Monday, October 18, 2010

தலித் பிரச்சனையில் தலித் அல்லாத விமர்சகர்கள் செய்யும் தவறு

தலித் பிரச்சனையில் 
தலித் அல்லாத விமர்சகர்கள்
 செய்யும் தவறு

  - சந்திர பான் பிரசாத் &
 டாக்டர் ஷியோராஜ்சிங் பெச்சாய்ன்


இன்றைய இந்தியா, பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவோடு ஒரு அம்சத்தில் வியக்கத்தக்க விதத்தில் பொருந்திச்செல்கிறது - தலித் பிரச்சனைகள் குறித்து தலித் அல்லாதவர்கள் எழுதுவதுதான் அந்த அம்சம். ஆங்கிலவழிக் கல்வியிலிருந்து தலித்துகள் விலக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலவழிப்பள்ளிகள் இடஒதுக்கீட்டைக் கடைபிடிப்பதில்லை. எனவே பெரும்பான்மையான தலித்துகள் நகராட்சி பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் பிராந்தியமொழிக் கல்வியைத்தான் பெறமுடிகிறது. எப்படியோ ஆங்கிலவழியில் பயின்று தம்சமூகத்தின் குரலை வெளிப்படுத்த முனையும் ஒரு சிலரும்கூட தொடர்புசாதனங்களை நிர்வகிப்பவர்களின் ஆதரவைப்பெற முடிவதில்லை. இந்த விஷச்சுழல் (ஆங்கிலக் கல்வி மறுக்கப்படுதல், பத்திரிகைகள் வெளிப்படுத்தும் விரோதப்போக்கு) ஆங்கிலப் பத்திரிகைகளில் தலித்துகளின் குரல்கள் பதிவாகும் வாய்ப்பை அழித்துவிடுகிறது. எனினும் சனநாயகத் தன்மையோடு செயல்படுவதாகக் காட்டிக் கொள்வதற்காக தொடர்பு சாதனங்களில் ஒரு தரப்பினர் சில சமயங்களில் தலித்துகளிடம் கருணைகாட்டி அவர்கள் உலகுகுறித்து கொண்டுள்ள நோக்கினை அவர்களது பார்வையை பிரசுரிக்க இடமளிப்பதுண்டு.
 இத்தகைய சமூக - அறிவுச் சூழலில், ஆங்கிலமொழித் திறனும், தலித் உலகம் குறித்து கொஞ்சம் அறிவும் சரியான தொடர்புகளும் கொண்ட எந்தவொரு நபரும் தலித்பிரச்சனை களில் உடனடி நிபுணராக மாறிவிடுவது சுலபம். இதுவும் ஒரு நல்ல விஷயம்தான். இப்படி உருவாகிவரும் சுமார் அரைடஜன் நிபுணர்களை - அவர்களில் சிலர் நல்லநோக்கம் கொண்டவர்கள் - நாங்கள் இப்போது பார்க்க முடிகிறது. நாங்கள் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம் எனக் கூறிக்கொள்ளும் அதேசமயத்தில், தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தலித் பிரச்சனைகளைத் தெரிவுசெய்துகொண்டுள்ள அவர்களின் எழுத்துக்கள் சிலவற்றில் சிதைக்கப்பட்ட எங்களது முகங்களைப் பார்த்து நாங்கள் பெரிதும் சங்கடத்துக்கு ஆளாவதையும் சொல்லத் தான் வேண்டும். இக்கட்டுரை கெய்ல் ஓம்வெத் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக எழுந்த ஒன்று தான். ஓம்வெத் தலித் இயக்கத்துக்கு ஓரளவு அறிமுகமானவர் தான். ஆனால் தலித் பார்வையை, தலித்துகளின் கலாச்சார அனுபவங்களை, தங்களைப்பற்றி அவர்கள் கொண்டுள்ள கருத்தை கெய்ல் ஓம்வெத் விளங்கிக் கொள்ள முடியாத தருணங்கள் பல உண்டு. இது பலவகையான குழப்பங்களுக்கு இட்டு செல்கிறது. தலித்துகளின் வரலாற்றுக் கொடைகளையும் அவர்களது அறிவாற்றலையும் சிலசமயங்களில் கேலி பண்ணுகிற அளவுக்குக்கூட இது கொண்டு சென்று விடுகிறது. கருத்துப் போராட்டங்கள் தீவிரமடைவதை, அணிசேர்க்கைகள் கூர்மை யடைந்து வருவதை இந்திய சமூகம் கண்ணுற்றுவரும் இவ்வேளையில், தலித் சமூகத்தின் பொறுப்புமிக்க உறுப்பினர் களாகிய நாங்கள், எங்களது வரலாற்றை இயக்கத்தை பிரக்ஞையை சிதைந்த நிலையில் சித்திரிக்க முற்படும் போக்கினை எதிர்க்காமல் விட்டுவிட முடியாது.
