Wednesday, October 27, 2010

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு: துளிர்த்துக் கருகும் நம்பிக்கை - ரவிக்குமார்




காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட ஐந்து வால்யூம்கள் உடைய  தனது தீர்ப்பில் தமிழ்நாட்டின் பங்கு 419 டி.எம்.சி. என நடுவர் மன்றம்  கூறியது.  கர்னாடகத்துக்கு 270 டி.எம்.சி. நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது . நீதிபதி என்.பி.சிங் தலைமையிலான நடுவர் மன்றம்  வழங்கிய தீர்ப்பில் காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டு அது தமிழ்நாடு,கர்னாடகம்,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களு’குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டு’கு 419 டி எம் சி வழங்கப்பட்டிருந்தாலும் உண்மையில் கர்னாடகா தரப்போவது 192 டி எம் சி மட்டுமே.மீதமுள்ள 227 டி எம் சி தண்ணீர் தமிழகத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதியிலிருந்து கிடைக்குமென நடுவர் மன்றம் கூறியிருக்கிறது.

       கர்னாடக எல்லையில் உள்ள பில்லி குண்டுலு நீர் தேக்கத்திலிருந்து 192 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டுமென நடுவர் மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கேரளாவுக்கு 30 டி.எம்.சி.யும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி.யும் வழங்கப்பட வேண்டுமென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரில் 7 டி எம் சியை புதுவைக்குத் தர வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் 1892 மற்றும் 1924ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இனி செயலற்றுப்போகும்.

1991ல் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டுமென்று ஒரு இடைக்கால ஆணையை நடுவர் மன்றம் வழங்கியது. ஆனால் இதுவரை அதை கர்னாடகா முழுமையாக நடைமுறைப் படுத்தியதில்லை.இடைக்காலத் தீர்ப்பையே ஏற்று’கொள்ள  மறுத்த கர்னாடகம் இந்த இறுதித் தீர்ப்பை அவ்வளவு எளிதில் ஏற்று’கொண்டுவிடாது. பாதிக்கப்பட்டதாக கருதுகிற மாநிலங்கள் 90 நாட்களில் அப்பீல் செய்து கொள்ளலாம் என்று நடுவர் மன்றம் அனுமதித்திருப்பதையொட்டி இப்போது கர்னாடகமும் தமிழ்நாடும் மறு ஆய்வு மனு செய்யப் போவதாக அறிவித்துள்ளன.அந்த மனுக்களின் மீது ஒரு ஆண்டு’குள் நடுவர்மன்றம் தனது முடிவைத் தெரிவிக்கவேண்டும்.இதனால் இந்தச் சிக்கல் மேலும் நீளுமென்பது உறுதியாகிவிட்டது.

தமிழகத்துக்கு 566 டி.எம்.சி. தண்ணீர் தரப்பட வேண்டுமென்று நடுவர் மன்றத்தின் முன்பு தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. தமக்கு 456 டி.எம்.சி. நீர் தேவையென கர்நாடகம் வற்புறுத்தி வந்தது. கர்னாடகத்தில் காவிரிப் படுகைப் பகுதியில் 48 தாலுகாக்கள் உள்ளன. அவற்றில் 27 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதைக் கணக்கில் கொண்டு தண்ணீர் ஒதுக்கீடு அமைய வேண்டும் என்றும் கர்னாடகத்துக்காக ஆஜர் ஆன மூத்த வழக்கறிஞர் அனில் திவான் கோரியிருந்தார். பிரபல வேளாண் விஞ்ஞானி ஜே.எஸ்.கன்வார் என்பவர் கர்னாடகத்தில் பெய்யும் மழை அளவு குறித்துக் கூறிய விவரங்களை அவர் கர்னாடகத்துக்கு சாதகமாக எடுத்துக் காட்டியிருந்தார்.ஆனால் இதை தமிழகத் தரப்பு மறுத்து வந்தது. நடுவர் மன்றமோ தனியாக நிபுணர்களை அனுப்பி தமிழகம் மற்றும் கர்னாடக மாநிலங்களில் பயிர் செய்யப்படும் நிலத்தின் பரப்பையும் வறட்சி நிலையையும் கணக்கிட்டது.

