபோயின.

என்னாலா மண்ணுல உருவம் செஞ்சிருக்காங்க. போமோ செய்யப் போறாங்கலா...

என்னா பேசுற நீனு... இந்த மாதிரி பேசினீன்னா உனக்கு ஏதாவது ஆயிடும்... ஆமா...

ஆமா உனக்கு ரொம்ப தெரியுமாக்கும்...

எனக்குத் தெரியும். நான் சின்னப்பிள்ளையா இருக்கேல்லேர்ந்து பாட்டிகூட வருஷாவருஷம் வருவேன். பாட்டி சொல்லுவாங்க. இதலெல்லாம் சும்மா இல்லை. இந்த திரௌபதி அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்தவங்கன்னு. விளையாட்டா நினைச்சு கேலி செஞ்சா அவ்வளவுதான்னு பாட்டி சொல்லியிருக்காங்க....

பெரிசா தெரிஞ்சா மாதிரியே பேசற.. இந்தக் கத என்னான்னு சொல்லுபாப்பம்...

இது தெரியாதாக்கும்... முதல்ல இருக்கிறது அபிமன்யூ. அடுத்து பாண்டவர்களோட குரு, துரோணாச்சாரியார். மூணாவது கர்ணன். அதுக்கடுத்து கொஞ்சம் பெரிசா இருக்கிறது துரியோதனோட தம்பி துச்சாதனன். கடைசி இருக்கிற பெரிய உருவம் துரியோதனன்...

பரவால்ல. பெரிய புலவர்தான்லா நீ. எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க. இந்த பொம்மையைத் தான் பாஞ்சாலி உடைப்பாங்க இல்ல...

யா லா...

யாருலா அந்தப் பாஞ்சாலி.... அசல் ஒம்போது....

பாரு... நீ விளையாடத தெரியுமா. அவர் ஒம்போது இல்ல... ஆம்பிள... அவர்தான் பல வருஷமா பாஞ்சாலி வேஷம் போடுறாரு...

வெரிகுட் ஆக்டிங்லா... இவங்கல நம்ம பிராதனவிழா போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்லா.... 

ஒரு பெரும் சிரிப்பலை வெடித்தது. அருகில் நின்றவர்கள் முறைக்க அந்தக்கூட்டம் அமைதியானது.

வெயில் ஏறி ஏற, உஸ் உஸ் என்று எல்லாப் பக்கங்களிலிருந்தும் முணகல்கள் பெருகின. ஆனாலும் ஆர்வத்தோடும் பரபரப்போடும் எல்லாரும் காத்திருந்தார்கள்.

சண்பகலட்சுமியின் கவனம் தன் குழந்தையிடம் திரும்பியது. 
இது எப்போ என்கிட்ட வந்திச்சு... யோசித்து யோசித்து அவளுக்குத் தலை வலித்தது. கடைசியாக திங்கட்கிழமை வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். 
அவளுக்குத் திங்கட்கிழமை என்றால் பிடிக்கும். ஒருமுறை கோயில் ஐயர் அவளிடம் சொன்னார், பாஞ்சாலிக்கு உகந்தநாள் திங்கட்கிழமை என்று. திங்கட்கிழமையில்தான் பாஞ்சாலி வயசுக்கு வந்தாளாம். பாஞ்சாலிக்குக் கல்யாணம் நடந்ததும் திங்கட்கிழமைதானாம். அதனாலதான் ஆடி மாசத் திங்கட்கிழமையில் கொடியேற்றம் நடக்குது என்றும் ஐப்பசி மாசம் திங்கட்கிழமையில தீமிதி நடக்குது என்றும் சொன்னார். அன்று முதல் தான் திங்கட்கிழமை பிறந்திருக்க வேண்டும் என்று சண்பகலட்சுமி தீர்மானித்து விட்டாள். தன் பிள்ளையும் திங்கட்கிழமைதான் பிறக்கும் என்று அவள் நினைத்தாள். ஆனால் எந்தத் திங்கட்கிழமை என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை... 

