Tuesday, October 12, 2010

ரவிக்குமார் கவிதைகள்

புறம் அகம் : ரவிக்குமார் கவிதைகள்

1.

நான் நரமாமிசப்பட்சணியாக மாறிவிட்டேன்

எனது வசிப்பிடத்தில் உணவுக்குப் பஞ்சம் இல்லை

என்றபோதிலும்

மனிதர்களைத் தின்னப் பழகிக்கொண்டுவிட்டேன்

முதலில் பிணங்களைத் தின்னுவதிலிருந்துதான்

இது ஆரம்பித்தது

அசைவமாயிருந்ததால்

செத்துப்போன பறவைகளை, கால்நடைகளை

உண்ணும்போது

மனிதர்களைமட்டும் ஏன் விலக்கவேண்டும்?என்று

எனக்கு நானே

சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

கொஞ்சம் கொஞ்சமாக என்

பொறுமை போயிற்று

மனிதர்கள்

சாகும்வரைக்கும் காத்திருப்பது

சிரமமாகிவிட்டது

எனவே

உயிருள்ளவர்களை உட்கொள்ள ஆரம்பித்தேன்

அதிலொரு சிக்கல்

நமது இரை நம்மைவிடப் பலவீனமானதாய் இருக்கவேண்டும்

அல்லது அதைப் பலவீனப்படுத்தும் உபாயம்

நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்

சொற்களைக்கொண்டு

பலத்தைப் பறிக்கும்

சூட்சுமங்கள் வசப்படலாயிற்று

அதைப் பழகிக்கொண்டபோது

’மதியூகி’ என்று ஆர்ப்பரித்தனர் மக்கள்

இப்போதோ

’என்னைச் சாப்பிடு’ ’என்னைச் சாப்பிடு’

என்கிறது கூட்டம்

அஜீரணத்தை எண்ணி

அச்சம் கொள்கிறேன் நான்

2.

தரையை ரத்தத்தால்

மெழுகும்போது

வீடு மிளிர்கிறது

அதுவும்

குழந்தைகளின் ரத்தமாயிருந்தால்

ரொம்பவும் நல்லது

நிச்சயம் அவை உங்கள் குழந்தைகளாக இருக்கப்போவதில்லை

உங்கள் உறவினர்களின்

அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களின்

குழந்தைகளாகவும் இருக்காது

அப்புறம் ஏன் தயங்கவேண்டும்?

வீடுகளை மட்டுமல்ல வீதிகளையும்

நகரங்களையும் ரத்தத்தால்

மெழுகுங்கள்

தசைகளைப் பிய்த்துத் தெருக்களை

ஜோடியுங்கள்

தலைமுடியைப் பொசுக்கி வாசனையூட்டுங்கள்

கவனமாயிருங்கள்

குழந்தைகளின் ரத்தத்தைப் பிடிக்கும்போது

அவை அலறுவதைக் கேட்காதீர்கள்

அந்த ஒலி உங்கள் காதுகளில் விழாமலிருக்க

தெய்வங்களின் பெயர்களை முழங்குங்கள்

சாகும்வேளையில் கடவுளின் பெயரைக்கேட்டால்

அவற்றுக்கும் புண்ணியம்தானே.

3.

சூரியன் தனிமையில் காயும் நகரில்

படிக்க ஆளின்றிக் கிடக்கின்றன

திறக்காத கதவுகளின்மீது

கற்களும் தோட்டாக்களும் எழுதிய செய்திகள்

சாலையை எரிக்க முயன்று தோற்கிறது

டயர்களைத் தின்ற நெருப்பு

வீடுகள் விடுதிகள் கல்விக்கூடங்கள்

வழிபாட்டிடங்கள்

எங்கும் நிறைந்து பிதுங்குகிறது

அச்சம்

பறவையொன்று கிரீச்சிட்டுப் பறக்கும் கணத்தில்

திடுமெனக் கவிகிறது பேரிருள்

அரவமற்ற வீதியில்

துணைக்குத் துப்பாக்கியோடு

நிற்பவன்

கண்களுக்குள் தவழும் குழந்தையின்

நறுமணத்தை நாசியில் உணரும்போது

வந்து விழுகிறது ஒரு கல்.

மீண்டும் பாறையாகிறது

அவன் இதயம்.

.

4.

மழையில் அழுத கண்ணீராய்

தடயம் காண முடியாததாயிருக்கிறது உன் நேசம்

'கடிதமில்லை கனவுகண்டு விழித்ததில்லை

பார்க்காமல் இருந்தாலும் பதற்றம் வந்ததில்லை

சந்திக்கும்போதும் சந்தோஷம் மலர்ந்ததில்லை

நீ

இல்லாவிட்டாலும் இருப்பேன்'

என்கின்றாய்

அலமாரியின் சாவி தேடி

அலைமோதும் திருடனைப்போல்

ஒவ்வொரு தருணத்தையும்

திறந்துபார்த்துத் தவிக்கின்றேன்

'அம்மாவின் பொய்கள்' பற்றி

சொன்னான் ஒரு கவிஞன்

அது உனக்கும் பொருந்தும்தான்

அறிவேன் என்றாலும்

சொல்லிவிடு

கண்ணீரைக் கண்ணீரென்று

காதலைக் காதலென்று

5.

கொசுவர்த்தியின் புகை

செங்குத்தாய் நிற்கும்

காற்றில்லாத அறையில்

உணவுத் துணுக்குகளைத் தேடிவரும்

கரப்பான் பூச்சிகளாய்

சூழ்கின்றன உன் நினைவுகள்

குளத்து மீன்களிடம்

சிரங்கைத் தின்னக்கொடுத்துவிட்டுக்

கண்மூடி நிற்கும் சிறுவனைப்போல்

அவற்றுக்குத் தீனியாகி

அசையாமல் கிடக்கின்றேன் .

பனியில் நமத்திருக்கிறது கூரை

படர்ந்திருக்கும் சுரைக் கொடியில்

கனக்கும் காயின் சுமைதாங்க முடியாமல்

உள்வாங்குகிறது கீற்று

6.

அப்போது வெயில் இல்லை

வெக்கையும் இல்லை

இரவு

கட்டிடங்களில் நெரிபடாத காற்று

உடைகளைக் கலைக்க தலைமுடியைக் கலைக்க

அடையாளம் தெரியாத செடிகளை அலைக்கழிக்க

முத்தமிட்டேன்

மேலுதட்டில் படிந்திருந்த வியர்வை

கரித்தது

கண்ணீரைப் பருகியது போல

ஒருகணம் திடுக்கிட்டேன்

மறுகணம்

திறந்த வாய்க்குள் நழுவிய நாவில்

தட்டுப்பட்டது உன் இதயம்.

காணாமல் போனேன்

--


No comments:

Post a Comment