 உதாரணமாக, தலித்துகள் வாக்களித்த முறையைக் குறித்து ஓம்வெத் இப்படிக்கூறுகிறார். “பணக்கார தலித்துகள்” ஆமாம்! சிலர் அப்படியிருக்கின்றனர் அந்த பணக்கார தலித்துகள் பி.ஜே.பிக்கு வாக்களித்தனர்.'' ஒரு சர்வேயின் போது கணக்கில் கொள்ளும் அளவுக்கு இத்தகைய “பணக்கார தலித்துகள்” இருக்கிறார்களெனவும், அவர்கள் பி.ஜே.பிக்கு வாக்களித்தார்களெனவும் ஓம்வெத் கண்டுபிடித்திருப்பது நம்மை திகைப்படையச் செய்கிறது. எங்களுக்குத் தெரிந்து, கொஞ்சம் வசதியான வாழ்க்கையை அனுபவிக்கிறவர்கள், பணக்காரர்கள் என்று முத்திரைகுத்தப்படும் வாய்ப்புள்ளவர்கள் தலித்துகளில் அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள்தாம் அந்த அலுவலர்கள் தாம். இந்த தலித்சமூகத்தின் மிகவும் படித்த பிரிவினர் ஆவார்கள் அவர்களே அம்பேத்கரது சித்தாந்தப் பதாகையை உயர்த்திப் பிடித்து முன்னணியில் செல்பவர்களுமாவார்கள். அவர்கள் பிஜேபிக்கு வாக்களிப்பது சாத்தியமில்லை. பேராசிரியர் ரஜனி கோத்தாரி நிறுவிய சி.எகு.டி.ஏ நிறுவனம் அளித்த கண்டுபிடிப்புகளை ஒருவேளை ஓம்வெத் பயன்படுத்தியிருந்தால் அவர் தவறு செய்துவிட்டார் என நாம் உறுதியாகக் கூறலாம். அரசாங்க நிதியுதவி பெற்ற அந்த சி.எகு.டி.ஏ நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில்கூட தலித்துகளைப் பதவியில் அமர்த்த மறுத்த ஒரு நிறுவனமாகும். அது பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்களின் நிலங்களைக் காப்பாற்ற பல ஆண்டுகளாகப் பாடுபட்டுவரும் ஒரு நிறுவனமும் ஆகும். அத்தகைய நிறுவனம் “பணக்கார தலித்துகள்” பிஜேபிக்கு  வாக்களித்தார்கள் எனக் கண்டுபிடிப்பதில் வியப்பில்லை.
 “முன்னர் பல தலித்துகள் தமது மனிதநேயத்தையும், விருப்பங்களையும் பார்ப்பனீய சட்டகத்தக்குள் வெளிப்படுத்தி யுள்ளனர். அவர்களுள் புகழ்பெற்ற கவிஞரும் துறவியுமான சொக்கமேளரும்  ஒருவர்” என ஓம்வெத் குறிப்பிடும்போது வரலாற்றுப்பார்வையை முற்றிலும் இழந்துவிடுகிறார். சொக்கமேளரின் “மனிதநேயத்தையும் விருப்பங்களையும்” ‘ பார்ப்பனீய சட்டகத்துக்குள்” அடக்குவது கேலிக்கூத்தாகும் சொக்கமேளரின் பாதை இந்து மதத்தின் வர்ணக் கோட் பாட்டுக்கு எதிரானது என்பதையும், தமது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உபாயமாகவே இந்து ஆன்மீகவாதத்தை அவர் கையாண்டார் என்பதையும் கெய்ல்ஓம்வெத்தால் உணரமுடியவில்லையா? ரவிதாசரும் அப்படித்தான் கருதப்படுகிறார் என்பது தெரியவில்லையா? தலித் மக்களின் நாயகர்களை கடந்த காலத்திலிருந்து பெயர்த் தெடுத்து தற்போதைய நவீன சூழலில் வைத்து அவர்களை கடுமையாக விமர்சிப்பதென்பது “முற்போக்கு” சிந்தனை யாளர்களிடையே இப்போது ஒரு ஃபாஷனாக இருக்கிறது.
சொக்கமேளர் வாழ்ந்த காலத்தையும் அவர் வெளிப் படுத்திய குரலையும் எண்ணிப்பார்த்தால் அது ஒரு கலகமென்பது புரியும். அந்த கலகத்தைச் செய்வதற்கு இந்து ஆன்மீகவாதத்தைக் கேடயமாகக் கொள்வது தவிர அப்போது அவருக்கு வேறு மாற்றுவழி ஏதும் இல்லை.
