Saturday, October 30, 2010

பெயரில்தான் எல்லாமே இருக்கிறது - கிறித்துதாசு காந்தி இ. ஆ. ப



‘‘தமிழகத்திலிருந்து சுடர் வாங்கி, தமிழ் வேந்தராய் இப்பொழுது தமிழ் யாகத்தை மேற்கொண்டு ஒரு தமிழ் முனியாக உருவாகியிருக்கும் நமது திருமாவளவன் அவர்களே, இந்த தாய்மண்ணை அலங்கரிக்க வந்திருக்கிற மேடை பெரியோர்களே, தாய்மண்ணின் ஆலும் வேருமாக குடியிருக்கும் சுற்றத்தாரே வணக்கம். இந்த தமிழ்முனி திருமாவளவன் அவர்கள், தமிழ்ப் பெயர் மாற்றத்திற்காக ஒரு இயக்கம் நடத்துவது தேவைதானா? பெற்றோர் இட்ட பெயரையே மாற்றச் சொல்லலாமா? மனித உணர்வுகளுக்கு இது மதிப்பு கொடுக்கும் செயாலா? என்று கேள்வி கேட்பவர்களும் இருருக்கிறார்கள். பெற்றோர் இட்ட பெயரை மாற்றுவது என்பது, உணர்வுகளை மதிக்காத செயல் என்றால், இப்பொழுது தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். கருப்பு சாமியின் மகன் வெள்ளையன் என்று இருந்தால், அவன் தன் பெயரை குறிப்பதற்காக க.வெள்ளையன் என்று போட்டுக் கொள்ளலாம். ஆனால், அதை எப்படி போட்டுக் கொள்கிறார்கள் என்றால் கருப்புசாமி என்பதை ‘‘K’ ’ என ஆங்கிலத்தில் போட்டு ‘K’ .வெள்ளையன் என்று எழுதிக்கொள்கிறாரக்ள். அதற்கு மேலே ஒருபடி போய், ‘‘K’ வை தமிழ்படுத்தி, கே.வெள்ளையன் என்று எழுதுகிறார்கள். அப்பா பெயர் கருப்புசாமி என்று ‘க’ போட்டுக்கொள்ளலாம். ஆனால் கருப்புசாமியை ‘கே’ என்று அழைத்தால், இந்த ‘கே’யில் என்னென்ன பெயர் இருக்கிறது. இந்த ‘கே’வில், கேப்மாரி என்றும், கேனையன் என்றும் இருக்கிறது. என்னுடைய தந்தை இட்ட பெயரை மாற்றுவது என்னுடைய உணர்வை அடிக்கிறது என்று சொன்னால், அப்பாவின் அடையாளத்தையே நீ மாற்றிக் காட்டுகிறாயே உன்னை எந்த கிழிந்த செருப்பை வைத்து அடிப்பது?
பெயர் சூட்டல் என்பதை ஒரு பெரிய இயக்கமாக நடத்த வேண்டுமா என்று கேட்கிறார்கள். ஆம்! இயக்கமாக நடத்த வேண்டிய தேவை இந்த நாட்டில் இருக்கிறது. ஏனென்றால் இதற்கு மாறான செயல்பாடுகள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய சொந்த பந்தங்களுக்கு, பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது என்றால், ‘ஏகலட்சம்’ என்ற ஒரு பெயரை வைக்கிறார்கள். ஏகலட்சம் என்ற பெயரை நம்மிடையே காட்டுவதற்காக சில இயக்கங்கள் இருக்கின்றன. டிக்ஸ்னரி போடுகின்றார்கள். பெயருக்கு டிக்ஸ்னரி போடுகின்றார்கள். இது ஒரு மாற்று இயக்கம். எதிரியக்கம் இங்கே நடைபெறுகிறது. சரி எண்கணிதத்திலாவது நீ நம்பிக்கை வைத்திருந்தால் அதிலாவது நீ தமிழில் அடிப்படையாக போகலாம் இல்லையா? ஒருத்தரின் பெயர் ‘முருகன்’ என்றிருந்தால், அவன் எண்கணித அடிப்படையில் இந்த பெயரில், எனக்கு எண்ணிக்கை சரியாக வரவில்லை அதனால் இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் நான் பெயரை மாற்ற வேண்டும் என்று முருகன் என்ற தமிழ்ப்பெயரை Murugan என்று ஆங்கிலத்தில் எழுதி, என்னுடைய பெயருக்கு ஏழு எழுத்துக்கள் இருக்கின்றன என்று அவன் தன்னுடைய மூளையில் ஏற்றிக்கொள்கிறான். 6 எண்ணிக்கை எனக்கு வரவேண்டும் என்று அவன் எண்கணிதத்தை நம்பி, அவன் அந்த ஏழு எழுத்தைMurgan என்று எழுதிக்கொண்டு எண்கணிதத்தில் இனிமேல் எனக்கு எதிர்காலம் செழிக்கும் என்று நம்பிக் கொள்கிறான். எண்கணித முறைப்படி முருகன் என்ற பெயரை ஆறு எழுத்தில் எழுத வேண்டும் என்று விரும்பினால் திருமுருகன் என்று மாற்றிக் கொள்ளலாமே! இதுதான் இந்த தமிழ் இயக்கத்தினுடைய தேவை. அப்பாவுடைய அடையாளத்தை மாற்றுவது, ஊரினுடைய அடையாளத்தை மாற்றுவது என்பது தொடர்கிறது.
