Sunday, October 24, 2010

வெள்ளை இருள் கறுப்புச் சூரியன் :ரவிக்குமார்


(ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி நான் அவரைப்பற்றி எழுதிய கட்டுரைகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் . இக்கட்டுரைகள் ஜூனியர் விகடன் இதழில் எழுதப்பட்டவை )

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம். வாக்களிப்பதற்காகக் காத்திருக்கும் நிண்ட கியூ. வெள்ளையர் ஒருவர் தனக்கு முன்னே நிற்கும் கறுப்பரிடம் நட்புணர்வோடு கேட்கிறார்:
‘‘ரொம்ப நேரமா வெய்ட் பண்றீங்களா?’’
அதற்கு அந்த கறுப்பர் பதிலளிக்கிறார்:
‘‘ஆமாம்! இருநூறு வருஷங்களா வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கிறோம்’’
உண்மைதான்! கறுப்பின மக்களின் சுமார் இருநூறு வருடம் காத்திருப்பு வீண்போகவில்லை. ஒபாமா வெற்றி பெற்றுவிட்டார். அமெரிக்காவின் நாற்பத்து நான்காவது அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கறுப்பர் ஒருவர் அமெரிக்க அதிபராகவேண்டும் என்ற கனவு இப்போது நனவாகியிருக்கிறது.
உலகமெங்கும் ஒபாமாவின் வெற்றியைத் தங்களது வெற்றியாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அதன் பொருள், அமெரிக்க அதிபரைத் தமது நாட்டு அதிபராக அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதல்ல. ஒபாமாவைத் தங்களில் ஒருவராக அவர்கள் கருதுகிறார்கள் என்பதே அதன் அர்த்தம். ஒபாமா ஒரு நபர் அல்ல. இப்போது அவர் ஒரு அடையாளம்! ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் அதிகாரத்தின் உயர் நிலைக்கு வர முடியும் என்பதன் அடையாளம். ஜனநாயகத்தின் வலிமையை எடுத்துக்காட்டும் அடையாளம்.
இந்த நாள் - அமெரிக்க வரலாற்றில் ஒரு பொன்னாள் என்று சொல்வதைக் காட்டிலும் இந்த நாள் அமெரிக்க வரலாறு புதிதாக எழுதப்படும் நாள் என்று கூறுவதே பொருத்தமாயிருக்கும். உலகத்துக்கெல்லாம் ஜனநாயகம் பற்றிப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் வரலாறு கறை படிந்தது. அடிமைத்தனமும், நிறவெறியும் அமெரிக்க ஜனநாயகத்தை மாசுபடுத்தி வந்தன. வெகுகாலம் வரை அங்கே பெண்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது. இதைத்தான் ஒபாமா மிகவும் நுட்பமாகத் தனது சிகாகோ பேச்சில் குறிப்பிட்டார்.
‘‘இந்தத் தேர்தல் ‘முதன்முதல்’ என்று சொல்லத்தக்க பல விஷயங்களைப் பெற்றிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக சொல்லப்படப்போகும் பல கதைகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்றிரவு எனது மனதில் பதிந்திருக்கிறது ஒரு காட்சி. அட்லாண்டாவில் வாக்களித்தார் ஒரு பெண். வரிசையில் நின்று வாக்களித்த லட்சக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர்தான். ஒரே ஒரு வித்தியாசம். ஆன் நிக்ஸன் கூப்பர் என்ற அந்தப் பெண்மணிக்கு நூற்று ஆறு வயது. அவர் இந்த நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதற்கு அடுத்து வந்த தலைமுறையில் பிறந்தவர். அது சாலைகளில் இந்த அளவுக்குக் கார்கள் செல்லாத காலம், வானில் இவ்வளவு விமானங்கள் பறக்காத காலம். இவரையொத்தவர்கள் இரண்டு காரணங்களால் வாக்களிக்க முடியாதிருந்த காலம் & ஏனென்றால் அவர் ஒரு பெண், அடுத்தது அவரது தோலின் நிறம் கறுப்பு’’ என்று மிகவும் கவித்துவத்தோடு அதை ஒபாமா குறிப்பிட்டார்.