இந்த இடத்தில், ஏங்கெல்கு சொன்னதை மேற்கோள் காட்ட விரும்புகிறோம். 16-ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவைப் பற்றி விவாதிக்கும்போது அவர் கூறுகிறார்: ’அறிவியல் அப்போது தேவாலயத்தின் ஏவற்பெண்ணாய் இருந்தது...'' நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக அப்போது நடந்த எந்தவொரு போராட்டமும் மதத்தின் போர்வையிலேயே நடத்தப்பட்டது  ஏங்கெல்கு ஏன் அப்படிக் கூறுகிறார்? கெய்ல் ஓம்வெத்தின் அளவுகோலைப் பொருத்திப் பார்ப்போமேயானால், அதைக் கொண்டு புரட்சிக்கு முந்திய ஃப்ரான்ஸை மதிப்பிடுவோ மேயானால், ஃப்ரெஞ்ச் சமூகத்தில் நடந்த மறுமலர்ச்சியை, சீர்திருத்த கட்டத்தை உலக வரலாற்றில் முக்கியமாக கருதப்படுகிற 1789-ல் ஃப்ரான்ஸில் நடைபெற்ற மாபெரும் புரட்சிக்கு, சாதகமான சூழலை உருவாக்கிய அந்த கால கட்டத்தை நாம் நிராகரிக்க வேண்டியதிருக்கும். “தீண்டப் படாதவர்கள்” என்ற தமது புகழ்பெற்ற நூலை டாக்டர் அம்பேத்கர் மூன்று தலித் துறவிகளுக்கு சமர்ப்பணம் செய்தார். அவர்களுள் இருவர் ரவிதாசரும், சொக்கமேளரும் ஆவார்கள். அம்பேத்கர் ஏன் அப்படி செய்தார்? காலத்தையும் சூழலோடு அது கொண்டிருக்கும் உறவையும் நாம் பார்க்கத் தவறக்கூடாது. உதாரணமாக ஒன்றைக் கூறலாம், ஐம்பது ஆண்டுகளுக்குமுன் ஒரு நிலப்பிரபு செல்லும்போது ஒரு தலித் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தால் அது ஒரு வீரசாகசமாகும். அது இன்றைக்கு வேண்டுமானால் பெரிய காரியமாக இல்லாதிருக்கலாம்.
ஓம்வெத் எழுதுகிறார் ``எல்லா கட்சிகளையும் தலித் நலன்களுக்கு அடிப்படையில் எதிரானவர்கள் எனப்பார்க்கும் போக்கு வளர்ந்து வருகிறது.'' இப்படிச் கூறும் ஓம்வெத், பிறகட்சிகளைப் பற்றிய தலித்துகளின் பார்வை எந்தவிதத்தில் தவறானது என்பதை விளக்கும் தகுதியான காரணங்கள் எதையும் கூறுவதில்லை. மாறாக, காங்கிரகுபற்றி சிலவற்றைக் கூறுகிறார்.
``காங்கிரகுதான் பயங்கரமான மிகப்பெரிய எதிரியைப் பிரதி நிதித்துவப் படுத்துகிற கட்சியாக விளங்குகிறது என்ற அபிப்ராயம் பரவலாக உள்ளது'' என்கிறார். ஓம்வெத்துக்கு இருப்பதுபோல் இந்தியா குறித்த எல்லையற்ற அறிவு எங்களுக்கில்லை. மாறாக எமக்கிருக்கும் வரையறைக்குட்பட்ட அறிவின்படி பார்த்தால், இப்போதுள்ள ஐந்தாண்டுத் திட்டத்தையும் சேர்த்து இதுவரை ஒன்பது ஐந்தாண்டுத் திட்டங்கள் இந்தியாவில் வந்துள்ளன. அவற்றில் ஏழுதிட்டங்கள் காங்கிரகு அரசாங்கங்களால் போடப்பட்டவை. அந்த கட்சி இந்தியாவை நாற்பது வருடங்களுக்குமேல் ஆண்டுள்ளது. ஆனால் இன்றைக்கு தலித்துகளின் சமூக, கல்வி நிலவரம் என்ன?
