Tuesday, October 19, 2010

அவிழும் சொற்கள் '




' அவிழும் சொற்கள் ' என்ற எனது கவிதைத் தொகுப்பை வெளியிட்டு கவிஞர் சுகுமாரன் ஆற்றிய உரை





நண்பர் ரவிக்குமாரின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மகிழ்ச்சிக்குத் தனிப்பட்ட காரணமும் இருக்கிறது. நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அதிகம் பார்த்துக் கொள்ளமாட்டோம். அதிகம் பேசிக் கொள்ள மாட்டோம். ஆனாலும் ஒரே நீரோட்டத்தில், ஒரே திசையை நோக்கிப் போவது போல ஓர் அடிப்படை உணர்வு எங்களுக்கிடையில் இருப்பதாக நினைக்கிறேன். அதற்குக் காரணம் ஒரே ஊற்றிலிருந்து பெருக்கெடுத்திருப்போமோ என்னவோ? அவரைத் தூண்டி விட்ட ஆற்றல்கள் என்னையும் துண்டி விட்டவை. உண்மையில் அதன் காரணமாகத்தான்  அவருடன் எனக்கு ஒரு மானசீக நெருக்கம் நிலவுகிறது. எட்வர்ட் செய்த என்ற சிந்தனையாளர் என்னைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தபோது ரவிக்குமார் செய்தைப் பற்றிய புத்தகத்தை எழுதினார். சூசன் சாண்டாக் என்ற பெரும் ஆளுமை என்னைத் தூண்டி விட்டதுபோல அவரையும் ஊக்கப்படுத்தியிருக்கிறார். பாப்லோ நெரூதா எனக்கு என்ன உறவோ அதே உறவுதான் அவருக்கும். என்ன, நான் அவரை மொழிபெயர்ப்புச்செய்து உறவை மேலும் வலுவாக்கிக் கொண்டேன். என்ன இருந்தாலும் கவிஞனைக் கவிஞன் தானே அறிய முடியும் என்ற அகங்காரம் எனக்கு இருந்தது.ரவிக்குமார் நெரூதா பற்றிக் கட்டுரை மட்டும் எழுதி கொஞ்சம் எட்ட நின்றிருந்தார். இப்போது அவரும் கவிஞராக அவதாரமெடுத்து என் அகங்காரத்தை மட்டுப் படுத்தியிருக்கிறார். மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

ரவிக்குமாரின் முக்கியமான செயல்பாட்டுக் கட்டங்களில் நான் பார்வையாளனாக இருந்திருக்கிறேன்.  சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி நண்பர் நெயதல் கிருஷ்ணன் நாகர்கோவிலில் ஒரு பாராட்டு விழாவை நடத்தினார். அதில் கலந்து கொண்டு பேசியவர்களில் நானும் உண்டு. ரவிக்குமார் 'ஜூனியர் விகடன்' இதழில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப் பட்டு நூலாக'சொன்னால் முடியும்' என்ற தலைப்பில் வெளிவந்தது. நண்பர் புதுவை இளவேனில் பாண்டிச்சேரியில் அதற்கு ஒரு வெளியீட்டு விழாவைஒழுங்கு செய்திருந்தார். அதிலும்  நான் இருந்தேன். இன்று அவருடைய கவிதைப் பிறப்புக்கும் சாட்சியம் வகிக்கிறேன். தற்செயலானவை இந்த நிகழ்வுகள். ஆனாலும் அவற்றில் ஒரு பொருத்தம் தென்படுகிறது.