அங்க பாரு, கிருஷ்ணர் போறாரு... 

தொடங்கப் போகுதுலா... 

பம்பையும் மேளமும் முழங்க குந்தம், மணிப்பலகைகள், மஞ்சள் தட்டு, சாட்டை, தீவிட்டி ஏந்தியவர்களும் வாள் ஏந்திய ஐந்து காவல்காரர்களும் கிருஷ்ணருடன் பெரியாச்சி சன்னதியை அடைந்தனர்.
கிருஷ்ணர், திரௌபதைக்கு மாலை போடுகிறார். 
திரௌபதைக்கு அருள் வருகிறது.

சண்பகலட்சுமி இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள். அவளின் நரம்புகள் புடைக்கத் தொடங்கியிருந்தன. 
எப்போதும் ஆம்பிளங்கதான் வேஷம் போடணுமா... ஏன் பொம்பிளயே பாஞ்சாலியா நடிக்கக்கூடாது... என்ன விட்டா நான செய்ய மாட்டேனா... சண்பகலட்சுமி அன்றும் புழுங்கத் தொடங்கினாள்...
நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே சண்பகலட்சுமிக்கு ஆசை. வகுப்பில் அவள் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததால் முதலாம், இரண்டாம் வகுப்புத் தமிழாசிரியருக்கு அவளைப் பிடிக்காது போனது. பிறகு ஆறாம் வகுப்பு தமிழாசிரியருக்கு அவள் மீது அளவுக்குமீறி அன்பு ஏற்பட்டுவிட்டது. அவளுக்கு நாடகம் சொல்லித் தர அவரது வீட்டுக்கு வரச்சொன்னார். ஆனால் அவர் நாடகம் சொல்லித்தரவில்லை. 
பிறகு வானொலி நாடகத்தில் நடிக்க பலமுறை எழுதிப் போட்டாள். நீண்ட நாள் கழித்து ஒரு தயாரிப்பாளர் அவளை நேர்முகத் தேர்வுக்கு வரச்சொன்னார். அவளை நேரில் பார்த்த தயாரிப்பாளர் அவள் கருப்பாகவும் குண்டாகவும் இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பி விட்டார். குரலுக்கும் உடலமைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று உயர்நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சண்பகலட்சுமிக்குப் புரியவில்லை. 
வேலைக்குப் போன பிறகு ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தாள். அந்தக் குழுவில் இருந்த பலரும் வசதியானவர்களாக இருந்தார்கள். நாடகத்தைவிட மற்ற அனைத்திலும் அவர்களுக்கு அதிக ஆர்வம் இருந்தது. அவர்களது ஆடம்பரமான பொழுதுபோக்குகளுக்கு சண்பகலட்சுமியால் ஈடுகொடுக்க முடியவில்லை. அம்மா சிறையில். அப்பா மறுவாழ்வு இல்லத்தில். அக்கா ஓடிப் போய் விட்டாள். அவளும் தம்பியும் மட்டும்தான். தம்பி படித்துக் கொண்டிருந்ததால், முழுப் பொறுப்பும் அவளுக்குத்தான். உயர்நிலைக் கல்வியை முழுமையாக முடிக்காததால் அவளுக்கு நல்ல வேலையும் கிடைக்கவில்லை. மேடை நாடக ஆசையும் அதோடு முடிந்துபோனது. 
ஒரு தீமிதியில் அவள் சாமி வந்து ஆடியதை டிவி செய்தியில் காட்டினார்களாம். பலபேர் பார்த்திருக்கிறார்கள். செய்திக்கு மறுஒளிபரப்பு இல்லாததால் அதையும் அவளால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

கிருஷ்ணர் திரௌபதையின் கழுத்தில் சாட்டை அணிவிக்கிறார். பிறகு திரௌபதையைக் கூட்டிக்கொண்டு திரௌபதை சன்னதிக்குப் போகிறார். திரௌபதை காப்புக் கட்டிக் கொள்கிறாள்.
சாமி புறப்பாடு. 
வீரபத்திரர், கிருஷ்ணர், அர்ஜுனர், திரௌபதை எல்லாரும் படுகளம் நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார்கள்.