 1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின்படி நாட்டிலுள்ள தலித் உழைப்பாளிகளில் அட்டவணை இனத்தவரில் 64 சதவீதமும், பழங்குடியினரில் 36 சதவீதமும் நிலமற்ற விவசாயக்  கூலிகளாவார்கள், அவர்கள் தங்கள் ஜீவனத்துக்கு நிலவுடமையாளர்களைத்தான் சார்ந்திருக்க வேண்டிய நிலை. பெரும்பாலான தலித்துகள் கல்வியறிவு இல்லாதவர்கள். இந்த அவலநிலைக்கு காங்கிரகு இல்லாவிடில் வேறுயார் பொறுப்பு? கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலான தனது ஆட்சிக்காலத்தில் காங்கிரகு செய்ததெல்லாம் தலித்துகளை சில அரசுவேலைகளிலும், சட்டமன்ற நாடாளுமன்ற பதவிகளிலும் முடக்கிப் போட்டது மட்டும்தான். தனது நீண்ட ஆட்சிக்காலத்தில் தலித்துகளை பொருளாதார, அறிவார்த்த நடவடிக்கைகளில் ஈடுபடவிடாமல் காங்கிரகு தடுத்தது மட்டுமின்றி தலித்துகளின் நலன்களைக் காக்கும் பாதுகாவலன் தானே என்றவொரு பொய்த் தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 “ஏறத்தாழ எல்லா அரசியல்கட்சிகளும் தலித் நலன்களுக்கு அடிப்படையில் எதிரானவை” என்ற பிரச்சனை குறித்து நாங்கள் கூறுவது இதுதான்: அறிவுசான்ற ஓம்வெத் அவர்கள், தலித்பிரச்சனையில் பல்வேறு அரசியல் அமைப்புகளும் நடந்து கொண்டவிதம் குறித்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டால் நாங்கள் அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டவர்களாவோம்.
 பொதுவாகக் கூறினால், மூன்று வேறுபட்ட அரசியல் கோட்பாடுகளால் வரையப்பட்ட மூன்று மாதிரியான திட்டங்களை நாம் பார்த்தோம். காங்கிரகு கட்சி முன்வைத்த தாராள சோஷலிசம், இடதுசாரிகள் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் கடைப்பிடிக்கும் சோஷலிசம், தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகள் முன்வைத்த பார்ப்பன எதிர்ப்பு ஆகியவைதான் இந்த மூன்று மாதிரிகள். பகுஜன்சமாஜ் கட்சியையும் நக்ஸல்பாரி இயக்கங்களையும் விலக்கிவிட்டுப் பார்த்தால், இன்றுள்ள பெரும்பாலான அரசியல் அமைப்புகள் இந்த மூன்று வகை அரசியல் மாதிரிகளைச் சுற்றியே சுழல்வதை நாம் காணலாம். அகில இந்திய அளவில் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கும் தலித்துகளின் நிலைமை காங்கிரகு ஆட்சியால் விளைந்தது எனக் கொண்டோமெனில் அதை இடது சாரிகள் மற்றும் திராவிடக் கட்சிகளின் மாதிரிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து நாம்சில உறுதியான முடிவுகளுக்கு வர முடியும்.
 காங்கிரகு செய்த துரோகம் அனைவருக்கும் தெரியும். ஆனால் காங்கிரகு அல்லாத கட்சிகள் செய்த துரோகம் பலருக்குத் தெரியாது. தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் இருக்கின்ற நிலமற்ற தலித் விவசாயக் கூலிகளின் சதவீதம் அகில இந்திய அளவைக்காட்டிலும் மிக அதிகம் என்பது பலருக்கும் தெரியாது. தனியார் துறைகளிலிருந்து, வர்த்தகத்திலிருந்து, பொது நிறுவனங்களிலிருந்து, கல்வியிலிருந்து, தொடர்பு சாதனங்களிலிருந்து தலித்துகள் விலக்கிவைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்துக் குரல்கொடுக்கும் தலித் அல்லாதவர்களின் அரசியல் இயக்கம் ஏதேனும் ஒன்றையாவது கெய்ல்ஓம்வெத் அவர்கள் சுட்டிக்காட்ட முடியுமா? காங்கிரஸின் “சமூகநலத்” திட்டங்களைத் தாண்டி விவாதித்த காங்கிரகு அல்லாத இயக்கம் ஏதாவது இருக்கிறதா?
 ஓம்வெத் கட்டுரையின் இரண்டாவது பகுதி எங்களை மேலும் துயருறச் செய்தது. தேர்தல் நடைமுறைகளை தலித்துகள் எப்படி உள்வாங்குகின்றனர்? தலித் மக்களைப் பற்றியும், அவர்களது அறிவைப்பற்றியும், அவர்களது பிரக்ஞையைப் பற்றியும் ஓம்வெத் புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். குதிரமற்ற அரசுக்கு கன்ஷிராம் முன்னுரிமை கொடுப்பதை கெய்ல் ஓம்வெத் குறிப்பிடுகிறார். அவர் கூறுகிறார்: ’ தலித்துகளில் பலருக்கு தேர்தல் நடைமுறைஎன்பது அத்துடன் முடிந்துவிடுகிற ஒரு விஷயமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்தல்வரட்டும் கொஞ்சமாவது லாபம் கிடைக்கிற வாய்ப்பை அது தருகிறது. தலித்துகளைக் கொஞ்சமாவது மதிப்போடு நடத்த வேண்டிய கட்டாயம் அப்போது அரசியல் வாதிகளுக்கு ஏற்படுகிறது. உண்மையில் வே லையில்லாத கிராம நகர மக்களுக்கு தேர்தல் நடைமுறையானது கொஞ்சம் வருமானத்தைத்தருகிறது” என்கிறார் ஓம்வெத்.
