Sunday, October 24, 2010

ஜமீலா நிஷாத் கவிதைகள்- தமிழில்: ரவிக்குமார்



உடலின் நகரத்தில் அலைந்து திரிந்து
காயம்பட்ட அந்த மனிதன்
இதயத்தின் வாசற்படியில் வீழ்ந்துகிடக்கிறான்
அவன் அறிவான்
கன்னமும்கூட ஒரு தோட்டம்தான் என்று
ஆனால் அதன் நறுமணம்
மனதுக்கு எட்டும் தொலைவில் இல்லை
அவன் நிற்கும் அந்த இடம்
சிதைந்து கிடக்கும் அந்த இடம்
அது அகமதாபாத்
அவன் எண்ணிப் பார்க்கிறான்
எரியும் கேசத்தோடு பின்னிக்கிடந்த அந்த ரத்தம் தோய்ந்த சீலையை
கும்பிட்டு எழுந்த கரங்கள்
வெட்டி வீழ்த்தப்பட்டதை
கண்ணீர் முத்துக்களால் கோர்க்கப்பட்ட ஜெபமாலை
இப்போது இரும்புச் சங்கிலியாய் ஆகிவிட்டதை
வாய் பிளந்து நா வறள
காயம்பட்ட அந்த மனிதன் சந்தியில் வீழ்ந்து கிடக்கிறான்
அவனது உள்ளங்கையில் ஒரு விளக்கு எரிகிறது
அது ஒவ்வொரு உடலையும் ஒவ்வொரு ஆன்மாவையும்
பிரகாசிக்கச் செய்கிறது
பாருங்கள் ஒரு பெண்ணின் ஆன்மா எழுவதை
அது வாலியின்* கல்லறையிலிருந்து எழுகிறது .

· வாலி குஜராத்தி - பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த முஸ்லீம் கவிஞர். அவரது கல்லறை குஜராத் கலவரத்தின்போது மதவெறியர்களால் சிதைக்கப்பட்டது






2.

என் உள்ளங்கை சிவந்திருக்கிறது
மருதாணியால் அல்ல ரத்தத்தால்
என் இதயத்திலிருந்து கிளம்பும் ஒரு கதறல்
இந்தப் பூமியை எரித்துச் சாம்பலாக்குகிறது
நீ குமுறினாய்/ நான் காற்றாய் மாறி
உன் பாதையில் வீசினேன்
எந்த வழியென்று எனக்கென்ன தெரியும்
உனது பார்வையில் தெரியும்
என் புல்லின் பனித்துளி
ஒளிபடும்போது வானவில் ஆகிறது
இருள்விழும்போது தேனாய் மாறுகிறது
அது என் விழிகளின் பின் நிகழும் கனவா
உன் பெருமூச்சால் எழுந்த கானலா
நான் இதைச் சிந்தித்தபடி இருந்தேன்
எங்கும் செல்லவில்லை
இங்கேயும் போகவில்லை அங்கேயும் போகவில்லை
என் பார்வை தேடுகிறது
எனக்கென்ன தெரியும் எங்கே அவளென்று
வா, நாம் அத்தனை புதிர்களையும் நொறுக்குவோம்
வா, நாம் புதிய உலகமொன்றை சிருஷ்டிப்போம்
நமது புதிய பாதைகளை
புதிய கனவுகளை, புதிய நேசங்களை
புதிய உணர்வுகளை, புதிய இசையைத்
தேடுவோம்
நாமெல்லோரும் ராணிகள் தேவதைகள்
எல்லா கதைகளும் காதல் கதைகள்





3.

ஒவ்வொன்றாக மேலெழுந்துவருகின்றன பிணங்கள்
மேற்குச் சந்திரனின் ஒளியில் குளித்து
எலும்புகள் கரை ஒதுங்குகின்றன
காற்று ஒரு புதிய ரசாயனத்தால் நிரம்பியிருக்கிரது
ஒவ்வொரு அடியெடுப்பிலும் ஒரு புதிய நட்சத்திரம் உடைகிறது
சமரசம் இனி இல்லை
மரணம் இனிமேலும் அப்படி ஆட்சிசெய்ய முடியாது
ஓய்வின்றித் தயாரிக்கப்பட்டு பூமியெங்கும்
தெளிக்கப்பட்ட வெடிகுண்டுகள்
மக்கள் இறக்கிறார்கள் புதைகுழிகளிலிருந்து எழுகிறார்கள்
நாட்டை விற்றுவிட்டு நீங்கள் அமைதியாக இருக்கமுடியுமா?
நதிகள் எங்கள் சடலங்களால்
நிரம்பி வழிகின்றன
சிந்திய குருதியால் இறுகிக் கிடக்கின்றன வீதிகள்
எங்கு திரும்பினாலும் சடலங்கள் கிடப்பதை
நீங்கள் பார்க்கவில்லையா?
மலைப் பாம்போடு வியாபாரம்
புடைத்தெடுக்கப்பட்ட நம்பிக்கைகளை
ஒவ்வொன்றாக விற்கிறீர்கள்
நீங்கள் இந்துமாக் கடலை விற்றீர்கள்
அரபிக் கடலை விற்றீர்கள்
உங்கள் தேசத்தை விற்றுவிட்டு
எப்படி அமைதியாக இருப்பீர்கள்?
கரைகளிலிருந்து மீனவர்கள் கேட்கிறார்கள்.
எங்களது சடலங்கள் கடலை நிரைக்கின்றன.
பிய்ந்த எலும்புகள் அலைகளில் எழும்பித் தெறிக்கின்றன
சமுத்திரத்தில் நீரோட்டமெனப் பாய்கிறோம்
மீனவர்களின் வலைகளிலிருந்து யார் தப்பிக்க முடியும்?
நீங்கள் ஏன் யுரேனியத்தை விற்கக்கூடாது?
நாகசாகியும் ஹிரோஷிமாவும் மீளவும் வரும்
அயர்ச்சி அதிகம் ஆனால்
உறக்கமில்லை மக்களுக்கு
எல்லோரும் வெகுளியாக இருக்கலாம்
அறியாதவர்களாய் இருக்க முடியாது
குடிகாரர்களாக, ஞாபக மறதிக்காரர்களாக
மீண்டும் போபால் பேசுகிறது
நாங்கள் செத்துவிட்டோம் எவரும் எங்களைக்
கொல்ல முடியாது
முடமாக இருந்தாலும் நடந்தோம் டெல்லிக்கு
சமரசம் இனி இல்லை

 ஜமீலா நிஷாத் : ஹைதராபாத்தில் வசிக்கிறார். உருது மொழியில் எழுதும் இவரது கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. நாற்பது பெண் கவிஞர்களின் படைப்புகள் இடம்பெற்ற நூலொன்றின் தொகுப்பாசிரியர். ஆந்திர மாநில அரசின் விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்தக் கவிதைகளை உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஹொஷாங் மெர்ச்சன்ட். ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
ரவிக்குமார்
நன்றி: Interior Decoration - Poems by 54 women from 10 languages,
Women Unlimited, 2010

No comments:

Post a Comment