முப்பது வருடங்களுக்கும் மேலாக ரவிக்குமார் இலக்கியக் கலாச்சாரச் சூழலில் செயல்பட்டு வருகிறார். ஓர்  எழுத்தாளராகவும் செயல்பாட்டாளராகவும்  தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார். ஓர் இலக்கியவாதியாக அவருடைய  நடவடிக்கைகளை மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் ,விமர்சகர், கருத்தாளர் ,என்ற நிலைகளில் பார்க்கலாம். மொழிபெயர்ப்பாளராக அவரை என் மனதில் பதிய வைத்திருப்பது அவர் செய்த பிறமொழிச் சிறுகதைகளின் தொகுப்பான ' வெளிச்சமும் தண்ணீர் மாதிரித்தான் ' என்ற நூல். கருத்தாளராக  எட்வர்ட் செய்த் என்ற சிந்தனையாளரை தமிழுக்கு அறிமுகப் படுத்தினார். இந்த இரண்டு நூல்களும் தமிழில் கவனம் பெறாமலேயே போய்விட்டன என்ற வருத்தம் எனக்குண்டு. சரி தமிழில் எந்த சீரிய முயற்சிக்குத்தான் நியாயமான வரவேற்புக் கிடைத்திருக்கிறது? ஒன்று தூற்றல் அல்லது புறக்கணிப்பு என்ற இரண்டு நிலைகளில் தன்னுடைய அறிவுலக நாகரிகத்தைப் பேணி வருகிறது தமிழ்ச் சூழல். ஆனால் அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தான் சரியென்று நம்புவதைத் தொடர்ந்து செய்கிறார் ரவிக்குமார்.தொடர்ந்து ஓர் உரையாடலுக்கான கருத்துக் களத்தையும் உருவாக்கி வருகிறார்.

கேட்டுப் பழகி அனுபவத்திலும் அறிந்து பின்பற்ற விரும்பும் பழமொழி ஒன்று உண்டு. 'உருளும் கல்லில் பாசி படிவதில்லை.' எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் இந்தப் பழமொழியை ரவிக்குமாரைப் பற்றி யோசிக்கும்போதும் சொல்லிக் கொள்வேன். ஏதோ வங்கியில் வேலை செய்கிறார். ஏதோ கட்டுரைகள் எழுதுகிறார். ஏதோ மொழிபெயர்ப்புகள் பண்ணுகிறார். ஏதோ ஆங்கிலப் புத்தகப் பதிப்பில் ஈடுபட்டிருக்கிறார். ஏதோ தலித் கோட்பாடுகள் பேசுகிறார். ஏதோ எம்.எல். ஏ. ஆகியிருக்கிறார் - என்று பல ஏதேதோக்களைக் கவனித்து வந்திருக்கிறேன். இப்போது ஏதோ கவிதை எழுதியிருக்கிறேன் என்று முன்வந்திருக்கிறார். இப்போது அவிழ்க்கும் இந்தச் சொற்களை இதுவரை எங்கே மூடி வைத்திருந்தார் என்று தெரியவில்லை.

ரவிக்குமார் இந்தக் கவிதைகளை மிகச் சமீபத்தில்தான் எழுதியதாகச் சொல்கிறார். குறிப்பாக ஈழத்தின் துயரம் நம்மைத் துன்புறுத்தத் தொடங்கிய காலப் பகுதியில் இதை எழுத ஆரம்பித்திருக்கிறார். அரசியல் தந்திரங்களால் இந்தப் பேரவலத்தைப் பார்த்துக் கை பிசைந்து நிற்க மட்டுமே நம்மால் முடிந்திருக்கிறது. இந்தப் பரிதவிப்பிலிருந்துதான் கவிதைகளைக் கண்டடைந்திருக்கிறார். ஓர் அரசியல் செயல்பாட்டாளனாகச் செய்ய முடியாததை ஓர் எழுத்தாளராக,  கவிஞராக நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறார் என்றும் சொல்லத் தோன்றுகிறது. ஒரு பெரும் துயரத்தின் கசிவு இந்தக் கவிதைகள்.