 என்ன பரிதாபம்! நாம் ஓம்வெத்தின் கருத்துக்களில் உடன்பட்டால் இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய தலித் அரசியல் கட்சியொன்று ஒருபோதும் உருவாகாது என்ற முடிவுக்கே வரமுடியும். தம் மனசாட்சிகளைப் பண்டமாற்று செய்துகொள்ள வாய்ப்புகளை எதிர்பார்த்துப் பசியோடு காத்திருக்கும் தலித் வாக்காளர்களுக்கு பிச்சைபோடுகின்ற பிஜேபி, காங்கிரகு போன்ற மையநீரோட்ட கட்சிகளோடு போட்டியிடக்கூடிய தலித் கட்சி எதுவுமிருக்காது என்பதை ஒப்புக் கொள்ளவேண்டிவரும். தனது கருத்துக்களில் உறுதியோடிருந்தால் கெய்ல் ஓம்வெத் அவர்கள் பகுஜன் சமாஜ்கட்சி ஒருகோடி வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்றது எப்படி என்பதை விளக்கவேண்டும், உத்திரப்பிரதேசத்தில் முழுமையாகவும், மத்தியப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஓரளவுக்கும் தலித்துகளைக் காங்கிரஸின் பிடியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி விடுவித்தது எப்படி என்பதையும் அவர் விளக்கவேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சியை தாக்கும்போது அவர் சமாஜ்வாடிக் கட்சியின் பேச்சாளராக மாறிவிடுகிறார். “பி.எகு.பிக்கு பொருளாதாரம் பற்றியோ, கலாச்சாரம் பற்றியோ பார்வை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்க அதிகார மென்பது வெறும் குறியீடாகவும், அதைப் பிடிப்பது புரவலராக மாறுவதற்குத்தான் எனவும் அது நினைக்கிறது. அதனால்தான் அம்பேத்கரின் சிலைகளை நிறுவுவது, அதிகாரப் பதவிகளில் தலித்துகளை அமர்த்துவது, அடங்கிப் பணிந்துபோகாத பிராமண அதிகாரிகளை இடமாற்றல் செய்வது என பிஎகுபி நடந்து கொண்டது.” என்கிறார். பி.எகு.பிக்கு சமூக-பொருளா தார, கலாச்சார திட்டம் எதுவுமில்லையென்ற கருத்து தலித்அல்லாத விமர்சகர்கள் பலரிடம் பரவலாகக் காணப் படுகிறது. இதுகுறித்து நாங்கள் ஒன்றிரண்டு விஷயங்களை எடுத்துக்கூற விரும்புகிறோம்.
பஞ்சாப் மாநிலத்தில் எங்கோ ஓரிடத்தில் நடந்த சம்பவத்தால் பஞ்சாப் சட்டசபை கொந்தளித்தது. முதலமைச்சராயிருந்தபிரகாஷ்சிங் பாதல் மூன்று நபர்கள் கொண்ட கமிட்டியொன்றை அமைத்தார். பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து அந்த உறுப்பினர்களுக்கு ஹெலிகாப்டர் ஒன்று தரப்பட்டு அப்போது உத்தரப்பிரதேச முதல்வராயிருந்த  மாயாவதியையும், தெராய் பகுதியைச்சேர்ந்த சீக்கிய விவசாயிகளையும் சந்திப்பதற்காக அனுப்பப்பட்டனர். நிலஉச்சவரம்பு சட்டத்துக்குப் புறம்பாக பெருமளவில் நிலங்களை வைத்திருந்த தெராய் விவசாயிகள் மாயாவதியின் அரசு தங்களது நிலங்களைப் பிடுங்கி தலித்துகளுக்கு தரப்போவதாக கூக்குரல் எழுப்பினர். அதிகப்படியான நிலங்களை விடுவிக்கும் நடவடிக்கை பிஎகுபி பிஜேபி கூட்டணி அரசால் மேற்கொள்ளப்பட்ட நேரம் அது. பிஜேபிக்கு இக்கட்டான நிலை.  இந்த நடவடிக்கையை நிறுத்தச்சொன்னால் மாயாவதியின் கோபத்துக்கு ஆளாகி உ.