ஆம்பூர் பக்கத்தில் கே.வி.குப்பம் இருக்கிறது. இந்த கே.வி.குப்பம் என்பது கீழ்வைத்தியநாதன் குப்பம் என்பதாகும். அதை இவ்வளவு நீட்டி முழக்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்பதற்காக சுருக்கமாக கீ.வை.குப்பம் என்று மாற்றியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு ரி.க்ஷி.குப்பம் என்று மாறி, அதை தமிழில் கே.வி.குப்பம் என்று எழுதுகிறார்கள். இங்கே உள்ள மக்கள் எல்லாம் பஞ்சபரதேசிகளாக இருந்து, அவன் அய்யோ எனக்கு ஏதாவது கொடுங்க என்று கேவி, கேவி இருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு கே.வி.குப்பம் என்று பெயர் வந்தது என்றும் விளக்கமளித்தாலும் அளிப்பார்கள்.
ரங்கூனில் இருந்து திரும்பிய ஒரு ரங்கனுடைய மகன் சண்முகத்தின் பெயரில் ஒரு வீதி அமைத்தோம் என்றால், அதை இவர்கள் ஆர்.ஆர்.எஸ்.வீதி என்று போட்டு, ஆர்.எஸ்.எஸ்.வீதி என்றாக்கி, அது எங்களுக்குத்தான் சொந்தம் என்று ஒரு இயக்கம் உரிமை கொண்டாடினாலும் வியப்பில்லை. இதிலெல்லாம் மிகப்பெரிய விஷயங்கள் இருக்கின்றன. உரிமைகள் எல்லாம் இருக்கின்றன. பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள். அதிலேதான் உரிமை இருக்கிறது. மண்ணுரிமை இருக்கிறது. தாய்மண் உரிமையெல்லாம் இருக்கிறது.
எனக்கு உணர்வுகள் இருக்கின்றன என்று உணர்வுகளை மட்டும் காட்டிக்கொண்டிருந்தால் அது உருபடாது. நிறுவனமயமாகவேண்டும். இதுபோன்ற ஒரு புத்தகம் ஒன்று வருகிறது என்றால், அது நிறுவனமாகிறது. அறக்கட்டளை பிறக்கிறது என்றால், அதற்குள்ளே இருக்கின்ற கருத்துக்கள் எல்லாம் ஒரு நிறுவனமாகிறது. இந்த நிறுவனமாக்குதல் என்றால் என்ன? நாம் இன்னும் தீவிரமாக போக வேண்டியிருக்கிறது. நம்முடைய இயக்கங்களில் எல்லாம் உணர்வுள்ளவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். நல்ல உணர்வுகள் இருக்கின்றன. நல்ல படைப்பாற்றல் இருக்கின்றன. எல்லாவிதமான ஆற்றல்களும் நம்மிடையே இருக்கின்றன. அது இன்னும் கொஞ்சம் நிறுவனமாவது என்ன என்கிற கருத்தோட்டத்தில் நாம் போகிறோம் என்றால், இன்னும் நாம் வளர்ந்திருப்போம். எப்படி இந்த பெயர்ச்சூட்டல் என்பதும், ஒரு நிறுவனமாகி இருக்கிறதோ அதுபோல நமது மக்களின் விடுதலைக்கான நம்முடைய எல்லா உணர்வுகளும் நிறுவன வடிவம் எடுக்க வேண்டும். அரசு வடிவம் எடுத்திருப்பது ஒரு நிறுவன வடிவம். இதற்குமேலே போய் இந்த நிறுவனமாவது என்ன என்பதை இந்த திட்டங்களுக்குள் கொண்டுவர வேண்டும்.
கல்வி வேண்டும் என்கிற ஒரு தேவையை, கல்வியைத் தா, கல்வியைத் தா என்கிற ஒரு கூவலாக மட்டும் வைக்காமல் ஒரு நிறுவனமாக, கல்வி நிறுவனமாக வர வேண்டும் என்ற கோரிக்கையை மாற்றி, அதனைப் பெற வேண்டும். வெறும் கல்வியை மட்டும் தான என்றா, சாதிக்கு ஒரு கல்விக்கூடம் அமைத்துக் கொண்டு, நான் உனக்கு கல்வியைத் தருகிறேன் நீ இங்கே வா என்று அழைக்கின்ற காலமாக போகும். கல்வி நிறுவனமும் நமக்காக வர வேண்டும். என்னை வெறும் பயிலுனராக வைக்கிறார்களே, என்னை பயிற்சியாளராகவும் வை என்று நம்முடைய கோரிக்கையை மாற்ற வேண்டும். எனக்கு பயிற்சி வேண்டும் என்கிற கோரிக்கையை மட்டும் வைக்கக்கூடாது. எனக்கு பயிற்சி நிறுவனம் வேண்டும் என்று கேட்கலாம். கணினி பயிற்சி மட்டும் எனக்கு கற்றுக்கொடு என்று கேட்கக்கூடாது. ஆகவே, நாம் நிறுவனமாக கேட்க வேண்டும். கட்டிய வீடு வேண்டும் என்று கேட்கக்கூடாது. வீடு கட்டும் நிறுவனமாக வேண்டும். வீடு கட்டும் நிறுவனம் என்றால் காண்ட்ராக்டர் ஆக வேண்டும். இதுபோல நம்முடைய தேவையை நிறுவனமாக எப்படி நாம் கோரவேண்டும் என்கிற ஒரு சிந்தனையையும் நாம் சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.

(2005 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளின் தமிழ்ப் பெயர் ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆற்றிய உரை .)

No comments:

Post a Comment