இப்போது அமெரிக்காவில் பெண்கள் வாக்களிக்க எந்தவிதத் தடையும் இல்லை. ஆனால் கறுப்பின மக்களின் நிலை அப்படியானதல்ல. அவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறது என்றபோதிலும் அதைப் பயன்படுத்துவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள். உலகில் மிக அதிகமான சிறைக் கைதிகளைக் கொண்ட நாடு அமெரிக்கா. கைதிகளில் பெரும்பான்மையோர் கறுப்பினத்தவர்தான். கைதிகளாக இருந்து விடுதலை செய்யப்பட்டாலும்கூட வாக்குரிமையை மீண்டும் பெறுவது அங்கே அவ்வளவு எளிதல்ல. இப்படி வாக்குரிமை பறிக்கப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அமெரிக்காவில் உள்ளனர். வாக்களிப்பதற்கான அடையாள அட்டை கறுப்பினத்தவரில் பலரிடம் கிடையாது. இப்படிப் பல்வேறு தடைகள் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டித்தான் கறுப்பினத்தவர் பெருமளவில் வாக்களித்தார்கள். இப்போது ஒபாமா வெற்றி பெற்றிருக்கிறார்.
வெள்ளை மாளிகையில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நுழைகிறார். ஏற்கனவே கறுப்பினத்தைச் சேர்ந்த பலர் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆனால் அதிபராக அல்ல. வேலைக்காரர்கள் செல்லும் பின்கட்டு வழியாகப் போயிருக்கிறார்கள். அமெரிக்க அதிபரை கறுப்பர் ஒருவர் சந்திப்பதேகூட ஒரு காலத்தில் அபூர்வமாக இருந்தது. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரை கறுப்பினத் தலைவர் ஃப்ரடெரிக் டக்ளஸ் மூன்று முறை சந்தித்துப் பேசினார். அது அப்போது கறுப்பினத்தவரால் கொண்டாடப்பட்டது.
வெள்ளை மாளிகைக்கு விருந்தாளியாகச் செல்வது வேறு. அங்கேயே அதிபராகத் தங்கியிருப்பது வேறு. 1940ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முதல் கறுப்பரான ஜார்ஜ் எட்வின் டெய்லர் என்பவர் கறுப்பினத்தவர் செய்ய வேண்டிய புரட்சியைப்பற்றித் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அது வன்முறையான புரட்சி அல்ல. வாக்குச்சீட்டுகளின் மூலமான புரட்சி. நூறு ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது அந்தப் புரட்சி நடந்திருக்கிறது.
கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் 2000ஆவது ஆண்டில் அமெரிக்க அதிபராக வருவார் என குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜேக்கப். கே. ஜேவிட்ஸ் என்பவர் 1958ஆம் ஆண்டிலேயே கணித்திருந்தார். அவர் எத்தகைய நபராக இருப்பார் என்ற வர்ணனையையும் அவர் வெளியிட்டிருந்தார். ‘‘அவர் மெத்தப்படித்தவராக, பல நாடுகளுக்கும் பயணம் செய்தவராக இருப்பார். உலகில் அமெரிக்காவின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்ந்தவராக இருப்பார். அவர் அர்ப்பணிப்பு மிக்க சர்வதேசியப் பார்வை கொண்டவராக இருப்பார்’’ என்று அவர் கணித்திருந்தார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒபாமா என்று ஒருவர் தனது கணிப்புக்குப் பொருத்தமாக வருவாரென்று ஜேவிட்ஸ் நினைத்திருக்கமாட்டார்.