பி கூட்டணி அரசை சிக்கலுக்காளாக்கவேண்டும். அல்லது பஞ்சாபில் இருந்த தனது அகாலி கூட்டாளியின் கோபத்துக்கு இலக்காகவேண்டும் என்றநிலை. சீக்கிய விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட உபரிநிலம் தலித் சீக்கியர்களுக்கே வழங்கப்படும் என்ற உடன்பாட்டின் அடிப்படையில் அந்த சிக்கல் தீர்க்கப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட நிலஉச்சவரம்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது  5.39 லட்சம் ஏக்கர் விவசாயநிலம் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 1972க்கும் 93க்கும் இடைப்பட்டகாலத்தில் 1.49 லட்சம் ஏக்கர் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருந்தது. தலித்துகளுக்கு பட்டாவுக்காக ஒதுக்கப்பட்ட மனைகளின் மொத்த அளவு 0.74 லட்சம் ஏக்கர் மட்டும்தான். அதிலும் வழங்கப்பட்ட நிலங்களில் மூன்றில் ஒருபங்கு நிலங்கள் வழங்கப்பட்டதாக காகிதத்தில் எழுதப்பட்டதோடுசரி. மாயாவதியின் ஆறுமாத ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டு தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் அளவு அதற்குமுன் இருபத்தைந்து அண்டுகளில் கொடுக்கப் பட்டதைவிட அதிகமாகும். மாயாவதி அரசுக்கு எதிராக சமாஜ்வாடிச் கட்சி செய்த பிரச்சாரம் இரண்டு அம்சங்களை மையப்படுத்தியிருந்தது. எகுசி/எகுடி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள், உபரிநிலங்களை எடுத்து தலித்துகளுக்கு வழங்குவதன்மூலம் மாநிலத்தில் சமூகப் பதட்டத்தை உண்டுபண்ணுகிறார்கள் என்பவைதான் அந்த இரு அம்சங்கள்.
 மாயாவதி அரசு செய்த இந்த சாதனைகளை கெய்ல் ஓம்வெத் பார்க்கத் தவறியது ஏன்? நிலச்சீர்திருத்தம் மட்டுமின்றி தலித் மாணவர்களின் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்பட்டது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அம்பேத்கர் கிராமங்கள் தோற்று விக்கப்பட்டன. எகுசி/எகுடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் தலித்துகள் நியமிக்கப் பட்டனர். தலைமைச் செயலராக, தலைமை போலீகு அதிகாரியாக உத்தரப்பிரதேசத்தில் தலித் ஒருவர் வந்தது மாயாவதி ஆட்சியில்தான். கடந்த 50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று அது.
 “பிஎகுபிக்கு கலாச்சாரப் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை ” என ஓம்வெத் கூறுகிறார். ஒரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம். அம்பேத்கர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும்போது மாயாவதி பூமிபூஜை செய்ய மறுத்துவிட்டார் அதற்காக ஏற்பாடுகள் செய்த அதிகாரிகளையும் விமர்சித்தார் “அறிவியல்யுகத்தில் பகுத்தறிவுக்குப் புறம்பானவற்றுக்கு இடமில்லை” என மாயாவதி அங்குபேசும் போது குறிப்பிட்டார். லக்னோவில் உள்ள பரிவர்தன் சௌக் புகழ்பெற்ற தலைவர் களின் நினைவிடமாக உருவாக்கப்பட்டது. மத்தியில் உள்ள தூணில் வர்ண சாதி அமைப்புக்கு எதிராக உழைத்த தலைவர்களின் செய்திகள் செதுக்கப்பட்டன.
 தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை கவர்ச்சிவாதம் எனக் குறிப்பிட்டதன்மூலம் தலித்துகளின் நுண்ணுணர்வுகள் மீது கடைசிதாக்குதலை கெய்ல் ஓம்வெத் தொடுத்திருக்கிறார்.
“அமைச்சர் பதவிகள் கட்சிகளுக்கிடையே `கோட்டாக் களாக' பகிர்ந்துகொள்ளப்படும்போது, அதற்கு அரசியல் தகுதி எதுவும் தேவையில்லை என ஆகிவிட்டபோது தங்களது பங்கைப் பெறுவதற்காக தலித்துகள் போராடுவதைக் குறைகூறமுடியாது” என்கிறார் ஓம்வெத். “தற்காலிகமான கவர்ச்சிவாத அரசியலை முன்வைப்பதற்காக நாம் தலித்துகளைக் குற்றம் சாட்ட முடியாது” என்கிறார்.