படுகளம் தொடங்கி விட்டது.

யார் போட்ட படுகளமா, இது எவர் போட்ட படுகளமா...

பாடிக்கொண்டே சுற்றி வருகிறார்கள்.
பாட்டின் சுதி ஏற ஏற கூட்டத்திலும் கனம் கூடியது. வெய்யில் நெரிசல் புழுக்கம் எல்லாவற்றையும் மீறி கூட்டத்தில் ஒருவித தீவிர உணர்வலை படர்கிறது. 

சொர்க்கமா... நரகமா... 

ஒவ்வொரு உருவமாக கிருஷ்ணர் கேட்டுக்கொண்டே வருகிறார்.

இவன் உன் மகன் அபிமன்யூ...

சொர்க்கம்...

இவர் பாண்டவர்களுக்குப் போர் வித்தை சொல்லிக் கொடுத்த துரோணாச்சாரியார்...

சொர்க்கம் கண்ணா....

இவர் பாண்டவர்களின் மூத்த சகோதரர் கர்ணன்....

சொர்க்கமே கொடு....

இது துச்சாதனன்...

திரௌபதியின் உடலில் வேகம் கூடுகிறது... மண் உருவத்தைக் காலால் உதைக்கிறாள்... 
இவனுக்கு நரகமே கிட்டட்டும்...

சுற்றிலும் பேரமைதி. பம்பையும் மேளமும் ஓங்கி ஒலிக்கிறது... தொண்டர்களின் பதற்றவொலி வேகமாக வெளியில் கேட்கிறது 

இது உன்னைத் தொடையில் அமரச் சொன்ன துரியோதனன்..... கிருஷ்ணன் சொன்னதும் பாஞ்சாலியின் சன்னதம் உச்சம் கொள்கிறது.

கூட்டத்தில் நின்ற பலரும் ஆவேசம் கொள்கின்றனர். கூட இருப்பவருக்கு சாமி இறங்கக்கூடும் என எதிர்பார்த்து வந்திருந்தவர்கள், தயாராக அவர்களை அடக்கும் பணியில் இறங்குகின்றனர். சன்னதம் கொண்டவர்களுக்கு தொண்டர்கள் வீபூதியையும் குங்குமத்தையும் மாறி மாறி அப்புகின்றனர்.

சண்பகலட்சுமி வீறிட்டுக் கத்த, பக்கத்தில் நின்ற இரு தொண்டர்கள் அவளை அடக்க முயற்சி செய்கிறார்கள். அவள் திமிறித் திமிறி ஆடுகிறாள்.

துரியோதனின் உடல் மேல் பாய்கிறாள் திரௌபதை... அவன் ரத்தத்தை அள்ளிப் பூசிக் கொள்கிறாள்... எலும்பை உடைத்துத் தலை சீவுகிறாள்....

அவனுக்கு நரகம்தான் அவனைக் கொல்லு... கத்திக்கொண்டே திமிறுகிறாள் சண்பகலட்சுமி. கூட்டத்தின் கவனம் திசை திரும்புகிறது.

துரியோதணன் வேடத்தில் இருந்தவர் மயக்கமடைகிறார்.

“ஒஹோ... ஹோய்... ஹூய்...” சண்பகலட்சுமி வீறிட்டுக் கத்துகிறாள்

இத யாரு உள்ள விட்டா... வருசா வருசம் இதுகூட ஒரே தொந்துருவாப் போச்சு... அலுத்துக்கொண்டே அவளை அடக்குகிறார்கள் தொண்டர்கள்.