ஒபாமாவின் வெற்றி கறுப்பினத்தவரால் கொண்டாடப்பட்டாலும் அதற்குக் காரணமானவர்கள் அவர்கள் மட்டுமே அல்ல. பெண்களும், வெள்ளை இன இளைஞர்களும் பெருமளவில் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். கறுப்பினத்தவரின் சிவில் உரிமைகளுக்கான போராட்ட வரலாற்றை முன்னிலைப்படுத்தாமல் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கே ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் தந்தார். ‘மாற்றம்’ என்ற அவரது கோஷம் அமெரிக்க இளைஞர்களை கவர்ந்திழுத்தது. அதற்குப் பொருத்தமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சியும் அமெரிக்க மக்களை சிந்திக்க வைத்தது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பதை மட்டுமே சொல்லி அமெரிக்க மக்களை இனி ஏமாற்ற முடியாது என்பதன் வெளிப்பாடுதான் இந்தத் தேர்தல் முடிவு.
ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையமான விஷயமாக சாதாரண அமெரிக்க மக்களின் பிரச்சனைகளைத்தான் எடுத்துக் கொண்டார். தேர்தல் முடிவுக்குப்பிறகு சிகாகோவில் அவர் நிகழ்த்திய வெற்றிப் பேருரையிலும் அது வெளிப்பட்டது. ‘‘நாம் இங்கே நிற்கின்ற இந்த இரவில் வீரம் செறிந்த அமெரிக்கர்கள் ஈராக்கின் பாலைவனங்களிலும், ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிகளிலும் விழித்திருக்கிறார்கள். நமக்காக அவர்கள் தமது உயிர்களைப் பணயம் வைத்திருக்கிறார்கள். தமது குழந்தைகள் தூங்கிய பிறகு தந்தையரும், தாய்மார்களும் அவர்களின் கல்லூரிப் படிப்புக்கு எப்படி பணம் சேர்ப்பது, தமது மருத்துவ செலவை எப்படி சமாளிப்பது என்று தூங்காமல் கவலையோடு சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.’’
‘‘புதிய ஆற்றல் உருவாக்கப்பட வேண்டும்; புதிய பள்ளிகள் கட்டப்படவேண்டும். அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும், கூட்டணிகளை செப்பனிட வேண்டும்.’’
‘‘நமக்கு முன்னே உள்ள பாதை மிக நீண்டது, ஏற வேண்டிய உயரமோ செங்குத்தானது’’ என்று ஒபாமா அதைத்தான் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி வசதிகளையும் மருத்துவ வசதிகளையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் போன்ற அடிப்படையான பிரச்சனைகளைத்தான் ஒபாமா கவனப்படுத்தியிருந்தார். இப்போது மட்டுமல்ல, 2004ஆம் ஆண்டு கடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜான் கெர்ரியை ஆதரித்துப் பேசியபோதும் அவர் இவற்றைத்தான் வலியுறுத்தி வந்தார். அப்போது நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் நோக்கவுரை ஆற்றிய ஒபாமா, ‘‘சிக்காகோவின் தென்பகுதியில் ஏதோ ஒரு குழந்தை படிக்க முடியாமல் இருக்குமானால் அது எனக்கு முக்கியமான விஷயம், அந்தக் குழந்தை எனது குழந்தை இல்லையென்றாலும்கூட; ஏதோ ஓரிடத்தில் ஒரு முதியவர் மருந்து வாங்குவதற்குப் பணமில்லாமல் தவித்தால் அது என்னை பாதிக்கிறது, அவர் எனது தாத்தாவாக இல்லாவிட்டாலும்கூட; அமெரிக்காவின் ஏதோ ஒரு பகுதியில் அரபு அமெரிக்கக் குடும்பம் ஒன்று போலீசால் சுற்றி வளைக்கப்பட்டு எவ்வித சட்ட உதவியுமின்றி துன்புறுத்தப்பட்டால் அது எனது சிவில் உரிமைகளைப் பாதிப்பதாகவே உணர்கிறேன்’’ என்று உணர்ச்சி ததும்பக் குறிப்பிட்டார்.