கையறு நிலையிலிருக்கிற ஒருவனுக்கு நினைவுகளே ஆறுதல். தாயின் கருப்பைக்குள் மீண்டும் பாதுகாப்பாகப் புதைந்து கொள்வது போன்ற ஆறுதல். இழந்துபோன காதலின் இனிமையையோ துவர்ப்பையோ கரிப்பையோ மீண்டும் அசை போடும் ஆறுதல். ஈரம் படர்ந்த காற்றாக ரவிக்குமாரின் கவிதைகளை உணர்கிறேன். தமிழ்க் கவிதை இன்று பெரும்பாலும் வார்த்தை விளையாட்டாகக் கலைத்துப் போடப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. நரம்புகளைத் தூண்டிவிடும் சொற்களுக்குப் பதிலாக இரத்தத்திலிருந்து உருவாகி அந்தப் பிசுபிசுப்புடனும் ஈரத்துடனும் வெம்மையுடனும் இருக்கும் வார்த்தைகளுக்காக ஏங்குகிற மனதுக்கு இந்தக் கவிதைகள் ஆறுதலாக இருக்கின்றன. நான் கொஞ்சம் ரொமாண்டிக்கான மனநிலையுடையவன் என்பதால் இப்படி விரும்புவதாகவும் இருக்கலாம்.

ஆகப் பெரிய ரொமாண்டிக் மனநிலையுடைய கவிஞரான பாப்லோ நெரூதாவின் சாயல் ரவிக்குமாரின் கவிதைகளில் பதிந்திருக்கிறது. இதைக் குறையாகச் சொல்லவில்லை. மனித விடுதலையையும் பெரும் காதலையும் ஏக்கத்துடன் பாடிய கவிஞனின் சாயல் அதே ஏக்கத்தைக் கொண்டிருக்கும் இன்னொரு மனதை எளிதில் பாதிக்க முடியும். நெரூதாவின் கேள்விகளின் புத்தகத்தில் இடம் பெறும் ஒரு கவிதையின் வரிகளில் ரவிக் குமார் தன்னுடைய கவிதையைக் கண்டுபிடிக்கிறார். 'மழையில்  நிற்கும்ரயிலை விட சோகமானது எதுவும் உண்டா? ' என்ற நெரூதாவின் கேள்விக்கு   'தண்டவாளங்கள் எப்படி  மறந்தது உனக்கு?' என்ற கேள்வி மூலம் கவிதையை அடைகிறார் ரவிக்குமார்.

கவிதையைப் பற்றி அதிகம் விளக்கம் சொல்வதில் எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் ஒரே கவிதை ஒவ்வொருவர் வாசிப்பிலும் ஒவ்வொரு பொருளைத் தரும். அதானல்தான் அது கவிதையாக இருக்கிறது. அதை உணர்வது ஒரு மனநிலை. எந்த மாதிரியான மனநிலை? ரவிக்குமாரின் கவிதையிலிருந்தே அதை உணர்கிறேன்.

தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும்
மாணவியோடு அல்லது
தேர்தல் முடிவுக்காக எதிர்பார்த்திருக்கும் அரசியல்வாதியோடு
அல்லது
பிரசவிக்கப்போகும் பெண்ணோடு
இப்படி எதனோடு ஒப்பிடுவது
இந்த மனநிலையை?

இப்படிச் சொல்லலாம்
சேர்க்கப்பட்ட முதல்நாள்
பள்ளியில் அமர்ந்திருக்கும்
சிறுவன்
வீட்டுக்குப் போவதற்காகக் காத்திருக்கிறான்
மணி அடிக்க மாட்டேனென்கிறது.
@

உயிர்மை பதிப்பகம்  26 12 2009 அன்று சென்னையில் நடத்திய ரவிக்குமாரின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய உரை.


1 comment:

  1. //இப்போது அவிழ்க்கும் இந்தச் சொற்களை இதுவரை எங்கே மூடி வைத்திருந்தார் என்று தெரியவில்லை//

    arumaiyana vaarthaigal !

    ReplyDelete