Sunday, October 31, 2010

தமிழைக் காக்கும் போராட்டம் - மணி மு. மணிவண்ணன்


மணிப்பிரவாளத்தால் தமிழுக்கு நேர்ந்த தொல்லை கொஞ்சநஞ்சமல்ல. தனித்தமிழ் இயக்கம் வந்து அதை மூலையில் முடக்கியது.  அந்தப் பூதத்தை முடக்கத்திலிருந்து நீக்கி தமிழில் நஞ்சு கலக்க சிலர் அரும்பாடுபடுகின்றனர் . 
அவர்களின் முயற்சியால்  இந்திய அரசு  கிரந்தக் குறியீடுகளில் தமிழ் எழுத்துகளையும் நிரப்ப ஏற்பாடு செய்திருக்கிறது.  ஷர்மாவின் முன் மொழிபை  வரும் நவம்பர் 6 அன்று நடக்கும் யூனிகோடு நுட்பக் குழுவில் எதிர்க்க அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அறிகிறோம்.  ஆனால், நடுவணரசு அமைச்சர் ஆ. இராசாவின் தலைமையில் இயங்கும் தகவல் தொழில் நுட்பத்துறையே கிரந்தத்தில் தமிழ் எழுத்துகளைக் கூட்ட இருக்கிறது என்ற செய்தி அமைச்சருக்கோ, தமிழக முதல்வருக்கோ தெரியுமா என்று தெரியவில்லை.  தெரிந்திருந்தாலும் இதனால் விளையக் கூடக் கேடு என்ன என்பதையும் அவர்களுக்கு யாரும் எடுத்துரைத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

1. இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் சார்பில் கிரந்தம் எழுத்துகளுக்கு யூனிகோடில் இடம் பெற ஏற்பாடு செய்ய ஒரு முன்மொழிவு அனுப்பப் பட்டுள்ளது.
2. இதில் தற்போதைய கிரந்தத்தில் இல்லாத தமிழ் எழுத்துகள் ஐந்து - எ, ஒ, ழ, ற, ன - புதிதாகக் கூட்டப் பட்டுள்ளன.  இதை முதலில் முன்மொழிந்து இன்று வரை வலியுறுத்தி வருபவர் நாசா கணேசன்
3. இந்திய அரசின் முன்மொழிவு, யூனிகோடு தென்னாசியத் துணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது.
4. இந்திய அரசே அதன் முன் மொழிவிலிருந்து தமிழ் எழுத்துகளை நீக்கினால் ஒழிய, புதிய கிரந்தத்தில் இந்தத் தமிழ் எழுத்துகள் இருக்கும். 
5. இதைத் தடுக்க வேண்டும் என்றால் நமக்கு இருப்பது இன்னும் 4 நாட்கள் மட்டுமே.
ஏன் இதைத் தடுக்க வேண்டும்?
1. கிரந்தம் வடமொழியை மட்டும் எழுத உருவாக்கப் பட்ட எழுத்துமுறை
2. இதில் இதுவரை தமிழ் எழுத்துகள் (ஐந்து - எ, ஒ, ழ, ற, ன ) இல்லை.
3. தமிழ் எழுத்துகள் நொண்டி எழுத்துகள், அவற்றால் சமஸ்கிருதத்தை எழுத முடியாது என்று கிண்டல் செய்து கொண்டு இருந்தவர்கள், பல முறை வடமொழியின் வர்க்க எழுத்துகளைத் தமிழில் கொண்டு வர முயன்று வந்திருக்கிறார்கள்.
4. இந்த முயற்சி வெற்றி பெற்றால் என்ன ஆகும் என்று தமிழ் ஆர்வலர்கள் அஞ்சுபவற்றுள் பின் வருபவை அடங்கும்:
 அ. கிரந்த எழுத்தையே முழுத் தமிழையும் எழுதி, தமிழையும் மலையாளம் போன்ற கதம்ப மொழியாக்கும் முயற்சிக்கு இது வழி  வகுக்கும்.  இணைப்பில் உள்ள எழுத்துகள் தமிழாகும். 
ஆ. ஏற்கனவே ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் ஆவது போதாது என்று தமிழ் தன் தனித்தன்மையை இழந்து மலையாளம் போல ஒரு கலப்பட மொழியாகும்.
 இ. தமிழ் மொழி, எழுத்து எல்லாமே சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற பரப்புரை வருங்காலத்தில் வலுவாகும். 
 ஈ.  தமிழ் “நீச்ச பாஷை”, அடிமை மொழி, தேவமொழியிலிருந்து  பிறந்து பின்னால் இழிவான மொழி என்பவை போன்ற பரப்புரைகள் தோன்றலாம்.
 உ.  அழிந்து போன மணிப்பிரவாள நடை மீண்டும் உயிர்பெற்று எழுந்து அதுதான் உயர்ந்த நடை என்று வலுப்பெறலாம்.



No comments:

Post a Comment