       இந்தியாவில் இப்போது மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சனைகள் தீவிரம்பெற்று வருகின்றன. இந்தியாவில் பதினான்கு மகாநதிகள் உள்ளன. அவை எல்லாமே ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுபவைதான். 44 நடுத்தர ஆறுகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்பது ஆறுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன. மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற நதிகளால் பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து தான் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கென பிரிவு 262 சேர்க்கப்பட்டுள்ளது. நதிநீர்ப் பங்கீடு பற்றிய சிக்கல் எழுந்தால் அதைப் பாராளுமன்றம் தலையிட்டுத் தீர்த்து வைக்க வேண்டும் என அந்தப் பிரிவு கூறுகிறது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 262ன்படி 1956ல் இயற்றப்பட்டது தான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சனைகள் சட்டம் ஆகும். காவிரி பிரச்சனை போலவே மேலும் பல நதிநீர் சிக்கல்களுக்கும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்ட வரலாறு நமது நாட்டுக்கு உண்டு. கர்னாடகா, மகராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கிருஷ்ணா நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் எதிர்கொண்ட சிக்கலைத் தீர்க்க 1969ல் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. கிருஷ்ணா நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் மட்டுமல்ல, கோதாவரி, நர்மதா முதலிய நதிகளின் நீரைப் பங்கிடுவதிலும் கூட சிக்கல் எழுந்து அவற்றுக்காகவும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் எதுவும் நிரந்தரமாகத் தீர்க்கப்படவில்லை.

காவிரிப் பிரச்சனையின் வரலாற்றை சுருக்கமாக நாம் தெரிந்து கொண்டாக வேண்டும். காவிரி பிரச்சனை என்பது இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1807ல் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892ல் முதன் முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்படடது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அதுகுறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

1910ல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்கு திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிக்கல் எழுந்து மத்திய அரசிடம் மைசூர் அரசு பிரச்சனையைக் கொண்டு சென்றது. மத்திய அரசு, கண்ணாம்பாடி அணையின் கொள்ளளவு 11 டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்தது. அதற்கு ஒப்புக்கொண்ட மைசூர் அரசு தான் திட்டமிட்ட 41.5 டி.எம்.சி. அளவுக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது.

மைசூர் அரசும், சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரிட்டிஷ் அரசு 1892ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்து உத்தரவிட்டது. அவர் 1914ஆம் ஆண்டு மே மாதம் தனது தீர்ப்பை வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதை இங்கே எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

‘‘இரண்டு தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் ஒரு தீர்வை தரமுடியாததற்காக நான் வருந்துகிறேன். இரண்டு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளும் ஏற்கத் தக்கவையாக இல்லை... இரு தரப்பினருமே ஒரு சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஆர்வமற்றவர்களாக இருந்தனர்... தற்போதைய சென்னை மாகாணத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம். அதே சமயம், மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என கிரிஃபின் தனது உத்தரவில் தெரிவித்தார்.

கிரிஃபின் கூறியதை சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. அது மேல் முறையீடு செய்தது. மீண்டும் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் துவக்கப்பட்டன. அதன் இறுதியாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் ஐம்பது ஆண்டுகள் நடைமுறையில் இருக்குமென்று அப்போது தீர்மானித்தார்கள்.1892 ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகள் குறித்த பொதுவான ஒப்பந்தமாகும்,ஆனால் 1924 ஒப்பந்தமோ காவிரி பாசனப் பகுதியில் நடைபெறும் விவசாயம் பற்றிய குறிப்பான ஒப்பந்தமாகும்.காவிரியின் மேற்பகுதியில் கட்டப்படும் எந்தவிதமான புதிய அணைகளலும் காவிரியின் கீழ் பகுதியில் இருக்கும் த்மிழ்நாட்டின் விவசாயத்துக்கு எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாது என்பதே இந்த இரண்டு ஒப்பந்தங்களின் அடிப்படை.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் மேலும் சில துணை ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 1929 ஒப்பந்தப்படி மைசூர் அரசு கிருஷ்ணராஜசாகர் திட்டத்தையும், சென்னை மாகாண அரசு மேட்டூர் திட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள வகை செய்யப்பட்டது. கிருஷ்னராஜசாகரில் கட்டப்படும் அணையின்மூலம் ஒருலட்சத்து இருபத்தைந்தாயிரம் ஏக்கர் சாகுபடிசெய்ய அனுமதித்த அந்த ஒப்பந்தம் மேட்டூரில் கட்டப்படும் அணையின் மூலமாக புதிதாக தமிழ்நாட்டில் மூன்றுலட்சத்து ஓராயிரம் ஏக்கரில் சாகுபடி செய்ய அனுமதி அளித்தது.ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி நான்கு அணைகளை கர்னாடக அரசு கட்டத்தொடங்கியது.ஹாரங்கி,கபினி,ஹேமாவதி,சுவர்ணாவதி ஆகிய நான்கு இடங்களில் அணைகளைக் கட்டுவதன் மூலம் புதிதாக பதின்மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஏக்கரில் சாகுபடியை கர்னாடகம் விரிவுபடுத்தத் திட்டமிட்டது.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே கர்னாடக அரசின் இப்படியான ஒப்பந்த மீறல்கள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு அப்போது பொறுப்பில் இருந்த தி மு க அரசு எடுத்துச் சென்றது.16.04.1969 அன்று இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது.இந்தப் பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு முன்னர் கர்னாடகத்தின் புதிய அணைத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளீக்காது என அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தமிழக அரசுக்கு வாக்குறுதி அளித்தார்.

       தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கலைஞர் அவர்கள் கேட்டுக்கொண்டதர்கேற்ப மத்திய அரசு இதற்காக ஒரு கூட்டத்தை 09.02.1970 அன்று கூட்டியது.அதில் கலந்துகொண்ட மைசூர் அரசின் சட்டம் மற்றும் தொழிலாளர் நல அமைச்சர் எந்தவித உத்தரவாதத்தையும் தர மறுத்தார்.எனவே கலஞர் அரசு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை சட்டம் 1956ன் பிரிவு 4ன் கீழ் இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்கவேண்டுமெனக் கேட்டு 17.02.1970 அன்று கடிதம் ஒன்றை அனுப்பியது.அதன் பிறகு இந்தியப் பிரதமருக்கு இதுபற்றி இரண்டு கடிதங்களை கலைஞர் எழுதினார்.தமிழக சட்டப் பேரவையில் இதற்காக ஒரு தீர்மானத்தையும் 08.07.1971 அன்று அவர் நிறைவேற்றினார்.அந்தத் தீர்மானமும் மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டது.இவற்றால் எந்தத் தீர்வும் ஏற்படாததால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கச் சொல்லி உச்ச னீதிமன்றத்தில் தமிழக அர்சு வழக்கொன்றைத் தொடர்ந்தது.அப்போது தலையிட்ட பிரதமர்  இந்திராகாந்தி அவர்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தமிழக அரசு வழக்கை வாபஸ் பெற்றது. அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்டதுதான் ‘‘காவிரி உண்மை அறியும் குழு’’. அந்தக்குழு 1972ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1976 ஆகஸ்டு மாதத்தில் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்தாமல் பின் வாங்கிக்கொண்டன. பல ஆண்டுகள் சென்ற பிறகு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது கலைஞரின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு 1990ல் அமைத்தது தான் தற்போதுள்ள ‘காவிரி நடுவர் மன்றம்’ ஆகும்.

இப்போது வழங்கப்பட்டிருக்கும் தண்ணீரின் அளவு தமிழகம் கேட்ட அளவை விடக்குறைவுதான்.இது இடைக்காலத் தீர்ப்பில் வழங்கப்பட்டதைவிடவும் குறைவு என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள கணக்கு தவறானது.இடைக்காலத் தீர்ப்பில் 205 டி எம் சி தரப்பட்டது இப்போதோ 192 டி எம் சி தான் கொடுத்திருக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.இடைக்காலத் தீர்ப்பில் வழங்கப்பட்ட 205 டி எம் சி நீர் தமிழகத்துக்கு வந்து சேர்கிறதா என்பதை அளவிடும் இடமாக அப்போது மேட்டூர் அணையை நிர்ணயித்திருந்தனர். அந்த 205 டி எம் சியில் கர்னாடக எல்லைப் பகுதியிலிருந்து மேட்டூர் வரையிலான தமிழகப் பகுதியிலிருந்து 25 டி எம் சி தண்ணீர் வந்து சேர்வதாக’ கண’கிட்டிருந்தனர். மேலும் பாண்டிச்சேரி’குத் தரவேண்டிய 6 டி எம் சி அந்த 205 டி எம் சியில் உள்ளடக்கப்பட்டிருந்தது.எனவே அப்போது கர்னாடகம் தமிழ்நாட்டு’குத் தரவேண்டிய நீர் 174 டி எம் சி மட்டும்தான்(205&தமிழகப்பகுதியில் சேருவதாக சொல்லப்பட்ட25& பாண்டிச்சேரி’கான 6=174).ஆனால் இதை ஜெயலலிதா வசதியாக மறந்துவிட்டார்