திரௌபதியின் சன்னதம் இன்னும் இறங்கவில்லை. அவள் உடல் ஆடிக்கொண்டே இருக்கிறது. 

உயிர்த்தண்ணி கொடுக்க துரியோதனன் உடலைத் துìக்கிக்கொண்டு தொண்டர்கள் ஓடுகிறார்கள். 

சாமி வந்தவர்கள் ஒவ்வொருவராக மெல்ல அடங்குகிறார்கள். சண்பகலட்சுமியை அடக்க முடியாமல் கூடி நின்றவர்கள் திணறுகிறார்கள்...

திரௌபதை சபதம் முடித்து கூந்தல் முடிந்து கொண்டாள். ஒற்றையாடை நீக்கி செம்பட்டு அணிந்துகொண்டாள். அவள் கையில் வாள் கொடுக்கிறார்கள்.

சண்பகலட்சுமியின் கொண்டை அவிழ்ந்து நீளமான செந்நிற சுருட்டை முடி தீ போல் எரிந்தது. 

உன்னை வெட்டாம அடங்க மாட்டேன்டா....

யார வெட்டப் போற.... சொல்லு.... கை நிறைய குங்குமத்தை அள்ளிக்கொண்டு கர்ணகடூரமாகக் கேட்கிறார் அவளுடன் போராடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர்.

உன்னத்தாண்டா... உன்னைத்தாண்டா... அவள் எல்லார் முகத்திலுக் காறி உமிழ்கிறாள்....

சுற்றி நின்றவர்கள் ஆத்திரம் தாங்காமல் அவள் மேல் வாளி வாளியாக மஞ்சள் நீரைக் கொட்டுகிறார்கள்.

திரௌபதை வாள் கொண்டு தீக்குழிக்கு அடி அளக்கிறாள். நான்கு மூலையும் வரைந்து, திரௌபதை சூலத்தை அகற்ற கூட்டம் மெல்லக் கலைகிறது.

நாகஸ்வரம் மேளத்துடன் பூசை தொடங்குகிறது.

முகம் முழுக்க குங்குமமும் மஞ்சள் நீருமாக அந்த வெயியில் எரிந்துகொண்டிருந்த சண்பகலட்சுமியை மறந்து விட்டிருந்தார்கள்.

பாவிப்பயலுக. குடிக்கத் தண்ணி கேட்டா, தலையில கொட்டிட்டுப் போயிடானுங்க...

சண்பகலட்சிக்கும் உள்ளுக்குள்ளும் எரியத் தொடங்கியது.

ஏய் அந்தத் தண்ணியைக் கொண்டா...

அவளின் கடூரமான குரலில் நடுங்கிப்போன அந்தப் பெண் எட்டி நின்றவாறு கையிலிருந்த தண்ணி போத்தலை அவளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்...

ஒருபோத்தல் தண்ணியையும் ஒரே மடக்கில் குடித்தாள். கொஞ்சம் பசி அடங்கியதுபோலிருந்தது.

ரெண்டு பேருக்கு நரகமாம்... மூணு பேருக்கு சொர்க்கமாம்.... என்னா நியாயம் இது... போருன்னா போர்தான்... எல்லாரும் கொன்னாங்க... எல்லாரும் செத்தாங்க... எல்லாரையும் ஒரே இடத்துக்குதான அனுப்பனும்... அது எப்படி ஒருத்தங்கல நரகத்துக்கும் ஒருத்தங்கல சொர்க்கத்துக்கும் அனுப்ப முடியும்.... அது என்னா நியாயம்....

அவளுக்கு பைத்தியம் முற்றி விட்டதாக அங்கு நின்றவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.

சண்பகலட்சுமிக்குத் தீக்குழி வெட்டுவதையும் தீ மூட்டுவதையும் பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது.