“இடஒதுக்கீடு” “கவர்ச்சிவாதம்” போன்ற விஷயங்களுக்குள் நுழைந்ததன்மூலம் ஓம்வெத் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பதில் அதை மேலும் சிக்கலாக்கிவிட்டார். கூட்டணி ஆட்சிகாலத்தில் உருவாக்கப்படும் கட்சி `கோட்டாவை' இதுவரை காலமும் ஆட்சியமைப்பால் விலக்கப்பட்டிருந்த தலித் மக்கள், தம்மை பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பு சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட இடஒதுக்கீட்டோடு எப்படி ஒப்பிடமுடியும்.
 அதைப்போலவே பலதரப்பட்ட சமூகப்பின்னணி கொண்ட மக்களுக்கு கவர்ச்சிவாதம் என்றசொல் என்ன பொருளைத் தந்துவிட முடியும்? உதாரணமாக சமையல் எரிவாயுவுக்கு அளிக்கப்படும் மானியம் கவர்ச்சிவாதத்துக்கு ஒரு சிறந்த உதாரணமாகும், அதற்கு பொருளாதார நியாயம் கிடையாது, ஆனால் மத்தியதர வர்க்கத்தை திருப்திபடுத்த அந்த மானியம் தொடர்கிறது. அந்த மானியம் விலக்கிக்கொள்ளப் பட்டு தலித்துகளுக்குமட்டும் தொடர்ந்தால் அது “தலித் பாப்புலிசம்” என அழைக்கப்படலாம். ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது. சமையல் எரிவாயுவை உபயோகிக்கும் ஒரு தலித் குடும்பத்தில் ஒருவர் வேலைக்கு செல்பவராயிருப்பார் அது தவிர வேறு வருமானம் எதுவும் அந்த குடும்பத்துக்கு இருக்காது. மானியத்தின் மூலம் மிச்சமாகும் தொகை அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்குப் பயன்படக்கூடும்.
 தலித் அல்லாத சிந்தனையாளர்கள் மத்தியில் ஒரு போக்கு வளர்ந்து வருகிறது. தலித்துகளின் உரிமைகள் பற்றி வேட்கையோடு பேசுகிற அதே நேரத்தில், தலித்துகளின் இயக்கங்களையும் தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கு அது. இது பக்தி இயக்க காலத்தில் நடந்தது. அம்பேத்கரின் இயக்கத்தின் போதும் நடந்தது. இயக்கம் தேய்ந்து தலைவர்கள் மங்கிப்போகும்போது இதே அறிவாளிகள் அதே இயக்கத்தைப் புகழ்வார்கள், அதே தலைவர்களைப் பாராட்டு வார்கள்.  அந்த வேலை இப்போதும் நடக்கிறது. தலித் பிரச்சனைகளுக்கு ஆதரவாயிருப்பதாகக் காட்டிக் கொள்கிற நபர்கள், தொடர்ந்து தலித் இயக்கத்தையும், தலைமையையும் தாக்கிவருகிறார்கள்.
 தலித்துகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள், எனவே எங்களுக்கு போதியுங்கள். அது சரிதான், ஆனால் நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள். கற்றுக்கொள்கிற ஒவ்வொருவருக்குள்ளும் கற்பிக்கிற ஆசிரியரும் இருக்கிறார்.

நன்றி : தி இந்து 04.01.2000

( இக்கட்டுரை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் மொழிபெயர்த்து சிறு நூலாக வெளியிட்டது . இன்றும் இது தமிழ்நாட்டுக்குப் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது. அப்போது நான் எழுதிய குறிப்பு கீழே தரப்பட்டிருக்கிறது)தலித்துகளின் ரட்சகர்களாய் தோற்றம் காட்டிய தலித் அல்லாத சிந்தனையாளர்கள் பலர் இன்று வேறு தலைப்புதேடி நகர்ந்துவிட்டார்கள். அரசியல் களத்தில் - தலித் தோழராக தன்னை வெளிக்காட்டிவந்த நண்பர்கள்  இன்று சாதி வெறியர்களோடு கூட்டுசேர்ந்து தனித்தொகுதி முறையை ஒழிப்பதற்கும், வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை நீக்குவதற்கும் ஆலோசனை நடத்துவதாகச் செய்திகள் வருகின்றன. இப்படியாகத் தமிழ்ச் சூழலில் தலித் மக்கள் தமது நண்பர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய நிலை துலக்க மடைந்து வருகிறது. இது ஒரு சாதகமான அம்சமாகும்.