       .கர்னாடகம், தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் தரவேண்டிய நீரின் அளவையும் நடுவர் மன்றம் வரையறுத்துள்ளது. ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34, ஆகஸ்டு மாதத்தில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 22 டி.எம்.சி., நவம்பரில் 15 டி.எம்.சி., டிசம்பரில் 8 டி.எம்.சி., ஜனவரியில் 3 டி.எம்.சி., பிப்ரவரி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டும் என நடுவர் மன்றம் கூறியுள்ளது. இந்த அட்டவணைப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணையை ஜூன் மாதத்தில் பாசனத்துக்காகத் திறந்து விடுவதில் சிக்கல் ஓரளவு குறையும்.
 
மறு ஆய்வு மனு செய்யப்போகிறோம் என இப்போது தமிழக அரசு கூறியுள்ளபோதிலும் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு சற்றே நிம்மதியைத் தந்திருக்கிறது என்பதுதான் உண்மை. முல்லைப்பெரியாறு பிரச்னையிலும், பாலாறு பிரச்சனையிலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில் காவிரி நடுவர் மன்றம் மிகவும் பாதகமான தீர்ப்பை அளித்து விடுமோ என்ற அச்சம் தமிழக அரசு’கு இருந்திரு’கும்.இந்தத் தீர்ப்பு வந்த வேளையில் தமிழக முதல்வரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் டெல்லியில் இருந்தனர். தீர்ப்பை வரவேற்பதாகவும், இதனை கர்னாடகம் செயல்படுத்துமென நம்புவதாகவும் கருத்து தெரிவித்த தமிழக முதல்வர், மற்றவர்களோடு கலந்து பேசி எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடப்போவதாக அப்போது கூறினார்.

நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்னாடகம் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வேளையில் அப்போது முதல்வராயிருந்த கலைஞர் மத்தியிலிருந்த வாஜ்பாய் அரசுக்குக் கடிதமொன்றை எழுதினார். இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு ஆணையாகப் பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். அந்த வழக்கை அட்டர்னி ஜெனரல் எட்டுமுறை ஒத்தி வைக்கச் செய்திருப்பதை சுட்டிக் காட்டியிருந்த அவர் மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சனை சட்டம் 1956ன் பிரிவு 6கின்படி ஆணை பிறப்பிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையென்றும் சுட்டிக்காட்டியிருந்தார். அப்போது பிஜேபியின் கூட்டணியிலிருந்த அ.தி.மு.க. உடனே அந்த ஆணை பிறப்பிக்கப்படாவிட்டால் வாஜ்பாய் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது. காவிரிப் பிரச்சனையில் தமிழக முதல்வர் அரசியல் ரீதியாகப் பயனடைந்து விடக்கூடாது என்பதில் ஜெயலலிதா குறியாக இருந்தார். ஆனால் இப்போது வந்துள்ள தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு அரசியல் லாபத்தைத் தருமா இல்லையா என்பது மத்திய அரசும் மாநில அரசும் இதில் நடந்து கொள்ளும் முறையில்தான் தெரியவரும்.

காவிரிப்பிரச்சனையை இவ்வளவு தூரம் சிக்கலாக மாற்றியதில் மத்தியில் ஆட்சி செய்தவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. கர்னாடக அரசியலில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் இருக்கின்ற பிடிப்பு அவர்கள் தலைமையில் அமைந்த அரசுகள் கர்னாடகத்துக்கு ஆதரவாக செயல்படும் நிலையை உருவாக்கியது. மத்தியில் கூட்டணி அட்சி என்பது யதார்த்தமாக மாறிய பிறகும்கூட தமிழ்நாட்டுக்கு நியாயமானவிதத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்ததில்லை.அ.தி.மு.க.வின் மிரட்டல் கூட அதில் பெரிய பலனெதையும் கொடுக்கவில்லை.இப்போது அந்த நிலையில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டுள்ளது.கர்னாடகத்தில் காங்கிரசோ பி ஜே பியோ ஆட்சியில் இல்லாததுதான் மத்திய அரசின் இந்த மாற்றத்துக்குக் காரணம் என்று தோன்றுகிறது.