ஒரு முறையாவது தானும் ஆம்பிளபோல் வேஷம் போட்டுத் தீக்குழிக்குள் இறங்கிப் பார்க்கவேண்டும் என்று அவள் எப்போதும் நினைத்துக்கொள்வாள்.
ஆனால் பொம்பிள எப்படி ஆம்பிள போல வேஷம் போடமுடியும்... ஆம்பிளன்னா ரொம்ப ஈஸ¬யா பொம்பிளையா மாறிடலாம். ஆனா அவள் எப்படி ஆம்பிளையாவது... எப்படி மஞ்சள் வேட்டியைக் கட்டிக் கொண்டு மேலாடையில்லாமல் வருவது.... சே...
பெண் போல் வேடமிட்டு உலா வந்த தன் கணவனை நினைத்துக்கொண்டாள். அவன் ஏன் பெண் வேடம் போடுவதன் காரணம் அவளுக்கு பல நாட்கள் புரியாமலே இருந்தது. அவன் ஏதோ நாடகத்தில் நடிக்கிறான் என்றுதான் முதலில் நினைத்தாள். ஆனால் எப்போதுமே நாடகம் நடக்காதே என்றும் யோசித்தாள். ஒருநாள் ஆண் தோழன் ஒருவனை வீட்டுக்குக் கூட்டி வந்து, இனிமேல் இந்த வீட்டில் இவன்தான் இருப்பான், நீ வெளியே போ என்றான். அவள் முடியாது என்றாள். என்னா ரொம்ப திமிறா பேசற... வந்தவன் மிரட்டினான். அவளுக்கு ஆத்திரம் வந்தது. இந்த வீட்டில என்னோட சிபிஎப்பும் இருக்கு. என்ன வெளில போகச் சொல்ல நீ யாரு... அவள் கத்தினாள். அவன் அடித்தான். அவளும் அடித்தாள். அடிதடி ரத்தக் களறியானது. அவள் போட்டிருந்த டீ சட்டைக் கிழித்தெறிந்தான். அவமானமும் கோபமும் தாங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தன் கணவன் மீது கத்தியை வீசினாள். அந்த ஆத்திரத்தில் புதிதாக வந்தவன் அவளைப் பலாத்காரம் செய்தான்... ரத்தக் களறியில் ஒரு அத்தியாயம் முடிந்தது... இன்னொன்று தொடங்கியது...

தீமிதிக்காக புது மணல் கொண்டு வந்து கொட்டியிருந்தார்கள். இதன் மேல் தீக்குழி வெட்டுவார்கள். 
தீக்கட்டைகள் குவிந்து இருந்தன. திரௌபதை அளந்த இடத்தில் 18 அடி நீளத்துக்கு வெட்டப்படுகிறது. 

அவளும் தெள்ளத்தெளிவான சுத்தமான மணலாகத்தான் இருக்கிறாள்.

அவள் மேல் சன்னதம் ஏற்படுத்திக் கோடு கிழிக்கிறார்கள்... அவளைச் சுத்தமாக்க மஞ்சளைக் கரைத்துக் கொட்டுகிறார்கள்... ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று பகுதிகளாக தீக்கட்டைகளை அடுக்கிறார்கள்... ஹோமத் தீயை எடுத்து வந்து தீ மூட்டுகிறார் தலைமைப் பண்டாரம்... மூன்று பகுதிகளிலும் எரிந்த தீ, ஒரு பெரும் தீயாகி, கொளுந்து விட்டு எரிகிறது. எரிந்து எரிந்து கட்டைகள் கருகி, அவிந்து தணலாகிறது.... தணல் சமன்படுத்தப்படுகிறது... பூசணிக்காய் உடைத்து காவல் கொடுக்கிறார்கள்... பூத் துìவி வழிபடுகிறார்கள்... பூக்குழி தயாராகிறது...
விரதம் இருந்து மஞ்சள் நீராடி ஒற்றைத் துணியுடுத்தி தணல் மேல் நடக்க ஆண்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள்...
தலைமைப் பண்டாரம் வந்து விட்டார்... அவர் கரகம் சுமந்து ஆடுவது, திருமணமான நாளன்று குட்டையான கவுனைப் போட்டுக் கொண்டு அவளது கணவன் ஆடியதை ஞாபகப்படுத்தியது. அன்றைக்கு அவளும் அவனுடன் சேர்ந்து ஆடினாள்.
பண்டாரம் முதலடி வைத்து நடந்ததும் ஒவ்வொருவராக இறங்குகிறார்கள்... 
வரிசையாக நடக்கிறார்கள்... நீறு பூக்காமல் தணலைக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள்... பலர் ஓடுகிறார்கள்... பட்டும் படாமலும் சிலர் தாவுகிறார்கள்... 
தீயில் நடந்தவர்கள் மிதித்து மிதித்து தெறித்த பால் அவளை முழுதாக நனைத்திருந்தது 
தீ தணிந்து சாம்பல் சூடும் தணியும்போது அவள் தனித்துப் போயிருந்தாள்....

அவள்மீது புல்முளைக்கிறது. 
புறாக்களுக்கு அரிசி வீசிக்கொண்டு வெறுமனே இருக்கிறாள். மறுபடியும் அவளை உழுகிறார்கள்..... மணலாகிறாள்... குழி வெட்டுகிறார்கள்... தீ மூட்டுகிறார்கள்...

பூக்குழி கணல்கிறது. சந்தனக்கட்டைகள் எரிந்து அணைந்து தணலாகும் வரை நேற்றிலிருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள் சண்பகலட்சுமி. 
தீயின் சூட்டில் நெற்றியில் அப்பப்பட்டிருந்த குங்குமம் கரைந்து ஓடி அவளது மஞ்சள் சேலை சிவப்பு நிறமாகியிருந்தது.
பூக்குழி சுற்றுபவர்கள் வரிசையில் நிற்கும் அவளுக்கு முன்னும் பின்னும் இடம் விட்டே நிற்கிறார்கள்.

அவள் மீது ஒவ்வொருவராக நடந்து செல்கிறார்கள்.

கனத்த குரலில் உரத்துப் பாடிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. 
வேகமான தாளத்துடன் பாடல் ஓங்கி ஒலித்தது.
சண்பகலட்சுமியும் பாடத் தொடங்கினாள்.
அவள் கையிலிருந்த எலுமிச்சம்பழம் மசிந்து வழிந்தது. 
அவள் உடலும் கரையத் தொடங்கியது. 
தீக்குழியைச் சுற்றிலும் செங்குருதி பரவி விரவியது. 
பசும்பால் கலந்திருந்த வெண்மணல் செம்மண் ஆகிறது...

கைநிறைய வேப்பிலையும் எலுமிச்சம்பழமும் வைத்திருந்த ஒருத்தி தீட்டு தீட்டு என்று கத்தினாள்.. அவள் குரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது... 

தணிந்திருந்த தணல் திடீரென பற்றி எரியத் தொடங்கியது... நெருப்பின் நடுவே சண்பகலட்சுமியின் பாடல் உரத்து ஒலிக்கிறது...

அருள் வந்து ஆடிக்கொண்டிருந்தவர்களின் ஆட்டம் சட்டென அடங்கியது. 
தீக்குளித்திருந்த ஆண்கள், பூக்குழி சுற்ற வரிசைபிடித்திருந்த பெண்கள், காவலுக்கு நின்றவர்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாருமே விதிர்த்துப் போயினர். 
கோயில் பூசாரிகளுக்கு வியர்த்துக் கொட்டியது... அங்கு நின்றிருந்த அவசர மருத்துவ சேவைத் தாதியர்களும் போலிஸ்காரர்களும் செய்வதறியாது நிற்க... சடசடவென்று மழை கொட்டத் தொடங்கியது.

No comments:

Post a Comment