 “இதர சமூகத்தவர்களும் சமயத்தவர்களும் இச்சமூகத்தவர் (தலித்) முன்னேற்றத்தை நாடி செய்துவந்திருப்பது தன்னயத் தேட்டம் என்றும், இச் சமூகத்தவர்கள் தங்கள் இடைவிடா முயற்சியால் விருத்திபெற்று வருகிறார்கள் என்றும்” இரட்டைமலை சீனிவாசன் எழுதியது இந்த நூற்றாண்டிலும் பொருந்தக் கூடியதாகவே உள்ளது.
 இப்போது பிறந்திருப்பதை தலித் நூற்றாண்டு எனப் பலரும் குறிப்பிடுகின்றனர். அடுத்த நூற்றாண்டு மட்டுமல்ல, அடுத்த ஆயிரமாவது ஆண்டும் துவங்கியுள்ளது. தமிழகத்தில் தீண்டாமை என்ற கருத்தாக்கம் உருவான வரலாறு இரண்டா வது ஆயிரம் ஆண்டுகளின் ஆரம்பத்தில்தான். அதாவது சோழர் காலத்தில்தான் என்பதை நமக்கு கிடைக்கும் கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. அந்த தீண்டாமைக் கொடுமை இந்த ஆயிரமாவது ஆண்டின் துவக்கத்தோடு ஒழிக்கப்படவேண்டும். அதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வதற்காகத்தான் இது தலித் நூற்றாண்டு என அடையாளப் படுத்தப்படுகிறது.
 தலித் மக்களின் விடுதலையென்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன்மூலம் முழுமையடைந்து விடாது. அனைத்து தளங்களிலும் இடையறாத போராட்டம் நடத்தப்படவேண்டும். அதிலும் குறிப்பாக கருத்தியல் தளத்தில் இப்போராட்டத்தின் பங்கு மிகமிக முக்கியமானது. அயோத்தி தாஸரும், அம்பேத்கரும் இந்தவிதத்தில் நமக்கு முன்னோடிகளாக விளங்குகின்றனர்.
 தலித் பிரச்சனை இன்று சமூக கலாச்சார, அரசியல் களங்களில் பெற்றுள்ள முக்கியத்துவம் என்பது தலித் மக்கள் தமது போராட்டங்களால், தமது உடமைகளை, உயிர்களை இழந்து ஏற்படுத்தியுள்ள ஒன்றாகும். இது பரவலாகும்போது இன்றுள்ள சமூக அமைப்பு இந்த முக்கியத்துவத்தைப் பண்டமாக மாற்றி சந்தையிலே லாபமீட்டப் பார்க்கிறது. அத்தகைய வணிகத்தில் ஒரு வர்த்தகப் பெயராக “தலித்” என்பது சீரழிக்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி தத்தமது அளவில் பயனீட்டும் முயற்சிகளில் தலித் அல்லாத பலர் ஈடுபடு கின்றனர். அவர்கள் தமது வசதிக்கேற்ப தலித்துகளின் முன்னுரிமைகளைத் தீர்மானிக்க முற்படுகின்றனர். இத்தகைய போக்கு பலவிதமான குழப்பங்களை உண்டாக்குகிறது. தலித்துகளுக்குப் பதிலாக, தலித்துகளின் பிரதிநிதிகளாகத் தாங்கள் பேச முயற்சிப்பது, தேர்தலில் தலித்துகளை வாக்களிக்கவிடாமல் தடுத்து அவர்களது வாக்குகளைத் தாங்களே கள்ள ஓட்டுகளாகப் போட்டுக் கொள்ளும் செயலுக்கு ஒப்பானதாகும். இதை தலித் அல்லாத சிந்தனையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
 தலித் அல்லாத சிந்தனையாளர்கள் எல்லோருமே இப்படியானவர்களல்லர், அவர்களில் பலர் மிகுந்த அர்ப்பணிப்பும், நல்ல நோக்கும் கொண்டவர்கள். தலித் பிரச்சனையைப்பேசுகிறவர்கள் தமது போதாக் குறைகளையும், எல்லைகளையும் புரிந்து கொள்வது அவசியம். இல்லை யென்றால் எந்த மாதிரித் தவறுகள் ஏற்படும் என்பதையே இந்தக் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.
 இது கெய்ல் ஓம்வெத் கட்டுரை மீதான எதிர்வினை மட்டுமல்ல தலித் அல்லாத சிந்தனையாளர்கள் அனைவரும் பரிசீலிக்க வேண்டிய கட்டுரையாகும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்த வேண்டியே இதை மொழிபெயர்த்து வெளியிடுகிறோம். உள்நோக்கமற்ற திறந்த மனம் கொண்ட சிந்தனையாளர்கள் இந்த விவாதத்தைத் தொடரட்டும்.


 பாண்டிச்சேரி - 8                                                            - ரவிக்குமார்
 05.01.2000

No comments:

Post a Comment