வாஜ்பாய் அரசில் எரிசக்தி துறை அமைச்சராக அங்கம் வகித்த காலம் சென்ற ரங்கராஜன் குமாரமங்கலம் கூறிய ஒரு கருத்து இப்போது நம் கவனத்துக்கு உரியதாக உள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதை விமர்சித்துப் பேசிய ரங்கராஜன் குமாரமங்கலம் காவிரிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கும், கர்னாடக அரசு காவிரியில் கட்டவுள்ள நீர்மின் திட்டங்களுக்கும் இடையில் உள்ள உறவைச் சுட்டிக்காட்டியிருந்தார். ‘‘கர்னாடக அரசு காவிரியில் உருவாக்கவுள்ள நான்கு நீர்மின் திட்டங்களையும் தேசிய புனல் மின் கழகத்திடம் (ழிபிறிசி) ஒப்படைத்துவிட்டால் காவிரியில் வரும் நீரின் அளவையும், தமிழகத்துக்குச் செல்லும் தண்ணீரின் அளவையும் சரியாக அளவிட முடியும். இநதப் பிரச்சனை முடிவுக்கு வர அது உதவும்’’ என்று ரங்கராஜன் குமாரமங்கலம் அப்போது கூறியிருந்தார்.

மத்திய அரசு அண்மையில் இதே யோசனையை கர்னாடகத்துக்கு தெரிவித்திருந்தது. காவிரியில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்குவது தமிழகத்துக்கு வரும் நீரின் அளவைக் குறைத்து விடும் என தமிழக அரசு அச்சம் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த மின் உற்பத்தித் திட்டங்களைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள என்.எச்.பி.சி. மூலம் செயல்படுத்துமாறு கர்னாடகாவுக்கு யோசனை தெரிவித்தது.

சிவசமுத்திரத்தில் 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும், ராசிமனாரில் 360 மெகாவாட், மேகதாதுவில் 400 மெகாவாட் திறன் கொண்ட நிலையங்களும், ஒகனேக்கல்லில் 120 மெகா வாட் மின் உற்பத்தி நிலையமும் அமைத்திட கர்னாடகா ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கார்னாடகம் அறுபது சதவீதம் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு 40 சதவீதம் தந்து விட வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் இதைக் கர்னாடக முதல்வர் குமாரசாமி ஏற்கவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததற்குப் பிறகுதான் இதுபற்றி முடிவு செய்யப்படுமென்று அவர் கூறியிருந்தார். தற்போதைய தீர்ப்பு கர்னாடகத்துக்கு மகிழ்ச்சி அளிக்காத நிலையில் மத்திய அரசின் இந்த யோசனையை கர்னாடகம் ஏற்பது சந்தேகம் தான்.இதுபற்றி நடுவர் மன்றம்அதிகம் அக்கரை காட்டவில்லை.இந்தத் திட்டங்களால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறையக்கூடாது என்று சொன்னதோடு அது நிறுத்திக் கொண்டது. 

இந்தத் தீர்ப்பைப்பற்றி விவாதிப்பத்ற்காக கர்னாடகத்தில்  கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டம் முடிவு எதையும் எடுக்காமலேயே கலைந்துள்ளது.தீர்ப்பு வந்தவுடன் தமிழ்நாட்டிலிருந்து எந்த வாகனமும் கர்னாடகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.தமிழக அரசும்கூட பஸ் போக்குவரத்தை நிறுத்திவைத்தது. பலகோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் கர்னாடக தமிழக எல்லையில் தேங்கிக் கிடந்தன. கர்னாடகத்தில் உள்ள இனவெறி அமைப்பினர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான வெறுப்பை ஊதி வளர்த்து’கொண்டிருக்கிறார்கள்.ஓசூரைக் கைப்பற்றுவோம் எனக் கூறிக் கொண்டு தமிழகத்துக்குள் நுழைய முற்பட்டு கலவரத்தைத் தூண்டுகின்றனர்.பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்களை அழித்துள்ளனர்.விவசாயிகளின் நண்பனாகத் தன்னை காட்டிக்கொள்ளும் தேவகவுடாவும் கூட இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவே நினைப்பார்.மத்திய அமச்சராக இருந்த கன்னட நடிகரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான அம்பரீஷ் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது இந்தப் பிரச்சனை ஓயாது என்பதையே காட்டுகிறது. ஆக, இந்தத் தீர்ப்பு கர்னாடகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி என சித்திரித்து இதை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்கவே கர்னாடகம் முயற்சிக்கும். இந்தச் சூழலில் தமிழ்நாடு இனிமேல் தான் கடுமையாகப் போராடியாக வேண்டும்.