ஒபாமாவின் வெற்றி இதனால்தான் பலருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடக்கும் போர்கள் முடிவுக்கு வருமென்ற நம்பிக்கை, ஈரான் மீதான அச்சுறுத்தல் குறையுமென்ற நம்பிக்கை. இலங்கைத் தமிழர்கள்கூட ஒபாமாவின் வெற்றி தங்களது அவல வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமென நினைக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் நடக்குமா?
ஒபாமாவே சொல்லியிருப்பதுபோல, ‘‘அரசாங்கம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது.’’ ‘‘இந்த வெற்றியே ‘மாற்றம்’ ஆகிவிடாது. இது அந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு மட்டுமே. நாம் பழைய வழியிலேயே சென்றால் அந்த மாற்றம் சாத்தியப்படாது’’ என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். வெள்ளை இன மக்களும், கறுப்பின மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். கொள்கையில் மாற்றம், அணுகுமுறையில் மாற்றம். அதை ஒபாமா செய்வாரா? என்பதுதான் கேள்வி. அமெரிக்காவின் வரலாற்றைப் பார்த்தால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே எண்ணத் தோன்றுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய ‘‘போர் எந்திரம்’’ அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் யாவும் சேர்ந்து செய்யும் ராணுவ செலவைவிட அமெரிக்க நாட்டின் ராணுவ செலவு அதிகம். அந்தப் ‘‘போர் எந்திரத்தை’’ ஒரே நாளில் தகர்த்துவிட முடியாது. அதற்குக் காலம் பிடிக்கும். ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு அல்ல அதற்கும் மேல் இன்னுமொரு முறை அவர் அதிபராக வரவேண்டியதுகூட அவசியமாகலாம். ஆனால் அதை அமெரிக்கா அனுமதிக்குமா? அந்தப் ‘‘போர் எந்திரத்தால்’’ பயனடைகிறவர்கள் அனுமதிப்பார்களா? இதற்கு எளிதாகப் பதில்சொல்லிவிட முடியாது.
ஒபாமா என்ன செய்ய வேண்டும்? புகழ்பெற்ற அமெரிக்க கறுப்பினப் பெண் எழுத்தாளர் ஆலிஸ் வாக்கர் ஒபாமாவுக்கு எழுதியுள்ள திறந்த மடலில் சொல்கிறார்: ‘‘மற்றவர்களின் எதிரிகளை உங்களது எதிரிகளாகக் கருதாதீர்கள். அச்சத்தால், அவமானத்தால், வேதனையால்தான் அவர்கள் நமக்குக் கெடுதல் செய்கிறார்கள். அத்தகைய உணர்வுகள் நம் எல்லோரிடத்திலும் உள்ளன... நீங்கள் இப்போது அமெரிக்காவின் முப்படைகளுக்கும் தலைவராகப் போகிறீர்கள், நமது நாட்டைக் காக்கும் பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. எனது அம்மா அடிக்கடி சொல்லும் பைபிள் வாசகம் ஒன்றை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். ‘‘பாவத்தை வெறுங்கள், ஆனால், பாவிகளை நேசியுங்கள்.’’ அதைத்தான் நாமும் ஒபாமாவுக்குச் சொல்ல வேண்டும்.
எல்லாவற்றையும் தாண்டி இந்தத் தருணம் கொண்டாடுவதற்கு உரியது என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு சுந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டபோது, அப்போதிருந்த கறுப்பின மக்களின் தலைவர் ஃப்ரடெரிக் டக்ளஸ் கூறியது இப்போதும் பொருந்துகிறது. அவர் கூறினார்: ‘‘இந்த நாள் பேசுவதற்கான நாளல்ல, கட்டுரை எழுதுவதற்கான நாளல்ல. இந்த நாள் கவிதைக்கான நாள், புதிய பாடல் ஒன்றைப் பாடுவதற்கான நாள்.’’

நன்றி: ஜூனியர் விகடன் 06.11.2008

No comments:

Post a Comment