நடுவர் மன்றம் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பை உடனடியாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் வைக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். 90 நாட்களுக்குள் மத்திய அரசு ஆணை வெளியிடாவிட்டால் இந்த தீர்ப்பு பயனற்றதாகி விடும்.இந்தத் தீர்ப்பிலும்கூட சிலப் பிரச்சனைகள் உள்ளன.காவிரியின் மொத்தத் தண்ணீர் 740 டி எம் சி எனக் கணக்கிட்டுள்ள நடுவர் மன்றம் அதில் 4 டி எம் சி யை கடலில் கலந்து வீணாகும் நீரென்று குறிப்பிட்டுள்ளதுகடலில் கல்ந்து வீணாகும் னீராக 44 டி.எம்.சியை ஒடுக்கவேண்டும் என தமிழகத் தரப்பில் வாதிட்டனர்.அதை நிரூபிக்க 38 ஆண்டுகளின் மழை அளவுபற்றிய புள்ளி விவரங்களையும் நடுவர் மன்றத்திடம் சமர்ப்பித்திருந்தனர்.ஆனால் நடுவர் மன்றம் அதை ஏற்காமல் வெறும் 4 டி.எம்.சி மட்டுமே அதற்காக ஒதுக்கியுள்ளது.அதையும் தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரிலிருந்தே கழிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.காவிரியில் உள்ள தண்ணீரின் அளவைப் பொறுத்து தமிழகத்துக்குத் தரும் நீரின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம் என நடுவர் மன்றம் கூறியிருப்பதும் இந்தப் பிரச்சனையை மேலும் வளர்க்கவே வழிவகுக்கும். காவிரியில் கட்டப்படும் புனல்மின் நிலையங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் விடவும், மின் உற்பத்தியில் தமிழகத்துக்கான பங்கை கேட்டுப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

       காவிரிப் பிரச்சனையில் நமக்கான நியாயத்தைப் போராடி பெறும் அதே நேரத்தில் இன்னும் சில அம்சங்கள்குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டும். உலக அளவில் இப்படியான நதிநீர் சிக்கல்களை ஆய்வு செய்பவர்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்துகின்றனர். தண்ணீரை இலவசமாகத் தருவதை விடுத்து அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து ஆய்வு செய்துள்ள ரோஸ்கிராண்ட், கஸ்மூரி ஆகியோர் நீரைப் பயன்படுத்துவது பற்றி சரியான கொள்கைகளை வகுப்பதன் மூலம் தண்ணீரை சேமிக்க முடியும் என்று வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் நீரின் விலையை உயர்த்தினால் தானாகவே தொழிற்சாலைகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த ஆரம்பித்து விடும் என அவர்கள் கூறுகின்றனர். தண்ணீர் என்றால் அது இலவசமாகக் கிடைக்கக்கூடியது என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பது அவர்களின் வாதம்.அதுபோலவே நீர் அதிகம் தேவைப்படும் நெல் முதலான பயிர்களுக்கு மாற்றாக வேறு பயிர்களை சாகுபடி செய்வது பற்றியும் நாம் சிந்தித்தாகவேண்டும்.குறைந்த நாட்களில் விளையக் கூடிய நெற்பயிர்களைக் கண்டறிவதும்,குறைந்த அளவு தண்ணீரில் அதிக நெல் உற்பத்தி செய்யக்கூடிய தொழில் நுட்பங்களை ஜப்பான்,சீனா முதலிய நாடுகளிடமிருந்து கேட்டறிவதும் அவசியம்.தமிழகப் பகுதியில் பெய்யும் மழையை வீணாகாமல் பாதுகாத்துப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நதி நீர் இனைப்பு குறித்து இப்போது அதிகம் பேசப் படுகிறது.அதில் உள்ள சிக்கல்கள் குறித்து சுற்றுச் சூழல் அறிஞர்கள் கூறுகிற கருத்துகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

       தற்போது நதிநீர் பங்கீடு பொதுப்பட்டியலில் உள்ளது.அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்பதுபோல மத்திய நீர்வளத்துறை அமச்சர் சோஸ் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார்.இது ஆபத்தான யோசனையாகும்.இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி’கொண்டு மேலும் மாநிலங்களின் உரிமையைப் பறி’கிற முயற்சிக்கு ஒருபோதும் இடம் தரக் கூடாது.

மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பொன்விழா ஆண்டு இது. மொழியின் அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவது பிரிவினை உணர்வை தீவிரப்படுத்திவிடக்கூடும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் எச்சரித்தார்.மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்படாவிட்டால் அது பிரிவினைவாதிகளின் நோக்கங்களுக்கு வலு சேர்த்துவிடும்.இதை உனர்ச்சி நிலையில் நின்று பார்க்காமல் நிதானமாகக் கையாள்வதே அறிவுடைமை.முதல்வர் கலைஞர் மிகவும் முதிர்ச்சியோடு இதைக் கையாண்டு வருகிறார்.அதை புரிந்து கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
        
       இந்தத் தீர்ப்பால் தமிழகத்துக்கு முழுமையான நியாயம் கிடைத்துவிடவில்லை என்பது உண்மைதான்.ஆனால் எதிர்கட்சியினர் கூறுவது போல அநீதி இழைக்கப்படவில்லை.தமிழகத்தின் பாசனப் பரப்பை 24.71 லட்சம் எனக் கணக்கிட்டுள்ள நடுவர் மன்றம் கர்னாடகத்துக்கு 18.85 லட்சம் ஏக்கர் மட்டுமே அனுமதித்துள்ளது.இடு ஒப்பீட்டளவில் தமிழகத்துக்கு நல்லதுதான்.அனைத்துக் கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மறு ஆய்வு மனு செய்யப்போவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.நாள் செல்லச் செல்ல தமிழகத்துக்கு நட்டம்தான்.எனவே நடுவர் மன்றம் விரைந்து தனது மறு ஆய்வை முடித்து சுமுகமானத் தீர்ப்பை வழங்கவேண்டும்.அந்தத் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்.

       தமிழகத்தின் பொறுமையைப் பலவீனமாகக் கருதிக் கொண்டு தொடர்ந்து கன்னட வெறியர்கள் நடந்துகொள்வார்களென்றால் தமிழக மக்களும் களமிறங்கத் தயங்கமாட்டார்கள்.அப்படியொரு சூழல் வராமல் பார்த்துக் கொள்வது கர்னாடகத்தின் கையில்தான் உள்ளது.

1 comment:

  1. திரு.இரவிக்குமார் அவர்களே,
    தங்களின் இந்தக் கட்டுரையில் கண்ட மற்றெந்தச் சேதியிலும் எனக்கு வேறில்லை.
    அவை அருமையானவை. பாராட்டுக்கள். ஆனால், மேற்கண்ட வரிகளில் வேறுண்டு.

    உண்மையில்,

    தமிழகத்தின் பலவீனத்தை எண்ணிப் பொறுமையாகவே கன்னடர்கள் தங்கள் நலங்களைச்
    சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதே பொருந்தும். தமிழர்களிடம் ஏதும்
    பலம் இருப்பதாக நாம் மட்டுமே கருதுகிறோம். அப்படியே களம் இறங்கினாலும் தமிழர்களால்
    ஏதும் சாதிக்க முடியாத நிலைக்குத் தமிழகம் வந்துவிட்டதாகவே கருதுகிறார்கள் பலரும்.

    எனினும் தாங்கள் அரசியல் களங்களை நன்கு அறிந்தவர்.

    ”தற்காலத் தமிழர்களின் பலம் என்ன?” என்ற வினாவிற்கு விடை தேடி அலைகின்றவர்களில்
    நானும் ஒருவன் என்ற வகையில் மட்டுமே எனது கருத்து.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete